Tuesday, December 15, 2020

 #எகிப்து_நாசரும்_சூயஸ்_கால்வாயும்!

———————————————————





கமால் அப்துல் நாசர் ஹூசேன். இப்பெயர் ஏகாதிபத்தியத்திற்கு எரிச்சலூட்டுவதாகவும், அரபு மக்களுக்கு பாசத்திற்கு உரியதாகவும் விளங்கியது. இந்தியப் பிரதமர் நேருவும் எகிப்து அதிபர் நாசரும் ஏறத்தாழ சமக்காலத்தவர்கள். ஒத்த கருத்துடையவர்கள். கூட்டுச்சேரா இயக்கத்தின் வலுவான தூதுவர்கள். நாசர் இந்திய கலாச்சாரத்தின் மீது பெரிதும் ஆர்வம் உள்ளவர். தமிழ்த் திரைபடமான வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை பார்த்து விட்டு சிவாஜி நடிப்பை பாராட்டியதை பலர் பலமேடையில் சொல்லக் கேட்டுள்ளோம். நாசரின் மீசையை தமிழகத்தில் பலர் காப்பி அடித்ததுண்டு. அதற்கு நாசர் மீசை என்றே பெயர். அரபு தேசியத்தை கட்டி எழுப்பிய நாசர் பல அரபுத் தலைவர்களின் வழிக்காட்டியாகத் திகழ்ந்துள்ளார்.
பதின் பருவத்திலேயே இளம் எகிப்து கழகத்தின் தலைவரானார். 1935 நவம்பர் 12 அன்று பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றமைக்காக இரண்டு நாள் சிறைத் தண்டனை பெற்றார். முஸ்லிம் என்கிற முறையில் குரானைப் பழுதறக் கற்றார். அதேசமயம் புத்தகப்பிரியராக நெப்போலியன், காந்தி, வால்டேர், விக்டர் ஹூகோ, சார்லஸ் டிக்கென்ஸ் உட்பட பலரின் நூல்களை தேடித்தேடி படித்தார். எகிப்திய தேசிய அரசியல் தலைவர் முஸ்தபா கமால், அஹமது ஷக்வி ஆகியோர் இவரை கவர்ந்தனர்.
தேசத் தொண்டாற்ற ராணுவத்தில் சேர வேண்டும் என பலமுறை முயற்சித்து தோற்றார். இறுதியில் ராணுவத்தில் சேர்ந்துவிட்டார். அங்கு பணியாற்றும்போது அன்வர் சதாம், அப்துல் ஹகிம் அமீர் ஆகியோரோடு கிடைத்த தோழமை அரசியல் வாழ்விலும் இறுதிவரை தொடர்ந்தது. பிரிட்டன், எகிப்தின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டு தன் பொம்மை அரசரை நியமித்தது. அச்சமயம் எகிப்திய ராணுவம் அமைதிகாத்ததுக்கு நாசர் வருந்தினார். சும்மா இருக்கவில்லை. சுதந்திர ராணுவ அதிகாரிகள் சங்கத்தை உருவாக்கினார். இந்த அமைப்பே அவர் இலக்கை அடைய வாகனமானது. ஆரம்பத்தில் ரகசியமாகவே இவ்வமைப்பு செயல்பட்டது.
நாசர் நுட்பமாக வேலைசெய்து ஆட்சி கவிழ்ப்பை அரங்கேற்றினார். ஆயினும் தன்னை ஜனாதிபதியாக அறிவிக்கவில்லை. தான் ஜூனியர் ராணுவ அதிகாரியாக இருப்பதால் ஏற்கமாட்டார்கள் என்பதை உணர்ந்து, முகமது நாஹிப்பை முன் நிறுத்தினார். 1953 ஜூன் 18 அன்று புதிய அரசாங்கம் பதவி ஏற்றது. தன் அமைப்பின் பெயரை எகிப்திய புரட்சி கமாண்டர் குழு என அறிவித்தார். நிலச்சீர்திருத்தம் உட்பட பலவற்றில் ஜனாதிபதியோடு மோதினார். ஒரு கட்டத்தில் ஜனாதிபதியை தூக்கி எறிந்தார். மக்கள் எதிர்ப்பு எழுந்ததும் பின் வாங்கினார். அதேசமயம் தந்திரமாக செயல்பட்டு தனக்கு நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களிடம் ராணுவம் உட்பட அனைத்து அதிகாரங்களும் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.
1869ல் பிரெஞ்ச் மற்றும் எகிப்திய அரசாங்கங்கள் உதவியோடு சூயஸ் கால்வாய் வெட்டப்பட்டது. தனியாரால் நிர்வாகிக்கப்பட்டது.பிரெஞ்சுகார்ர்க
