கவிஞர் சிற்பி தலைமையில் சென்னை இலயோலா கல்லூரியில் சாகித்ய அகாதெமி சார்பில் நடைபெற்ற அகிலன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தமைக்கு பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். தமிழில் முதல் ஞானபீடம் பெற்ற இரு படைப்பாளி அகிலன். இன்னொருவர் ஜெயகாந்தன். சாகித்ய அகாதெமி விருதும் பெற்றவர். அப்படிப்பட்ட மாமனிதரின் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் கொண்டாடத் தவறிவிட்டோமோ என்ற கவலையும் ஏற்படுகிறது.
அகிலன் பிறந்த, அவருடைய சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருங்காளூரில் உள்ள ஆரம்பப் பள்ளியில் அவருடைய நூற்றாண்டு விழாவை நடத்தியதாக அகிலனின் நண்பரும், காமராஜருடன் நெருங்கிப் பழகியவருமான அண்ணன் புலவர் மதிவாணன் கூறினார்.
அகிலன் அவர்களுடன் தொடர்பு 1970 - களில் எனக்கு ஏற்பட்டது.
பெருந்தலைவர் காமராஜரின் காங்கிரஸ் இயக்கத்தில் அகிலன், கவிஞர் கண்ணதாசன், நா.பார்த்தசாரதி, சின்ன அண்ணாமலை, கு.ராஜவேலு ஆகிய படைப்பாளிகளின் உலகம் அன்றைக்கு இருந்தது. அதேபோன்று திராவிட இயக்கத்தில் அண்ணா, பாரதிதாசன், நாவலர், கலைஞர், சி.பி.சிற்றரசு, இராதாமணாளன் என்ற ஒரு நீண்ட பட்டியல் உண்டு. பொதுவுடைமை இயக்கத்திலும் ஜீவா, தொ.மு.சி.ரகுநாதன், நா.வானமாமலை, தி.க.சி என்ற பட்டியலும் உண்டு. இப்படியான எழுத்தாளர்கள், கட்சி சார்பு இலக்கிய மன்னர்கள் இருப்பது இன்றைய அரசியலில் இல்லாமலேயே போய்விட்டது.
அகிலன் இன்றைய ஜனநாயகத்தில் காணப்படுகிற சந்தர்ப்பவாதம், பணநாயகம், அரசியலில் நான் தொடர்ந்து சொல்லி வரும் ‘தகுதியே தடை’ என்பதையும் தனது எழுத்தில் கூறுகிறார். அரசியல் கயவர்களின் கூட்டமாகி விடக் கூடாது; பத்திரிகைகள், சினிமா போன்றவை மக்களை ஏமாற்றி அரசியல் போலிகளை அடையாளம் காட்டிவிடக் கூடாது என அகிலன் கூறுகிறார். பதுக்கல் வியாபாரம், கறுப்புப் பணம் என்பது லட்சிய அரசியலில் வால் பிடித்துவிடும் என்று 1960 -70 களிலேயே தனது படைப்புகளின் மூலம் கோடிட்டுக் காட்டியவர் அகிலன். சமூகம் என்றால் என்ன? தனிமனிதனின் உரிமைகள் என்றால் என்ன? என்பதையெல்லாம் தன்னுடைய எழுத்துகளின் மூலம் அன்றே அகிலன் சொல்லிவிட்டார். மொழியும் சமயமும் நெறி சார்ந்தவை; அதில் வெறிகள் கூடாது என்பதைத்தான் தன் ‘வெற்றித் திருநகரில்’ தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
மலேசியாவுக்குச் சென்று மலேசிய தோட்டங்களில் தமிழ் தொழிலாளர்கள் படும்பாடுகளை, துயரங்களை ‘பால்மரக் காட்டினிலே’ என்ற படைப்பின் மூலம் சொன்னது மட்டுமல்லாமல், இலங்கை வடக்கு - கிழக்கு மாநிலங்களுக்குச் சென்று அங்குள்ள ஈழத் தமிழர்களின் பாடுகளையும் 45 -50 ஆண்டுகளுக்கு முன்பே அகிலன் எழுதியிருந்தார். அதேபோன்று ஈழத்தில் நடந்த தமிழர் படுகொலைகளை எல்லாம் கவனித்தார். காந்தியத்தை தன் நெஞ்சில் வைத்து அனைத்து எழுத்துகளிலும் சீராக மக்கள் பார்வைக்கு காந்தியம் வருமாறு வடித்துத் தந்தார். நேதாஜியைப் பற்றியும் அரவிந்தரைப் பற்றியும் பல படைப்புகளில் தன்னுடைய பாணியில் குறிப்பிடுகிறார். ‘நெஞ்சின் அலைகள்’ 1952 - இல் வெளிவந்த கவனிக்கப்பட அகிலனுடைய படைப்பு ஆகும். 1942 - இல் நடந்த விடுதலைப் போராட்டத்தில் நடந்த அடக்குமுறைகளைப் பற்றியும் அகிலன் தனது படைப்புகளில் படம் பிடித்துக் காட்டுகிறார்.
