Thursday, December 29, 2022

ராமாயணத்தில்* உண்மையில் மறைக்கப்பட்ட நபர் யார் என்றால் லட்சுமணன மனைவி ஊர்மிளாதான்.

*ராமாயணத்தில்* உண்மையில் மறைக்கப்பட்ட நபர்  யார் என்றால் லட்சுமணன மனைவி ஊர்மிளாதான். ஏனெனில் கணவன் லட்சுமணன், ராமனுடன் காட்டுக்குச் சென்றவுடன் 14 வருடங்கள்  தன் வாழ்க்கையைத் தியாகம் செய்தவள்.

   வால்மீகி, கம்பர் இருவரும் இந்தக் கதாபாத்திரத்தை இருட்டடிப்பு செய்து விட்டனர் என்றுதான் தோன்றுகிறது. ஜனகமகாராஜாவின் தத்து மகள் தான் சீதை. ஆனால் ஜனகரின் உண்மையான மகள் ஊர்மிளா! ஜனகரின் தம்பி குஜஸ்த்வஜாவின் மகள் மாண்டவி. இவள் பரதனை மணந்தவள். இன்னொரு மகள் ஸ்ருதகீர்த்தி.இவள் சத்ருக்கனை மணந்தவள்.

   இந்த நான்கு சகோதரிகளும் புகுந்த வீட்டில் மகிழ்ச்சியாக இல்லை! இதற்குத்தான் ஒரே வீட்டில் அக்கா, தங்கையைத் திருமணம் செய்து தருவதற்கு அந்தக் காலத்தில் மிகவும் தயங்குவார்கள். மேலும் லட்சுமணனின் மனைவி ஊர்மிளா உண்மையில் மறைக்கப்பட்ட கதாநாயகி மட்டுமல்லாது, கணவனின் 14 ஆண்டு காலத் தூக்கத்தையும், தானே வாங்கிக் கொண்டு கணவனுக்காக வாழ்ந்தவள்.

  காட்டில் ராமனும் சீதையும் குடிலில் உறங்கிக் கொண்டிருந்தபோது குடிலுக்கு வெளியே லட்சுமணன் உறங்காமல் காவல் காத்துக் கொண்டிருப்பான். அப்போது நித்திராதேவி, லட்சுமணனை உறங்க வைக்க முடியாமல் மிகவும் திணறுவாள். அவள் லட்சுமணனிடம் சொல்கிறாள், "இதோ பார், நீ இப்படி உறங்காமல் இருக்கவே முடியாது. நான் உன்னை விட்டு விலக வேண்டுமானால் நீ உன் தூக்கத்தை வேறு ஒரு நபரிடம் பகிர்ந்து கொள். உன்னை விட்டு விடுகிறேன்" என்கிறாள். உடனே லட்சுமணன், "நீ என் மனைவி ஊர்மிளாவிடம் சென்று நான் கூறியதாய் என் தூக்கத்தையும் அவளையே எடுத்துக் கொள்ளச் சொல். நிச்சயம் அவள் ஒப்புக் கொள்வாள்" என்கிறான். நித்திராதேவியும் அப்படியே ஊர்மிளாவிடம் சென்று விஷயத்தைக் கூற, அவளும் கணவனின் நிலைமையைப் புரிந்து கொண்டு, அவன் தூக்கத்தையும் தானே வாங்கிக் கொண்டு, அந்த 14 வருடங்களில் பெரும் பகுதியைத் தூங்கியே கழித்தாள்.

   அவள் அப்படிச் செய்ததன் காரணமாகத்தான் லட்சுமணனால் ராவணன் மகன் இந்திரஜித்தை, கண்ணுக்குப் புலப்படாமல் போர் புரிகின்ற அவனை, கொல்ல முடிந்தது! அது எப்படி என்றால் இந்திரஜித்தை கொல்ல வேண்டுமானால் ஒருவன் 14 ஆண்டுகள் தூங்காமல் கண் விழித்திருக்க வேண்டும் என்று ஒரு தெய்வ நிபந்தனை இருந்து வந்தது. ஊர்மிளா கணவனின் தூக்கத்தை வாங்கிக் கொண்டதால் தான் அது சாத்தியமாயிற்று. ஊர்மிளாவின் உதவி என்பது நம்முடைய மூதாதையர்களின் கண்ணுக்குத் தெரியாத உதவியைப் போன்றது. அது வெளி உலகிற்குத் தெரியாமலேயே போய்விடும் தன்மையைக் கொண்டது.

