Saturday, December 24, 2022

கோதை ஆண்டாள்

கோலங்கொண்ட மலரவன்

பனிபொழியும் வைகறையில்
பாமாலை வாய்மலர
பாத்திபனின் புகழ்பாடி
பார்த்திருப்பேன் கண்மலர

கோவர்தனைக் கொண்டாடி
கோதை நானும் மகிழ்ந்திருக்க
கதிரவனும் வந்திடுவான்
கண்மலரக் கண்டிடுவான்

பனிநனைந்த நனிமலர்கள்பாதத்தில் பொதிந்திருக்க



பனியெனவே படர்ந்திருக்கும்
பரவசமும் அவ்வேளையிலே

தேன்சொட்டும் மலரிதழ்கள்
தேகத்தை அலங்கரிக்க
திரிநுனியாய் ஒளிர்ந்திருக்கும்
திவ்யனவன் ஒளிர்முகமே

துபங்காட்டி வழிபட்டு
தலைகிரீட ஆசியோடு
துளசியிலை நீர்துய்க்க
துலக்கத்தால் பொலியுமுள்ளம்

கோதையென் கோலத்துள்ளே
கோலங்கொண்ட மலராக
கோகுலத்துக் கண்ணனவன்
கோலோச்சி மகிழ்ந்திருப்பான்

Vanathi Chandharasekaran
****
ஆண்டாளுக்கு ஏன் 'கோதை'என்ற பெயர் உண்டானது?

