#அலையன்ஸ்_வெளியிடும்_ரசிகமணி_டிகேசியின்_கம்பர்_தரும்_ராமாயணம்- #என்னுரை!
பொதிகைமலைப் பதிப்பு, திருக்குற்றாலம் சார்பில் ரசிகமணி டி.கே.சி அவர்கள் பதிப்பித்த ‘கம்பர் தரும் ராமாயணம்’ என்ற மூன்று தொகுதிகளை 1953ல், அக்டோபர் 31ஆம் தேதி அன்றைய தமிழக முதல்வர் மூதறிஞர் ராஜாஜி குற்றாலத்தில் (சீசன் காலத்தில்)வெளியிட்டார். பின்பு, ராஜாஜி கல்கி இதழில் ராமாயணத்தை ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்ற தலைப்பில் தொடராக எழுதினார். கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வேண்டுகோளின்படி ராஜாஜியின் இந்த தொடர் கல்கியில் வெளிவந்து மக்களின் வரவேற்பை பெற்றது.
ரசிகமணி டி.கே.சி வெளியிட்ட ‘கம்பர் தரும் ராமாயணம்’ என்ற நூலே ராஜாஜி ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்ற தொடர் எழுதுவதற்கு அடிப்படை காரணமாக அன்று அமைந்தது. முதலில் ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்று வெளியிடப்பட்டு, பின்பு ‘ராமாயணம்’ என்ற தலைப்பில் இதுவரை ஏறத்தாழ பாரி நிலையம் மற்றும் வானதி பதிப்பகம் சார்பில் 50 பதிப்புகள் வரை வெளியிட்டிருக்கும் என்று கருதுகிறேன். இதைப்போல மகாபாரத்தை கல்கியில் ‘வியாசர் விருந்து’ என்ற தலைப்பில் ராஜாஜி எழுதினார்.
ரசிகமணி டி.கே.சி அவர்கள் தமிழ் இலக்கியத்தில் ஆற்றிய பணிகள் அனைத்தும்கொண்டாடப்படவேண்ட
யவை.அவருடையமுத்தொள்ளாயிரம்,
இதய ஓலி இன்றைக்கும் பேசப்படுகின்றது. திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டையில் ரசிகமணி அமைத்த நாடு அறிந்த வட்டத்தொட்டி என்ற அமைப்பில் தமிழ் இலக்கியம் குறித்த விவாதங்கள் நடந்தன.
டி.கே.சிதம்பரநாத முதலியார் பன்முக ஆற்றல் கொண்டவர். சட்ட மேலவை உறுப்பினர், வழக்கறிஞர், இசைமேதை ஆவார். இவருக்கு இசையில் பெரும் நாட்டமும் கவிதை ஈடுபாடும், ரசனை, அனுபவத்தை நேரில் பார்த்தவர்
களுக்குத்தான் தெரியும். நீதிக் கட்சியில் மேலவை உறுப்பினராகஇருந்தபொழுது, பாரதியாரின் கவிதை நூல்களுக்கு ஆங்கில அரசு தடை விதித்தபொழுது, அதைக் கடுமையாக எதிர்த்தார். இவர் சிறு சிறு நோட்டுகளில் கவிதைகள் எழுதி அதை எப்பொழுதும் கைவசம் வைத்திருப்பார். நடைப்பயிற்சியிலோ, இரயிலிலோ, காரிலோ அந்த நோட்டுப் புத்தகங்களைப் பிரித்துப் பாட்டைப் பாடிக்கொண்டிருப்பார். படுக்கைக்குப் பக்கத்திலும் ஒருசிறு அலமாரியில் இந்தப் பாடல் நோட்டுகள் இருக்கும். இரவு விழிப்பு ஏற்பட்டவுடன் படுக்கை விளக்கைப் போட்டு இந்தப் பாடல்களைப் பாடி மகிழ்வார். கம்பரை இதயத்தில் வைத்து பூஜித்தார். ராஜாஜி, கல்கி, வையாபுரிபிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த மகாராஜன், பேராசிரியர் அ.சீனிவாசராகவன், பெ.நா.அப்புசாமி, கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி, நாவலர் சோமசுந்தர பாரதி, புலவர் ல.சண்முகசுந்தரம், தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான், மீ.ப.சோமு, கே.பி.கணபதி, டி.டி.திருமலை, நீலாவதி சுப்பிரமணியம், மு.அருணாசலம், ஜி.சி.பட்டாபிராம் மற்றும் பல தமிழறிஞர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் போன்றவர்களுடன் அடிக்கடி தமிழைப் பற்றி விவாதிப்பது இவருக்குப் பிடித்தமான செயலாகும்.
குற்றால சீசன் நேரத்தில் இவர் இல்லத்தில் நடக்கும் தமிழ் இலக்கிய விவாதங்களும், விருந்து உபசாரமும் தமிழ் இலக்கிய உலகத்தில் பெயர் பெற்றதாகும். டி.கே.சி. பரதநாட்டியக் கலைக்கும், தமிழ் இசைக்கும் மட்டுமில்லாமல், திருவாசகம், முத்தொள்ளாயிரம், கலிங்கத்துப்பரணி, ஆண்டாள், பாரதி, நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவற்றின் ரசனைகளை அனுபவித்து வெளிக்கொண்டு வந்தார். “உண்மையான கவியின் தன்மையை டி.கே.சிதம்பரநாத முதலியாரிடம்தான் நான் அறிந்தேன். அதை எப்படி அனுபவிப்பது என்பதையும் டி.கே.சியிடம்தான் அறிந்தேன்” என்று கூறியுள்ளார் மூதறிஞர் ராஜாஜி.
இவரின் தமிழ்க் களஞ்சியம், கம்பர் தரும் காட்சி என்ற கம்பராமாயணத் தொடரைக் கல்கியில் எழுதியது தமிழ் மக்கள் அனைவரையும் ஈர்த்தது. இவரது படைப்பான இதய ஒலியும் தமிழ் மக்களிடம் பாராட்டைப் பெற்றது.
எய்தினன் அனுமனும்:
எய்தி, ஏந்தல்தன்
மொய்கழல் தொழுதிலன்;
முளரி நீங்கிய
தையலை நோக்கிய
தலையன், கைகொடு
வையகந் தழீஇநெடி
திறைஞ்சி வாழ்த்தினான்!
இலங்கையிலிருந்து வந்த அனுமன் தன்னை வணங்கவில்லை. சீதா பிராட்டி இருந்த திசையை நோக்கி அல்லவா சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறான். அதைப் பார்த்து, செய்தியை அறிந்துகொண்டுவிட்டான் ராமன் என்று டி.கே.சி. கம்பராமாயணத்தை ரசித்துக் கூறுகிறார். இவர் எழுதிய கடிதங்கள் யாவும் இலக்கியங்களாகத் திகழ்கின்றன.
டி.கே.சி. பேரன் தீப நடராஜன் 2005 ஆண்டிலிருந்து ரசிகமணிக்கு அஞ்சல்தலை கொண்டுவர வேண்டுமென்று விரும்பினார். அதற்கு நானும் முயற்சி எடுத்தேன். ஆனால், ஆட்சி கட்டிலில் இருப்பவர்களுக்கு டி.கே.சி. ஆளுமை பற்றிய அலட்சியம்தான் இருந்தது. தகுதியற்றவர்களுக்கு எல்லாம் அஞ்சல்தலை வெளியிட்ட அரசு டி.கே.சி.க்கு அஞ்சல்தலை வெளியிட மறுத்தது வேதனையான விடயம். 2008 ஆம் ஆண்டு வரை இதற்காக அவருடைய புகைப்படங்கள், கோப்புகள் என அனைத்தையும் தயாரித்து இரண்டு, மூன்று தடவை டெல்லி சென்றேன். பிறகு, நானே வெறுத்துவிட்டேன். பெயர் சொல்வது நாகரிகமில்லை. டிகேசி ஸ்டாம்ப் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறாய் என்று தமிழ்தமிழ் என்று பேசும் அந்த பெரிய மனிதர் அலட்சியமாக கூறியதுதான் கவலையான செய்தியும் கூட.
டி.கே.சி.யை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்றும் நேசிக்கின்றனர். ரசிகமணியின் படைப்புகளை புறந்தள்ளிவிட்டு தமிழ் இலக்கியத்தை முழுமையாக படிக்க முடியாது.
தீப நடராஜன் அவர்களின் முயற்சியால் இந்த மூன்று தொகுதிகள் வெளியிடப்படுகின்றது. இந்த ராமாயணத்தின் மூன்று தொகுதிகளையும் திரும்பவும், 125 வருடம் பழமையான தமிழ் முன்னோடி பதிப்பகமான அலையன்ஸ் பதிப்பகம் மறுபதிப்பாக கொண்டு வருகிறது. 1953ல் இந்த தொகுதி வந்தவுடன் கிராவுக்கு ரசிகமணி அவர்கள் தன் கைப்பட கிரா பெயரை எழுதி கையொப்பமிட்டு அளித்த இந்த நூல்தான் இன்றைக்கு ஆதாரமாக அப்படியே அன்றைக்கு உள்ளப்படி வெளிவருவது மிக்க மகிழ்ச்சி. ரசிகமணி பேரன் விருப்பதின்படி நான் ஓராண்டு முயற்சி எடுத்தது, இன்றைக்கு அலையன்ஸ் சீனிவாசன் மூலமாக இந்த கனவு மெய்படுகின்றது. அலையன்ஸ் பதிப்பகத்துக்கு மிக்க நன்றி.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,
வழக்கறிஞர்,
அரசியலாளர்,
இணை ஆசிரியர், கதைச்சொல்லி.,
பொதிகை-பொருநை-கரிசல்.
சென்னை - 600 041
01-12-2020.
No comments:
Post a Comment