Tuesday, August 25, 2015

மணப்பாடு




ன்றைக்கு அடையாரில் பாளையங்கோட்டையில் கல்லூரியில் படிக்கும்போது உடன் படித்த நண்பர் பெனடிக்ட்டைச் சந்திக்க முடிந்தது. இவர் மணப்பாடைச் சேர்ந்தவர். நான் விரும்பும் ஊர்களில் ஒன்று மணப்பாடு. அமைதியான கடற்கைரையோர பேரூர்.
வடக்கேயிருந்து பழைய காயல், புன்னக்காயல், கொம்புத்துறை, வீரபாண்டியன்பட்டிணம், ஆலாந்தலை, தெற்கேயிருந்து பெரியதாழை, கூட்டப்பனை, உவரி, கூத்தங்குளி, கூடங்குளம், பெருமணல், கூட்டப்புளி வரை உள்ள ஊர்மக்களுக்கு புண்ணிய ஸ்தலமாக கூப்பிடு தூரத்தில் மணப்பாடு அமைந்துள்ளது. வண்ணநிலவன் எழுதிய, “கடல்புரத்தில்” என்ற படைப்பைப் படித்தாலே மணப்பாடு அப்படியே கண்முன் வந்து நிற்கும். மீனவ மக்களின் அன்றாடப் பாட்டை அற்புதமாக படம்பிடித்துக் காட்டி இருப்பார் வண்ணநிலவன். உவரியைச் சேர்ந்த நண்பர் ஜோ.டி.குருஸ் எழுதிய ஆழிசூழ் உலகு, கொற்கை ஆகிய நாவல்கள் எல்லாம் கடலோர மக்களின் சமூக வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டும். பல திரைப்படங்கள் இங்கே எடுக்கப்பட்டுள்ளன. மணப்பாடு போலவே, திருவனந்தபுரம், குமரிமுனை, மேற்குத்தொடர்சிமலைப் பகுதிகள், மைசூர், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், உதய்ப்பூர், ஜெய்ப்பூர், சாந்தி நிகேதன், பிரம்மபுத்ரா நதியோரங்கள், திரிபுரா போன்ற ரம்மியமான இடங்கள் என்றைக்கும் என் மனது நேசிக்கும் மற்ற இடங்கள். பெனடிக்ட்டைப் பார்த்த உடன், மணப்பாட்டின் நீண்ட மணல் செறிந்த மேட்டுப்பாங்கான தேரி நில அமைப்பு மனதில் வந்துபோனது. வங்கக்கடல் ஓரத்தில் பனை மரங்கள் சூழ கருமேனியாறு வங்கக்கடலில் கடலில் சேரும் அந்த இடம் மாலைப்பொழுதுகளில் ரசிக்கக் கூடிய இடம். இதேபோல தாமிரபரணி நதி புன்னக்காயலில் வங்கக் கடலில் கலக்கிறது. திருச்செந்தூரில் இருந்து 18 கி.மீ தூரத்தில் மணப்பாடு அமைந்துள்ளது. இங்குள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் இயேசுபிரான் சுமந்த சிலுவையின் சிறுபகுதி பிரார்த்தனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த தேவாலயம் மேற்கத்திய நாடுகளில் உள்ள செயின்ட் சேவியர் மிஷினரியுடன் இணைந்ததாகும். எழில் கொஞ்சும் மணப்பாடு “சின்ன ஜெருசலேம்” என்று அழைக்கப்படுகின்றது. கத்தோலிக கீதங்கள் ஒலிக்கும் போர்த்துகீசியர்கள் கட்டிய தேவாலயங்கள் நம்காண்போரின் மனதைக் கவரும். 1540ல் இந்தப்பகுதியில் கடலில் சென்ற போர்ச்சுக்கீசிய கப்பல் ஒன்று புயலில் சிக்கியது. கப்பலின் மாலுமி “தங்களை காப்பாற்றினால், கப்பலின் பாய்மரத்தால் சிலுவை செய்து வைப்பதாக” வேண்டி கொள்ள, கப்பல் இந்த ஊர் பக்கம் பத்திரமாகக் கரை ஒதுங்கியது. அவரும் சிலுவை செய்து இங்கு வைத்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின், புனித பிரான்சிஸ் சேவியர் இப்பகுதிக்கு வந்து கிறிஸ்து மார்க்கப் பணிகளை ஆற்றினார். திருநெல்வேலி தூத்துக்குடி நகரங்களில் கிறிஸ்தவ மார்கத்திற்கு மணப்பாடு ஒரு கேந்திர இடமாக இருந்தது.


இங்கிருக்கும் குகையில் புனித சவேரியர் தவம் இருந்தார். திருச்செந்தூரில் மைந்துள்ள நாழிக்கிணறு போல குகைக்குள் ஒரு கிணறு அமைந்துள்ளது. கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்தாலும் அந்த கிணற்றின் நீர் தேங்காய் நீர் போல தனிச்சுவையோடு இன்று உள்ளது.

புனித சவேரியர் இப்பகுதியில் மதப்பணி ஆற்றும் போது இங்குள்ள மக்களைப்போல வேட்டியைக் கட்டிக்கொண்டு, காலில் செருப்பு இல்லாமல், மேல்சட்டையும் இல்லாமல் எளிமையாக வாழ்ந்தார். அதற்குமுன் காலணிகளோடு திரிந்த அவருக்கு செருப்பில்லாமல் நடக்கும்போது முட்கள் தைத்து ரத்தவெளிவந்து காலில் புண்களோடு தன்னுடைய பணிக்காக நடந்து சென்றதும் உண்டு மதங்கள் வேறுவேறாக இருக்கலாம்; பெரியாரின் கொள்கையின் படி மதம் மறுப்புக் கொள்கைகள் இருக்கலாம்; ஆனால், புனித சவேரியார் நல்லிணக்கத்தோடும், மனிதநேயத்தோடும் வேறு தேசத்திலிருந்து வந்தாலும் தமிழ் மண்ணில் நல்லொழுக்கத்தை போதித்த இடம் தான் மணப்பாடு. -கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 25-08-2015. #மணப்பாடு #Manapad #KsRadhakrishnan #KSR_Posts

1 comment: