Tuesday, December 15, 2020

 #மாதங்களில்_மார்கழி..........

———————————————————



மாதங்களில் மார்கழி என்பார்கள். நாளை மார்கழி பிறக்கின்றது. ‘மாஸானம், மார்கசீர்ஷோஹம்’ என்று குருசேஷ்த்திரப் போர்க்களத்தில் கிருஷ்ணர் சொல்வார். மார்கழி என்றால், மார்கம் அதாவது ‘வழி’ என்று பொருள். சீர்ஷம் என்றால் முக்கியம், தலைமை, முதன்மை என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் இந்த மாதத்திற்கு அக்ரஹயன (அக்ர - முதன்மை, அயன-பாதை) அகஹன என்னும் பெயர்களும் உண்டு.
கார்முக மாசம், சூரிய நகர்வுகளை கொண்டு அழைக்கப்படுகின்றது. தமிழை ஆண்ட ஆண்டாளின் திருப்பாவையும், மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும், அதிகாலையில் பாடி அந்த மார்கழி நாட்களை வரவேற்பது தொடர்ந்த பழக்க வழக்கங்கள். மாதங்களில் மார்கழி என்பது தெய்வீக வாக்கு என்று சொல்லப்பட்டாலும், மார்கழி குளிர் அடுத்து வர இருக்கின்ற தை மாதம், உத்தராயணத்துக்கு நுழைவுவாயிலாகும். அனைவருக்கும் வளம் தரும் தைபொங்கல் மகரசாந்தியை, வரவேற்கும் மாதம்தான் மார்கழி. சிரமங்கள், ரணங்கள், அழுக்குகள், போன்றவை படிப்படியாக நம்மை விட்டு அகலும் நேரம்தான் மார்கழி மாதம் என்ற நம்பிக்கையும் உண்டு. முன்பனி காலம், பின்பனி காலம் என்று இந்த மாதத்தையொட்டி தான், கால மாற்றங்கள் உணரப்படுகின்றது. மார்கழிக்கு முன்பு இருந்த மழையும் இருளும் குன்றி குளிர் வந்துவிடும். இப்படி ஆண்டுக்கு ஆறு பருவங்கள் உள்ளன.
கோலம் போடுவது ஒரு கலை. கோலம் போடுவது வாசலுக்கு அழகு மட்டும் அல்ல உடலுக்கும் ஒரு எளிய உடற்பயிற்சி. மனதை ஒருமுகப்படுத்தும், மார்கழி நினைவுகள் அள்ள அள்ளக் குறையாதவை. பனிப்பொழிவும், குளிரும் இயற்கையின் அபூர்வ கொடைகள். அதுவும் நம்மைப் போன்ற வெப்பநாடுகளில் வாழ்வோருக்குக் கிடைத்திருக்கும் அரிய கொடையாகும். அதனால்தானோ என்னவோ ஆண்டாளும், திருவெம்பாவையும், நெடுநல்வாடை நக்கீரனும் இப்பருவத்தைத் தேர்ந்தெடுத்து உள்ளம் கிளர்த்தும் கவிதைகளை வடித்து இருக்கிறார்கள். பனியில் நடமாடும் மனிதர்களின் ஒவ்வொரு அசைவும் நீரோவியங்கள். வருடத்திற்கொரு முறை இயற்கையின் அழகிய சுழற்சி. பருவங்களின் வேறுபாடறியாது, தாக்கம் உணராது, உழைக்கும் மக்களின் மூச்சுக்காற்றை கொஞ்சநேரம் தன்னில் இருத்தி, பிறகு ஆதவனிடம் ஒப்படைக்கும் பனிமாதம் மார்கழி.
பறவைகள், விலங்குகள், மனிதர்கள் என்று எல்லா உயிரினங்களையும் பனி இம்சித்தாலும், மனிதர்களைத் தவிர மற்றவை நொந்துகொள்வதில்லை. பனிபோல் வந்த துயரம் என்று இனி எழுதாதீர். குளிர் இதம், குளிர் கொடை, குளிர் சுகம், குளிர் இன்பம். எனவேதான் மாதங்களில் போற்றத்தக்கது மார்கழி என்கிறார்கள்.
