Saturday, August 5, 2023

#Madurai food #மதுரை நளபாகம். #மதுரை தமிழகத்தின்உணவுதலைநகரம். தற்போது அசைவ உணவு தலை நகரமாக மாற்றி விட்டார்கள். “#சைவத்தை இழந்த மதுரையா?”




சாப்பாடுன்னா மதுரை தான்யா! அதை அடிச்சிக்க தமிழ்நாட்டில் ஒரு ஊரே இல்லன்னு பல பேர் சொல்லுவாங்க! அது வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் என்பதை நம்பினா மாதிரி! விதவிதமான அசைவ உணவுகளுக்கும் புரோட்டா கடைகளுக்கும் தள்ளுவண்டி & நடைபாதை இட்லி கடைகளுக்கும் மதுரை இன்றும் புகழ் பெற்ற ஊரு தான்! கறி தோசை, நண்டு ஆம்லெட்..




அயிரைமீன் குழம்பு, வெங்காயக் குடல், விரால்மீன் ரோஸ்ட்னு வித விதமா அசைவத்தில் பட்டையை கிளப்பும் மதுரையில் இப்போ சைவ உணவுகளுக்கு ஏன் அந்தளவு முக்கியத்துவம் தரவில்லை! சைவத்தில் அந்தளவு வெரைட்டி இல்லியா? இல்ல மக்கள் எல்லாம் அசைவத்துக்கு மாறி ட்டாங்களா? அதெல்லாம் ஒன்றுமில்லை வித விதமான சைவ உணவுகளிலும் ஒருகாலத்தில் மதுரை தான் டாப்!

உண்மையில் சமணம் ஒழித்து சைவம் தழைத்த மாமதுரையில் இன்று சைவத்திற்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது! ஆம் புகழ் பெற்ற நல்ல சைவ ஓட்டல்கள் எதுவுமே தற்போது மதுரையில் இல்லை என்பது தான் கசப்பான உண்மை. ஒரு காலத்தில் திண்டுக்கல் ரோடு என்று அழைக்கப்படும் நேதாஜி ரோட்டில் மாடர்ன் ரெஸ்டாரெண்டில் இருந்து எழும் சாம்பாரின் மணமே சாம்பிராணி போட்டது போல..

அத்தெருவெங்கும் மணக்கும்! அதிகாலையில் ஃபில்டர் காபியின் மணம் அங்கு பகல் டியூட்டியிலிருக்கும். மாடர்ன் ரெஸ்டாரெண்ட் என்றாலே பலருக்கு இன்றும் நினைவில் ருசிப்பது மதுரை மல்லி போன்ற ஆவி பறக்கும் மென் பஞ்சு இட்லிகளும் அதற்குத் தரும் பருப்பு சாம்பாரும், தாளிப்பு மணக்கும் தேங்காய் சட்னியும், வெங்காயச் சட்னியும், முறுகலான நெய் ரோஸ்ட்டும் ஆனியன்..

ரவா தோசையும், சூடான பூரியும், வெண்ணை போன்ற கிழங்கு மசாலாவும் பொன்னார் மேனியன் போல உளுந்தை அரக்கிசைத்த உளுந்து வடையும், நெய் மணக்கும் வெண் பொங்கலும் அடடா! அதிகாலையில் மீனாட்சியம்மனை தரிசிக்க நிற்கும் அதே கூட்டம் தரிசனம் முடிந்து  மாடர்ன் ரெஸ்டாரெண்ட் வாசலில் வந்து விதவிதமான சைவ உணவுகளை தரிசிக்க நிற்கும்! 

மாடர்ன் ரெஸ்டாரெண்ட் கூட்டத்தை விரும்பாதவர்கள் மேலமாசி வீதி உடுப்பி ஓட்டலுக்கு படை எடுப்பார்கள். அதிகாலையிலேயே நெய் ஒழுக, வறுத்த முந்திரிகள், திராட்சைகள் தூவி கண்ணைப் பறிக்கும் ப்ளோரசெண்ட் ஆரஞ்சு நிறத்தில் தரும் கேசரி இருக்கிறதே, அதுவே பாண்டிய மன்னர்களுக்கு கேசரி என்ற பெயர் வந்ததற்கு காரணம் என்றால் சட்டென நம்பிவிடலாம்! 