‘பொன்மலர்’ புதினத்தில் பெண்ணியம் குறித்து பேசுகின்றார். ‘வெற்றித் திருநகர்’ வரலாற்று நாவல். மதுரை விசுவநாத நாயக்கர் காலத்தில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களைக் கண்முன் கொண்டு வருகிறார். ‘வேங்கையின் மைந்தன்’, ‘பாவை விளக்கு’, ‘வாழ்வு எங்கே’, ஈழகேசரியில் தமிழ் சிறுகதைகள், நவஇந்தியாவில் எழுதிய எழுத்துகள் என்பவையெல்லாம் கருத்தாழமிக்க உயிரோட்டமான சமுதாய வாழ்வியல் முறைகளை அதன் கூறுகளை, அசைவுகளை வெளிப்படுத்துபவை. ‘எங்கே போகிறோம்’ என்பதும் ஆழ்ந்து வாசித்துக் கவனிக்கப்பட வேண்டிய படைப்பாகும். அவருடைய இறுதி நாவல் ‘வானமா பூமியா’ இறுதி பெறாமல் இருக்கும்போதே அகிலன் மறைந்துவிட்டார்.
நான் எழுதிய ‘நிமிர வைக்கும் நெல்லை’ நூலில் குறிப்பிட்ட நெல்லை மாநகரைப் பற்றியும் அகிலன் சிலாகிக்கிறார்.
திருநெல்வேலியில் ரயில்வே மெயில் சர்வீஸ் அலுவலகத்தில் ரெயில்வே சார்ட்டர் வேலைக்கு பயிற்சி பெற்ற அகிலன், பிறகு தென்காசியில் வேலை செய்திருக்கிறார். அந்த காலத்தில் திருநெல்வேலி, குற்றாலம், தென்காசி, புனலூர் – செங்கோட்டை என அவர் கண்டு ரசித்த இயற்கைக் காட்சிகளைப் பற்றிய பதிவுகளையும் அவர் செய்திருக்கிறார்.
‘நிமிர வைக்கும் நெல்லை’ நூலில் நான் குறிப்பிட்டிருந்த சந்திரவிலாஸ் ஓட்டலில் அகிலன் தங்கியிருக்கிறார். மறுநாள் காலை ரெயில் மெயில் சர்வீஸ் பயிற்சிக்குச் செல்ல வேண்டியநிலையில் அகிலனுக்கு உடல் நலம் இல்லாமற் போகிறது. அவரைப் போல பயிற்சிக்கு வந்த இன்னொரு நபரின் உதவியுடன், மாட்டுவண்டியில் பயணம் செய்து, ஒரு ஹோமியோபதி மருத்துவரிடம் சிகிச்சை பெற்று, பயிற்சியில் சேர்கிறார். பயிற்சி முடியும் வரை திருநெல்வேலி சிந்து பூந்துறைப் பகுதியில் தங்குகிறார்.
திருநெல்வேலியின் இயற்கை அழகும், மக்களின் வாழ்க்கையும் தாமிர வருணித் தண்ணீரும் அகிலனுக்கு மிகவும் பிடித்தவையாகிவிட்டன. இருபுறமும் மருதமரங்கள் வளர்ந்திருந்த சாலைகள், தாமிரவருணி ஆறு, ஆற்றங்கரை மணல் அகிலனின் மனதை மகிழ்வித்திருக்கின்றன. திருநெல்வேலி தமிழைப் புரிந்து கொள்ளவும் அவர் முயற்சி செய்திருக்கிறார்.
தென்காசியில் வேலைக்குப் போனதும், அங்கேயிருந்து மூன்று மைல் தொலைவில் இருந்த குற்றாலம் அகிலனின் மனதைக் கவர்ந்திருக்கிறது. குற்றாலத்தின் சாரலையும் குளுமையையும் தென்காசியிலேயே அவரால் நன்றாக உணர முடிந்திருக்கிறது. அதிகாலையிலேயே எழுந்து தென்காசி சாலையில் உலாவத் தொடங்கிவிடும் அகிலனுக்கு, சுற்றிலும் சூழ்ந்திருக்கும் குன்றுகளில் மேகக் கூட்டம் தவழ்ந்து செல்லும் காட்சியைப் பார்க்கும்போதெல்லாம் மெய்சிலிர்த்திருக்கிறது.
காற்றின் குளுமையும், மரம் செடி கொடிகளின் பசுமையும் அவருடைய கற்பனைகளைத் தூண்டிவிட்டிருக்கின்றன. அந்தக் காலத்துக் குற்றாலம் இன்று உள்ளது போல ஒரு குட்டி நகரமாக மாறவில்லை என்பதையும் அகிலன் குறிப்பிட்டிருக்கிறார்.
ஐந்தருவிக்குச் செல்லும் பாதையில் சிற்றருவிக்கு எதிரில் டி.கே.சிதம்பரநாத முதலியார் குடியிருந்திருக்கிறார். அவரைச் சந்தித்து பழகும் வாய்ப்பு அகிலனுக்குக் கிட்டியிருக்கிறது.
குற்றாலத்தில் அவர் கண்ட குதூகலக்காட்சிகள் அவர் உள்ளத்தை ஆனந்தப் பரவசத்தால் கூத்தாட வைத்திருக்கின்றன. மருதமரக் கூட்டம், செண்பக மரங்கள், தேக்கு மரங்கள், பாறைகள், குன்றுகள், அருவிகள், சாரல் என அடிக்கடி அவரை மெய்மறந்து நிற்கச் செய்பவை குற்றாலத்தில் நிறைந்திருந்ததை அகிலன் குறிப்பிட்டு இருக்கிறார்.
“ ஐந்தருவிக்குச் செல்ல அப்போது சாலை கிடையாது. ஒற்றையடிப் பாதை வழியாக, அடர்ந்த மரக்கூட்டத்துக்கிடையே, நடந்துதான் செல்ல வேண்டும். வழிகாட்டி ஒருவரை அழைத்துக் கொண்டு நாங்கள் நடந்து சென்று குளித்துத் திரும்புவோம். சமயங்களில் அங்கெல்லாம் புலி, சிறுத்தை, யானைக் கூட்டம் வருவதுண்டு என்று வழிகாட்டி கதைகள் சொல்வார். செல்வச் சீமான்களின் செயற்கைக் களியாட்ட வேட்டைக்காகக் கற்பழிக்கப்படாத கன்னியாக அங்கு இயற்கை தேவி அப்போது உலாவினாள் என்பது மட்டும் உண்மை” என்று குறிப்பிட்டிருக்கிற அகிலன், குற்றாலம் அவர் குருதியில் தன் சாரலைப் பாய்ச்சி, அவருக்குக் குளுமை தந்த ஓர் அற்புதமான இடம் என்கிறார். அவருடைய உள்ளத்தில் கற்பனை வித்துகளை ஊன்றிய புனிதமான இடம் குற்றாலம். அதனால்தான் அவருடைய ‘பாவை விளக்கு’ புதினத்தில் குற்றாலம் வருகிறது.
