Sunday, August 2, 2015

கரிசல் பூமி கலிங்கப்பட்டி காவல்த்துறையினால் கலவரபூமியானது.





















இன்று (02-08-2015) எங்கள் வட்டாரத்தில் உள்ள அண்ணாச்சி திரு.வைகோ அவர்களின், கலிங்கப்பட்டி கரிசல் பூமி காவல்த்துறையின் அத்துமீறலால் கலவர பூமியாகிவிட்டது.

மது கூடாது என்று மக்கள் சக்தி விரும்பினால், அதை அணைபோட்டுத் தடுத்துவிட முடியாது. எதற்கு கலிங்கப்பட்டியில் அடக்குமுறை? என்ன அவசியம்?

வானம்பார்த்த இந்த கரிசல் பூமி வரலாற்று ரீதியாக போராட்ட பூமியாகும். பூலித்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், அழகு முத்துக்கோன், ஒண்டி வீரன், பாரதி, வ.உ.சி போன்ற போராளிகள் உலாவிய அதிர்வும் உயிரோட்டமுமான பூமிதான் இந்த கரிசல் மண்.

சி. நாராயணசாமி நாயுடு தலைமையில் நடந்த விவசாயப் போராட்டத்தில் கோவில்பட்டியிலும், எனது கிராமமான குருஞ்சாக்குளத்திலும், சங்கரன்கோவில் வட்டாரத்திலும் காவல்த்துறையின் அடக்குமுறையை மீறி, துப்பாக்கித் தோட்டாக்களை துச்சமெனக் கருதி நெஞ்சைக் காட்டிய
வீர மரபினர். உண்மைக்காகப் போராடும் அந்த மண்சார்ந்த மக்களையா காவல்த்துறை என்ற ஏவல்த்துறை அழித்துவிடும்?

காவல்த்துறை நண்பர்களே உங்கள் வீட்டில் வாழும் இளைஞர்களும் இந்த மது அரக்கனால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்றுதான் இந்த போராட்டமே. நீங்களும் பொதுமக்கள் தான். உங்களுக்காகவும் தான் இந்தப் போராட்டம்.

தாலிக்குத் தங்கம் தந்து தாலியறுக்க மதுவையும் நடத்தும் அரசுகளுக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து விட்டார்கள். தாய்க்குலம் தெருவில் வந்து போராட ஆரம்பித்துவிட்டது.
ஆட்சியாளர்களே உணருங்கள் மதுக்கடைகளை மூடுங்கள்.


கேரளாவில் மதுஅரக்கனை உம்மன்சாண்டி ஒழித்துக் கொண்டு வருகிறார். காந்தி பிறந்த மண் குஜராத் மதுவுக்கு “நோ” என்று சொல்லிவிட்டது. அங்கு வளர்ச்சி ஏதும் இல்லையா? தமிழகத்தை மயானமாக்கும் மதுவை அகற்றுங்கள்.

இன்று நண்பகல் வரை, கிராமத்தில் தான் இருந்தேன். அப்போது கலவரப் பிரச்சனை கவனத்திற்கு வரவில்லை. மதுரை வந்து விமானம் மூலம் சென்னைக்கு மூன்று மணிக்கு நானும், திரு.ச.தங்கவேலு அவர்களும் திரும்பிவிட்டோம். அதனால் உடனடியாக அங்கு செல்ல இயலவில்லை என்பது வருத்தமான செய்தி.



-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
02-08-2015.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...