ஒரு ப்ளேட் கேசரி ஒரு வெள்ளையப்பம், ஒரு ஃபில்டர் காபி இது மூன்றை மட்டுமே காலையில் உண்டு உயிர் வாழ்ந்த ஜீவன்கள் இன்றும் மதுரையில் தங்கள் உடலின் சர்க்கரை அளவை சரி பார்த்துக் கொண்டு நினைவில் அதை ருசித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன! உடுப்பியின் சாம்பார் லேசாக இனிக்கும்! சாம்பாரைக் கொண்டே கடையின் பெயரைச் சொல்லுமளவுக்கு.. 

அந்த காலத்தில் மாடர்னும், உடுப்பியும் செட் தோசைகளாக இயங்கி வந்தன! எம்ஜிஆர் சிவாஜி ரசிகர்கள் போல இதற்கும் தனித்தனி ரசிகர்கள் இருந்தனர்.! மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் கோபு அய்யங்கார் கடை டெண்டுல்கர் இந்திய அணியில் ஆடிய போது உடன் இருந்த ஷேவாக் போல அதிரடி காட்டியது! கோபு அய்யங்காரின் நெய் மினுக்கும் ரோஸ்ட், ஜீரா போளி..

வெள்ளையப்பம், மிளகாய் சட்னி வகைகள் தனித்துவம் மிக்கவை. இந்த உணவுகளின் மீது ஆசை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்தக் கடைக்கு முதுகு காட்டி கோவிலில் அம்மன் வீற்றிருப்பதாக ஐதீகம் என்றால் நம்பிவிடலாம். பட்டணம் பக்கோடா, காரக்கறி கிழங்கு, மிளகு சேவு, சீரணி, தவள வடை, இனிப்பு அப்பம், முட்டாசு, நெய் இட்லி சாம்பார், போண்டா.. 

கணேஷ் மெஸ் என மூன்று இடங்களில் இருந்தது, வடக்கு மாசி வீதி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் கீழ் தரைத்தளத்தில் இருந்த சோமுசுந்நர விலாஸ்,  கலேஜ்ஹவுஸ்,  இன்றும் இருக்கிற ஶ்ரீ ராம் மெஸ், மேல அனுமந்தராயன் தெரு இளங்கோ மெஸ் என பல நினைவில் உள்ளன. .கௌரி கிருஷ்ணா  (திருச்சி,மதுரை bye pass ரோடு, பொள்ளாச்சி என பல இடங்களில் கிளை உள்ளது).சபரீஷ்
சுவையும், தரமும் சுத்தமும் அருமை.


இப்படி மதுரையின் புகழ் சொல்லும் சைவ ஓட்டல்களும் அந்த மெனுக்களும் உணவுகளும் ஏராளம்! சிற்றன்னங்கள் எனப்படும் தக்காளி, லெமன், புளியோதரை, வெண் பொங்கல், மல்லி சாதம் போன்ற சாத வகைகளுக்கு என்றே சவுராஷ்டிரா நண்பர்கள் வசிக்கும் மஹால், அலங்கார் தியேட்டர், தினமணி டாக்கீஸ் பகுதிகளில் பல பொங்கல் கடைகள் துவங்கி அதில் சில..

இன்றும் தங்களது உணவுச் சேவையை ஆற்றி வருகின்றன. இத்தனை உணவு களேபரங்களுக்கு நடுவில் 1950களில் சத்தமே இல்லாமல் மேலகோபுரத் தெருவில் மதுரை நாக்குகளை சமோசா, கச்சோரி, வித விதமான சப்பாத்தி சப்ஜி, மசாலா டீ என வடநாட்டு உணவுகளைக் கொடுத்து தன் வசப்படுத்தி இருந்தது மதுரை மண்ணுக்கு துளியும் சம்மந்தம் இல்லாத டெல்லி வாலா ஸ்வீட்ஸ்! 

பின்னாளில் இதே மாடர்ன் ரெஸ்டாரண்ட்டுக்கும், உடுப்பி ஓட்டலுக்கும் நடுவில் வந்து கம்பீரமாக வந்து அமர்ந்த ‘ஆரியபவன் உணவகத்தின் தாய்வீடு தான் டெல்லி வாலா! ஆரியபவன் மதுரையில் துவங்கப்பட்ட பின்பு தான் அல்வா, லட்டு, மைசூர்பாக், ஜிலேபி தவிர வேறு இனிப்புகளும் இருக்கின்றன என மதுரை மக்கள் ஞானம் பெற்றனர். ஆரியபவன் நோக்கி படையெடுத்தனர்.

