#மார்கழி_2
#திருப்பாவை
முன் பனி கால -குளிர் காலத்தின் துவக்கமாக மார்கழி மாதம் கருதப்படுகிறது. பூமியின் வடகோளப்பகுதியில் உள்ளோருக்கு டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் குளிர்காலங்களாகும். குளிர்காலத்தின் துவக்கம் டிசம்பர் 21 - 22 தேதிகளில் துவங்குகிறது.
குளிர்காலத்தின்போது துருவப்பகுதிகள் மிகக் குளிர்ந்து இருக்கும். அங்கு சில மாதங்கள் சூரியனைத் தொடர்ந்து காண முடியாது. அப்போது வறண்ட குளிர்காற்று அந்தப் பகுதியிலிருந்து தெற்குப்பகுதி நோக்கி வீசத்துவங்கும். ஆகையால் தென்பகுதிகளின் வானிலை வெப்பநிலை மற்றும் பகற்பொழுதின் அளவும் மாறுபடத் துவங்குகின்றன. பூமத்திய ரேகையை ஒட்டிய வெப்பமண்டல பிரதேசங்களில் நிலவும் வெப்பநிலையில் அதிக மாறுதல் ஏற்படுவதில்லை என்றாலும், மழை பொழிவின் காரணமாக சில பகுதிகளில் ஈரமிக்கதாகவும் மற்றபகுதிகளில் வறண்டும் காணப்படும்.
#திருப்பாவை_2
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
பொருள்: திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக்கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக்கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.
விளக்கம்: ஒரு செயலில் வெற்றி பெற கட்டுப்பாடு மிகவும் அவசியம். வாயைக் கட்டிப்போட்டால் மனம் கட்டுப்படும். மனம் கட்டுப்பட்டால் கடவுள் கண்ணுக்குத் தெரிவான். அதனால் தான் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை தவிர்த்து உடலைக் காப்பதுடன், தீயசொற்கள், தீயசெயல்களைத் தவிர்த்து மனதை சுத்தமாக்குவதையும் கடமையாக்குகிறாள் ஆண்டாள். இந்தப் பாடல் 107 வது திருப்பதியான திருப்பாற்கடல் குறித்து பாடப்படுகிறது.
No comments:
Post a Comment