Monday, December 14, 2020

 #நாவலர்_சோமசுந்தர_பாரதி

———————————————————-




தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் 1879ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி பிறந்தார் சோமசுந்தர பாரதியார். இவரின் இயற்பெயர் சத்தியானந்த சோமசுந்தரன். எட்டையபுரம் அரசின் பராமரிப்பில் வளர்ந்த இவர் தமிழ் புலமை காரணமாக பாரதி என்ற பட்டம் பெற்றார். மதுரை பசுமலையில் வாழ்ந்தார்.
சென்னை சட்டக் கல்லுாரியில், இளநிலை சட்டம் பயின்றார். பிரபல வழக்கறிஞராக இருந்தபோதே, வ.உ.சி.யின் அழைப்பை ஏற்று, சுதேசிக் கப்பல் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். சுப்பிரமணிய சிவா, வ.உ.சி., மீதான வழக்குகளில், அவர்களுக்காக வாதாடினார். ஒத்துழையாமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பில், காந்தியின் வழியை பின்பற்றினார்.
‘என்னிடம் 2 சரக்கு கப்பலோடு 3வதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது’ என்று வ.உ.சி இவரை பெருமையாக கூறுவார்.
காந்தியடிகளை முதன் முதலில் தமிழகத்துக்கு வரவழைத்து உரையாற்ற செய்தவர். தன் குடும்பத்தினரையும் விடுதலை இயக்கத்தில் பங்குபெறச் செய்தது மட்டுமில்லாமல், சுதந்திர போராட்டத்துக்கு நன்கொடையாக குழந்தைகளின் நகைகளை கழற்றி காந்தியிடம் அளிக்க செய்தார்.
தமிழ் கழகம் என்ற அமைப்பை நிறுவினார். ‘தசரதன் குறையும், கைகேயி நிறையும்’, ‘அழகு’, ‘சேரர் தாயமுறை’, ‘தமிழும் தமிழரும்’, ‘திருவள்ளுவர்’ உட்பட பல நூல்களையும், 5 ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், 100க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியுள்ளார். மதுரை அடுத்த உசிலங்குளத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான தொடக்கப்பள்ளியை நிறுவினார்.
சமூக சீர்திருத்தங்களில் ஈடுபாடு கொண்ட இவர், சடங்குகள் இல்லாத திருமண விழாக்களை முன்னின்று நடத்தினார். தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் மதுரை மாவட்டத் தலைவராக செயல்பட்டார்.
ஈழ நாட்டுத் தமிழ்ப் புலவர் மன்றம் 1944 ஆண்டில் ’நாவலர்’ என்ற பட்டத்தை இவருக்கு வழங்கியது. ஈழத்துப் புலவர் சங்கத்தாரால் பாராட்டப்பெற்ற தமிழ்நாட்டுப் புலவர் சோமசுந்தர பாரதி ஒருவரே. திருவள்ளுவர் தொடராண்டு தை முதல் நாள் என்றும், திருவள்ளுவர் பிறந்தநாள் எனத் தை இரண்டாம் தேதி என தமிழ்நாடு அரசாங்கம் 1971லிருந்து செயல்படுத்தக் காரணம் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தலைமையில் தனித்தமிழ் இயக்கத்தின் தமிழறிஞர்கள் முன்னெடுத்த முயற்சிகள் ஆகும்.
நாவலர் சோமசுந்தரபாரதி அவர்களின் மருமகன் விடுதலைப் போராட்ட வீரரரும், அரசியல் நிர்ணயசபை உறுப்பினருமான திரு. கிருஷ்ணசாமி பாரதி . இவரது மகனும் , நாவலர் சோமசுந்நதர பாரதியின் பெயரனுமானவர் தியாகி லெட்சுமிகாந்தன் பாரதி I.A.S. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவராகப் படிக்கும்போது மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது மதுரை ஆட்சியர் அலுவலகமாக உள்ளதும், ராணி மங்கம்மாளின் அரண்மனையாகவுமிருந்தததுமான அன்றைய நீதிமன்றத்திற்கு கை விலங்கு பூட்டியபடியே சிறையிலிருந்து நடந்தே ( தற்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகமான ) அன்றைய 1942 மதுரை நீதி மன்றத்திற்கு நடந்தே வீதி வழியாகக் கொண்டுவரப்பட்டார். விசாரணையில் தண்டிக்கப்பட்டார் . நடந்தே கூட்டிச் செல்லப்பட்டு மதுரைச் சிறையில் தண்டனைக் கைதியானார். தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. மூதறிஞர் இராஜாஜி தலையிட்டு இடைக்கால அரசில் நேருவுக்கு இராஜாஜி கடிதம் எழுதினார். நேருவின் தலையீடால் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார். பின்னர் கலைஞர் ஆட்சியில் இராமனாதபுரம் கலெக்ட்டரானார். வரலாறுகளை அறிந்த முதல்வர் கலைஞர் திரு.லெட்சுமிகாந்தன் பாரதி யைத் தண்டித்தவெள்ளையர் ஆட்சி நீதிமன்றமாக இருந்த அதே கட்டிடமான மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரைக் கலெக்டராக பதவியேற்று அமர வைத்தார். வரலாறுகளின் பெருமையாகும்.
தமிழுக்கு ஓயாமல் தொண்டு செய்த சோமசுந்தர பாரதியார் 1959 டிசம்பர், 14ஆம் தேதி, தன், 80வது வயதில் இயற்கை எய்தினார்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
14-12-2020.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...