Friday, December 11, 2020

 #பாரதி_139 !

———————


இன்று(11-12-2020) மாகவி பாரதியின் 139 வது பிறந்தநாள், ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் எட்டையபுரத்தில் இருப்பது வாடிக்கை. இந்த ஆண்டு வைரஸ் தொற்று காரணமாக செல்ல முடியவில்லை. ஏறத்தாழ எட்டையபுரம் உட்பட்ட கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் நான் போட்டியிட்ட தேர்தல் 1989க்கு முன்பே, 1987லிருந்து இதே நாளில் எட்டையபுரம் செல்வது வாடிக்கையாக இருந்தது. இந்தாண்டு அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாத சூழ்நிலைகள் உருவாகிவிட்டன.
••••
மதுரகவி பாஸ்கரதாஸ், மகாகவி பாரதியை கம்பனை போல் கவிச்சக்கரவர்த்தி என்று அழைத்தார். தமிழ்த் தாத்தா உ.வே.சா, பாரதி மீது எதிர்வினையில் இருந்தார் என்ற கருத்து ஒருபுறம் தவறாக சொல்லப்படுகிறது. ஆனால், ’கவிச்சக்கரவர்த்தி சுப்பிரமணிய பாரதி சரிதம்’ என்ற புத்தகத்துக்கு உ.வே.சா 1936ஆம் ஆண்டில் எழுதிய அணிந்துரையில் 'எட்டையபுரம் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியை உலகம் நன்கு அறியும், பாரதி என்றாலே அவர்தான், நல்ல கவிஞர்' என குறிப்பிட்டுள்ளார்.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய ஆளுமை பாரதி. அவர் நம் தேசத்தின்குரல். அந்நியர்க்கு அடிமைப்பட்டும், உள்நாட்டில் ஒடுக்கப்பட்டும் தவித்த மக்களின் குரலாக ஒலித்தவர். தமிழுக்கு பொதுவுடைமை, புரட்சி போன்ற சொற்செல்வங்களைச் சேர்த்தவர். ரஷ்யாவின் 1917 அக்டோபர் புரட்சியைப் பாடிய முதல் இந்தியக் கவிஞரும் அவரே. அதனால் மொழிகளின் எல்லைகளைக் கடந்து அவர் நினைவுகூரப்படுகிறார்.
சுபகிருது ஆண்டில் (1903) தமக்கு தேசபக்தி ஏற்பட்டதாக பாரதி கூறுவார். அதற்கு முன்பே ஆங்கில ஆட்சி மீது அவருக்கு வெறுப்பிருந்தது. தமிழ் புறக்கணிக்கப்படுவதும், ஆங்கிலம் போற்றப்படுவதும் கண்டு மனம் வருந்தினார்.
15 வயது முடிந்த பின்பு தந்தையை இழந்த பாரதி, 1898ல் அத்தையாரின் ஆதரவைத் தேடி காசிக்கு சென்றார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மூன்றிலும் அவருக்கு புலமை.
காசியில் பாரதி, அந்தணருக்கேற்ற ஆச்சாரமின்றி, நியமநிஷ்டை இல்லாது, கோட்டும் சட்டையும், தலையில் முண்டாசும், காலில் பூட்சும் அணிந்து, மீசையும் கிராப்பும் வைத்திருந்ததாக செல்லம்மா பாரதி கூறுகிறார்.
1906 சக்ரவர்த்தினி இதழில், ராஜாராம் மோகன்ராயை ‘மகான்’ எனப் புகழும் பாரதி ‘சாதி சமயக் கட்டுகளையெல்லாம் அவர் அறுத்து வெளியேற்றிய போதிலும், மரண காலத்தில் அவர் மார்பின் மீது பிராமணர்கள் போடுகிற முப்புரி நூல் தவழ்ந்து கொண்டிருந்ததாம்’ என வருத்தத்தோடு எழுதினார். எனவே பாரதி காசியிலேயே பூணூலைக் களைந்திருப்பார் என ஊகிக்கலாம். அவர் ‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே’ என்றும், ‘குல தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்’ என்றும் பாடியதில் வியப்பில்லை.
