Wednesday, December 23, 2020

 #திருப்பாவை

—————————





“ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து,
பாழியந் தோளுடைப் பத்பநாபன் கையில்,
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சாரங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினிற் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.”
பதவுரை
ஆழி - வட்டம் வட்டமாகச் சுழித்துப் பெய்கிற
மழை - மழைக்கு,
கண்ணா -ஸ்வாமியானவனே,
ஒன்றும் - கொஞ்சம்கூட,
கைகரவேல் - கைவிடாதொழிய வேணும் அல்லது வஞ்சனை செய்யக் கூடாது,
ஆழியுள் - சமுத்திரத்தின் நடுவில்,
புக்கு- பிரவேசித்து,
முகந்துகொடு - ஜலத்தை எடுத்துக் கொண்டு வந்து,
ஆர்த்து - கர்ஜித்துக் கொண்டு
ஏறி - ஆகாயத்தில் ஏறி வ்யாபித்து,
ஊழி முதல்வன் - ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் எல்லாவற்றிற்கும் காரணபூதனான பகவானுடைய,
உருவம்போல - திருமேனியைப் போல்,
மெய்கறுத்து - உடம்பு கருத்தும்,
பாழி - மிகுந்த பலமுள்ள,
அம் - அழகான,
தோளுடை - தோள்களையுடையவனான,
பத்பநாபன் - பத்மத்தை நாபியிலே உடைய பகவானுடைய,
கையில் - திருக்கையிலிருக்கிற,
ஆழிபோல் - சக்கரத்தாழ்வானைப் போல்,
மின்னி - பிரகாசித்துக் கொண்டு,
வலம்புரிபோல் - சங்கம் போல்,
நின்று அதிர்ந்து - சலியாமல் சப்தித்துக் கொண்டும்
தாழாதே - தாமதியாமல்,
சாரங்கம் உதைத்த - சாரங்கம் என்கிற வில்லால் விடப்பட்ட,
சரமழைபோல் - பாண வர்ஷம் போல்,
உலகினில் வாழ - உலகில் எல்லாரும் வாழும்படியாக,
நாங்களும் - நோன்பிலே ஈடுபட்ட நாமெல்லாரும்,
மார்கழி நீராட - மார்கழி மாதத்தில் ஸ்நாநம் பண்ண மார்கழி நீராட்டமாகிற நோன்பை நோற்க,
மகிழ்ந்து - சந்தோஷத்துடன்,
பெய்திடாய் - மழை பெய்ய வேணும்,
ஏல் ஓர் - எம்பாவாய்.
.....................................................
“கடல் போன்ற, கம்பீரமான மழை பகவானே........................
உன்னிடம் எதையும் மறைத்து வைத்துக் கொள்ளாமல், கடல் நீரிலிருந்து வானத்தை அடைந்து, அங்கே எம்பெருமான் திருமேனி போல, மேகங்களாக உடல் கறுத்து, அவனது கையில் உள்ள சக்கரம் போல, மின்னலென மின்னி, வலம்புரிசங்கு போல இடியென இடித்து, எம்பெருமானது சாரங்கம் என்ற வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல விடாது மழையாகப் பெய்திடு!
நாங்களும் மார்கழியில் நீராடி, மகிழ்ச்சியுடன் எம்பெருமானை வணங்குவோம் என்று மழைக் கடவுளான வருண பகவானை அழைக்கிறாள் கோதை.......!
................................................................
“வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று”
என்று வான மழையைத் தேனமுதமாய்க் கருதுகின்றார் வள்ளுவப் பெருந்தகை. மண்ணுலகின் வாழ்வும் வளமும் மழையையே நம்பி இருக்கின்றன.
திருப்பாவை நான்காம் திருப்பாட்டு இந்த மாமழையையே வரவேற்றுப் போற்றுகின்றது. மழைக்கு நாயகனாக வருணபகவானை வேண்டி அழைக்கிறார் நாச்சியார். ‘ஆழி மழைக் கண்ணா, ஒன்று நீ கைகரவேல்’ என்று விண்ணப்பிக்கின்றார்.
ஆழம் மிக்கிருப்பதால் கடல் ஆழியெனப்பட்டது. வட்டமாயப் பூமியைச் சூழ்ந்திருப்பதாலும் ஆழி எனப்பட்டதாகலாம். அந்த விரிந்து பரந்த கடல்போல் கம்பீரம் கொண்டவனும் மழைக்குத் தலைவனுமாக இருப்பவன் வருணன். கண்ணனின் நினைவில் திளைத்திருப்பவர்களாதலால் வருணனையும் ‘ஆழி மழைக்கண்ணா’ என அழைத்தார். மழையைக் கண்போல் காத்து வழங்குவதால் ‘கண்ணா’ என்கின்றார்.