அப்படிப்பட்ட குற்றாலம் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு மாறிவிட்டதையும், குறுக்கு வழியில் காசு சேர்க்கும் கயவர்கள் லஞ்ச லாவண்யத்தின் பாதுகாப்போடு மரங்களை வெட்டிக் காடுகளைச் சீரழிப்பதையும் மிகவும் கோபத்துடன் சாடுகிறார் அகிலன்.
தென்காசியில் அகிலன் வேலை செய்யும்போது, திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் வரையில் சென்று திரும்பிய மெயில் வண்டியில் முதன்முதலாக அகிலன் வேலைக்கு அனுப்பப்படுகிறார். மெயில் வண்டியின் ஒரு பெட்டியில் கடிதக் கட்டுகள் குவிக்கப்பட்டிருக்கும். அவற்றைப் பிரித்து வைப்பதே அகிலனுடைய வேலை. ஆனால் இயற்கையின் ரசிகரான அகிலனை ரயில் பாதையின் ஒரு பக்கம் உள்ள அடர்ந்த மலைக்காடுகள், காட்டுக்குள்ளிருந்து அருவி ஒன்று தாவிக் குதித்தோடி சலசலத்து வருவது, ரயில்பாதையின் மறுபக்கம் அதல பாதாளம், அங்கே சின்னஞ்சிறிய குத்துச் செடிகள் போல காட்சியளிக்கும் தென்னை மரங்கள், புனலூருக்கும் செங்கோட்டைக்கும் இடையில் ரயில்பாதையில் காணப்பட்ட அற்புதமான காட்சிகள், காட்டு மலர்களின் மணத்தைச் சுமந்தபடி சில்லென்று வீசும் குளிர்காற்று இவையெல்லாம் மெய்மறக்கச் செய்திருக்கின்றன. அவரைச் சிறுகதைகள் எழுதத் தூண்டியிருக்கின்றன. ‘நிலவினிலே’, ‘ஏன்?’, ‘தணியுமா?’ ஆகிய சிறுகதைகளை எழுதியிருக்கிறார். தென்காசியில் இருந்தபோது அகிலன் ‘பெண்’ என்ற சிறுநாவலையும் எழுதியிருக்கிறார்.
ஒரு படைப்பாளியின் படைப்பில் அவர் வாழும் சுற்றுச்சூழலும் பதிவாகும் என்பதற்கு அகிலனின் படைப்புகள் சிறந்த உதாரணங்களாகும். அகிலன் குறிப்பிட்டிருக்கிற ஊர்கள், இடங்கள், சுற்றுச்சூழல்கள் எல்லாம் என்னுடைய ‘நிமிர வைக்கும் நெல்லை’ நூலில் இருப்பது என் நெஞ்சை நெகிழ்விக்கிறது என்பதைச் சொல்லியாக வேண்டும்.
அகிலனின் டில்லி பயணம் குறித்த அவருடைய பகிர்வும் குறிப்பிடத்தக்க ஒன்று.
‘அடைந்தால் திராவிட நாடு... இல்லையேல் சுடுகாடு’ என்று தமிழக அரசியலில் பிரிவினைவாதம் தலைதூக்கி இருந்தபோது, அதற்கு நேர்மாறான கருத்துக் கொண்டவராக அகிலன் இருந்திருக்கிறார். அப்போது திராவிட நாடு பிரிவினைக்கு திராவிட இயக்கத்தினர் கூறிய காரணங்களில், ‘வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது’ என்பதுவும் ஒன்று.
இந்தக் கருத்து எவ்வளவு தவறானது என்பதை 1957- ஆம் ஆண்டு டில்லியில் நடந்த அனைத்திந்திய மொழிகளின் சிறுகதை விழாவில் அகிலன் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது டில்லியில் நேரில் பார்த்த காட்சிகளின் அடிப்படையில் தெரிந்து கொண்டு இருக்கிறார்.
வடக்கே செல்லச் செல்ல கிராமப் பகுதிகள் மிகவும் ஏழ்மையில் வாடியிருந்த நிலையை அவர் கண்ணாரக் கண்டிருக்கிறார். வடக்கத்தியக் கிராமங்கள் வறுமைத் துயிலில் இருந்து விடுபடவே இல்லை என்பது அவருடைய பார்வையில் பட்டிருக்கிறது.
