—————————————
திருவள்ளூர் மாவட்டத்தில், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தேர்வாய் கண்டிகை - கண்ணன்கோட்டை ஆகிய இரண்டு ஏரிகளை இணைத்து, ரூ.380 கோடி மதிப்பீட்டில், புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது.
வறட்சி காலங்களில், சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கு, இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டது. நீர்த்தேக்கம் அமைக்க, மொத்தம், 1,485 ஏக்கர்நிலங்கள்பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் 800 ஏக்கர் விவசாய நிலங்கள், 55 ஏக்கர் வனத்துறை நிலங்கள் அடங்கும். நிலம் எடுப்புக்கு, இழப்பீடு வழங்க மட்டும், ரூ.280 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.
இந்த நீர்த்தேக்கத்தில், 0.50 டி.எம்.சி., நீரை சேமித்து, சென்னையின் 15 நாள் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். இரண்டு முறை நிரப்புதல் மூலம் ஓராண்டில், 1 டி.எம்.சி., நீரை சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தில் இருந்து நாள்தோறும், 66 மில்லியன் லிட்டர் நீரை, பூண்டிக்கு அனுப்ப, சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமின்றி, நீர்த்தேக்க சுற்றுப்பகுதிகளில் உள்ள, 700 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு, பாசன வசதி கிடைக்கும். இதற்காக, ஐந்து மதகுகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுப் பகுதிகளின் சாகுபடி மட்டுமின்றி, நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், இந்த நீர்த்தேக்கம் வழிவகை செய்யும். ஆந்திராவின் கண்டலேறு அணையில் திறக்கப்படும் நீரை, நீர்த்தேக்கத்திற்கு எடுத்துவர, 8.6 கி.மீ.,க்கு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீர் தேவைக்காக, 72 ஆண்டுகளுக்கு பின் அமைக்கப்படும் நீர்த்தேக்கம் என்ற பெருமையை, இது பெற்றுள்ளது.இந்தநீர்த்தேக்கத்திற்காக, பயன்பாட்டில் இருந்த சத்தியவேடு சாலை கையகப்படுத்தப்பட்டதால், அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். பல கிலோமீட்டர் சுற்றி, தாங்கள் செல்லவேண்டியஇடங்களுக்கு சென்று வந்தனர். இதை கருத்தில் கொண்டு, நீர்த்தேக்கத்தை சுற்றி, 3.60 கி.மீ., நீளத்திற்கு புதிய சாலை அமைத்து தரப்பட்டுள்ளது. இந்த சாலையை, பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
நீர்த்தேக்கத்தின் கரைக்கு அருகே, தேர்வாய் கண்டிகை சிப்காட் மற்றும் சிட்கோ ஆகியவை உள்ளன. இங்கு, சர்வதேச டயர் தொழிற்சாலை, எண்ணெய் உற்பத்தி ஆலை, கட்டுமானத்திற்கான நவீன கற்களை உற்பத்தி செய்யும் ஆலை உட்பட பல்வேறு தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பல்வேறு நிறுவனங்கள் விரைவில் இயங்குவதற்கான பணி நடந்து வருகிறது. இதனால், சிப்காட் மற்றும் சிட்கோவிற்கு, வரும் காலங்களில் நீர் தேவை அதிகரிக்கும். புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு உள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால், இந்நிறுவனங்களுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
நீர்த்தேக்கத்தை சுற்றி, 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனால், மண்வளம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்படுத்தப்பட்டு, மழை பொழிவிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதியை ஒட்டி நீர்த்தேக்கம் உள்ளதால், வரும் காலங்களில், பறவைகள் சரணாலயமாகவும், புதிய சுற்றுலா தளமாக உருவாகவும் வாய்ப்புள்ளது. நீர்த்தேக்கத்தில் மீன்வளத்தை பெருக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய காரணங்களால், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
புதிய வடிவமைப்பில் நீரளவை:
செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரியில் உள்ளது போன்றே, புதிய வடிவமைப்புடன், தேர்வாய் கண்டிகை நீர்தேக்கத்தில், நீரளவை தளம் அமைக்கப்பட்டுள்ளது. நீர்தேக்கத்தில் உள்ள நீர் இருப்பை கண்டறிய, நீர் அளவீட்டு மானி வைக்கப்பட்டுள்ளது. இந்த நீரளவை தளத்தின் கீழ் பகுதியில், ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, பம்பிங் செய்யப்படும் நீர், குழாய் வாயிலாக, பூண்டி ஏரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கான பணிகளை, குடிநீர் வாரியம் செய்து வருகிறது. விரைவில், இப்பணிகள் முடியும் வாய்ப்புள்ளது. நீரளவை தளத்தின் மேல் பகுதியிலிருந்து, நீர்த்தேக்கத்தின் முழு அழகையும் கண்டு ரசிக்கும் வகையில் ”வியூ பாய்ண்ட்” போல இது அமைக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கத்திற்கு அருகே, 1000 சதுர அடியில் ஆய்வு மாளிகை கட்டுப்பட்டுள்ளது. இங்கும் நீர்த்தேக்கத்தை பராமரிக்கும் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தங்க அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment