Wednesday, December 16, 2020

 #திருப்பாவை

——————————



“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்கள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறைதருவான்
பாரோ புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.”
மார்கழி திங்கள் - மார்கழி மாதமாயும்,
மதிநிறைந்த - சந்திரனால் பூர்ணமான,
நன்னாள் - நல்ல நாளாயிருக்கிறது.
ஆல் - ஆச்சார்யம்.
நேரிழையீர் - நேர்மையுள்ள நகைகளை அணிந்தவர்களும்,
சீர்மல்கும் - ஐஸ்வர்யம் விளங்குகிற.
ஆய்ப்பாடி - நந்த கோகுலத்திலுள்ள.
செல்வம் - கண்ணனுடைய ஐஸ்வர்யத்தையுடைய.
சிறுமீர்கள் - சிறுபெண்களே,
நீராட - மார்கழி நீராட்டம் என்கிற நோன்புக்காக.
போதுவீர் - போவதில் ஆசையுள்ளவர்களே?
போதுமினோ - வாருங்கள்.
கூர்வேல் - கூர்மையுடைய வேலாயுதத்தைத் தரித்த.
கொடும் - க்ரூரமான,
தொழிலன் - காரியத்தை செய்கிற
நந்தகோபன் - நந்தகோபனுடைய,
குமரன் - பிள்ளையாயும்,
ஏர் ஆர்ந்த - அழகு நிறைந்த
கண்ணி - கண்களையுடைய,
யசோதை - யசோதைப் பிராட்டிக்கு,
இளம் சிங்கம் - இளம் சிங்கம் போன்றவனும்,
கார்மேனி - மேகம் போன்ற திருமேனியை உடையவனும்,
செம்கண் - சிவந்த கண்களை உடையவனும்,
கதிர்மதியம்போல் - சூரியன் போலவும், சந்திரன் போலவும்,
முகத்தான் - முகத்தை உடையவனுமான,
நாராயணனே - நாராயணனே,
நமக்கே - அவனையே எதிர் பார்த்திருக்கும் நமக்கு,
பறை - பறை என்கிற வாத்யத்தை
தருவான் - கொடுப்பான்,
பாரோர் - பூமியிலுள்ளோர்,
புகழ - நம்மைப் புகழும்படி,
படிந்து - வேறு பலனை விரும்பாமல் இந்நோன்பில்,
ஏல் - ஏற்றுக்கொள்,
ஓர் - இதை மனதில் வைத்துக் கொள்,
எம்பாவாய் - பெண்களுக்குரிய குணங்களையுடைய தோழியே!.
...................................
“இது குளிர் வீசும் மார்கழி மாதம். நிறைந்த பெளர்ணமி நாள்... செல்வமும், செழிப்பும் நிறைந்த ஆயர்பாடிச் சிறுமிகளே! எழுந்து நீராடுங்கள்...!
தனது கூர்மையான வேல் கொண்டு ஆயர்பாடியைப் பாதுகாப்பவன் நந்தகோபன். அவனுடைய அன்பு மனைவி யசோதை. இவர்கள் இருவரது மகனாகிய, இளஞ்சிங்கம் போன்ற கண்ணனைப் புகழ்ந்து பாடுவோம் பாருங்கள்....!
சிவந்த கண்களையும் , ஒளி வீசும் முகத்தையும் கொண்ட அந்த நாராயணனும், நமக்கு பறை எனும் மோட்சத்தை அளிக்கக் காத்திருக்கிறான். அந்தக் கரியநிறக் கண்ணனைப் புகழ்ந்து நாம் பாடிட, நமது இசையைக் கேட்டு இவ்வுலகத்தினர் அனைவரும் வியக்கட்டும்... வாருங்கள் தோழியரே......!” என்று கோதை, ஆயர்பாடிப் பெண்கள் அனைவரையும் பாட அழைப்பு விடுக்கும், மார்கழியின் முதல் நாள் இது.....!
..................................
கோதை தமிழென்று கொண்டாடும் சங்கத் தமிழ் மாலையாம் திருப்பாவையில் முதல் முலராக மலர்ந்தது இப்பாசுரம்.
ஆண்டாளின் அழகுமனக் கற்பனையில் வில்லிபுத்தூரே ஆயர்பாடியாகிறது. அவரது தோழிப் பெண்கள் இடக்கையும், வலக்கையும் அறியாத இடைப் பெண்களாகின்றனர். வில்லிபுத்தூர் வடபெருங்கோயில் நந்தகோபர் அரண்மனையாகிறது. ஆலிலைப் பள்ளியானாகிய அந்த நெடுமாலே கண்ணனாகின்றான். நாச்சியார் ஆய்ச்சியர் மடமகளாகின்றனர். இந்த இனிய பாவனையோடு கண்ணனை அடைய நோன்பு நோற்பதையே திருப்பாவை பேசுகின்றது.
பள்ளமடையாகப் பெருகுகின்றன அன்பும், காதலும்........என்றாலும் பொருத்தமான காலம் கருதியன்றோ அவற்றை எடுத்துரைக்க வேண்டும்........?
“ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்”
என்றாற்போல் கண்ணன் அருள் பெறத்தக்க காலத்தை முதன்மைப்படுத்தி கூறுகின்றது இப்பாடல்.
