#இந்தியப்_பெருங்கடலும்_அதன்_பாதுகாப்பும்!
———————————————————
இந்திய பெருங்கடல், அதன் மீது இந்தியாவின் ஆளுமை, அதன் பாதுகாப்பு பற்றி தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். இந்திய பெருங்கடலில் சீனாவின் பட்டுவழி பாதை (Silk way) இலங்கை ஹம்பன்தோட்ட துறைமுகத்தில் சீனாவின் 99 வருட குத்தகை ஆதிக்கம், அமெரிக்காவின் டிகோகார்சியா, ஜப்பானின் இந்திய பெருங்கடல் பரப்பில் எண்ணெய் வள ஆய்வு, பிரான்ஸ் நாட்டில் மடகஸ்காரில் ஆதிக்கம், பிரிட்டன், திரிகோணமலை பிரச்சினை என்று பல புவி அரசியல் சிக்கல்கள் கடந்த 30 ஆண்டுகளாக உள்ளன.
இந்திய பெருங்கடல் பரப்பில் 120 போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றன என்று செய்திகள் வருகின்றன.
இந்தியபெருங்கடல்,டீகோகார்சியா
———————————————-
இந்தியபெருங்கடல்,டீகோகார்சியாவால் இந்தியாவிற்கு பிரச்சினைகள் எப்போதும் ஏற்படும் வகையில் தான் உள்ளது. பன்னாட்டு அளவில் டீகோ கார்சியா தீவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதில் அமெரிக்கா இராணுவ தளத்தை அமைப்பதற்கு அந்த தீவில் வசித்த 2000க்கும் மேற்பட்ட மோரீஸ் நாட்டினரை வெளியேற்றியது. இது இந்து மகா சமுத்திரத்தில் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் மோரீஸ் குத்தகைக்கு விட்டிருந்தது. தற்போது பிரிட்டன் 2036 வரை அமெரிக்காவுடன் குத்தகையை புதுப்பித்துள்ளது. இது நேரடியாக இந்தியாவின் தென் எல்லையிலுள்ள தீவாகும்.
ஏற்கனவே இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது 1974 கால கட்டங்களில் டீகோகார்சியாவால் தீவில் அமெரிக்கா தளம் அமைத்தால் இந்தியாவுக்கு நேரடியாக ஆபத்திருக்குமென்று போராடி அமெரிக்க இராணுவ தளம் அப்போது அப்புறப்படுத்தப்பட்டது.
தென் இலங்கையின் அம்பான்தோட்டா துறைமுக பங்குகள் சீனாவிற்கு விற்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இலங்கை இறுதி யுத்தத்திற்கு பிறகு தற்போது அங்கு செய்யப்பட்டு வரும் கட்டுமான வேலைகள் சீனாவின் முதலீடு அதிகளவில் உள்ளது. அம்பான்தோட்டா துறைமுக கட்டுமான பணிகளுக்கு சீனாவின் முதலீடு தொடர்பாக சமீபத்தில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் சீன அரசின் துறைமுக வணிக குழுமத்திற்கு அம்பான்தோட்டா துறைமுகத்தின் 70 சதவீத பங்குகளை குத்தகை அடிப்படையில் 99 வருடங்களுக்கு இலங்கை அரசு அளிக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் படி அம்பான்தோட்டா துறைமுகம் சார்ந்த பணிகளில் 1.1 பில்லியன் டாலர்கள் (6,500 கோடிகளை) சீனா முதலீடு செய்கிறது.
ஏற்கனவே இந்த துறைமுகத்தில் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமென்ற இந்தியாவின் கவலையை மீறி, இலங்கை துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மந்திரி மற்றும் இலங்கைக்கான சீன தூதர் ஆகியோர் முன்னிலையில் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி துறைமுக பாதுகாப்புக்கு இலங்கை கடற்படையே பொறுப்பு எனவும், அங்கு தளம் அமைக்க எந்த வெளிநாட்டு கடற்படைக்கும் அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்களும், போர்க்கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதே போல மேலை நாட்டு போர்க்கப்பல்களின் நடமாட்டங்களும் இந்து மகா சமுத்திரத்தில் இருப்பதாக செய்தி வருகிறது. மேல்நாட்டு போர்க்கப்பல்கள் இந்து மகா சமுத்திரத்தில் நடமாடுவதற்கான எந்தவித அவசியமும் இல்லாத நிலையில் இது போன்ற சம்பவங்கள் தேவையற்ற பதற்றத்தை அந்த பகுதியில் உருவாக்குகிறது.
இந்திய பெருங்கடலின் பாதுகாப்பு ஒரு முக்கியமான விடயம். தும்பா, மகேந்திரகிரி, ஐ.என்.எஸ் கட்டபொம்மன் நாங்குநேரி, கூடங்குளம், தூத்துக்குடி துறைமுகம், கல்பாக்கம் என மேற்கில் கொச்சி துறைமுகம் முதல் பம்பாய் வரையும், கிழக்கு முகத்தில் கல்கத்தா வரையும் விரிந்து விசாலமாக பரவியுள்ளது.
வடக்கே சீனா, பாகிஸ்தான் சவால்களை போல் தெற்கே எதிர்காலத்தில் எந்த சவால்களும் நம்மிடம் நெருங்காமல் இந்திய பெருங்கடலை பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இப்படியான சிக்கலில் ஆபத்து ஏற்பட்டால் நேரடியாக கேரளம் மற்றும் குமரி முனையிலிருந்து இராமேஸ்வரம் நாகை வரை உள்ள கடற்கரைப்பகுதிகளுக்கும், நாட்டின் பாதுகாப்பில் பாதகம் ஏற்படும். தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினையை பேசாமல் பதவி சுகத்தை நாடுபவர்களைப் பற்றி கவனித்தால் நாடு சீரழிந்து தான் போகும்.
No comments:
Post a Comment