  அதுமட்டுமல்ல, ராமனுடன் காட்டுக்குப் போவதற்கு முன், ஊர்மிளாவைப் பார்க்க வருகிறான் லட்சுமணன். அந்த சமயத்தில், அதாவது அயோத்தி நகரமே சோகத்தில் மூழ்கி இருக்கும் போது, ஊர்மிளா தன்னை நன்கு சீவி முடித்து சிங்காரித்து, எல்லா அணிகலன்களையும் அணிந்து, பஞ்சணையில் ஒய்யாரமாக உட்காரந்திருப்பதைக் கண்டு கடும் கோபம் கொள்கிறான் லட்சுமணன். மேலும்,  அரச போகங்களை ஆண்டு அனுபவிக்கத்தான் லட்சுமணனை அவள் மணந்து கொண்டதாகவும், எனவே லட்சுமணன் ராமனுடன் காட்டுக்குப் போகக் கூடாது என்றும் பிடிவாதம் பிடிக்கிறாள்  ஊர்மிளா. 
வெறுப்பின் உச்சத்திற்கு சென்றுவிட்ட லட்சுமணன், அவளைக் கடுமையாக ஏசி விட்டு, அவ்விடத்தை விட்டு விலகுகிறான்.

  லட்சுமணன் சென்ற அடுத்த கணமே ஊர்மிளா கேவிக்கேவி  அழுகிறாள். அதாவது  லட்சுமணன் தன்னை முழுக்க முழுக்க வெறுக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறாள். தன்னுடைய கணவன் ராமனுக்கு செய்ய வேண்டிய சேவைகளில் எந்த வித பங்கமும் வந்துவிடக்கூடாது, தன்னைப் பற்றிய ஆசாபாசங்கள் கிஞ்சித்தும் அவனது மனதில் இருக்கக் கூடாது என்ற உயர்ந்த எண்ணமே அவளது மனதில் மேலோங்கி இருந்தது. 

  14 ஆண்டுகள் கழிந்து, ராமன் அயோத்தி வந்தபின், லட்சுமணனின் உதாசீனப் போக்கைக் கண்டு, சீதை  அதைப்பற்றி ஊர்மிளா விடம் விசாரிக்கிறாள். முதலில் அவள் எதையும் கூற மறுக்கிறாள். ஒரு கட்டத்தில் கர்ப்பிணியான சீதையின் கண்ணீருக்கு இரங்கி, உண்மையை விளக்குகிறாள் ஊர்மிளா. பிரமித்துப் போன சீதை, தன்னைப் போன்ற ஆயிரம் சீதைகள் வந்தாலும் ஒரு ஊர்மிளாவுக்கு ஈடாகாது என்று உருகிப் போகிறாள். 

  இந்த விஷயத்தை, தன்னை தேரில் கொண்டு போய் காட்டில் விட வந்த லட்சுமணனிடம் கூறுகிறாள் சீதை. நொறுங்கிப் போகிறான் லட்சுமணன். தன்னை ராமன் கைவிட்டது போல் ஊர்மிளாவைக் கைவிட்டு விடாதே என்று கேட்டுக் கொள்கிறாள் சீதை. 

  ஊர்மிளாவைக் காண விரைகிறான் லட்சுமணன். அவளைக் கண்ட அடுத்த கணமே, அவள் தன் மனைவி தான் என்பதையும் மறந்து, அவளது கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுகிறான் லட்சுமணன். இறுகப் பிடிக்கப்பட்ட அவளது பாதங்கள் லட்சுமணனின் கண்ணீரால் நனைகிறது....

 இப்படி இன்றும் நம் வாழ்க்கையிலும் நமக்குத் தெரியாமல் கூட சிலர் உதவி புரிந்திருப்பார்கள். அது கடைசி வரை தெரியாமலும் போகக் கூடும்!

No comments:

Post a Comment

When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*

*When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*. But always remember so are You. Belive the stren...