ளின் ஆதிக்கலிருந்தை மீட்டார்.அது இந்து மகாசமுத்திரத்திற்கும் மத்திய தரைக் கடலுக்கும் இணைப்பானது. வர்த்தகத்திற்குப் பேருதவியானது. இதன் மீதான ஆதிக்கம் இறுதியில் பிரிட்டன் கைக்குப் போனது. அதை எகிப்திய மக்கள் எதிர்த்தனர். பிரிட்டிஷ் ராணுவம் சுட்டத்தில் 78 பேர் பலியானார்கள். நாசர் வெகுண்டெழுந்தார். ஆயினும் சூழல் சாதகமாக இல்லாததால் தற்காலிக சமரசம் செய்து கொண்டார்.
பல்வேறு அரசியல் சதிகளை எதிர்கொண்டும் மேற்கொண்டும் தன்னை நிலைநிறுத்த முயற்சித்தார். 1954 அக்டோபர் 26 ஆம் நாள் நாசரைக் கொல்ல ஒரு முயற்சி நடந்தது. நாசர் உயிர் தப்பினார். அதேசமயம் உணர்ச்சி பொங்க வானொலியில் உரையாற்றி மக்களை தன் பக்கம் வென்றார். காயை கச்சிதமாக நகர்த்தி அதிபரானார்.
1956 ஆம் ஆண்டு சூயஸ் கால்வாயை தேச உடைமையாக்கி அரபு உலகம் முழுவதின் கதாநாயகர் ஆனார். அதைத் தொடர்ந்து அரபு தேசியத்தை உயர்த்தி பிடித்தார். நாசரிசம் என்ற அடைமொழியுடன் அதுவே அரபு மக்களின் சுயமரியாதை மீட்டெடுப்பதன் குறியீடானது. கூட்டுச்சேரா இயக்கம் என்கிற அயல்நாட்டுக் கொள்கையில் ஊன்றி நின்றார். நேருவுக்கும், நாசருக்கும் அது புகழை ஈட்டிக் கொடுத்தது. ஏகாதிபத்தியத்தை உறுதியாக எதிர்த்து நின்றனர். சோவியத் யூனியனோடு உறவு கொண்டு பல திட்ட உதவிகள் பெற்றார்.
மிகப்பழைமையானது சூயஸ் கால்வாய். பண்டைய எகிப்தின் பாரோக்கள் ஆட்சிக்காலத்திலேயே பல நீர்த்தேக்கங்கள் இணைக்கப்பட்டு இரு கடல்களை இணைக்கும் கால்வாய் வெட்டப்பட்டது. பிற்கால முகமதிய தளபதி ஆம்ரு எகிப்தை வென்ற பின்னர் இதிலிருந்த மணலை வெளியே அகற்றி பல மராமத்துப் பணிகள் செய்து ஏறக்குறைய அதன் அமைப்பை முழுமையாக மாற்றினார். அதன்பின் அதிகம் யாரும் இந்தக் கால்வாய் மீது கவனம் செலுத்தவில்லை. துருக்கி சுல்தானின் வைசிராயாக இருந்த எகிப்தைச் சேர்ந்த கேதிவ் இஸ்மாயில் பிரெஞ்சு நாட்டின் ஆலோசனையில் பிரெஞ்சு மூலதனத்தில் உருவாக்கியதே தற்போதைய கால்வாய். பாலைவனம் வழியே செல்வதால் திரும்பத் திரும்ப மண் சேர்ந்துவிடுவதே இந்தக் கால்வாயின் குறை.
இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தத்தால் நாசர் செல்வாக்குக்கு சிறிது பின்னடைவு ஏற்பட்டாலும் அதையும் ராஜினாமா என்று சரிசெய்தார். 1970 செப்டம்பர் 28 அன்று மரணம் அடையும் வரை எகிப்திலும் அரபு உலகிலும் பெரும் கதாநாயகனாகவே திகழ்ந்தார். பாலஸ்தீன யுத்த நினைவலைகள், எகிப்திய விடுதலையின் தத்துவம் விடுதலையை நோக்கி உட்பட பல நூல்களை எழுதினார்.
சுட்டுக் கொல்லப்படும் வரையிலும் ஏகாதிபத்தியத்திற்கும் சிம்ம சொப்பனமாக இருந்த லிபியாவின் முகமது கடாபி, தன்னை எப்போதும் நாசரின் சீடராகவே பிரகடனம் செய்து வந்தார். ஏமன், சிரியா, அல்ஜீரியா உட்பட பல நாடுகளில் தேசிய எழுச்சிக்கு நாசரிசமே விதையானது. இராக்கின் சதாம் உசேனும் இவரின் அரபு தேசியத்தால் ஈர்க்கப்பட்டவரே. நாசருக்கு வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. சூயஸ் கால்வாய் உள்ளவரை நாசர் புகழைப் பாடிக் கொண்டே இருக்கும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
15-12-2020.

No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...