செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி,
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி,
மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்,
செய்யா தனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி யுகந்தேலோர் எம்பாவாய்..”
பதவுரை
வையத்து - பூமியில்
வாழ்வீர்கள் - நல்வாழ்வு படைத்த பெண்களே!
நாமும் - அவனாலே பேறு என்றிருக்கும் நாமும்,
நம்பாவைக்கு - நம்முடைய நோன்புக்கு
செய்யும் - செய்ய வேண்டிய
கிரிசைகள் - காரியங்கள்
கேளீரோ - கேட்பீர்களா?
பாற்கடலுள் - திருப்பாற்கடலில்,
பைய - மெள்ள
துயின்ற - உறங்குகிற,
பரமன் - மேலான தத்துவமான பதியினுடைய
அடி - திருவடிகளை
பாடி - கானம்பண்ணி
நெய்யுண்ணோம் - நெய் சாப்பிடமாட்டோம்
பாலுண்ணோம் - பால் அருந்த மாட்டோம்
நாட்காலே - விடியற்காலையில்
நீராடி - ஸ்நாநம் செய்து
மை, இட்டு எழுதோம் - கண்களுக்கு மையிட்டு கொள்ளமாட்டோம்
மலர் இட்டு நாம்முடியோம் - புஷ்பங்களைக் கொண்டு குழலில் சூடிக் கொள்ளமாட்டோம்
செய்யாதென செய்யோம் - நம் குலத்தில் செய்யத்தகாதவைகளை செய்யமாட்டோம்
தீ குறளை - கெடுதலை விளைவிக்கும் வசைமொழிகளை
சென்று ஓதோம் - ஒருவரிடம் போய் சொல்லமாட்டோம்
ஐயமும் - உயர்ந்த விஷயங்களில் கொடுக்கும் பொருளையும்
பிச்சையும் - சாதாரண மனிதர்களுக்கு கொடுக்கும் பொருளையும்
ஆந்தனையும் - அவர்கள் விரும்பினவளவில்
கைகாட்டி - கொடுத்து
உய்யுமாறு - உஜ்ஜீவிக்கும்படியை
எண்ணி - நினைத்து
உகந்து - ப்ரீதியுடன் செய்வது
ஏல்ஓர் - எம்பாவாய்.
...........................
ஆழ்ந்த பொருள் நலத்தைத் திருப்பாவை இரண்டாம் பாடல் தொடக்கமே புலப்படுத்துகின்றது. பெரியாழ்வார் திருமகள் ஆய்ச்சியரை ‘வையத்து வாழ்வீர்காள்’ என அழைக்கிறார்.
‘வையத்து வாழ்வீர்காள்’ - நல்வாழ்வுக்கு முரணாக இருக்கிற இந்த உலகிலும் சிறப்பாக வாழக் கொடுத்து வைத்தவர்களே.....
‘வையத்து வாழ்வீர்காள்’ - கண்ணன் பிறந்த இந்த மண்ணிலேயே தாமும் வாழ்கிறவர்களே........
‘வையத்து வாழ்வீர்காள்’ - இந்த உலகில் கண்ணன் நடமாடிய திருவாய்ப்பாடியில் வாழ்கின்றவர்களே...... இன்னும் கண்ணன் நேசிக்கிற பெண்களாய் வாழ்கின்றவர்களே...... மேலும் கண்ணன் வயது போலத் தாமும் இளவயதோடு வாழ்கின்றவர்களே....... என்றெல்லாம் உழுத கலப்பை முனையில் சீதை தோன்றினாற்போலே புதுப்புது நயங்களும், பொருள்களும் கூறுகின்றார்கள் வைணவ உரையாசிரியர்கள்.
இப்பாடலில் நோன்பு நோற்கும் சிறப்பு எடுத்துக் கூறப்படுகிறது. ‘பாற்கடலுள் பையத்துயின்ற பரமனின்’ அறிதுயில் அழகு எடுத்துரைக்கப்பட்டு அப்பரமன் அடி பாடும் வழிபாடு வலியுறுத்தப்படுகிறது. சரணாகதி தத்துவம் கூறத் திருவடிகள் நினைவூட்டப்படுகின்றன. எந்தக் கணத்தில் பரந்தாமன் திருவடிகள் நினைவிற்கு வந்தனவோ அந்த கணத்தில் மற்றைய விருப்பங்கள் மாறிப்போய் விடுகின்றன. அதனாலேயே தமக்கு இனியவையான ‘நெய்யுண்ணோம், பாலுண்ணோம்’ என விரதம் எடுத்துக் கொள்கிறார்கள். நெய்யும், பாலும் அருந்தோம் என்னாது ‘உண்ணோம்’ என்றதற்குக் காரணம் ஆய்ச்சியர்களாதலால் அப்படித் திருத்தமாகச் சொல்லத் தெரியவில்லை என்று காட்டுகின்றார்.
