———————————————————
இந்தக் கேள்விக்கு நாம் அளிக்கும் பதில், ‘இயல்’ ‘விஞ்ஞான ரீதியான’ ஆகிய சொற்களுக்கு நாம் கொடுக்கும் பொருளைப் பொறுத்திருக்கிறது. எல்லாவித கருத்தமைந்த படிப்பும், ‘விஞ்ஞான ரீதி’யில்தான் இருக்க முடியும். அதாவது, கண்டறியக் கூடிய உண்மைகளின் அடிப்படையில் எல்லா முடிவுகளும் செய்யப் பெற்றிருக்க வேண்டும். அதிகபட்சம் பகுத்தறிவு ஆராய்ச்சியோடும், உய்த்துணர்வோடும், குறைந்தபட்ச ஒருதலையான தன்மையோடும், மனவெழுச்சியோடும் ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். ஆனால், பின்னர் நிகழப்போகும் நிகழ்ச்சிகளைக் கணக்கிட்டு அறிந்து கொள்வதை விஞ்ஞானம் என்று நாம் குறிப்பிட்டால், அரசியல் ஒரு விஞ்ஞானம் ஆகாது.
ஏனெனில், இதன் முடிவுகள் பரிசோதனைச் சாலையில் பொருள்களின் மீது பெறும் முடிவுபோன்று இல்லாமல் மனிதர்களைப் பற்றி அறியப்பெறும் முடிவுகள் ஆகும். மனிதர்களை ஒன்றுசேர்த்து வாழச் செய்வனவும், பொது நலங்களுக்குரிய காரியங்களில் ஒத்துழைக்கச் செய்வனவுமாகிய ஒரு கலைதான் அரசியல் ஆகும். மனிதர்கள் ஒன்றாக வாழ வேண்டும் என்ற நிச்சயத்தையும், என்ன நிபந்தனைகளின்பேரில் அவர்கள் ஒன்றாக வாழக் கூடும் என்ற முடிவில்லா, நிச்சயமற்ற தன்மைகளையும், ஒருங்கே வேண்டுமென்றே வலிந்து ஏற்றுக் கொள்கின்ற மனிதன்தான் அரசியல்வாதி (பெருமளவிற்கு அரசியல் விஞ்ஞானியுங்கூட). இந்த நிபந்தனைகளை முன் மொழியும் பணிகளையும் தானே மேற்கொள்வதோடு, மனிதக் கூட்டத்தை வெற்றியுள்ளதாக மாற்றும் பணியையும் அவன் மேற்கொள்ளுகின்றான்.’ என்று ஹாக்கிங்( Hocking) கூறுகிறார்.
ஹாக்கிங் சொன்னது நேர்மையான அரசியல் தளத்தில் செயல்படும் மனிதனுக்குதான் இது பொருந்தும். ஆனால், இன்றைக்கோ அரசியல் ஒரு தொழில் வியாபாரமாகிவிட்டது. தன்நலம், தனக்கு ஊடக வெளிச்சம், என்ற நிலையில், இன்றைக்கு அரசியல் களத்தில் பல போலி பாசாங்கு செய்து கொண்டு நடமாடுகிறார்கள். இந்த வியாபார அரசியலும், சுயநல அரசியல் வியாபாரிகளும், அரசியல் என்ற இயலுக்குள் வரமாட்டார்கள். பிறகு எப்படி அவர்களிடம் அரசியல் விஞ்ஞானத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்.
No comments:
Post a Comment