Wednesday, August 16, 2023

‘இலங்கையில் 200 ஆண்டுகால தமிழக வம்சாவளியினருடைய ரணங்களும்’ பாடுகளும்!

‘#இரண்டு நூற்றாண்டு ரணங்கள்’

————————————————————-
‘இலங்கையில் 200 ஆண்டுகால தமிழக வம்சாவளியினருடைய ரணங்களும்’
 பாடுகளும்!
என்ற கட்டுரை இன்றைய (16-8-2023)தினமணியில்
‘இரண்டு நூற்றாண்டு ரணங்கள்’
- வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
••••
தமிழகத்தின் அன்றைய தூத்துக்குடி, தென்காசி உள்ளடக்கியதிருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளடங்கிய இராமநாதபுரம் மாவட்டம், திண்டுக்கல், தேனி உள்ளடங்கிய மதுரை மாவட்டம், புதுக்கோட்டை, கரூர் உள்ளடங்கிய திருச்சி மாவட்டம், அன்றுஒன்றுபட்ட தஞ்சை மாவட்டங்களில் இருந்து கூலித்தொழிலாளர்களை அன்றைய ஆங்கிலேய அரசு 1823-ல் அழைத்துச் சென்று இலங்கை மலையகப் பகுதிகளில்குடியமர்த்தி 200 ஆண்டுகள் நிறைவாகின்றன. 



தங்களுடைய ரத்தத்தையும், வேர்வையையும் சிந்திமலையகத்தில் கண்டி, நுரேலியா, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, சமுகஞ்சார் வரை உள்ள பகுதிகளில்இந்தியாவிலிருந்து சென்ற தமிழ் வம்சாவளியினர் வளம்சேர்த்தனர். ஆனால், அவர்களுக்கான அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் இன்றுவரை இந்திய வம்சாவளி தமிழர்கள்ரணங்களிலும் துயரங்களிலும் வாழ்க்கையைக் கழித்துவருகின்றனர். இன்றைக்கும் இலங்கைக்கு தமிழக மக்களின்கடும் உழைப்பு இருப்பதால் தான் உலக அளவில் தேயிலைஉற்பத்தியில் இலங்கை முக்கியமான இடத்தை வகிக்கிறது. 

இலங்கையைப் பொறுத்தவரையில் ஈழத்தில் வாழும் அந்தமண்ணின் மைந்தர்களாக யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை வரை உள்ள தமிழர்கள் அந்த மண்ணின் பூர்வீகமைந்தர்கள். அவர்களுடைய உரிமைகள் மறுக்கப்பட்டு 9 ஒப்பந்தங்கள் சிங்கள அரசோடு கையொப்பமிட்டும்நடைமுறைக்கு வராமல் கடந்த 50 ஆண்டுகளாக போராடிவருகின்றனர். அவர்கள் ஈழத்தமிழர்கள் என்றுஅழைக்கின்றோம்.
இலங்கையில் ஈழத்தமிழர், இந்திய வம்சாவளி மலையகத்தமிழர்கள் என இரண்டு பிரிவை சார்ந்தவர்களுடையமக்கள்தொகை சிங்கள மக்கள் தொகைக்கு ஈடாக இருந்ததுஒருகாலத்தில்.
மலையகத் தமிழர்களுடைய பிரஜா உரிமைமறுக்கப்பட்டதாலும் ஈழத் தமிழர்களின் இன அழிப்பை செய்து சிங்கள அரசு ஈழ மக்களை கொன்று குவித்ததாலும்படிப்படியாக தமிழர்களுடைய மக்கள் தொகை குறைந்தது.
இரண்டு தரப்பினருடைய ஒப்பந்தத்தாலும் இன அழிப்பாலும்தமிழகம் நோக்கி வர வேண்டிய அவலநிலை. 200 ஆண்டுகளானாலும் மலையகத் தமிழர்களுக்கு அடிப்படையில்உரிமைகளும் நலன்களும் மறுக்கப்பட்டது என்று யாரும்மறுக்க முடியாது. மூன்றவதாக வியாபாரம் ரீதியாக கொழும்புக்கு சென்றவர்கள் கொழும்பு தமிழர்கள் என அழைக்கப்பட்டனர்
இதில் இன்னொரு உண்மையும் தெரிந்துகொள்ள வேண்டும். பெரும்பான்மையோர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள். ஒருசிலபகுதிகளில் தெலுங்கு பேசும் ஆந்திரர்களும் மலையாளம்பேசும் மலையாளிகளும் மலையகத்தில் இருப்பதை நான்சென்றபோது அறிந்தேன். அங்கும் திராவிட இனமாகமலையகத்தில் தமிழர்கள் இருப்பதை அறிய முடிகிறது.