பழைய டில்லியின் 'சாந்தினிசௌக்' பகுதியின் தெருவில் கண்ட காட்சிகள் அவரைத் திடுக்கிட வைத்திருக்கின்றன. வரிசை வரிசையாகப் பெட்டிக் கடைகளைப் போன்ற சில வீடுகள் இருந்திருக்கின்றன. தரையிலிருந்த மரப்படிகளில் ஏறி அவற்றுக்குள் நுழைய வேண்டும். ஒவ்வொரு பெட்டிக் கடை போன்ற வீடுகளின் முகப்பிலும் பெண்கள் நின்று கொண்டு, ஆண்களோடு பேரம் பேசிக் கொண்டிருந்ததையும் அகிலன் பார்த்திருக்கிறார். பகல் நேரத்திலேயே விபசாரத் தொழில் அங்கே நடந்து கொண்டிருந்தது, அகிலனை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. டில்லியில் குடிசைகள், விபசாரத் தொழில் நடக்கும் தெருக்கள் முதல் குடியரசுத்தலைவர் மாளிகை வரையில் அகிலன் அப்போது பார்த்து, வடக்குதான் தெற்கை விட வாட்டம் கண்டிருந்தது என்ற முடிவுக்கு வருகிறார். .
வடக்கு வாழவில்லை என்பதை நேரடியாகத் தெரிந்து கொண்ட அகிலன், சென்னை மாநிலக் கல்லூரியில் நடந்த மாணவர்கள் நடத்திய ஒரு கூட்டத்தில் தான் கண்ட வடக்கத்திய கிராமங்களின் வறுமை நிலையை விளக்கிப் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் வடக்கு வாழ்கிறது என்று அரசியல் கட்சி ஒன்று பிரசாரம் செய்வது எல்லாம் உண்மையில்லை என்று தைரியமாகக் கூறியிருக்கிறார். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த மேடையில் அகிலனுடன் ஒன்றாக அமர்ந்திருந்தவர் அறிஞர் அண்ணா. அப்போது ‘வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது’ என்று பிரசாரம் செய்து கொண்டிருந்தவரே அண்ணாதான். அவர் முன்னிலையிலேயே அவர் பிரசாரம் செய்வது தவறு என்று சுட்டிக்காட்டும் தைரியம் அகிலனுக்கு இருந்தது. தன்னுடைய கருத்து எதுவாகினும் அதை எந்தவித அச்சமுமின்றி வெளிப்படுத்தும் துணிச்சல் மிக்க பண்பு உள்ளவராகவே அகிலன் எப்போதும் இருந்திருக்கிறார்.
தற்போது தமிழகத்தில் உள்ள பல எழுத்தாளர்கள் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்களாக இருப்பதில்லை. அவர்களுடைய படைப்புகளும் பெரிய அளவுக்கு மக்களைச் சென்றடைவதில்லை. இதற்கு பல புறக்காரணங்கள் இருக்கலாம். ஆனால் தமிழகத்தில் எழுபதுகள் வரையும் கூட எழுத்தாளர்கள் நன்மதிப்பைப் பெற்றவர்களாகவே இருந்திருக்கிறார்கள். கல்கி, ஜெயகாந்தன், அகிலன், நா.பார்த்தசாரதி, சாண்டில்யன், தமிழ்வாணன், சுஜாதா என்று வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதி பிரபலமான எழுத்தாளர்கள் ஒருபுறம், தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிருதம், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், நீல.பத்மநாபன், சா.கந்தசாமி, பிரபஞ்சன், வண்ணநிலவன் என்று சிறு பத்திரிகைகளில் எழுதி மக்களின் மனதில் ஆழப் பதிந்த எழுத்தாளர்கள் இன்னொருபுறம் என எழுத்தாளர்கள் மக்களின் மனதில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.
அதிலும் அகிலன் சாதாரண வாசகர்களிடம் மட்டுமல்லாமல், பெரிய அரசியல் தலைவர்கள், அறிஞர்கள். பிறமொழி எழுத்தாளர்கள் என அனைவரிடமும் உயரிய மதிப்பைப் பெற்றவராகவே இருந்திருக்கிறார்.
