Thursday, December 10, 2020

 #சில_சிந்தனைகள்_சார்ந்த_உணர்வுத்தெறிப்புகள்_2

———————————————————-


பிறந்தோம் வாழ்ந்தோம் மடிந்தோம் என்று வாழ்க்கை முடிந்து விடாமல் மனிதனுக்கென சில இலட்சியங்கள் தேவை……
அவன் வாழ்க்கையை அர்த்தப்படுத்த.! அந்த இலட்சியப் பயணத்திடை அவன் ஏராளமான எரிமலைகளைச் சந்திக்க வேண்டி வரும். பொறாமைக் குன்றுகளைக் கடக்க வேண்டி வரும். அவன் வளர்ச்சி கண்டு திகைத்துப் போய் பொறாமையால் வெதும்புவர்களைக் கண்டு வயிறு குலுங்கச் சிரிக்க வேண்டி வரும். எண்ணங்கள் உயர்வானவையாக இருந்தால் நோக்கங்கள் ஆக்க சக்தியுடையவையாய் அமையுமானால் குறுக்கிடும் கொந்தளிப்புகளைத் துச்சமெனப் புறந்தள்ளும் மன வலிமையேற்படும். இளம் வயதில் பார்வை பறி போன சமயத்தில் கவிஞன் மில்டன் எழுதிய பாடல் வரி மனதில் வருகிறது.
"They also serve
who stand and wait…!"
தனது தகுதிக்கேற்ப திறமைகளுக்கேற்ப முடிந்த வரை தொண்டாற்றுவோர் சமுதாயத்தில் கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. ஆனால், இங்கோ நான் திரும்ப திரும்ப சொல்லுகின்ற ‘தகுதியே தடையாக’ அமையும் பரிதாப நிலை!
படிப்பு மடிப்புக் காகிதமாயிற்று. ஆற்றல் அறுவைச் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டது. திறமை தீர்த்துக் கட்டித் தீர வேண்டிய வஸ்துவாகி விட்டது. கடந்த காலத்தின் கம்பீரமான தியாகங்கள் நிகழ்காலத்தின் பித்தலாட்டங்களை மறைக்கப் பயன்படும் திரைச் சீலைகளாயின. வயிறு வலிக்கக் கத்திய தலைவர்கள் உதட்டசைவுகளுக்கு ஒத்திகை தருவதைத் தவிர மற்றபடி சிரப்படவியலாத அவலம்!! கனிவுத் திவலைகள் பொங்கிய விழிகளில் சதா கனல் பொறிகள் பறக்கத் துவங்கின. மக்களின் கட்டளைகளை வாங்கியே பழக்கப்பட்ட ஜன்மங்கள் கட்டளைத் தம்பிரான்களாய் மாறலாயினர். சூது, சூழ்ச்சி, வஞ்சகம், கள்ளம், கபடம், பொறாமை, முதலான திருக்குணங்களின் சிகரங்களாய் நிமிர்ந்தன.
தவறுகள் தெரியாத்தனமாக நடந்து விடும்போது தடுமாறியோர் நடுங்கியோர் தவறுகளின் குத்தகைக்காரர்களாய் முத்திரை பெற்றுக் கொண்டனர். வைகறைப் பொழுதென்பது என் வாழ் நாளில் ஏறக்குறைய நான் பார்க்காத ஒன்று.! நடுநிசிகள்…சாமக்கோழி கூவும் நேரங்கள் என்னைப் புத்தகக் காட்டிற்குள் துரத்தியுள்ளன. வள்ளுவனின் வரவேற்பும், கம்பனின் முழக்கமும், இயற்கையின் பரவசக் கிளுகிளுப்பில் என்னை அழைத்துச் செல்லும் ஷெல்லியும், பைரனும் கிரேக்க அறிஞர் பெரு மக்களும் நான்கு மணி வரை என்னை விழிக்க வைத்து விடுவதுண்டு.
இந்த உணர்வலைகளினூடே நான் தமிழகத்திலும் இந்தியத் துணைக் கண்டத்தின் அநேகப் பகுதிகளிலும் ஏறக்குறைய எல்லா உலக நாடுகளிலும்ம் பயணங்கள் மேற்கொண்டிருக்கிறேன். அங்கெல்லாம் நான் அடைந்த அனுபவங்கள் காலமெல்லாம் வாசித்துத் தீர வேண்டிய கருத்துக் கதிரொளி வீசும் புத்தகக் குவியல்கள்…
வாழ்க்கையில் நான் சந்தித்த மனிதர்கள்…
என்னையொத்தவர்கள்…… பேராளுமைகள் ஆற்றலாளர்கள் இவர்களிடமெல்லாம் நன்கு பழகிய காரணத்தால் விளைந்த பாசங்களை முழுதாய் அனுபவித்தவன் நான். காலம் வடித்தெடுத்த சிற்றுளிகளால் செதுக்கப்படுகின்ற சிற்பங்களில் நானும் ஒருவன்.! “மாறுபட்ட கருத்துகளுக்கு மரியாதை தந்து தீர வேண்டும்“ என்ற தத்துவ மேதையின் கருத்து என் செவிகளில் எந்நேரமும் ரீங்கரித்துக் கொண்டே இருக்கும்.