  இலங்கையில் 9,75,000 இந்திய வம்சாவளியினர், பிரஜா உரிமை இல்லாமல், நாடற்றவர்களாக நாதியற்று இருந்த காலத்தில், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டுமென்பதற்காக, சாஸ்திரி-சிரிமாவோ ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் 1964 அக்டோபர் 30-ம் திகதி கையொப்பமிடப்பட்டது. இந்த உடன்பாட்டிற்கு 50 ஆண்டு நிறைவாகிறது.
 எதற்காக இந்த ஒப்பந்தம்? 1815 கால கட்டத்தில், கண்டி ராஜ்ஜியம் வீழ்த்தப்பட்டு, ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கையின் மய்யப் பகுதியான மலையகத்தில், ஆங்கிலேயர் கோப்பி பயிரிட்டனர். கோப்பித் தோட்டப் பணிகளுக்கு தொழிலாளர்கள் தேவைப்பட்டதால், தமிழகத்தின் திருநெல்வேலி, இராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளிலிருந்து தொழிலாளர்களை கடற்கரை வரை கூட்டம் கூட்டமாக நடத்தி அழைத்துச் சென்றனர். அங்கிருந்து கடலில் பயணித்தபோது பலர், தவறுதலாக வங்கக் கடலில் விழுந்து மாண்டனர்.
 மன்னாரில் இறக்கி மலையகம் வரை அடர்ந்த காடுகள் வழியாக அழைத்துச் சென்றபொழுது, பலரும் நோய்வாய்பட்டும், காட்டு விலங்குகளுக்கு பலியாகியும் இறந்தனர். பயணத்தின்போது சோறு, தண்ணீர் இல்லை. 1842-இலிருந்து 1945 வரை இந்தியாவிலிருந்து நான்கு முறை இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோரை மனிதநேயமின்றி அடிமைகளை போல் அழைத்துச் சென்றனர்.
பிரடெரிக் நார்த் என்ற ஆங்கிலேயர் பரிபாலனத்தில், இலங்கையில் இருந்த ஆங்கில அரசுகள் இந்திய வம்சாவளியினரை, மனிதர்கள் என்று நினைக்காமல் பார்சல் பொருளாக நடத்தின. தமிழ்நாட்டில் அன்றைக்கு எஸ்டேட் மேனேஜ்மெண்ட் அலுவலகங்கள் செங்கல்பட்டு, வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு, சேலம், சிவகாசி, கோயம்புத்தூர், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் தொடங்கப்பட்டன.  
 இதற்கு தலைமையிடமாக திருச்சியில் ‘பிளான்டேஷன் கோஸ்ட் ஏஜென்சி' என்ற அமைப்பு செயல்பட்டது. இதன் மூலம் தமிழகத்திலுள்ள ஏழ்மையான மக்கள் இலங்கைக்கு தோட்டத் தொழிலுக்காக அனுப்பப்பட்டனர். தோட்டத் தொழிலில் ஈடுபட்டபோது அங்குள்ள கடுங்குளிரும், சூழலும் ஒத்துக் கொள்ளாமல் 70,000 இந்திய வம்சாவளியினர் இறந்ததாக கொழும்பு ‘ஒப்சர்வர்' பத்திரிகை அப்போது தெரிவித்தது.
 பஞ்சம், வறட்சி, கொள்ளை நோய் இங்கிருந்து சென்றவர்களை வாட்டி வதைத்தன. ஒரு கட்டத்தில் கோப்பி பயிர்கள் சரியாக விளையவில்லை என்று, ஆங்கிலேயர்கள் தேயிலை, இரப்பர், தென்னை, சிங்கோனா என்று விளைச்சலை மாற்றினர். கடுமையாக உழைத்த இந்த தொழிலாளர்கள் கங்காணி முறையில் கண்காணிக்கப்பட்டனர்.  