“மார்கழித் திங்கள்”- ஒவ்வொரு நாளுக்கும் விடியற்காலம் வருவது போல, வருடத்தின் விடியற்காலம் மார்கழி மாதம் என்பார்கள் பெரியோர். அத்துடன் ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று கீதையில் கண்ணன் செப்பிய புனிதமும் அதற்கு உண்டு. விதைகள் எல்லாம் முளைக்கின்ற காலமும் அது. அப்படிப்பட்ட இனிய மார்கழியைத் திங்கள் என்ற மங்கலச் சொல் கூட்டித் தொடங்குகின்றார் நாச்சியார்.
‘மதி நிறைந்த நன்னாள்’ - சிந்தை அணுவெல்லாம் சிலிர்க்க ஒளி வளரும் சுக்கில பட்சத்தை ‘மதி நிறைந்த’ என்றார். நம் அறிவும் உணர்வும் கண்ணனைக் கண்டு ஒளி பெறுவதாலும் மதி நிறைகிறது. கண்ணனைக் கண்டு உவக்கும் நாளாதலால் நன்னாள் ஆகிறது இந்நாள்.
கண்ணன் என்னும் கரிய நீர்த்தடத்தில் ஆட வேண்டுமென்னும் கருத்தால் ‘நீராடப்போதுவீர், போதுமினோ நேரிழையீர்’ என்கின்றார்.
அழைக்கப்பட்ட ஆயர்குடிப் பெண்கள், பண்ணைப் பெரும் பசுக்களும் வெண்ணெயும் கொழிக்கும் ஆயர்பாடியைச் சேர்ந்தவர்கள் என்பதால், ‘சீர்மல்கும் ஆய்ப்பாடி’ என்றார். கண்ணன் என்னும் களஞ்சியம் இருக்கும் இடம் அது. ஆகையாலும், அவனுக்குப் பணிவிடை செய்யும் கைங்கரியச் செல்வமிருப்பதாலும், ‘செல்வச் சிறுமீர்காள்’ என்று அழைத்தார்.
அடுத்த அடியில் ‘ கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன்’ என்றார் கண்ணனின் தந்தையை. கண்ணன் மீது ஈ, எறும்பு ஊர்ந்தாலும் பொறுக்காமல் கூரிய வேலை எடுக்கும் அன்புமிக்கவன் நந்தகோபன். அவன் குமாரன் கண்ணன்.
தாய்ப்பெருமாட்டி யசோதைக்கும் அடங்காத குறும்புக்காரன் என்பதால் ‘யசோதை இளஞ்சிங்கம்’ என்றார். யசோதையின் கண்களை ‘ஏரார்ந்த கண்கள்’ என்றார். அழகே வடிவான கண்ணனைப் பார்த்துப் பார்த்து அன்னையின் கண்களும் அழகு பெற்றனவாம்.
கண்ணனுடைய நிறத்தையும், கண்ணையும், முகத்தையும் வியந்து ‘கார்மேனிச் செங்கண், கதிர்மயம் போல் முகத்தான்’ எனப் புகழ்கின்றார். அவனை அடையத் தவிப்பார் தாகம் தீர்ப்பவன் அவன். ஆதலால், ‘கார்மேனி’ என்றார். அருள்தரும் குளிர்ச்சி மிகுந்த நோக்குடையவன் என்பதால் தாமரை போன்ற ‘செங்கண்’ என்றார். முகம் சூரியனும் சந்திரனும் போலே என்றது. அவன் பகைவரைச் சுட்டெரிக்கும் சூரியனாகவும், பக்தியுடையாரைக் குளிர்விக்கும் சந்திரனாகவும் திகழ்தல் குறித்தது.
இத்தகைய பெருமைக்குரிய நாராயணன் ‘நமக்கே பறை தருவான்’ என்றார். பறை தருவான் என்றது அடிமையாகவிருந்து அவனைச் சேவிக்கும் பெரும்பேற்றை நல்குவான் என்னும் பொருள் தரும். ‘நமக்கே’ என்ற ஏகாரமானது அவனையே இலட்சியமாய், அடையும் பெரும் பொருளாய்ச் சரணாகதி அடைந்து விட்ட உறுதிப்பாட்டை அழுத்திக் கூறுகின்றது.
இவ்வாறு வழிபட்டு, நம்மை இகழ்ந்தாரும், புறக்கணித்தோரும் போற்றும்படி அவனை குணவெள்ளத்திலே படிவோம் என்ற கருத்தில், ‘பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்’ என முடிக்கின்றார்.
தக்க பருவம் கூறி, தங்கள் சிறப்புகளையும் காட்டி, கண்ணனின் தனிப் பெருமைகளை எடுத்துரைத்து, ஆசைகளையும் ஆர்வத்தையும் தூண்டி விடுகிறது பாசுரம். ஆய்க்குல நங்கையரை மட்டுமல்லாது நம்மையும் கண்ணன் என்னும் பேரழகுப் பேரலையில் மூழ்கும்படி அழைப்பு விடுக்கின்றார் வில்லிபுத்தூர் திருவிளக்கு - இந்த முதற்பாட்டில்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
16-12-2020.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...