பட்டிக் காட்டான் மிட்டாய் கடையை பார்த்தது போன்ற எனும் பழமொழி உண்மையானது! இட்லி, பொங்கல், தோசை என்று இல்லாது ஆலு சப்பாத்தி, கீரை சப்பாத்தி, முள்ளங்கி சப்பாத்தி என சப்பாத்திகளில் பல வகை, பாலிலேயே அரிசியை வேக விட்டு செய்யும் பால் பொங்கல், அரைத்துவிட்ட சாம்பார், பெசரட் & செட் தோசைகள், பாண்டிய நாட்டில் சோளாப்பூரி & சென்னா..

என்று ஆரியபவன் வெரைட்டி வெரைட்டியாக பல உணவுகளை அறிமுகப்படுத்தியது! இதுவரை ஸ்வீட் காரம் காபி எனில் உடுப்பியின் கேசரியும், வெள்ளையப்பமும், ஃபில்டர் காபியும் குடித்துப் பழகிய மதுரை மக்கள் இப்போது பாஸந்தியும், சமோசாவும், மசாலாபாலும் என்று ஆரியபவனுக்கு ஆதரவு தந்து தமிழருவியானார்கள். ஆரியபவன் ஸ்வீட்ஸ், செயின் ஓட்டல்கள்.. 

என விரிவடைந்து பை நைட் என்று தூங்கா நகரின் இமையை இழுத்துப் பிடித்து நிறுத்தியது! நவரத்தின குருமாவும், மில்க் பரோட்டாவும், பால் பொங்கலும், சாம்பார் வடையும், தயிர் வடையும், ஸ்பெஷல் ரவா எனப்படும் ஆனியனும் மசாலாவும் கலந்த மெகா முருகல் ரவா தோசையும், பெசரட்டும், உப்புமாவும், கேரட் குருமா செட் தோசையும் மதுரை நாவுகளை பல ஆண்டுகளுக்கு.. 

அடிமைப்படுத்தி வைத்திருந்தன! மதிய சாப்பாடெல்லாம் தெய்வ லெவலில் இருக்கும் 1989இல் ஒரு அன்லிமிடெட் சாப்பாடு ₹20 தான்! நெய்யில் ஆரம்பித்து இறுதியில் பாயாசம் வரை அப்படி அத்தனை மெனுக்கள்! இடையில் இதே உடுப்பி தங்கள் கடையை ஆரியபவனிடம் தந்துவிட்டு தங்கள் கொடியை வாலண்டியராக இறக்கிக் கொண்டனர்! அந்த இடத்தில் ஆரியபவன் தங்களது.. 

மதிய மீல்ஸ் செக்‌ஷனை ஆரம்பித்து வெகு நாட்கள் வெற்றிக் கொடியை பறக்கவிட்டனர்! மதுரையில் ஆரியபவன் எனும் கோஹினூர் வைரத்தின் பேரொளியிலும் மனோரமா ஓட்டல், பெரியார் பேருந்து நிலையம் அருகில் கே.பி.எஸ், அசோக் பவன், வசந்த பவன், முருகன் இட்லி கடை, பரசுராம்  பல என தனக்கென்று தனித்துவ உணவு வகைகளை கொண்ட பல சைவக்கடைகள் மினுக்கிட்டன!

உடுப்பி போல ஆரியபவனின் கொடியும் ஓர் நாள் கீழிறிங்கியது.! அவர்கள் இப்போது அந்தத் தொழிலிலேயே இல்லை! மாடர்ன் ரெஸ்டாரெண்ட் மட்டும் இன்னும் பழைய ஜமீனாக வலம் வருகிறது! கோபு அய்யங்கார் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சரணடைய மனோரமாவும் இப்போது கைமாறிவிட்டது! இன்று மதுரையில் சபரிஷ், டெம்பிள் சிட்டி, நடிகர் பரோட்டா சூரியின் அம்மன்.. 

போன்ற உணவங்கள் இருந்தாலும், அந்த காலத்து உடுப்பி, மாடர்ன் போல அல்லது சுனாமியாய் வந்த ஆரியபவன் போல உயர் தரமான சைவ ஓட்டல்களோ அல்லது விதவிதமான ருசி மிகுந்த சைவ மெனுக்களோ மதுரையில் அருகிவிட்டது! பாரம்பரியம் மிக்க சிறந்த சைவ உணவுகளுக்கு ஒரு நல்ல கடை மதுரையில் தற்போது இல்லை என்பதே நெஞ்சம் கனக்கும் உண்மையாகும்!