அப்பகுதியில் பாடப்பட்ட நாட்டுப்புற பாடல் ஒன்று: 
கண்டி கண்டி
எங்கா தீங்கா கண்டி
பேச்சு பேசாதீங்க சாதி கெட்ட கண்டியிலே
சங்கிலியன் கங்காணி
பயத்திலும், அச்சத்திலும் தொழிலாளர்கள் வாழ வேண்டிய நிலைமை இருந்தது.
 காலை 6 மணியிலிருந்து இரவு 7 மணி வரை கடும் உழைப்பு. அந்த உழைப்பின்போது, காட்டில் உள்ள அட்டைகள் அவர்கள் இரத்தத்தை உறிஞ்சின. இதிலிருந்து அவர்கள் தப்பிப் போக முடியாதவாறு வேலிகள் இருந்தன. தப்ப முயன்று அகப்பட்டால் கடுமையான தண்டனை உண்டு. இது சுருக்கமான வரலாறு. 
இலங்கை, 4.2.1948 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது. அன்றைய தினத்திலிருந்து இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரஜா உரிமை மறுக்கப்பட்டு, சட்ட விரோதமாக குடியேறியவர்களாக அறிவிக்கப்பட்டனர்.  
 விடுதலை பெற்ற இலங்கை அரசு இதனைக் கண்டு கொள்ளவில்லை. இவர்கள்படும் அவஸ்தைகள், அன்றைய பிரதமர் நேருவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. நேரு இதுகுறித்து இலங்கை பிரதமர் கொத்தலாவலவிடம் பேசினார். 1954-இல் டில்லி வந்த கொத்லாவல, நேருவின் கையைப் பிடித்துக் கொண்டு, “நீங்கள் இலங்கை வந்தபோது, உங்கள் கூட்டத்தில் எங்கள் நாட்டினர் கல் வீசினார்கள் என்று எங்கள் மீது கோபம் காட்டாதீர்கள். இந்திய வம்சாவளியினரின் பிரச்னைகளை தீர்க்க ஒத்துழைப்புத் தாருங்கள்” என்று மன்றாடி கேட்டுக் கொண்டார்.
 பின்னர் நேரு -  கொத்லாவல ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. நேரு -  கொத்லவாலா ஒப்பந்தத்தின்படி, மலையக தமிழ் மக்களுக்கு பிரஜா உரிமை வழங்க இலங்கை அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாது, நேரு காலமான பின்பு, இந்திய வம்சாவளியினரை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்புவதிலேயே இலங்கை கவனமாக இருந்தது.
 நேருவின் அணிசேராக் கொள்கை, பஞ்சசீலம் இவற்றின் அடிப்படையில், அண்டை நாடுகளுடன் ஒத்துழைக்க வேண்டுமெனவும், சீன - இந்திய போர் போன்றவற்றைக்காரணமாக வைத்து, சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தை உருவாக்க சரியான நேரம் இதுதான் என்றும் முடிவு செய்து பண்டாரநாயக்க 1964 அக்டோபர் 22-ஆம் திகதி டில்லி வந்தார். சிறிமாவோவின் கோரிக்கையை இந்திய அரசு ஏற்றது. இதனைத் தொடர்ந்து இலங்கையின் வற்புறுத்தலால், சாஸ்திரி- சிறிமாவோ ஒப்பந்தம் கையொப்பமானது. இந்திய அரசு இலங்கையின் கோரிக்கையை வாய்மூடி ஏற்றுக் கொண்டது. பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுவரண் சிங், தமிழக அமைச்சர் வி.ராமய்யா ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் இந்த ஒப்பந்தத்திற்கு இசைவு கொடுக்கப்பட்டது.
