Thursday, December 10, 2020

 #அனுத்தமா!


தமிழ் படைப்பாளி அனுத்தமா ஆந்திர மாநிலம் நெல்லூரில், 1922 ஏப்ரல் 16ஆம் தேதி பிறந்தார். இவரின் இயற்பெயர் ராஜேஸ்வரி பத்மநாபன்.
மெட்ரிகுலேசன் வரை படித்த அனுத்தமா தமிழில் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். சொந்த முயற்சியில் ஹிந்தி, பிரெஞ்சு, தெலுங்கு மொழிகளைக் கற்றார். தன் 25வது வயதில், எழுத்து துறைக்குள் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். இவரது எழுத்துப் பணிக்கு மாமனாரும், கணவரும் உறுதுணையாக இருந்தனர். 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 22 புதினங்கள், 15க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதியுள்ளார்.
இவரது முதல் படைப்பான ”அங்கயற்கண்ணி” (1947) கல்கி இதழ் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. அடுத்து கலைமகள் இதழ் நடத்திய போட்டியில் இவரது “மணல்வீடு” புதினம் முதல் பரிசு பெற்றது. இதற்குப்பின் பல்வேறு இதழ்களில் அனுத்தமா எழுதத் தொடங்கினார். இவருடைய ‘மணல்வீடு’,‘ஒரே வார்த்தை’,‘கேட்டவரம்’போன்ற புதினங்கள் குறிப்பிடத்தக்கது. இவரது நூல்கள் கன்னடம், ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் விருது உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.
இவர் 'தமிழகத்தின் ஜேன் ஆஸ்டென்' என புகழப்படுகிறார். இவருடைய ‘கேட்டவரம்’நாவல் வாசகர்களிடையே புகழ்பெற்று விளங்கியது. அதனால், இவர் 'கேட்டவரம் அனுத்தமா’என்று அழைக்கப்பட்டார். இவருடைய கதைகள் குடும்ப பாங்கானவை.
“எழுதுவதற்கென்று ஒரு நேரம் என்றெல்லாம் எனக்கு கிடையாது. காகிதத்தில் பேனாவை வைத்தால் கதை முற்றும்வரை எழுதிக்கொண்டே இருப்பேன். எழுதியதை முழுமையாக படித்துப் பார்த்து சரி செய்வேன். கதையின் கருவைப் பொறுத்தே தலைப்பு வைப்பது வழக்கம்”என்று அனுத்தமா ஒருமுறை கூறியுள்ளார்.
முற்றத்தை ஒட்டிய தாழ்வாரம் அவருக்குப் பிடித்த இடம். எந்தக் கோணத்தில் வேண்டுமானாலும் அமர்ந்து எழுதுவார். சிலசமயம் சுவரில் சாய்ந்து நின்றுகூட எழுதுவதாகச் சொல்வார். அவர் எழுதிக் கீழே போடும் ஒரு பக்கத் தாளை அவரது கணவர் அழகாக அடுக்கி பக்கம் மாறாமல் சேர்த்து வைப்பார். அவரது வேகம் பிரமிப்பை ஏற்படுத்துவதாகத் தோன்றும். ‘அவ எழுதல்லே.ஏதோ ஒரு சக்தி அவளுக்குள்ளே பூந்து எழுதறது’ என்று அவர் கணவர் சொல்வதுண்டு.
எழுதுவதில் தன்னை அர்ப்பணித்த அனுத்தமா தன் 87வது வயதில் 2010 டிசம்பர் 3 காலமானார்.

No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...