அசைவத்தில், சாரதா மெஸ், அருளாநந்தர், அம்ச வல்லி,பாரம்பரிய அசைவ உணவுகள் சாப்பிட தல்லாகுளத்தில் உள்ள அம்மா மெஸ், குமார் மெஸ், சந்திரன் மெஸ்.

கறி தோசை புகழ் சிம்மக்கல் கோனார் கடை.

பன் பரோட்டா அண்ணா நகர் ஆவினை ஒட்டி இருக்கிறது.

காளவாசல் தாண்டியதும் பைபாஸ் ரோட்டில் மாலை ஆறு மணிக்கு மேல் ஒரு பெரிய உணவு திருவிழாவாக நடக்கிறது.

விதவிதமான ஸ்நாக்ஸ் வகைகள் அப்பம் முதல் விதம் விதமாக பானி பூரி அதே போல தொலைந்து போன நம் பாரம்பரிய குண்டு சோடா அதே குண்டு பாட்டில்களில் அடைக்கப்பட்ட பல வித குளிர்பானங்கள் கிடைக்கும்.

சித்திரை வீதியில் கோபு ஐயங்கார் ஹோட்டலில் வெள்ளையாப்பம் கார சட்னி.

நீங்கள் இளமையில் பார்த்து மறந்த குட்டி நெல்லிக்காய், இலந்தை, கொடுக்காய் புளி, பனங்கிழங்கு போன்ற அனைத்தும் காந்தி Museum முன் கிடைக்கும் அங்கே விட்டால் யானைக்கல்லில் கிடைக்கும்.

90s கிட்சின் ஃபேவரைட் கடலை பொரி, தேன் மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய் போன்றவை சிம்மக்கல்லில் இருந்து கோரிப்பாளையம் பாலம் ஏறும் முன் உள்ள கடையில் கிடைக்கும்.

. மதுரை மேலக்கோபுர வாசல் அருகே இருக்கும் நூற்றாண்டைக் கடந்த நாகப்பட்டிணம் ஒரிஜினல் மிட்டாய்க்கடை. நெல்லை இருட்டுக்கடை மாதிரி எளிமையான சின்னக் கடை தான். இங்கு தயாராகும் அல்வாவுக்கும்,பூந்திக்கும் விசேஷ ரசிகர்கள் இருக்கிறார்கள். பண்டித நேரு முதல் மதுரையைச் சேர்ந்த எம்.எஸ்.சுப்புலெட்சுமி வரை இதன் தனித்துவமான சுவைக்கு ரசிகர்கள்.அம்பி என்றழைக்கப்பட்டவர் தான் அதன் உரிமையாளர். சூடான மசாலா உருளைக்கிழங்கை தாமரை இலையில் மடித்துக் கொடுப்பார்கள். இன்னும் கொடுக்கிறார்கள். மீனாட்சியம்மன் கோவிலுக்கு அருகே எளிமை மாறாத அதே பழமையுடன் இருக்கிறது இந்த அல்வாக் கடை.

விளக்குத்தூண் அருகில் ஜிகர்தண்டா, வில்லாபுரம் பாதாம் பால், பெரியார் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டு அருகில் ரோஸ் மில்க் மற்றும் பாதாம் பால் என்று சொல்லிகொண்டே போகலாம்

இவ்வளவையும் சொல்லி விட்டு டவுன் ஹால் ரோட்டில் உள்ள பிரேமா விலாஸ் அல்வா பற்றி சொல்லவில்லை என்றால் மதுரைகாரர்கள் முறைப்பார்கள்.

மந்தார இலை அல்வாவும் அதை தின்று விட்டு கடையில் கை நீட்டினால் அவர்கள் தரும் ஓசி மிக்சரும் என்ன அருமை என்று தின்று பார்த்தால் தான் தெரியும்.

இன்னும் நிறைய இருக்கிறது.

ருசியின் பின்னே உலகம்! 

{இதே காலகட்டத்தில் மதுரையில் இருந்த வேறு சைவ ஓட்டல்களின் பெயர்கள் இப்பதிவில் விட்டுப் போயிருந்தால் விபரம் அறிந்தவர்கள் கமெண்ட்டில் தெரிவிக்கவும்)

#maduraifood
#மதுரைநளபாகம்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...