மாதங்களில் மார்கழியாய் இருக்கிறேன் என கீதையின் நாயகன் குறிப்பிடுவான். தொன்று தொட்டு மார்கழி மாதம் புனிதமானதெனக் கருதப்படுகிறது. இம்மாதம் வைகறையில் துயிலெழுந்து நீராடி இறைவனை வழிப்பட்டால் நினைத்தவை நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.
மார்கழியில்(டிசம்பர் 21ல்) சூரியன் தெற்கே மகர ரேகையில் பிரகாசிக்கிறான். அவனுடைய தெற்கு நோக்கிய பயணம் (தட்சிணாயனம்) மார்கழியில் முடிவடைகிறது. தை முதல் நாளன்று வடக்கே கடக ரேகை நோக்கிய பயணம் (உத்திராயணம்) தொடங்குகிறது. தை மாதம் அறுவடைக் காலம். உழவன் உழைப்பின் பலனை அடையும் காலம். ஒரு ஆண்டின் வளமான வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பெற அடிப்படையாய் அமைவது தைத் திங்களுக்கு முந்திய மார்கழியாகும். புனித நாட்களான இந்துக்களின் வைகுண்ட ஏகாதசியும், திருவாதிரையும், கிறித்தவர்களின் இயேசு பிறப்பும், புத்தாண்டு பிறப்பும் மார்கழி திங்களில்தான் வருகின்றன. ஐயப்ப பக்தர்களும் மார்கழியில் நோன்பிருக்கின்றனர்.
தட்சிணாயனம் எனப்படும் ஆடி முதல் மார்கழி முடிய ஆறு மாதங்களும் உழவனுக்கு ஒய்வற்ற உழைப்பும், மழையும், குளிரும் மிகுந்த காலமாகும். மார்கழி முடிந்து தை பிறந்த பின்னரே உழைப்பின் பலனை அறுவடை செய்து அனுபவிக்கும் காலம். மங்கல நிகழ்ச்சிகளுக்கும், கேளிக்கைகளுக்கும் வழி பிறக்கும் காலம். இரவின் கடையாமக் கனவு பலிதமாகுமென்பர். தட்சிணாயனத்தின் கடையாமமாகிய மார்கழியில் இறைவனைத் தூய உள்ளன்போடு வழிபட்டு நல்லுணர்வுகளை மனதில் தேக்கினால் உத்திராயணத்தில் நினைத்தவை நிறைவேறி மகிழ்ச்சியான வாழ்வு அமையுமெனக் கருதினர்.
உலகு செழிக்கவும் தங்களுக்கு நல்ல மணவாழ்வு கிட்டிடவும் கன்னிப் பெண்கள் மார்கழி திங்களில் பொழுது புலரா முன்னர் பொய்கையில் நீராடி மணலில் பாவை செய்து பூச்சூடி வழிபாடு செய்வர். இது மிகவும் தொன்மையான மரபாகும் என்பதை பண்டைத் தமிழ் இலக்கியங்களின் வழி அறியலாம். இவ்வழிபாட்டினை,
”அரிமயிர்த் திரண்முன்கை
வாலிழை மடமங்கையர்
வரிமணற் புனைபாவைக்குக்
குலவுச்சினைப் பூக்கொய்து
தன்பொருநைப் புனல்பாயும்”
“.....................................திணிமணற
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கய மாடு மகளிரொடு”
எனப் புறநானூறு குறிப்பிடுகிறது.
பரிபாடலிலும் பாவை வழிபாடு பற்றிய குறிப்பு காணப்படுகின்றது.
“வெம்ப தாக வியனில வரைப்பென
அம்பா வாடலினாய்தொடிக் கன்னியர்
முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்
பனிப்புலர் பாடி”
“தாய் அருகா நின்று தவத்தைந் நீராடுதல்”
கன்னியர் தம் தாயருடன் சென்று குளிர் நீராடினர் எனப் பரிபாடல் கூறுகின்றது. அக்காலத்தில் பெண்டிர் தை மாதம் பாவை செய்து நீராடி வழிபடுவது ‘அம்பா ஆடல்’ எனப்பட்டது.