தமிழக அமைச்சரான வி. ராமய்யா அப்போது வாய் திறந்து எந்த கருத்தையும் சொல்லவில்லை. இந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கையில் பிரஜா உரிமையற்று, நாடற்றவர்களாக இருக்கும் 9,75,000 பேரில் 5.25 லட்சம் பேருக்கு இந்தியாவும், 3 லட்சம் பேருக்கு இலங்கையும் குடியுரிமை வழங்குவது, மீதமுள்ள 1.5 லட்சம் பேரின் நிலையை பிற்பாடு முடிவெடுப்பது என்கிற ஒப்பந்தம் 1964 அக்டோபர் 30 அன்று கையெழுத்தானது. இதே 1964 - இல் சேது சமுத்திரத் திட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்பும் கிடப்பில் போடப்பட்டதும், கச்சதீவு தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக காவு கொடுக்கப்பட்டது என்பதும் வேறு விஷயம். 
தமிழக தலைவர்கள் அண்ணா, ராஜாஜி, ம.பொ.சி. போன்றோர் தமிழகத்தின் கருத்து அறியாமல் இந்த ஒப்பந்தம் எப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது என வினா எழுப்பினர். ஒப்பந்தம் 1964 - இல் கையெழுத்தானாலும், 1967 - இல்தான் நடைமுறைக்கு வரும் என்று ஒப்புக் கொண்டனர். ஆனால், 1965 -66 இலேயே சில தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்களை இந்தியாவிற்கு அனுப்பியது இலங்கை அரசு. ஆரம்பத்தில் தமிழகத்திலிருந்து தமிழர்களை எப்படி அழைத்துச் சென்றார்களோ, அதே போன்று சாரை சாரையாக கப்பலில் ஏற்றி தூத்துக்குடியிலும் சென்னையிலும் படகு மூலம் இராமேஸ்வரத்திலும் கைதிகள் போல் இந்திய மணலில் இறக்கி விட்டனர்.  
 என்ன வேதனை? அப்படி வந்து இறங்கியவர்களுக்கு இந்தியா, தொடர்பற்ற மண்ணாக தெரிந்தது. தங்களுடைய மூதாதையரின் மண்ணில் திக்கு தெரியாமல் திகைத்தனர். இங்குள்ள மாறுபட்ட சூழலில், ஜீவனத்துக்கு வழியில்லாமலும், தொழில் தொடங்க கடனுக்கு மன்றாடுதல் எனவும் நிலைகுலைந்து போயினர். மீண்டும் தேயிலைத் தோட்டத் தொழிலுக்காக கொடைக்கானல், நீலகிரி, மூணாறு, வால்பாறை, கர்நாடகத்தில் உள்ள சிக்மகளூர், கேரளா, டார்ஜிலிங் வரை பயணித்தனர்.
 பலர் துயரம் பொறுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். இந்திய மண்ணோ, அவர்களை தங்களுடைய சகோதரர்கள் என நினைக்காமல், இலங்கையர்கள் என்ற பிரிவினையோடு பார்த்தது. இதனால் பலர் உளவியல்ரீதியாகப்பாதிக்கப்பட்டு பைத்தியக்காரர்களான கதைகளும் உண்டு. இதே நிலைமை இன்று வரை நீடிக்கிறது. பல குடும்பங்கள் வேதனையான வாழ்க்கையை இன்றும் அனுபவித்து வருகின்றனர். 
1983 கலவரங்களுக்கு பின் ஈழத்திலிருந்து வந்து அகதிகளாக இருப்போர் இப்போது படுகின்ற துன்பங்களை போன்றுதான், அன்று மலையகத் தமிழர்களும் சொந்த நாட்டுக்குத் திரும்பிய பிறகும் கஷ்டங்களை அனுபவித்தனர்.  
மனித உரிமைகள், மானுடம் என பேசிடும் நாம், 50 ஆண்டுகளுக்கு முன்னால் நிறைவேறிய சாஸ்திரி சிறிமாவோ ஒப்பந்தம், மலையக மக்களை சாவு குழிக்கும், அடிமை சாசனத்திற்கும் அழைத்துச் சென்றது என்ற ரணமான செய்தியைப் பதிவு செய்யும் நிலையில் இருக்கின்றோம்.  
பிஜித் தீவு கோப்பி தோட்டத்தில் தமிழர்கள் பட்ட பாடுகளை கண்ட பாரதி, "விதியே விதியே, தமிழ் சாதியே என் செய்ய நினைத்தாய்?' என்று பாடினானே, அந்த வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.  