எழுத்தாளர்களுக்கு ஞானபீடம் விருது வழங்கியது டெல்லியிலுள்ள டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் நடத்திய அறக்கட்டளை. ஜெயின் வம்சத்தினர் இந்த அறக்கட்டளையை நடத்தி வந்தார்கள். ஞானபீட விருது அகிலனின் ‘சித்திரப் பாவை ’ சித்திரப் பாவை நாவலுக்கு வழங்கப்பட்டது. ஜெயின் அகிலனின் வாசகர் என்பதால், ஞானபீட விருது பெற டில்லி சென்றபோது, அகிலனை அவர் வீட்டிலேயே தங்க வைத்து சிறப்பு செய்திருக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஓ.வி.அழகேசன் உள்பட நிறைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அகிலனை ஜெயின் வீட்டிற்கு வந்து பார்த்துப் போயிருக்கிறார்கள்.
அப்போதைய பீகார் மாநிலத்தின் முதல்வரான கர்ப்பூரி தாகூர் சின்ன வயதிலிருந்தே தான் அகிலன்பால் தான் ஈர்க்கப்பட்டதாக அந்த விழாவின்போது கூறியிருக்கிறார்.
மாபெரும் மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரபிள்ளை அகிலனுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார்.
அகிலன் நேருவைச் சந்திக்கிறார். படேலை புதுக்கோட்டை இரயிலடியில் சந்திக்கின்றார். இந்திராகாந்தியோடு தொடர்பும் அவருக்கு உண்டு. காமராஜர். சி.சுப்பிரமணியம். ஆர்.வெங்கட்ராமன் என அனைத்துக் காங்கிரஸ் தலைவர்களோடும் பழகுவார். அவர்கள் எல்லாரும் அகிலனை ‘நம்மவர்’ என்றே கருதினார்கள்.
நான் மாணவர் காங்கிரஸில் இருந்த காலத்தில் காமராஜர் இல்லத்தில் அகிலனைப் பார்த்ததுண்டு. காமராஜரின் உதவியாளர் வைரவனிடம் காமராஜருடைய உடல் நலத்தைப் பற்றி அக்கறையோடு அகிலன் கேட்டுத் தெரிந்து கொள்வதை நான் பார்த்திருக்கிறேன்.
அரசியல்ரீதியான கருத்துகளைக் கூறுவதில் அகிலன் மிகத் தெளிவாக இருந்தார். பொதுவுடமை இயக்கம் 1964 - இல் பிரிந்தபோது, இந்த இயக்கம் பிரிந்திருக்கக் கூடாது ஒன்றுபட்ட இயக்கமாக இருந்திருக்க வேண்டும் என்ற தன்னுடைய கவலையையும் வெளிப்படுத்தி இருக்கிறார். கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஜீவானந்தம், பாலதண்டாயுதம், எம்.கல்யாணசுந்தரம், வி.பி.சிந்தன், கே.முத்தையா என்ற பல முன்னணி பொதுவுடமைக் கட்சித் தலைவர்களுடன் இவருடைய நட்பு நீடித்தது. மூன்று முறை இஸ்கஸ் சார்பில் ரஷ்யாவுக்குச் சென்றார். மறைந்த வழக்கறிஞர் என்.டி.வானமாமலை இவருடன் தொடர்ந்து நட்புடன் இருந்ததையெல்லாம் நான் கண்முன் பார்த்திருக்கிறேன்.
தலைவர் கலைஞர் 2001- இல் நள்ளிரவில் கைது செய்யப்பட்டதும் அவரைச் சந்திக்க நான் தினமும் சிறைக்குச் செல்வதுண்டு. சிறையில் இருந்த தலைவர் கலைஞர், அகிலனின் ஞானபீட விருது பெற்ற சித்திரப்பாவை, சாகித்ய அகாடெமி விருது பெற்ற வேங்கையின் மைந்தன் மற்றும் பொன்மலர் ஆகிய அகிலனின் மூன்று புதினங்களை என்னைக் கொண்டு வரச் சொல்லி, அவற்றை விருப்பத்துடன் சிறையில் படித்ததெல்லாம் உண்டு.
