Wednesday, December 23, 2020

 #திருப்பாவை

————————-





“ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து
ஓங்குபெருஞ் செந்நெலூடுகயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!”
பதவுரை:
ஓங்கி - வளர்ந்து,
உலகளந்த - உலகங்களைத் திருவடிகளால் அளந்த,
உத்தமன் - புருஷோத்தமனுடைய,
பேர் - திருநாமங்களை,
பாடி - கானம் பண்ணி,
நாங்கள் - கண்ணனையே ஆசைப்படும் நாங்கள்,
நம் பாவைக்கு - நம்முடைய நோன்புக்கு,
சாற்றி - சம்மதித்து,
நீராடினால் - ஸ்நாநம் செய்தால்,
நாடெல்லாம் - நாடு முழுவதும்,
தீங்கின்றி - வெள்ளக்கேடு - வறட்சிகேடு முதலிய தோஷங்களில்லாமல்,
திங்கள் - மாதம் தோறும்,
மும்மாரி - மூன்று மழைகள்,
பெய்து - பெய்வதினால்,
கயல் - மீன்கள்,
ஓங்கு - வளர்ந்திருக்கிற,
பெரும் - பெரியதாயிருக்கிற,
செந்நெல் - சம்பாநெல் பயிர்களுடைய,
ஊடு - நடுவில்,
உகள - துள்ளி ஸஞ்சரிக்க,
பூம் - அழகான,
குவளைப்போதில் - கருநெய்தல் புஷ்பங்களில்,
பொறிவண்டு - உடம்பில் அழகான கோடுகளையுடைய,
கண்படுப்ப - படுத்துத் தூங்க,
பெரும் பசுக்கள் - உயர்ந்த பசுக்களிடத்தில்,
தேங்காதே - தயங்காதே (யோசிக்காமல்)
புக்கு - பிரவேசித்து
இருந்து - ஸ்திரமாக உட்கார்ந்து,
சீர்த்தமுலை -சுரக்கிற மடிகளை,
பற்றி - கைகளால் பிடித்து,
வாங்க - இழுக்க
குடம் - குடங்களை,
நிறைக்கும் - பாலால் நிரம்பும்,
நீங்காத செல்வம் - அழியாத ஐஸ்வர்யம்,
நிறைந்து - நிறைந்திடுவதால் நமது நோன்பு முடிகிறது.
ஏல் ஓர் - எம்பாவாய்.
........
”பாவை நோன்பில் அதிகாலை எழுந்து நீராடிய பின், மூன்று உலகங்களையும் தனது திருப்பாதங்களால் அளந்த உத்தமனான வாமனன் நாமத்தைப் போற்றிப் பாடினோமேயானால், நாடு முழுவதும் மும்மாரி மழை பெய்திடும்.
செழிப்பான நெற்பயிர்களுக்கு இடையே கெண்டை மீன்கள் துள்ளி விளையாடும். குவளைப் பூக்களில் வண்டுகள் கண்ணுறங்கும். பஞ்சம் என்ற நிலையே தோன்றாது.
வள்ளல் குணம் படைத்த பசுக்கள் எல்லாம், தன்னிடம் பாலினைச் சிறிதளவும் தேக்கிக் கொள்ளாமல் குடம் நிறைய பால் சுரந்திடும்.
இப்படி அழியாத செல்வம் எங்கும் நிறைந்திட நாராயணனைப் பாடுவோம் வாருங்கள்” என்று அழைக்கிறாள் கோதை..!
...........................................
இந்தத் திருப்பாட்டில் தாங்கள் நோற்கும் நோன்பின் பயன்களைச் சொல்கிறார் திருவாடிப் பூரத்துச் செகத்துதித்த ஆண்டாள்.
முதல்பாட்டில், ‘நாராயணன்’ என்று திருமாலின் பரத்துவ இயல்பும், இரண்டாம் பாட்டில் ‘பாற்கடலுள் பையத் துயின்ற பரமன்’ என்று வியூகமாம் தன்மையும் கூறியவர் இப்பாட்டில் ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ எனும் விபவம் என்கிற அவதாரப் பாங்கை உணர்த்துகின்றார்.
வாமனனாக வந்து திரிவிக்கிரமனாக வளர்ந்த சிறப்பை, ‘ஓங்கி உலகளந்த’ என்கின்றார். பனிபட்டுச் சாய்ந்த மூங்கில் போலப் பாற்கடலில் சாய்ந்து துயின்றவன் சூரிய கிரணம் பட்டு நிமிர்ந்த மூங்கில் போல ஓங்கி வளர்ந்தான் என்று அழகொழுகக் கூறுவார் பெரியவாச்சான் பிள்ளை.
பிறர்நோகத் தான் வாழ எண்ணுவோன் அதமன்; பிறரும் வாழத் தானும் வாழக் கருதுபவன் மத்திமன்; தன்னினும் பிறர் வாழத் தலைப்படுவோன் உத்தமன் என்பர். இவர்களுக்கு உபகாரம் பண்ணுதலே தன் பேறாகக் கருதுபவனாதலால் ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்கின்றார்.
