Thursday, December 10, 2020

 


அரசால் உருவாக்கப்பட்ட தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்துக்கு போட்டியாக தனியார் மீன்பிடி துறைமுகம் ஒன்று பரக்காணியில் செயல்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் சுமார் 50 ஆண்டுகால கோரிக்கையின்பேரில் தேங்காப்பட்டணத்தில் மீன்பிடி துறைமுகம் மத்திய மாநில அரசுகளால் ரூ.105 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. இதையடுத்து, எந்த தடையும் இல்லாமல் 700க்கும் அதிகமான விசைபடகுகள், 6 ஆயிரத்துக்கும் அதிகமான வள்ளங்களில் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.
இந்த துறைமுகத்தில் மீன்பிடிக்க, தமிழக விசைப்படகுகளுக்கு ஆண்டுக்கு 12,500 ரூபாயும், கேரளா விசை படகுகளுக்கு ஆண்டுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வரி செலுத்த வேண்டும் என்பது விதிமுறை. கட்டுமர படகுகள் பதிவு செய்யும்போது ஒரு தொகை வசூலிக்கப்படும், துறைமுகத்தில் நுழையும் வாகனங்களும் தினசரி வரி செலுத்த வேண்டும். இதன்மூலம் அரசுக்கு வருமானம் பெருகியது.
சமீப காலமாக அரசு துறைமுகத்தின் அருகில் குழித்துறை தாமிரபரணியாற்று பகுதியான பரக்காணியில் தற்போது குட்டி மீன்பிடி துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இதை நடத்தி வருபவர் தமிழக அரசின் வருவாய் துறையில் பணிபுரிந்தவர் என்று கூறப்படுகிறது.
இந்த துறைமுகத்தை ஆற்றின் கரை பகுதியை இடித்து அந்த நபரின் பட்டா நிலத்தில் அமைத்துள்ளனர். மேலும், சிறு பைபர் படகுகள் அணையும் தளத்தை, ஆற்றை மண்போட்டு நிரப்பி அமைத்துள்ளனர்.
இந்த துறைமுகத்திற்கு தினமும் 50 முதல் 100 விசை படகுகள் வந்து செல்வதாகவும், வாகனங்கள் நூற்றுக்கணக்கில் வந்து செல்வதாகவும் தெரிய வருகிறது. இங்கு வரும் விசை படகுகளுக்கு நாள் ஒன்றிற்கு 200 ரூபாயும், வள்ளங்களுக்கு தினம் 100 ரூபாயும் வசூலிக்கப்படுகின்றன. வாகன பார்க்கிங் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவில் இருந்து தடை செய்யப்பட்ட சட்டவிரோதமாக வளமீன் இறக்குபவர்கள் இந்த தனியார் துறைமுகத்தை அதிகளவில் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக கொரோனா காலத்தில் தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் தடை நிலுவையில் இருந்தபோது அதிக அளவில் கேரளா படகுகளும், மற்ற படகுகளும் இங்கு வந்து சென்றுள்ளன. அப்போது அதிக தொகை வசூலித்ததாக தெரிய வருகிறது. தற்போது தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு வருமானம் குறைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மீனவர்கள் சார்பில் பல புகார்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே சட்டத்துக்கு புறம்பாக பரக்காணி பகுதியில் செயல்படும் தனியார் மீன்பிடி துறைமுகம் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியாவில் எங்குமே இல்லாத வகையில் தேங்காப்பட்டணத்தில் மட்டும் சட்டத்துக்கு புறம்பாக வளமீன் இறக்குவதற்காகத்தான் இந்த தனியார் துறைமுகம் செயல்படுகிறது. இந்த துறைமுகத்தால் அரசு துறைமுகத்துக்கு பல கோடி இழப்பு ஏற்படுகிறது.
கடலூர், நாகை, குளச்சல் துறைமுகம் திட்டங்கள், முட்டம் , மூக்கையூர், வாலிநோக்கம் சிறு மீன்பிடி துறைமுக அமைக்கும் திட்டம். வானகிரி, திருக்கடையூர், மாமல்லபுரம், மூக்கையூர், திரிசோபுரம், சிலம்பிமங்கலம், காட்டுப்பள்ளி, பாம்பன் - ராமேஸ்வரம், புன்னக்காயல், மணப்பாடு, கன்னியாகுமரி போன்ற பல மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கும் திட்டங்கள் கிடப்பில் உள்ளன.
1-12-2020.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...