#தலைவர்_கலைஞர்_அவர்கள்_என்னிடம்_1992இல்_கேட்ட_சில_விவரங்கள்....
———————————————————-
இன்றைக்கு பழைய கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தபோது நான் தொடுத்த பொதுநல வழக்கு குறித்தான ஆவணங்கள் என் கையில் கிடைத்தது. தலைவர் கலைஞர் அவர்கள், என்னிடம் சில விவரங்களை 28-10-1992 அன்று தொலைப்பேசியில் கேட்டார். அப்போது ஜெயலலிதா ஆட்சி. சில கழகத் தோழர்கள் போராட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். அதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கான சில விடயங்களை கலைஞர் அன்று என்னை தொடர்புக் கொண்டு கேட்டார்.
இதுகுறித்து போராட்ட அரசியல் கைதியாளர்களை கைது செய்யும்போது அவர்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கக் கூடாது என்று நான், 1988 மார்ச் மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தேன். அந்த வழக்கு இறுதியாக 21-03-1988ல் விசாரிக்கப்பட்டு, நீதிபதி சிவசுப்பிரமணியம் தீர்ப்பை வழங்கினார். அதில், குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 151 குறித்தான கேள்விகளும், அதற்கான பதில்களும் என்னுடைய வழக்கில் நீதிபதி வழங்கினார். அந்த ஆவணத்தை கடிதத்தோடு கலைஞருக்கு அனுப்பி வைத்தேன்.
இந்தச்சூழலில், 11-03-1990 அன்று தமிழ்நாடு காங்கிரஸ்காரர்கள் திரு.ஜி.கே.மூப்பனார் தலைமையில் மறைமலையடிகள் நகர் ரயில்வே நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டுமென்று போராடியபோது அவர்கள் ரிமாண்டு செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கைது தவறு என்று மூப்பனார் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு தந்தி அனுப்பினார். தான் அனுப்பிய தந்தியே ஹேபியஸ் கார்ப்பஸ் மனுவாக உயர் நீதிமன்றம் பாவிக்க வேண்டுமென்று வேண்டுகோள் வைத்தார். இந்த கைதில் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 3 சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.
சனி ஞாயிறு விடுமுறை என்பதால், இந்த 7 பேருடைய மனுக்கள், அன்றைய உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.டி.ராமலிங்கம் வீட்டில் சிறப்பு அனுமதி பெற்று, ப.சிதம்பரம் வாதாடினார். அன்றைக்கு இந்த சிறப்பு அனுமதி பெற வேண்டுமென்றால், தலைமை நீதிபதி ஆனந்திடம் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், அன்றைக்கு அவரும் விடுமுறையில் சென்றுவிட்டார். அன்றைய மூத்த நீதிபதியான எஸ்.நயினர்சுந்தரம், எஸ்.டி.ராமலிங்கம், எஸ்.சிவசுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்சை ஏற்படுத்தினார்கள். இதுகுறித்து ஞாயிறு மாலை எஸ்.டி.ராமலிங்கம் வீட்டில் விசாரிக்கப்பட்டது. ஆனால், தலைமை நீதிபதி இல்லாதபோது மூத்த நீதிபதி எஸ்.நயினர்சுந்தரம் சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுமதி தர சட்டத்தில் வழிவகை இருக்கிறதா என்று கேள்விகள் அப்போது எழுந்தன.
இப்படியெல்லாம் கடந்த காலத்தில் தவறுகள் நடந்தது என்பதை விவரங்களோடு தலைவர் கலைஞர் அவர்களுக்கு என் கடிதத்தோடு நேரடியாக கொடுக்கும்போது, அன்றைக்கு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட கழகத் தோழர்களை விடுதலை செய்வதற்கு, என்னுடைய பொதுநல வழக்கு பயன்பட்டது. என் இந்த வழக்கை மேற்கோள் காட்டி சட்ட மன்றத்திலும் பேசப்பட்டது.இது எல்லாம் வரலாற்று செய்திகள், இன்றைக்கு இதெல்லாம் யாருக்கு தெரியபோகிறது. நடந்தவைகளை சொல்லிதானே ஆக வேண்டும்.
அப்போதும் கலைஞர் சொன்ன வார்த்தை, எதையும் முந்திகொண்டு செய்கிறாய், வாழ்த்துக்கள் என்றார். அன்றைக்கு திமுகவில் தலைவரோடு இருந்தவர்கள் இன்றைக்கு இருக்கும் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆலந்தூர் பாரதி ஆகியோர்தான் நினைவுக்கு வருகின்றனர். இன்றைக்கு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள், அன்றைக்கு எங்கே இருந்தார்கள் என்று தெரியவில்லை. நானும் அன்றிலிருந்து இன்று வரைக்கும் உண்மையான செயல்பாட்டில் இருக்கிறேன் என்பதை இந்தக் கடிதம் நினைவுப்படுத்துகிறது. சொல்ல வேண்டியதை சொல்லிதானே ஆகவேண்டும். சொல்லாமல் விட்டால் நமக்கே நல்லதல்ல.
No comments:
Post a Comment