Thursday, December 10, 2020

 *#இந்தியாவின்_பிரம்மபுத்திரா_நதியில்_புதிய_அணை #சீனா_திட்டம்!*

———————————————————


திபெத்தில் பிரம்மபுத்திரா நதி மீது புதிய அணை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சீன அரசின் பவர் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் தலைவர் யான் ஜியோங் கூறுகையில், “நீர் மின்சார உற்பத்திக்காக திபெத்தில் உள்ள யர்லுங் சாங்போ(பிரம்மபுத்திரா) நதியின் குறுக்கே மிகப்பெரிய அணை கட்டும் திட்டம் உள்ளது. சுற்றுச்சூழல், தேசப் பாதுகாப்பு, வாழ்க்கைத் தரம், எரிசக்தி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கு இத்திட்டம் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். 14வது ஐந்தாண்டு காலத்தில் இத்திட்டத்தை நிறைவேற்ற அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இத்திட்டத்துக்கு சீன நாடாளுமன்றம் அடுத்த ஆண்டு முறைப்படி அனுமதி அளித்த பிறகே, அத்திட்டத்தின் விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரம்மபுத்திராவின் குறுக்கே 150 கோடி டாலர் செலவிலான திபெத்தின் மிகப்பெரிய ஜாம் நீர்மின் நிலையத்தை சீனா 2015ல் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது.
திபெத்தில் இதுவரை 20 கோடி கிலோ வாட் மின்னுற்பத்தி திட்டங்களை சீனா செயல்படுத்தி உள்ளது. இது சீனாவின் மொத்த நீர் மின்சார உற்பத்தியில் 30 சதவீதமாகும்.
இந்நிலையில் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச எல்லைக்கு அருகில், திபெத்தின் மேடாங் பகுதியில் இந்த அணை அமையலாம் என சீன அரசின் குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. இத்திட்டம் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இத்திட்டம் இருநாடுகளுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இருநாடுகளுக்கு இடையே பாயும் நதிகளில், நதியின் கீழ்ப்பகுதியில் உள்ள நாடுகளுக்கு பயன்பாட்டு உரிமை அதிகம் உள்ள நிலையில், பிரம்மபுத்திரா நதி நீர் தொடர்பாக சீன அதிகாரிகளிடம், இந்திய அரசு தனது எதிர்ப்புகள் மற்றும் கவலைகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
நதியின் மேற்பகுதியில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு திட்டத்தாலும் நதியின் கீழ் பகுதியிலுள்ள பகுதிகள் பாதிக்கப்படக் கூடாது என வலியுறுத்தி வருகிறது.
இந்தியாவும், சீனாவும் இருநாட்டு நதிகள் தொடர்பான பிரச்சினைகளை நிபுணர்கள் அளவில் பேசித் தீர்ப்பதற்கான நடைமுறையை கடந்த 2006ல் ஏற்படுத்தின. இருநாடுகள் இடையே தற்போதுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெள்ள காலங்களில் பிரம்மபுத்திரா மற்றும் சட்லெஜ் நதியில் பாயும் நீரின் அளவு குறித்த விவரங்களை இந்தியாவுடன் சீனா பகிர்ந்து கொண்டு வருகிறது. பிரம்மபுத்திரா தொடர்பான புள்ளிவிவரத்தை ஒவ்வொரு ஆண்டும் மே 15 முதல் அக்டோபர் 15 வரை சீனா வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-சீனா இடையே கடந்த மே மாதம் முதல் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த மோதலில் சில உயிரிழப்புகள் ஏற்பட்டதால், அரசியல் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பிரம்மபுத்திராவில் அணை கட்டும் திட்டத்தில் சீனா முனைப்பு காட்டி
யுள்ளது.
02-12-2020.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...