பின்னர் கண்ணனை அடைய வேண்டும் என்றார். காதல் தீ தணியுமாறு நீராடுவோம் என்னும் பொருளில்’ நாட்காலே நீராடி’ என்கின்றார். ‘மையிட்டெழுதோம்- மலரிட்டு நாம் முடியோம்’ என்றது அந்நோன்பின் வல்லமை காட்டுவதற்காக.
அவனைக் காணும்போது பெறும்வரை கண்களுக்கு மை தீட்டுவதில்லை. அவன் அணிந்து களைந்த மாலையை வழங்கும்வரை கூந்தலுக்கு அலங்காரமாக மலர்சூடி முடிப்பது இல்லை என விரதம் எடுக்கிறார்கள்.
‘செய்யாதன செய்யோம்’ - என்பது அடுத்த திருவார்த்தை. இதன் பொருள் முன்னோர்கள் ஒதுக்கி வைத்த எந்தச் செயலையும் நாங்களும் செய்யமாட்டோம். நுணுக்கமாகச் சொன்னால் ஆயர்குல மகளிரில் ஒருத்திக்கேனும் இப்போது வர இயலாது போகுமானால் அவள் செய்ய முடியாத கண்ணன் வழிபாட்டை மேற்கொண்டு அவனைக் காணச் செல்ல மாட்டோம். அவள் செய்யாதன நாங்கள் செய்யமாட்டோம்.
‘தீக்குறளை சென்றோதோம்’ - புனிதமான இந்தப் பொழுதில் யாரைக் குறித்தும் பொய்யும், கோளும் சொல்லி நோன்பின் தத்துவம் பழுதுபட விடமாட்டோம்.
’ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி’ என்கின்றார். - ஒரே பொருள்படுகின்ற ஐயம், பிச்சை என்ற இரு சொற்களை பெய்கின்றார். ஆயினும் அவை வேறு வேறு பொருள் தந்து நிற்கின்றன. எம்பெருமானாகிய இறைவனை அனுபவிக்க எண்ணுபவர்களுக்கு அவ்வனுபவத்தை நல்குதல் ஐயமாகிறது.
அவனது அடியார்களை அனுபவித்தலை நாடுவோர்க்கு அதனை நல்குதல் பிச்சையாகிறது. இவ்விரண்டனையும் பெற விரும்புவோர் எத்துணையளவு போதுமென்கிறார்களோ அத்துணையளவு தந்து மகிழ்தலும் இந்நோன்பின் கோட்பாடாகும். அதனால் ‘ஆந்தனையும்’ என்கிறார்.
இவ்வாறு நோன்பின் நெறிகளை வரையறுத்து அந்நெறியில் ‘உய்யுமா றெண்ணி உகப்போம்’ என்கின்றார் கோதையார்.
இப்பாடலிலே ‘செய்யும் கிரிசைகள்’ ஆகிற நோன்பின் செயல்முறைகள் எடுத்தோதப்படுகின்றன. இதனால் விளைவது ‘உகப்பு’ . உன்னுடைய கல்யாண குணங்களை, அநுசந்திக்கும் அநுசந்தானத்தோடு ஒக்குமோ உன் பரமபதம்’ என்றாற்போல் மனநிறைவும், உய்வும் தரும் என்பதனை ‘உகப்பு’ என்று கூறி மகிழ்ந்தார். இவ்வுகப்பு கடமைகளைச் செய்வதனால் ஏற்படுவதன்று. கடமைகளை விருப்பத்தோடு செய்வதனால் ஏற்படும் நிறைவாகிறது.
உய்யும் வழிகாட்டப் பெய்யும் மழையாகிறது இப்பாட்டு.
No comments:
Post a Comment