மலையகத் தமிழக வம்சாவளி தோட்டத் தொழிலாளர்கள்உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியகோ.நடேச ஐயர், அப்துல் அஸீஸ், எஸ்.தொண்டமான், ஜோர்ஜ்ஆர். மோத்தா, பெரி சுந்தரம், கே.இராஜலிங்கம், எஸ்.பி.வைத்திலிங்கம், குஞ்சுப்பொரி சண்முகம், ஏ.எஸ்.ஜோன், டி.சாரநாதன், சி.எஸ்.சிவனடியார், எஸ்.சோமசுந்தரம், எஸ்.எம்.சுப்பையா, எஸ்.செல்லையா, கே.குமாரவேல், வி.கே.வெள்ளையன். டி.இராமானுஜம், சிவபாக்கியம் குமாரவேல், பி.பி.தேவராஜ், கோகிலம்சுப்பையா, போஸ்.(ஆர்.எம்) செல்லையா, எஸ்.நடேசன், கே.சுப்பையா, கே.ஜி.எஸ்.நாயர், எஸ்.மாரியப்பா எனதலைவர்களாக மலையகத் தமிழர்களுக்கு முன்னெடுத்துபல்வேறு போராட்டங்களை மலையகத் தமிழர்களின்உரிமைக்காக போராடிய 200 ஆண்டு கால வரலாறு உள்ளது. இன்றைக்கு மேல் குறிப்பிட்ட தொண்டைமானுடையவாரிசுகள், மனோ கணேசன், ராதாகிருஷ்ணன் போன்ற பலஇன்றைய தலைவர்கள் வரை மக்களின் நலன் பேணிஇலங்கை அரசியல் களத்தில் உள்ளனர். உத்தமர் காந்தியும்பண்டிதர் நேருவும் இலங்கை இந்திய விடுதலைக்கு முன்பேஇப்பகுதிக்குச் சென்று இவர்களுடைய சிரமங்களை குறித்தகருத்துக்களையும் அங்கே தெரிவித்தது உண்டு. இந்திராகாந்தியிலிருந்து இன்றைய மோடி வரையிலும்மலையகத் தமிழர்களின் பிரிச்சனை இந்தியாவின்கவனத்திற்கு வருகின்றது. 
சேனநாயக்க 1948-ல் இலங்கை விடுதலை பெற்றுநாடாளுமன்றத்தில் பிராஜா உரிமை சட்டங்களை குறித்துபேசியபோதிலிருந்து இவர்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டன.
மலையகத் தமிழர்கள் இந்த 2 நூற்றாண்டு காலத்தில்இலங்கையின் முன்னேற்றத்தை பரிபூரணமாக எடுத்துச்செல்ல உழைத்தார்கள். ஆனால் அவர்களை சிங்களர்சரிசமமாக நடத்தவில்லை. ஒருபக்கம் வடக்கு கிழக்குமாநிலங்கள் வாழும். இலங்கையின் பூர்வீக தமிழர்களும்அழிக்கப்பட்டனர். கருப்பு ஜுலை என்று (1983 ஜுலை 23) 40 ஆண்டுகள் ஒரு கொடுரமான காலமாகவே இன்றைக்கும்மனதில் இருக்கின்றன. அதைப்போலவே தமிழகவம்சாவளியினர் இலங்கைக்குச் சென்று 200 ஆண்டுகள்நிறைவு பெற்றாலும் இன்னும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டுமலையகத் தமிழர்களும் மலையகத்தில் புழு, பூச்சியோடுவசிப்பிடம் இல்லாமல் வாழ்கின்றனர். இலங்கைத் தீவில்வாழும் இந்த இரண்டு தமிழினங்களும் என்றைக்கு நிம்மதியானவாழ்வு கிடைக்குமோ தெரியவில்லை.
- அரசியலாளர்

#இலங்கைதமிழகவம்சாவளியினர்
#இந்தியவம்சாவளிமலையகத்தமிழர்கள்
#ஈழத்தமிழர்கள்
#இலங்கை
#plantationindiantamils
#lankatamils

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#கேஎஸ்ஆர்போஸட்
#KSrPost
16-8-2023.

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல  தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்க...