கோதை என்றால் தமிழில் பூ மாலை என்று பொருள். இறைவனுக்குப் பூமாலைகளைச் சுமந்து சுமந்து பழகிய பெரியாழ்வாரின் திருக்கரங்களிலே, அவர் கண்டெடுத்த பெண் குழந்தையும் ஒரு பூமாலை போலவே தோன்றினாளாம். அதனால் கோதை என்று பெயர் சூட்டியதாகச் சொல்வார்கள். கோதா என்ற வடமொழிப் பெயருக்குப் பலவிதமான விளக்கங்கள் உள்ளன. தா என்றால் தருபவள். கோ என்றால்நல்வார்த்தை என்று பொருள். நல்வார்த்தைகளை உடைய பாசுரங்களை வழங்கியபடியால் கோதா. கோ என்ற சொல்லுக்கு ஞானம் என்ற பொருளும் இருப்பதால், தனது பாசுரங்களாலே உயர்ந்த ஞானத்தை நமக்கு அருள்வதால் கோதா என்றும் சொல்லலாம்.
கோ என்றால் மங்களம் என்றும் பொருளுண்டு. எனவே மங்களங்களை அருள்பவள் கோதா. அவள் யார் யாருக்கெல்லாம் மங்களங்களை அருளினாள் என்று பார்ப்போம். அமங்களமாய்க் கருதப்பட்ட ஆடி மாதத்தில் அவதரித்து, திருவாடி என்று அதற்குப் பெயருமளித்து, ஆடி மாதத்துக்கு மங்களத்தைத் தந்தாள்.
முப்பூரம் எனப்படும் பூரம், பூராடம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்கள் அமங்களமாகக் கருதப்பட்டு வந்த நிலையில், அவற்றுள் முதன்மையானதான பூர நட்சத்திரத்தில் அவதரித்து பூரம், பூராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு மங்களத்தைத் தந்தாள். மங்களவாரம் என்று பெயர் பெற்றிருந்தாலும் செவ்வாய்க் கிழமை அமங்களமாகவே கருதப்பட்டது. அந்தச் செவ்வாய்க் கிழமையில் அவதரித்து அதற்கும் மங்களம் தந்தாள்.தென்திசை என்பது அமங்களமாகக் கருதப்படும் நிலையில், தென்திசையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்து அதற்கும் மங்களம் தந்தாள். 
அரங்கன் தென்திசை நோக்கிப் பள்ளி கொள்வது இலங்கையிலுள்ள விபீஷணனுக்கு அருள்புரிவதற்காக மட்டுமில்லை, ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரும் அதே தென்திசையில் இருப்பதால், அந்தத் தென்திசைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஸ்ரீவில்லிபுத்தூரை நோக்கி அரங்கன் சயனித்திருப்பார்.இவ்வாறு தென்திசை, செவ்வாய்க்கிழமை, பூர நட்சத்திரம், ஆடி மாதம் என அனைத்துக்கும் மங்களத்தை அருளியபடியால் அவள் கோதா. கோ என்றால் பூமி. தா என்று பிளந்தவள். பூமியைப் பிளந்து கொண்டு தோன்றியபடியால் கோதா என்றும் சொல்வதுண்டு.
பெரியாழ்வாரின் பெருமையை
உலகுக்கு உணர்த்துதல் ஆண்டாளின் அவதார நோக்கமாகும். வராஹப் பெருமாள் கூறிய ரகசியத்தை உலகுக்கு உரைத்தல் பிரளயக் காலம் முடிந்து மீண்டும் உலகைப்படைப்பதற்குரிய சிருஷ்டி காலம் வந்தது. அப்போது பிரம்மா உலகைப் படைக்க முற்பட்ட போது, எங்கும் கடல் மட்டுமே இருந்தது, நிலப்பரப்பைக் காணவில்லை. ஹிரண்யாக்ஷன் என்னும் அசுரன் பூமியைக் கடலுக்கு அடியில் ஒளித்து வைத்திருப்பதை உணர்ந்தார் பிரம்மா. பூமியை மீட்டுத் தரும்படித் திருமாலிடம் வேண்டினார்.
அப்போது பன்றி வடிவமேந்தி வராஹனாக அவதரித்து வந்த திருமால், ஹிரண்யாக்ஷனை வதம் செய்து, பூமிதேவியை மீட்டெடுத்தார். அப்போது வராஹனிடம் பூமிதேவி, “சுவாமி! இந்தப் பிரளயக் கடலிலிருந்து என்னை மீட்டெடுத்து விட்டீர்கள். ஆனால் நம் குழந்தைகளான ஜீவாத்மாக்கள் பிறவிப் பெருங்கடலில் தத்தளிக்கிறார்களே! அவர்களை மீட்க வழி சொல்லுங்கள்!” என்று பிரார்த்தித்தாள். அதற்குவராஹப் பெருமாள், “யார் ஒருவன் தன் இளமைக் காலத்தில், மனம் மொழி மெய் ஆகிய முக்கரணங்களும் நல்ல நிலையில் ஆரோக்கியத்துடன் இருக்கும் வேளையில், எனக்குப் பூமாலையும் பாமாலையும் சமர்ப்பித்து என்னைத் தொழுது என்னைச் சரணடைகிறானோ, அவன் முதுமைக்காலத்தில் என்னை மறந்து விட்டாலும், நான் அவனை நினைவில் கொண்டு அவனைப் பிறவிப்பெருங்கடலிலிருந்து காத்து முக்தியளிப்பேன்!” என்று கூறினார்.
இந்த ரகசியத்தை நமக்கு உரைக்கவே, ஆண்டாளாக அவதரித்தாள் பூமிதேவி. பூமாலையும் பாமாலையும் இறைவனை மகிழ்விக்கும் என்பதைத் தானே தன் செய்கையால் நிரூபித்துக் காட்டினாள். பூமாலை இறைவனை மகிழ்விப்பதை உணர்த்தவே, தன் கூந்தலில் சூடிக் களைந்த மாலையை அவனுக்கு அர்ப்பணித்து, அவனை மகிழ்வித்துச் சூடிக்கொடுத்த சுடர்கொடி என்று பெயர் பெற்றாள். அவ்வாறே பாமாலையும் இறைவனை மகிழ்விக்கும் என்பதை உணர்த்தவே, திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களைப் பாமாலையாகப் பாடி இறைவனுக்குச் சமர்ப்பித்துப் பாடவல்ல நாச்சியார் என்று பெயர்பெற்றாள்.
முப்பது பாசுரங்கள் கொண்ட திருப்பாவையில், கண்ணனை மணக்க விரும்பி மார்கழி நோன்பு நோற்றாள் ஆண்டாள்.கண்ணனிடத்தில் தான் கொண்ட காதலை அவனிடம் தெரிவிக்கும் பொருட்டு 143 பாசுரங்கள் அடங்கிய நாச்சியார் திருமொழியைப் பாடினாள்.
வராஹப் பெருமாள் கூறிய ரகசியத்தைத் தெள்ளத் தெளிவாக, எளிய இனிய தமிழில் நமக்குத் தெரிவித்தருளினாள். இதுவே ஆண்டாளின் அவதாரத்துக்கு நான்காவது நோக்கமாகும். 
ஆண்டாளையும் அவளது கேள்வனான ரங்கமன்னாரையும் வணங்கி, எங்கும் திருவருள் பெற்று இன்புறுவோமாக!

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...