பெண் கல்வி, சமத்துவம் இந்த இரு விஷயங்களில் பாரதி அதிக கவனம் செலுத்தியதாக நாராயண அய்யங்கார் கூறுகிறார். சரஸ்வதி பூஜையன்று அத்தை வீட்டில் ஒரு கூட்டத்தைக் கூட்டி, பெண்கல்வி குறித்து பாரதி பேச, சீத்தாராம் சாஸ்திரி அதைக் கண்டித்து வெளியேறினாராம். அதுவே,
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப் பில்லை காண்.
-என்று பாரதியை கும்மியடிக்க வைத்தது.
வைசிராய் கர்சன் பிரபு 1905ல் வங்காளத்தை, இந்து வங்காளம், முஸ்லிம் வங்காளம் எனத் துண்டிக்கும் திட்டத்தை அறிவித்தார். வங்காளத் தேசியத் தலைவர்கள் ஆவேசங்கொண்டனர். 1905 ஆகஸ்ட் எழில் சுதேசி இயக்கம் உருவெடுத்தது. இவ்வியக்கம் பாரதியைக் கவர்ந்தது. 14-04-1905ல் நடந்த சென்னை கடற்கரைக் கூட்டத்தில் அவர் ’வங்கமே வாழிய’ வாழ்த்து கவிதை பாடினார். வங்க பிரிவினை அமலுக்கு வரவிருந்த அக்டோபர் 16ல் வங்காளத்தில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பங்கிம் சந்திரரின் ”ஸுஜலாம் ஸுபலாம்” பாடல் தேசிய கீதமாயிற்று. பாரதி அதை”வந்தே மாதரம்” எனத் தமிழ் கீதமாக்கினார்.
1905 டிசம்பரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்கு பாரதி சென்றார். திரும்பும் வழியில் கல்கத்தாவிலுள்ள டம்டம் இடத்தில் நிவேதிதா தேவியை (அயர்லாந்துகாரர்) சந்தித்தார். இவரைத்தான் பின்பு, “குருமணி” என்றும் ‘அடியேன் நெஞ்சின் இருளுக்கு ஞாயிறு’ என்றும் பாரதி போற்றினார்.
தேவியாருக்கும் வங்காளத்தில் இயங்கிய அனுசீலம் சமிதி அமைப்புக்கும் தொடர்பு. சமிதி ஆங்கிலேயருக்கு எதிரான ஆயுதப் போருக்கு இளைஞர்களைத் தயாரித்து வந்தது. இந்த பின்புலத்தில் தேவியார் என்ன கூறியிருப்பார்? “பாரத தாய் விலங்குகளோடு கண்முன் நிற்பதாய் காணுமளவிற்கு உணர்ச்சி வேண்டும். அப்படி கண்டால்தான் விலங்கை எப்படியாவது நீக்க வேண்டுமென்ற உணர்வு வரும்.... பேசிக்கொண்டே வந்த தேவியார் திடீரென ஆவேசமுற்று தமது மேலங்கியை மார்பெதிரே பிய்த்துத் திறந்து, ‘உங்களுக்கு தைரியம் வேண்டும். எங்களை இங்கே குத்திக்கொல்ல உங்களுக்குத் தைரியம் வேண்டும்” என்றாராம். இதுவே பாரதியின் அரசியல் வாழ்வை திசைமாற்றிப்போட்டது.
திலகர் அரவிந்தர், விபின் சந்திரபாலா ஆகியோரின் தீவிரத் தேசியவாத அரசியலில் பாரதியும் குதித்தார். அவர்கள் இந்தியாவை, இந்துக்களின் தெய்வப்படிமங்களான காளி, துர்க்கை, பவானி, பைரவி வடிவங்களாக சித்தரித்தனர். பாரதியும் பாரதத்தைக் காளியாக உருவகித்தே பாடினார். இந்த சித்தரிப்பையும், வந்தே மாதரம் முழக்கத்தையும் முகமதியர் ஏற்கவில்லை. ஒரே நேரத்தில் இந்து தேசியமும் இஸ்லாமியத் தேசியமும் பொங்கி எழுந்தன.
