Wednesday, December 16, 2020

 #அரசியல்_கூறுகள்_2

———————————————————-



‘வினாவை யன்றி மனிதன் வேறு என்ன? இவன் இங்கிருப்பதே அதற்குத்தான். நியாயமான - துணிவான கேள்விகளைக் கேட்கவும், பணிவடகத்துடன் பதில்களுக்கு காத்திருக்கவும்தான். போதுமான அளவு துணிவுடன் கேட்காதது, தன்னைத்தானே திருப்தி செய்துக் கொள்ளும் வகையில் பதிலைக் கூறிக்கொள்வது ஆகியவையே எல்லாத் தவறுகளுக்கும் மூலமாகின்றன.
-ரேச்சல் வான் ஹேகன்
(Rachel Von Hagan) (18ஆம் நூற்றாண்டின் பெண்ணுரிமைப் போராட்ட அங்கத்தினர்)
எவையெவை எவ்வாறிருக்க வேண்டுமோ அவை அவ்வாறே இருக்கின்றன. அவைகளின் விளைவுகள் எப்படி ஆகவேண்டுமோ அப்படியே ஆகும். எனவே, ஏமாற்றமுற நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள்?
-பிஷப்பட்லர்(Bishop Butler)
‘அரசியல்’ என்றால் என்ன?
அரசைப் பற்றி படிக்கிற இயல் அல்லது அரசியல் விஞ்ஞான நூல் அரசியலாகும். ‘அரசைப் பற்றி’ என்றால் என்ன? ‘பாலிஸ்’ அல்லது நகரத்தை பற்றியது அல்லது அதை சேர்ந்த ஒவ்வொரு விஷயமும் அரசியல் சார்புடையதே. நகரம் இப்பொழுது முன்னைப்போல பொதுவாழ்வின் கேந்திரமாக அமையவில்லை. ஆகவே, மிகச் சரியாக சொல்ல வேண்டுமானால், சமுதாயத்தை பற்றி அல்லது அதைச் சேர்ந்த விஷயங்களைப் பற்றியப் படிப்பதுதான் அரசியல் ஆகும்.
அப்படியானால் நாம் அரசியல் என்று பேசும்போது நம்முடைய பொதுவாழ்வைப் பாதிக்கும் எல்லாக் காரியங்களையும் பற்றி குறிப்பிடுகிறோமா? என்றால், அதற்குப் பதில், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நம்முடைய பொதுவாழ்வின் எந்த அம்சமும், எப்பொழுதாவது எப்படியும் அரசியல் சார்பு பெறாமல் இருக்க முடியாது. என்றாலும், அரசியல் என்ற சொல்லைச் சமுதாயத்தின் பெயரால், சமுதாயத்திற்காக அதன் விவகாரங்கள் மேற்பார்வையிடுகின்ற ஓர் ஆணைக் குழுவோ அல்லது மாற்றாளோ,(Agent) நிருவகிக்கின்ற பொது விவகாரங்களை மட்டுமே குறிப்பிடும் வண்ணம் இச்சொல்லைச் சிறப்பாகப் பயன்படுத்துகிறார்கள். இந்த ஆணைக்குழு அல்லது மாற்றாளை நாம் ‘அரசு’ என்று அழைக்கிறோம்.
அரசின் மேற்பார்வையிலும், அதன் மூலமாகவும் நடைபெறும் சமுதாயத்தின் செயல்கள் அரசியல் நடவடிக்கைகள் ஆகும். எனவே, எது அரசியல் நடவடிக்கை, எது அல்ல என்பது மாறிக் கொண்டே வந்திருக்கிறது. பல நூற்றாண்டுகளாக, அரசனது மதத்தின் சில முறைகளைக் கட்டாயப்படுத்தியும், மற்ற முறைகளை சட்டவிரோதமாக்கியும் வந்த காரணத்தால், மதம் ஓர் அரசியல் விவகாரமாகவே இருந்தது. இப்பொழுது உலகம் முழுவதிலும் ஒரே ஒரு நாட்டில்தான் அங்கு வாழும் மக்கள் எல்லாம் ஒரே மதத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது, அது ஹெட்ஜாஸ் (Hedjas) என்று நம்புகிறோம். சில நாடுகளில் அரசர்கள், சட்டப்படி குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றிருக்கிறது. (கிரேட் பிரிட்டன், சிரியா, ஸ்பெயின், ஸ்காண்டிநேவிய முடியரசு நாடுகள் இவை). ஒரு நாடு அதிகாரபூர்வமாக மதத்திற்கு ஊக்கம் கொடுக்காது, தங்கள் அதிகாரிகளுக்கு மதபோதனை செய்யும் உரிமையையும் மறுக்கிறது(ருஷ்யா). மதச் சார்புகளோடு நெருங்கிய தொடர்பு கொண்ட பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அராபிய நாடுகளில் காணப்படுகின்றது. பெரும்பான்மையோர் மதங்களை அடிப்படையாகக் கொண்டு சமீப காலத்தில் இரண்டு புதிய நாடுகள் தோன்றியிருக்கின்றன (இந்தியாவும், பாகிஸ்தானும்), ஆனால், பெரும்பான்மையான நாடுகளில் மதத்தின் விவகாரங்களில் அரசு கவனம் செலுத்துவதோ அல்லது குறிப்பிட்ட மதத்திற்கு அதிகாரபூர்வமான ஊக்கம் அளிப்பதோ கிடையாது.