‘பேர்பாடி’ என்று பேசுகின்றார் ஆண்டாள். திருமால் சுட்டிப் பொன் என்றால் அவன் திருநாமம் வேலைப்பாடு செய்யப் பெற்ற பொன் என்று செப்புவார்கள். விரும்பாதவர்களுக்கும் இத்திருப்பெயர் நன்மையே செய்யுமாம். - தாயைக் கொன்றவனுக்குக் கைவலித்தாலும் அம்மா என்று சொல்வது போல.
அப்பெயரைச் சொல்லாவிடில் உயிர்தரிக்க மாட்டாதவர்கள் அப்பெண்கள். பாவை நோன்பு என்ற காரணத்தைக் கொண்டு கண்ணன் அன்பில் ஆராது திளைக்கும் பேறு நிறைவேறிவிட்டால் ‘தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து’ செழிக்கும் என்கிறார் ஆண்டாள். ஆய்ப்பாடியார் செய்த நோன்பின் பயன் அந்த நாட்டுக்கே செழிப்பாகிறது என்பதை உணர்த்த ‘நாடெல்லாம்’ என்கின்றார்.
‘ஓங்கு பெருஞ்செந்நெல்’ என்று நெற்பயிர் செழிப்பதை ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ போன்றே வர்ணிக்கிறார். நெற்பயிரும் திரிவிக்கிரமனைப் போன்றே வானம் முட்ட வளர்கின்றதாம். செருக்காலே யானைக் கன்றுகள் போலே வளர்ந்த கயல்களானவை செந்நெல் பயிர்களின் இடை நுழைய மாட்டாமல் துள்ளிப் போய் விடுகின்றன.
இந்தப் பாய்ச்சலில் அசையும் குவளைப் பூம்படுக்கையில் வண்டுகள் இன்துயில் கொள்ளுகின்றன. இது வயல்களில் கொஞ்சும் வளம். இனி திரு ஆய்ப்பாடி என்னும் ஊரின் செழிப்போ கற்பனைக்கு எட்டாத கவின் வாய்ந்தது.
கால்நடைச் செல்வம் அங்கு கனத்துக் கிடக்கிறது. அவை சாதாரணப் பசுக்கள் அல்ல. ‘தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்’. எளியவரும், பழக்கமில்லாதவரும் பால் கறக்க இசைந்து கொடுக்கும் பசுக்கள். பால் கறக்கச் சென்று அமர்ந்தால் பால் சுரப்பு மாறினால்தானே. அது சுரந்து பெருகிக்கொண்டே இருக்கிறது.
இருவிரலால் பற்றிக் கறக்க ஒண்ணாதபடி பருத்த காம்புகள் எனினும் தொட்டு வாங்கிய மாத்திரத்தில் தானே நிறுத்தாது பால் சொரிந்து கொண்டே இருக்கும் பசுக்கள். குடங்களை மாற்றி மாற்றி வைத்தாலும், அவை நிறைந்து வழிந்து கொண்டே இருக்கும். குடங்கள் தீர்ந்தாலும் பாலின் பெருக்குப் பாய்ந்து கொண்டே இருக்கும்.
பசுக்களை ‘வள்ளல் பெரும்பசுக்கள்’ என்கின்றார். கண்ணனைப் போலவே கேட்டவை கொடுக்கும் இயல்புள்ளவை அப்பசுக்கள். ‘தூது போ’ என்று யாரோ சொன்னால் இவன் உடனே சரி என்கின்ற இயல்புள்ளவன். கேட்டதைக் கொடுக்கும் தேட்டத்தில் அப்படியே அப்பசுக்களும். அவை ‘பெரும் பசுக்கள்’. புல்லும் தண்ணீரும் அருந்தியதால் மட்டும் வளர்ந்தவை அல்ல அப்பசுக்கள். கண்ணனின் திருக்கரங்களால் தடவப் பெற்ற பரவசத்தால் ஆனந்தமாய் வளர்ந்த பசுக்கள் அவை. அதனால் ‘பெரும் பசுக்கள்’ என்றார்.
இங்கு நீங்காத செல்வம் பாவை நோன்பின் பரமானந்தப் பக்குவத்தால் எங்கும் நிறைந்து செழிக்கின்றது.
‘ஓங்கி உலகளந்த’ என்று தொடங்கும் இப்பாடலில் கண்ணனோடு கலந்த காதல் ஓங்குகிறது. வயல்களில் செந்நெல் ஓங்குகிறது. வண்டுகளின் இன்பம் ஓங்குகிறது. பசுக்களின் பால் வளம் ஓங்குகிறது. எங்கும் நீங்காத செல்வம் நிறைந்தோங்குகிறது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18-12-2020.

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...