சூரிய இயக்கத்தின் அடிப்படையில் இக்காலத்தில் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. அக்காலத்தில் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டின்படி பூர்ணிமையுடன் ஒரு மாதம் நிறைவு பெற்றது. ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளோடு’ மார்கழி முடிந்துவிட்டது. அடுத்த நாள் தை பிறந்துவிடுகிறது. எனவே இக்கால மார்கழி நீராடலே அக்காலத்தில் தை நீராடல் எனப்பட்டது என்பது புலனாகும். பாவையை முன்னிறுத்தி வழிபட்ட பாடல்கள் “பாவைப் பாடல்கள்” எனவும் மார்கழியில் கன்னியர் இவ்வழிபாட்டின்போது மேற்கொண்ட நோன்பு ‘பாவை நோன்பு’ எனவும் பெயர் பெற்றன.
பாவை நோன்பினை சமண சமயக் கன்னியரும் மேற்கொண்டனர் என்பதை
“கோழியுங் கூவின குக்கில் குரல்காட்டுங்
தாழியு ணீலத் தடங்கணீர் போதுமினோ
ஆழிசூழ் வையத் தறிவ னடியேத்திக்
கூழை நனையக் குடைந்து குரைபுனல்
ஊழியு மன்னுவா மென்றேலோ ரெம்பாவாய்.”
எனும் யாப்பருங்கலச் செய்யுளால் அறியலாம். இந்நூல் சமண சமயத்தவரான அமிர்தசாகரரால் இயற்றப்பெற்றது.
மார்கழி நோன்பு பற்றிய குறிப்பு வேதங்களில் காணப்படவில்லை என்பார் உரையாசிரியர் பெரியவாச்சான் பிள்ளை. இதனால், பாவை நோன்பு தொன்மையான தமிழ் மரபேயாகும் என்பதை உணரலாம். எனவே நல்வாழ்வு வேண்டி பாவையர் பாவை நோன்பு நோற்று இறைவனை வழிபடும் வழக்கம் தென்னகத்தில் நிலவியது என்பது புலனாகிறது.
‘தென்னகத்து மீரா’, சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ எனப் போற்றப்படும் ஆண்டாள் திருவில்லிபுத்தூரில் கி.பி. எட்டாம் நூற்றாண்டு, நள ஆண்டு திரு ஆடிப்பூர நன்னாளில் திருத்துழாயிடத்து அவதரித்தார். அவர் திருமாலிடம் கொண்ட ஆழ்ந்த பக்தியின் வெளிப்பாடே திருப்பாவைப் பாசுரங்களாகும். ‘மானிடவர்க்கு என்று பேச்சுப் படில் வாழ்க்கில்லேன்’ என உறுதிபூண்டு தீராத்தெய்வக் காதல் கொண்டு வாழ்ந்தவர். திருமாலின் வாய்ச் சுவை மணத்தின் தெய்வீகச் சிறப்பினை உணர விரும்பிய ஆண்டாள்,
“கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாயதான் தித்தித் திருக்குமோ
மருப்பெசித்த மாதவன்தான் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்ஆழி வெண்சங்கே”
என இறைவனின் வாயைத் தொடும் பேற்றினைப் பெற்ற ‘பாஞ்சசன்னியம்’ எனும் சங்கிடம் களிவிரக்கக் காதல் உணர்வுடன் கேட்கிறார். இப்பாடலில் அவர் திருமாலிடம் கொண்ட மையலும் பக்தியும் உணர்ச்சி பெருக்கெடுத்துப் பொங்கும் புதுப்புனலெனப் பாய்கிறது.
ஆண்டாள், திருமாலின் அவதாரங்களில் ஆழிமழைக் கண்ணனையே பெரிதும் போற்றிப் பரவுகின்றார். கண்ணனிடம் கொண்ட காதலால் தன்னை கோபியாகவும் திருவில்லிபுத்தூரை கண்ணன் தோன்றிய வடமதுரை ஆயர்பாடியாகவும் பாவித்துத் திருப்பாவைப் பாசுரங்களைப் பாடுகின்றார்.
“மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்
நீராடப் போதுவீர், போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆயர்பாடிச் செல்வச் சிறுமீர்காள்”
எனப் பாவை நோன்பு நோற்கத் தன் தோழியரை ஆய்பாடிச் செல்வச் சிறுமிகளாகக் கருதி அழைக்கிறார் ஆண்டாள். அவர்களிடம் பாவைக்கு எவ்வாறு கிரீசைகள் செய்ய வேண்டுமென்பதை வருமாறு விளக்குகிறார். திருப்பாற் கடலில் அனந்தாழ்வான் மீது பையத் துயின்ற பரமனாகிய திருமாலின் திருவடிகளைப் போற்றிப் பாடி நோற்போம். அவ்வாறு நோற்கையில் இவ்வுலகில் நிலையற்ற இன்பத்தைத் தரும் நெய்யையும், பாலையும் உண்ணாது ஒதுக்குவோம்; விடிகாலையில் நீராடிப் புறத்தூய்மை செய்வோம்; கண்ணுக்கு மையிடாது, கூந்தலில் பூச்சூடாது செயற்கை அழகினைத் தவிர்ப்போம்; சான்றோர் கடிந்தனவற்றைச் செய்யோம்; பொய்யும் புறங்கூறலையும் விடுத்து இயன்றவரை பிறர்க்கு உதவி, இரப்போர்க்கு ஈந்து அகத்தூய்மையுடன் நோற்போம். இங்கு, பாவை நோன்பிற்கு புறத்தூய்மை மட்டுமின்றி அகத்தூய்மையின் இன்றியமையாமையும் வலியுறுத்தப்படுகின்றது.
தூய மனத்துடனும் தீதற்ற செயல்களுடன்.....
“ஓங்கியுலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்”
இவ்வுலகில் மன்னுயிருக்கும் மண்ணுக்கும் தீங்கு நேராதபடி நாடெங்கும் மாதம் மும்மாரி பொழியும்; வயல்களில் ஓங்கிச் செழித்து வளர்ந்த நெற்பயிர்களிடையே கயல்கள் துள்ளியாடும்; குவளைப் பூக்களில் வண்டுகள் மது உண்டு மயங்கிக் கிடக்கும்; குடங்குடமாய் பால் சுரக்கும் வள்ளல் தன்மையுடைய பெரும் ஆநிரைச் செல்வமும் நீங்காது நிறைந்தோங்கும் என்பார் கோதை நாச்சியார். திருமாலின் புக்ழ்பாடி அவனைச் சரண் புகுந்து தூய மனத்துடன் மார்கழி நோன்பு நோற்றால் இவ்வுலகில் மகிழ்ச்சியும் வளமும் பொங்கும் என்பதை திருப்பாவை உணர்த்துகிறது.
ஸ்ரீவைணவத்தின் வளர்ப்புத் தாயான இராமானுஜருக்கு திருப்பாவைப் பாசுரங்களில் அளவற்ற ஈடுபாடிருந்தது. உரையாசிரியர் பெரியவாச்சான் பிள்ளை ஆழ்வார் மங்கை ஆண்டாளின் சிறப்பினை, “ஸம்ஸாரத்திலே உறங்குகிறவர்களை எழுப்பி எம்பெருமான் தானே தன்னைக் கண்டார்கள் ஆழ்வார்கள். இவள் தானே சென்று எம்பெருமானை எழுப்பித் தன் குறையை அறிவித்தாள். ஆகையாலே அவர்களிலும் இவள் விலஷணை” எனப் போற்றி புகழ்வார்.
திருப்பாவை ஆந்திர, கன்னட நாடுகளில் அவ்வவ்மொழி எழுத்துகளில் எழுதி பாடப்பெறுகின்றது. சோழர்கள் ஆட்சியின்போது இப்பாடல்கள் அங்கு பரவியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இத்துணைச் சிறப்பு வாய்ந்த “கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே” பாடிப் பரவுவோர் திருமகள் கேள்வனின் திருவருளால் நிலைத்த மகிழ்ச்சியும் வளமும் பெற்று இன்புற்று வாழ்வர் என பூதேவியின் அவதாரமாகக் கருதப்படும் ஆண்டாள் அருளிச் செய்கிறார். தவம், துறவு, யாகம், யோகம் போன்ற கடுமையான நோன்புகளின்றி தூய மனத்துடன் இறைவனை துதித்துச் சரணடைந்தால் அவன் அருளை எளிதில் பெறலாம் என்பதை திருப்பாவைப் பாசுரங்கள் உணர்த்துகின்றன.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
15-12-2020.

No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...