எக்காரணம் குறித்தும் வருணன் தன் வள்ளன்மையைக் குறைத்துக் கொள்ளாது பொழிய வேண்டுமென்பதால் ‘ஒன்று நீ கைகரவேல்’ என்று வேண்டுகின்றார்.
மழை முகில்கள் எப்படிப் புறப்பட்டு வர வேண்டுமென்பதையும் வளம் பொழியும் தமிழால் வகுத்துக் காட்டுகின்றார். முகில் என்ற தமிழ்ச்சொல் குறிப்பது போலத் தண்ணீரை முகந்து கொண்டு வரவேண்டும். சிறிய ஏரிகளில், கிணறுகளில் நீரெடுத்து வந்தால் அது எங்கள் தேவைக்கு ‘திங்கள் மும்மாரி’யாக மழை பொழியப் போதாது.
ஆகையினால் ஆழ்கடலின் அடிமணல்வரை உட்புகுந்து உறிஞ்சி வரவேண்டுமென்பார். ‘ஆழி உட்புக்கு முகந்து கொடு’ என்கின்றார்.
நீர் முகந்த மேகங்கள் அணிவகுத்துப் புறப்படுங்கால் வருகையை அறிவிக்கும் பெருமுழக்கத்தோடு வருதல் வேண்டுமென்பதை ‘முகந்து கொடு ஆர்த்தேறி’ என மொழிகின்றார்.
படையெடுத்து, வானமே கருப்புக் குடையெடுத்து வருவது போல கருப்பு மேகங்கள் அடர்ந்து வருங்கோலத்தை நாச்சியார் கண்ணன் என்னும் காதற் கடவுள் கோலமாகவே காணுகின்றார். படைத்து காக்கும் ஊழி முதல்வனான கண்ணனின் திருமேனி உருவம்போல் கருத்தரிக்க வேண்டுமாம் மேகங்கள். கண்ணனைக் காணாத ஆய்ச்சியர் கண்கள் இந்தக் காட்சியையேனும் கண்டு மகிழ வேண்டுமென்றோ?
முகிலைக் கிழித்து மின்னல்கள் மின்னிக் கொண்டே வர வேண்டும். அந்த மின்னல்களும் கண்ணனையே நினைப்பூட்டுகின்றன. ‘பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில் ஆழிபோல்’ மின்னி வருக என்று வேண்டுகின்றார் ஆண்டாள். வானமெங்கும் விரிந்து கிடக்கின்ற கருமேகங்கள் போல் அமைந்துள்ளன, பரந்து விரிந்து அகன்ற வலிமையான பத்மநாபன் தோள்கள். அவனது கரங்களில் சுழலும் சுதர்சனமெனும் சக்கரப்படை போல் மின்னல்களும் சுழல வேண்டுமாம்.
அந்தப் பரந்தாமன் கையிலே கம்பீரமாய்க் கொலுவிருக்கும் பாஞ்சன்யமெனும் வலம்புரி சங்கம். அந்த ஆழி வெண் சங்கத்தின் முழக்கம் கேட்டு வறுமையும் வறட்சியும் அதிர்ந்து போகும்படி மேகங்கள் முழங்கி வரும் காட்சியைக் காண்கிறார் நாச்சியார்.
தடதடவென்று மின்னி இடிமுழக்கத்தோடு வந்து முகில்கள் மழைபொழிய வேண்டும். அந்த மழைப்பொழிவு திருமாலின் கரத்தில் விளங்கும் சாரங்கம் என்னும் வில்லிலிருந்து புறப்பட்டு வரும் ஓயாத அம்பு மழை போல் அமைய வேண்டும். இதனைத் ‘தாழாதே சாரங்கம் உதைத்த சரமழைபோல்’ என்று சித்தரித்தார்.
சரமழையான அம்பு மழை தீயோரையேனும் அழிக்கும் மழையாக அல்லவா அமைந்துவிடும்? ஆனால் வான மழையோ யாரையும் அழிக்காது. நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்று வாழ வைக்கும் இயல்புடையதாதலால் ‘வாழ உலகினில் பெய்திடாய்’ என்று எச்சரிக்கையோடு பேசுகின்றார் கோதை நாயகியார்.
இனிய மழைக்கோலம் இறைவன் திருக்கோலமாய்த் துலங்கும் எழிலை இப்பாசுரத்தில் காணுகின்றோம்.
மழை கண்ணன் திருவுருவமாய்க் கனிகின்றது. அவன் தண்ணருளாய்ப் பொழிகின்றது. வானம் அவனாகின்றது. அவன் அமுதமழையாகி வாழ்வு தருவோன் ஆகிறான்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
19-12-2020.

No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...