பிரான்ஸ், ருஷ்யா ஆகிய நாடுகளில் உள்ளதுபோல கல்வி, அரசின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் இருக்கலாம். அப்படி இருந்தால், கல்வி பிரச்சினைகள் அரசியல் சார்பு பெற்றுவிடுகின்றன. நியமனங்கள், கல்வித் திட்டங்கள் ஆகியவை அடியோடு கல்வியின் அடிப்படையில் அல்லாமல் வேறு காரணங்களைக் கொண்டு முடிவு இவையெல்லாம் எதைப்பற்றி?
செய்யப்படலாம், மேலும், பொருளாதார வாழ்க்கையில் முழுவதாகத் தலையிடாமல் இருத்தலிருந்து கண்டிப்பான விதிமுறை அமைப்பது வரை பலவித முறைகளில் அரசின் குறுக்கீடு நிகழ்ந்திருக்கிறது. மக்களுள் பலவித வகுப்பாரும் என்னவித உடையணிந்திருக்க வேண்டும் என்பதை அரசு தீர்மானித்த காலங்களும் உண்டு. இடைக்காலத்தில் இப்படிப்பட்ட ‘கொடூரச் சட்டங்கள்’ (Stumptuary Laws) அடிக்கடி இயற்றப்பட்டன. அல்லது குறிப்பிட்ட மூலப்பொருள்கள் குறிப்பிட்ட நகரங்களில் தான் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிரான்சில் புரட்சிக் காலத்துக்கு முந்திய முடியரசாட்சியில் (Ancient Regime) இது நிகழ்ந்தது. கம்பளி நெசவுத் தொழிலுக்கு ஊக்கம் அளிக்கும் நோக்கத்தோடு கம்பளித் துணியால் சுற்றித்தான் இறந்தவர்களைப் புதைக்க வேண்டும் என்ற சட்டம் பதினேழாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் இருந்தது. இடைக்கால நிலப் பிரபுத்துவத்தின்போது, அரசின் ஏகபோக அதிகாரங்களாக நாம் கருதுகிற போலீஸ், நீதி வழங்கல், நாணயம் அச்சடித்தல், இராணுவத்திற்கு ஆள் சேர்த்து யுத்தம் செய்தல் போன்ற அதிகாரங்கள் பெரும்பாலும் எல்லாக் காரியங்களும், அரசியல் விவகாரங்கள் தான். கட்டாயமாக்கப்படாதவை எவையோ அவை தடை செய்யப்பட்டன என்று வேடிக்கையாக அந்த நாட்டைப் பற்றி சொல்லப்பட்டது. இன்றைய ‘ருஷ்யாவில்’ அநேகமாக எல்லாமே ‘அரசியல்’ சார்புடையவைதான். 18ஆம் நூற்றாண்டிலும், 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இங்கிலாந்தில் அரசின் விவகார எல்லை மிகவும் குறைவாக்கப்பட்டு அரசு செயலாற்றுவதே கடினமானதொரு காரியமாக இருந்தது.
‘அரசியல்’. ‘அரசியல் சார்பு’ ஆகிய சொற்றொடர்கள் காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம் மாறும் தன்மையுடையன. கொள்கையளவில் பார்க்கப்போனால், நமது கூட்டு வாழ்க்கையின் எந்தத் துறையும், அரசின் மேற்பார்வைக்குக் கொண்டுவரப்படும்போது ‘அரசியல் சார்பாக’ ஆகாமல் இருக்க முடியாது. ஆனால், இன்றைக்குள்ள எல்லாச் சமுதாயங்களிலும், குறிப்பிட்ட எந்தக் காலத்திலும் எது அரசியல் சார்புடையது, எது சார்ப்பற்றது என்பது தெளிவாக பாகுபாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் தன்மையிலும் போக்கிலும் அரசின் பங்கு மிகவும் மாறுபட்டாலும் இப்பாகுபாடு இருக்கதான் செய்கிறது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
16-12-2020.

No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...