அரசியல் என்பது ஒரு மனிதாபிமானம் ..
அது நேர்மையான வரம் என்பது இன்னொன்று எனக் கூறப்படும் கருத்துகளோடு உடன்பட மறுக்கிறேன் நான். ஏனெனில் மனிதாபிமானத்தின் அடிப்படையில் தான் அரசியல் வாழ்வு கட்டமைக்கப்படுகிறது எனும் உறுதியான கோட்பாடு என்னுடையது. அறிவு பூர்வமாய் மோதிக் கொள்வது வரவேற்கக் கூடியது ஆணவத்தினடிப்படையில் வலுவுள்ளவன் எதையும் செய்யலாம் எனும் உரிமத்தைச் சமுதாயம் எவருக்கும் வழங்கி விடவில்லை.
அரசியல் சார்ந்த பொது வாழ்வில் கடந்த 49 ஆண்டுகளில் பெருந்தலைவர் காமராஜ், கலைஞர், எம்.ஜி.ஆர்., வேலுப்பிள்ளை பிரபாகரன், உழவர் தலைவன் நாராயனசாமி நாயுடு, ஜெயலலிதா என தமிழக அரசியல் தளம் மட்டுமல்லாது ஜெயபிரகாஷ் நாராயணன், கிருபாளினி, நீலம் சஞ்சீவ ரெட்டி, பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், சரத் சந்திர சின்கா, தமிழக முன்னாள் ஆளுநர் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் மோகன்லால் சுகாதியா, கர்நாடக முதல்வர்கள் தேவராஜ் அர்ஸ், குண்டுராவ், கர்நாடக முன்னாள் அமைச்சர்கள் ரகுபதி, துளசிதாசப்பா, மகாராஷ்டிர முன்னாள் ஆளுநர் சங்கர் நாராயணன், மத்திய முன்னாள் அமைச்சர்கள் சந்திரஜித் யாதவ், வி.சி சுக்லா, வெங்கல்ராவ், தாரகேஷ்வரி சின்கா, கே.பி. உன்னிகிருஷ்ணன், ராம்விலாஸ் பாஸ்வான் முதலான பல இந்தியத் தலைவர்களுடன் எனது அரசியல் பயணமும் தொடர்பும் நீட்சி பெற்றுள்ளது.
பெருந்தலைவர் காமராஜ் நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்ட காலத்தினின்று பாளையங்கோட்டை சவேரியர் கல்லூரி மாணவர், சேலம் லூர்தநாதன் போலீஸ் தாக்குதலில் மரணமடைந்தது குறித்தான மாணவர் போராட்டம்,திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி கிளைவ் ஹாஸ்டல் சம்பவப் போராட்டம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உதயகுமார் மரணத்திற்கு பின் நடந்த மாணவர் போராட்டம், அதே காலகட்டத்தில் தமிழகத்தில் விவசாயிகள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கோவில்பட்டி போன்ற பகுதிகளில் விவசாயிகளின் பாதிப்பை குறித்தான நடவடிக்கைகள், இப்படியே தொடர்ந்தது என் அரசியல் வாழ்வு. பழைய காங்கிரஸில், பெருந்தலைவர் காமராஜர், நெடுமாறனுடன் பயணம். காமராஜர் மறைவுக்கு பின் ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காந்தி தலைமையில் ஆளும் காங்கிரஸ் இணைப்புக்கு நெடுமாறனுடன் களப்பணியாற்றியது.
பின், நெடுமாறனுடன் காங்கிரஸில் இருந்து வெளியேறுதல், இலங்கை பிரச்சினை, திரும்பவும் விவசாயப் போராட்டங்கள், மதிமுக உதயம், கலைஞர் கைது, ஜெயலலிதா ஊழல் வழக்கு பெங்களூருக்கு மாற்றம், முள்ளிவாய்க்கால், அதற்கு பின் திமுக திரும்பவும் உருவாக்கிய டெசோ அமைப்பு, ஈழத் தமிழர் பிரச்சினையும், ஐ.நா மனித உரிமை போன்ற பல பணிகள், திமுகவில் சோதனையான காலக்கட்டத்தில் நடந்த ஆண்டிபட்டி, சைதாப்பேட்டை, சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிகள், நதிநீர் பிரச்சினைகள், தமிழக சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து, மனித உரிமை மீறல்கள், தமிழக உரிமைகள் குறித்து, விவசாயிகள் நலன் குறித்து என பல பிரச்சினைகளில் தீர்வு கிடைக்க உச்ச நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக 30க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகள் என பல பணிகள் நீண்டு கொண்டே செல்கிறது.
