Wednesday, December 23, 2020

 #இன்று_சி_சு_செல்லப்பாவின்_நினைவு_தினம்!

———————————————————-




தேனி மாவட்டம், சின்னமனுாரில், 1912 செப்டம்பர் 29ஆம் தேதி பிறந்தார் சி.சு.செல்லப்பா. தந்தை அரசு அதிகாரி. தந்தையின் பணியிட மாற்றலுக்கேற்ப பாளையங்கோட்டை, தூத்துக்குடி, திண்டுக்கல், ஆகிய ஊர்களில் பள்ளிப் படிப்புகளை முடித்தார். மதுரைக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பை மேற்கொண்டார். ஆங்கிலேய அரசு அதிகாரியான தந்தை ஒரு தேசியவாதி. தந்தையிடமிருந்து தேசிய ஊக்கம் பெற்ற இவர் சிறு வயதிலேயே ஊர்வலங்களிலும் கூட்டங்களிலும் தேசியப் பாடல்களைப் பாடியிருக்கிறார். அப்போது நூறு தேசியப் பாடல்களுக்கு மேல் மனப்பாடம் செய்து வைத்திருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
மதுரைக் கல்லுாரியில், பி.ஏ., படித்தார். மகாத்மா காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். சிறை வாசமும் அனுபவித்தார். 'சுதந்திரச் சங்கு, மார்கழி மலர்' உள்ளிட்ட இதழ்களில், இவர் எழுதிய சிறுகதை தனிக் கவனம் பெற்றது. 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். சிறுகதை, புதினம், நாடகம், திறனாய்வு, கவிதை என மொத்தம் 29 நூல்கள் வெளியிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு பற்றிய, அவரது, 'வாடிவாசல்' குறுநாவல் பெரும் வரவேற்பு பெற்றது. இலக்கிய விமர்சனத்திற்காக, 'எழுத்து' என்ற மாதப் பத்திரிகையை துவக்கினார்.
உண்மையான காந்தியவாதியான அவர், இலக்கியத்துறையில் தான் சரி என நம்பிய ஒன்றுக்காக எல்லாவற்றையும் தத்தம்செய்தார். அரசாங்கம் அவருக்கு அறிவித்த `ராஜராஜன் விருதை’க்கூட கொள்கை நிலை நின்று நிராகரித்தார். அதன் காரணமாக, குடும்பத்தாரின் வெறுப்புக்கும் ஆளானார். தானே அச்சிட்ட, விற்பனையாகாமல் தன் சின்னஞ்சிறிய ஒற்றை அறை வீடெங்கும் அடுக்கிவைக்கப்பட்டிருந்த புத்தகங்களுக்கு நடுவே, காது கேளாத தன் துணைவியாருடன் தன் முதுமையைத் தனிமையில் கழித்தவர் செல்லப்பா. , தன், 86வது வயதில் 1998 டிசம்பர் 18ஆம் தேதி இயற்கை எய்தினார்.
செல்லப்பாவின் மரணத்துக்குப் பின், அவருடைய ‘சுதந்திர தாகம்’ நாவலுக்காக 2001-க்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. அவரது நூல்களைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியது.
சுதந்திர தாகம் நாவலில் வரும் சிவராமன் என்ற தலைமைப் பாத்திரம் வேறு யாருமல்ல, செல்லப்பாவே தான். அந்த நாவலுக்கு கதாநாயகன் கதாநாயகி என்றெல்லாம் யாரும் கிடையாது. மறைமுகக் கதாநாயகன் காந்தி என்று சொல்லலாம். அல்லது சுதந்திரப் போரே கதாநாயக அந்தஸ்தைப் பெற்றது.சி.சு. செல்லப்பா தம் கடைசி ஆண்டுகளில் முனைந்து முழுமூச்சாக ஈடுபட்டு எழுதிய பிரம்மாண்டமான மூன்று பாக நாவல் `சுதந்திர தாகம்`. சி.சு. செல்லப்பா என்றால் இலக்கிய அன்பர்கள் மனத்தில் முதலில் தோன்றுவது அந்த நாவலே.
அதை அவர் தம் உணர்ச்சிகள் முழுவதையும் கொட்டி எழுதியுள்ளார் என்று சொல்ல வேண்டும். தம் இறுதிக் காலங்களில் அந்த நாவலை ஒரு வேகத்தோடு அவர் எழுதி முடித்தார்.
தம் மிக நெருங்கிய நண்பரான தீபம் நா. பார்த்தசாரதி, ஐம்பத்து நான்காம் வயதிலேயே மறைந்தது அவரைப் பெரிதும் வாட்டியது.
பி.எஸ். ராமையா, சிதம்பர சுப்பிரமணியன் போன்ற அவரது பிற நண்பர்கள் காலமானபோதும் செல்லப்பா வேதனை பட்டார்,
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18-12-2020.

No comments:

Post a Comment

You'll be surprised by how consistently things will show up exactly as you need them to, and not a moment before. When it's time to act, the energy will come.

  You'll be surprised by how consistently things will show up exactly as you need them to, and not a moment before. When it's time t...