இதன் ஆபத்தை உணர்ந்தார் பாரதி. 1906 ஜூலை 23, ‘இந்தியா’ இதழில் ‘இசுலாமியர்களின் பூர்வீகக் குற்றங்களை எடுத்துரைத்தல் தப்பிதம்’ என்றும், ‘அக்பர் போன்ற மகமதிய மகான்களின் உற்சவத்தைக் கொண்டாட வேண்டுமென்றும்’ கேட்டுக்கொண்டார். ‘சத்ரபதி சிவாஜி’ பாடலின் முன்னுரை ஒன்றில் “இந்தச் செய்யுளில் மகமதியச் சகோதரர்களுக்கு விரோதமாக சில வசனங்கள் உபயோகிக்க நேர்ந்தது பற்றி விசனமடைகிறோம்” என்று வருத்தமும் தெரிவித்தார்.
தீவிரத் தேசியவாதம் வீறுகொண்டெழ அகக் காரணிகள் பலவுண்டு. அதே நேரம் புறக்காரணிகளும் இருந்தன. 1. ரஷ்ய - ஜப்பான் யுத்தம்(1904 -05). 2. முதல் ரஷ்ய புரட்சி(1905-07). ரஷ்ய மிகப்பெரிய நாடு, ஜப்பான் மிகச் சிறிய நாடு. இரண்டுக்கும் இடையே யுத்தம். ரஷ்யா தோல்வியடைந்தது. ஜப்பானின் வெற்றி இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏகாதிபத்தியங்களை முறியடித்து விடுதலை பெற முடியும் என்ற நம்பிக்கையை ஆசிய நாடுகள் பெற்றன.
1905 ஜனவரி 22, செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கில் ஒரு லட்சம்பேர் திரண்டு, அடிப்படை உரிமைகளை வழங்கக் கோரி ஜார் மன்னனுக்கு மனு கொடுக்க சென்றார்கள். அவர்களை ராணுவம் சுட்டு தள்ளியது. பலர் உயிரிழந்தனர். இந்த படுகொலையே ‘ரத்த ஞாயிறு’. அதைக் கண்டித்து தொழிலாளர்களின் மாபெரும் வேலை நிறுத்தம். ஜார் மன்னன் பணிந்தான். இந்த ரஷ்ய புரட்சியைப் பற்றி பாரதி, இந்தியா இதழில் ஐந்து கட்டுரைகளை எழுதினார். 1-9-1906 இதழில் “நமது ரஷ்யத் தோழர்கள் செய்து வரும் உத்தமமான முயற்சிகள் மீது ஈசன் பேரருள் புரிவானாக” என்று வாழ்த்தினார்.
1906 நவம்பர் 10 இதழில் “சோசலிஸ்ட் கட்சியாரின் (இங்கிலாந்து) கொள்கைகளில் சிலவற்றைக் கீழே தருகிறோம். 1. ராஜா இருக்கக் கூடாது. 2. உலகத்தில் தேசத்துக்குத் தேசம் யுத்தங்கள் நடப்பதையெல்லாம் நிறுத்திவிட வேண்டும். 3. தேசநிலம், தேச ஜனங்களுக்கெல்லாம் பொதுவாய் இருக்க வேண்டும்” எனப் பதிவு செய்திருந்தார். இத்தகைய கொள்கையுடையோர் ஆட்சியதிகாரத்துக்கு எளிதில் வந்துவிடமுடியாது என்ற கருத்தும் அவரிடம் இருந்தது.
1907ல் விபின் சந்திரபாலர் சென்னை வந்தார். நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா போன்ற நண்பர்களுடன் பாரதி அவரைச் சந்தித்தார். சென்னையில் ஆயுதப் போருக்கான ரகசியச் சங்கங்களை அமைக்க அவர்கள் திட்டமிட்டனர். இக்கட்டத்தில் இந்திய விடுதலைக்கு, ஆயுதப்போராட்டமும் அதற்கான ரகசிய நடவடிக்கைகளும் அவசியம் என்று பாரதி கருதியதாக துணியலாம்.