என்றைக்கும் என்னுடைய நிலைப்பாடு களப்பணிகள் செய்வதுதான். பலரோடு சேர்ந்து அமைப்புக்கு கூடுகள் கட்டினாலும், என்னுடைய சுயமரியாதையை சுரண்டும்போது, அந்த கூட்டிலிருந்து குச்சிகளை எடுக்காமல்தான் வெளியேறி உள்ளேன். என் உழைப்பைதான் மற்றவர்கள் பெற்றவர்களே தவிர, அவர்களால் நான் பெற்றதும் ஒன்றுமில்லை. ரணங்கள், அவமானங்கள், வாழ்க்கையில் பல இழப்புகள் இதுதான் இதுவரை நான் பெற்றது.
அதுமட்டுமல்லாமல், நம்மால் அடையாளம் காட்டப்பட்டவர்கள், நம்மால் வளர்ந்தவர்கள், அத்துமீறி நமக்கு மேல் அவர்களை வைக்கும்போது அதை ஏற்றுக்கொள்ளவா முடியும்?. அந்த சூழலில் அந்த தளத்தில் எப்படி நிற்க முடியும்?. எனக்கு சின்ன அங்கீகாரம் கொடுத்தாலே நூறு மடங்கு, நன்றியுடன் கடமையாற்றுகிறவன் நான். அதேபோல, என்னை பங்கப்படுத்தி சுரண்டி பார்த்தால், வெகுண்டு எழுவனேதவிர, என்னால் அடிமைப்பட்டு, சரணாகதியாக அப்படியே அந்த தளத்தில் நிற்க முடியாது. என் செயல்திறன், உழைப்பை அங்கீகரித்து, எனக்கான இடம் கொடுக்காது மட்டுமல்ல, முதுகில் குத்தி புறந்தள்ளினார்கள். அந்த நிலையில் அவர்களை நான் மதிக்க வேண்டிய அவசியமில்லை. பாரதி கூறியதுபோல, சிறுமைக் கண்டு பொங்கிதான் எழுந்தேன். என்னுடைய நிலைப்பாட்டில் தவறுகள் இல்லை. அதற்கு அகப்புற சூழல்கள் மற்றும் சிலரால் சில நேரங்களில் காயப்படுத்தியதுதான் காரணம். என்மீது சிலர் விமர்சனம், எதிர்வினைகள் வைக்கலாம். என்னைப் பற்றி நன்கு புரிந்தவர்களுக்கு புரியும்.
நெருப்பில் கைவைத்தவர்களுக்குதானே அந்த வலி தெரியும் என்பதை தெளிவுபடுத்துவது என் கடமை. போகிற போக்கில் பேசுவதும், என்னால் பயன்பெற்றவர்கள் என்னை மதிக்காதபோது, நான் என்ன செய்வேன் என்ற புரிதலை மனதில் கொண்டு, என்னுடைய கடந்த கால அரசியல் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். என்னால் பயன்பெற்றவர்கள் மூலம் எனக்கு கிடைத்தது அவமானமும், பின்னடைவும், நான் இழந்ததுதான் அதிகம். சொல்ல வேண்டியதே சொல்லிதானே தீர வேண்டும். இதில் என்ன தயக்கம்......
“நெஞ்சிலுரமு மின்றி
நேர்மைத்திறமு மின்றி
வஞ்சனை சொல்வா ரடீ- கிளியே
வாய்ச்சொல்லில் வீர ரடீ.
உப்பென்றும் சீனியென்றும்
உள்நாட்டுச் சேலையென்றும்
செப்பித் திரிவா ரடீ-கிளியே
செய்வதறியா ரடீ.
தேவியர் மானமென்றும்
தெய்வத்தின் பத்தியென்றும்
நாவினாற் சொல்வதல்லால்- கிளியே
நம்புத லற்றா ரடீ
அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டா ரடீ - கிளியே
ஊமைச் சனங்களடீ.
சொந்தச் சகோதரர்கள்
துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை யிரங்கா ரடீ- கிளியே
செம்மை மறந்தா ரடீ”
இன்று, (10-12-2020) மனித உரிமை நாள்.
நாளை, (11-12-2020) முண்டாசு கவி பாரதி பிறந்த நாள்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
10-12-2020.

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...