அகிலனுடைய படைப்புகள் ஆங்கிலம், செக் மொழி, இந்தி, ஜெர்மனி, சீன, மலாய் மற்றும் இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
என் மீது தனிப்பட்ட முறையில் அகிலன் அன்பு பாராட்டுவார். நான் மாணவர் காங்கிரஸில் இருந்தபோதிலிருந்து அவருடைய மறைவு வரை அவருடனான எனது பழக்கம் தொடர்ந்தது.
பத்திரப் பதிவுத்துறையில் பணி, பின் ஆர்எம்எஸ் ரயில்வே தபால்துறையில் பணி, இறுதியாக அகில இந்திய சென்னை வானொலி நிலையத்தில் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்துப் பேட்டி எடுக்கும் ஒருங்கிணைப்பாளராகவும் அகிலன் இருந்தது உண்டு. அந்த காலகட்டத்தில் சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் ‘மாணவர் அரசியல் குறித்தான விவாதங்களும் சந்திப்புகளும்’ என்ற நேர்காணல் நிகழ்ச்சியின்போது, பல்வேறு கட்சி மாணவர்களைப் பேட்டி எடுத்தார். என்னையும் பேட்டி எடுத்துள்ளார்.
நெடுமாறன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.இஸ்மாயில். விவசாய சங்கத் தலைவர் சி.நாராயணசாமி நாயுடு, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பி.ஜி.கருத்திருமன், கி.ராஜநாராயணன் இவர்களை எல்லாம் அகிலன் பேட்டி எடுத்தபோது அவர்களுடன் எல்லாம் நானும் சென்றது உண்டு.
சிலகாலம் சாந்தோம் தேவாலயம் அருகில் குடியிருந்தார். அங்கே நான் சென்று அவரைப் பார்த்த நினைவும் உண்டு. வெள்ளை அரைக் கைச் சட்டை, வேஷ்டி என்பது அவருடைய உடையாகும். சிலநேரங்களில் பேண்ட், ஷர்ட்டும் அணிவார். டபிள் நிட்டெடு பெல்பாட்டம் பேண்ட்டை அணிந்து கொண்டு முழுக்கை சட்டையை இன் பண்ணிக் கொண்டு வித்தியாசமான ஆடை அலங்காரத்தோடு இருக்கும் அவரையும் நான் பார்த்ததுண்டு. எங்களைப் போன்ற மாணவர்கள் அரசியலில் முன்னுக்கு வர வேண்டும் என்று அக்கறையோடும் உரிமையோடும் ஆலோசனை கூறுவார்.
இந்த வருடம் அகிலன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், காருக்குறிச்சி அருணாசலம், அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம், பிரபல வழக்கறிஞர் என்டி வானமாமலை, நடிகமணி டி.வி.நாராயணசாமி, பாளை சண்முகம் போன்ற பல தமிழக ஆளுமைகளுக்கு இந்த ஆண்டு நூற்றாண்டு விழா. இந்த மாமனிதர்களைப் போற்றி தமிழக அரசு நூற்றாண்டு விழாக்களை நடத்த வேண்டும். மத்திய அரசும் இவர்களுடைய தபால் தலைகளை வெளியிட வேண்டும்.
இந்த நிலையில் அகிலனுக்குச் செய்ய வேண்டிய பெருமைகளை தமிழக அரசு சரியாகச் செய்யவில்லை என்பதுதான் என்னுடைய கணிப்பு. இப்போது சற்று ஒதுங்கியிருக்கிறேன். முதல் அமைச்சருடன் தொடர்பில் இருந்தால் வாதாடிப் பெறுவேன்.
அகிலன் எந்நாளும் ஓர் இலக்கியவாதியாக மட்டுமில்லாமல், தமிழர்களின் வாழ்வியலின் அடையாளப் புள்ளியாகவும் வாழ்கிறார். வாழ்வார். அகிலனின் புகழைப் போற்றுவோம்!
#ksrpost
9-12-2022.
No comments:
Post a Comment