சூரத் காங்கிரஸ் மகாசபையில் திலகரின் தீவிர தேசியவாதக் கட்சிக்கு சென்னை மாகாணச் செயலராக வ.உ.சிதம்பரனார் தேர்வானார். 1908 மார்ச்சில், வ.உ.சி, பாரதி, சுரேந்திரநாத் ஆர்யா மேலும் நால்வர் சேர்ந்து, ‘சென்னை ஜனசங்கம்’ அமைப்பை உருவாக்கி, சுய ராஜ்ய தினம் கொண்டாடத் திட்டமிட்டனர். பாரதியும் சுரேந்திரநாத் ஆர்யாவும் அரும்பாடுபட்டு மாணவர்களையும் மற்றவர்களையும் திரட்டினர். கழுத்தில் மாலையுடன் மேளதாளங்கள் முழங்க, பெரும்படை ஒன்றை நடத்திச் செல்லும் தளபதிபோல் ஊர்வலத்தைப் பாரதி நடத்தி சென்றுள்ளார்.
தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் சுயராஜ்ய தினம் கொண்டாடியதற்காக வ.உ.சி.யும் சுப்பிரமணிய சிவாவும் 12-03-1908ல் கைது செய்யப்பட்டனர். இருவர் மீதும் ராஜ துரோக வழக்கு போடப்பட்டது. மறுநாளே மக்கள் போராட்டம் வெடித்தது. போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் நான்குபேர் சாவு, நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது.
1908 ஏப்ரல் 30ல் நடந்த நிகழ்வு ஒன்று ஆங்கில அடக்குமுறையை மேலும் கட்டவிழ்த்துவிட்டது. முஷாபூர்(பீகார்) நீதிபதி கிங்ஸ்போர்டைக் கொல்ல பிரபுல்லா சக்கி, குதிராம் போஸ் இருவரும் வெடிகுண்டு வீசினர். குறி தவறிற்று. கென்னடி என்ற அம்மையாரும், அவரது மகளும் இறந்தனர். பிரபுல்லா சக்கி போலீசாரிடம் பிடிபடுமுன் தன்னைத் தானே சுட்டுக்கொண்டார். குதிராம் போஸைக் கைது செய்து தூக்கிலிட்டனர்.
அரவிந்தர், தம்பி பரீந்தர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து திலகரும் கைதானார். நாடெங்கும் தேசிய தீவிரவாதப் பிரிவினர் பலர் சிறை வைக்கப்பட்டனர்.
ஆயுள் தண்டனையும், ஆஷ் கொலையும்
07-07-1908ல் வ.உ.சிக்கு 40 ஆண்டுகளும், சிவாவுக்குப் 10 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆகஸ்ட்டில் பாரதியின் இந்தியா அலுவலகத்தில் சோதனை நடந்தது. அதன் உரிமையாளர் எம்.சீனிவாசன் கைதானார். பாரதி தலைமறைவாகி புதுச்சேரியில் அடைக்கலமானார். 10-10-1908ல் புதுவையிலிருந்து ‘இந்தியா’ வெளிவந்தது. அதன் முகப்பில் ‘ஸதந்திரம், ஸமத்துவம், ஸஹோதரத்துவம்,’ என்றும் பிரெஞ்சு புரட்சியின் முழக்கங்கள். 1909 ஏப்ரல் இதழில் பாரதி ‘பயங்கரவாதம்’ பேதைமையானது. அது பலனளிக்காது என்ற டால்ஸ்டாய் கருத்தை வலியுறுத்திச் சென்றார்.
1911 ஜூன் 17 அன்று மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன், ஆஷ் துரையை சுட்டுக் கொன்று, தம் உயிரையும் மாய்த்துக்கொண்டார். படுகொலை, கைது,சோதனை என ஆங்கில அடக்குமுறைகள். தேசபக்தர்கள் சிதைந்து சிதறுண்டு போயினர்.
1908 முதல் 1911 வரை நடந்த நிகழ்வுகள், பயங்கரவாதம் வெற்றி தராது என்பதையே உணர்த்தின. பாரதியும் தீவிரத் தேசியவாதத்தின் மீது நம்பிக்கை இழந்தார் எனலாம். அரசியலில் இறங்குமுகத்தில் இருந்த அவர், இலக்கியத்தில் ஏறுமுகம் கண்டார். ‘பகவத்கீதை தமிழாக்கம்’, ‘கண்ணன் பாட்டு’, ‘குயில் பாட்டு’, ’பாஞ்சாலி சபதம்’ என அவர் கவியாற்றல் ஊற்றெடுத்துப் பெருகிற்று. எனினும், விடுதலை உணர்வோ, சீர்திருத்தச் சிந்தனைகளோ அவரை விட்டு நீங்கவில்லை. பாஞ்சாலி சபதத்தில் வரும்(1912).
கட்டுண்டோம் பொறுத்திருப்போம்
காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக்
காண்போம்
இந்த நம்பிக்கையூட்டும் அர்ஜூனனின் வாய்மொழியை பாரதியின் அகவெளிப்பாடாகக் கொள்ளலாம். ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சி வென்றபோது,
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்
....வையகத்தீர் புதுமை காணீர்.
என குதூகலித்துப் பாடினார். ரஷ்ய வெற்றியை வாழ்த்திப் பாடிய முதல் இந்தியக் கவிஞர் பாரதிதான். நீராய் இருந்த அவருக்குள் நெருப்பும் கிடந்தது.
1918 நவம்பர் 20ல் கடலூர் அருகே பிரிட்டிஷ் அரசு பாரதியைக் கைது செய்தது. 25 நாள்களுக்குப் பின் அவர் விடுதலையானார். 1919ல் சென்னை வந்த பாரதி, மூதறிஞர் ராஜாஜி வீட்டில் மகாத்மா காந்தியைச் சந்தித்தார். ரெளவுலட் சட்ட எதிர்ப்பு இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட காந்தி சென்னை வந்திருந்தார். “மிஸ்டர் காந்தி தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்” என பாரதி கை உயர்த்தி சென்றாராம். காந்தியின் அறவழி அவரைக் கவர்ந்திருக்க வேண்டும். பின்னாளில்.
“வாழ்க நீ எம்மான்...
பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்
அதனிலும் திறன்பெரி துடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த் தொண்டர் தங்கள்
அறவழி என்றுநீ அறிந்தாய்.”
என மனம் நெகிழ்ந்து பாடினார் பாரதி. இதைத் திலகரின் வழியிலிருந்து காந்திய வழிக்கு அவர் இதயம் இடம் பெயர்ந்து கொண்டிருந்த கட்டம் எனலாம்.
1921 ஜூலையில் பார்த்தசாரதி கோயில் யானைக்கு மதம்பிடித்தது. துதிக்கையால் பாரதியைத் தூக்கி வீசி எறிந்தது. ரத்தப்பெருக்கோடு அவர் நினைவிழந்தது கிடந்தார். குவளைக் கண்ணன் அவரை மருத்துவமனைக்குத் தூக்கி சென்றார். பாரதி ஓரளவு நலம் பெற்றார்.
1921 செப்டம்பர் முதல் நாளில் பாரதிக்கு வயிற்றுப்போக்கு. அது ரத்தக்கடுப்பாக மாறி அவரை வேதனைப்படுத்தியது. 11ஆம் நாள் இரவு ஒரு மணிக்குமேல் தமிழ்நாடு தன் புரட்சிக் கவிஞனை இழந்தது.
“பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்” என சூளுரைத்தவர் பாரதி. அப்படியிருக்க, சுதந்திர தேவியைத் தொழுதிட மறவாத, சாதிப் படைக்கு மருந்தான அந்தப் பைந்தமிழ்த் தேர்ப்பாகன் சாகமுடியுமா? நாட்டுக்காகவும் சமூகநீதிக்காகவும் போராடும் கடைசி மனிதன் இருக்கும் வரை பாரதியும் வாழ்ந்து கொண்டிருப்பார். மக்களுக்கான வாழ்வுரிமைப் போராட்டங்களோடு ஒன்றித்து இயங்கும் படைப்பாளி இறவாத இலக்கியங்கள் படைக்க முடியும் என்பதற்கான தலையாய சான்று பாரதியே.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
11-12-2020.

No comments:

Post a Comment

You'll be surprised by how consistently things will show up exactly as you need them to, and not a moment before. When it's time to act, the energy will come.

  You'll be surprised by how consistently things will show up exactly as you need them to, and not a moment before. When it's time t...