*ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி விவகாரம்*
—————————————
. இந்தியாவின் தனியார் வங்கிகளில் முதலிடத்தைப் பெற்றுள்ள வங்கி ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி. இந்தியாவில் மட்டுமல்ல, பிற நாடுகளில் சேர்த்து அதற்கு 5,275 கிளைகள் இருக்கின்றன. வங்கியின் சொத்து மதிப்பு 17 லட்சத்து 52 ஆயிரத்து 637 கோடி. அதைப் போலவே இந்த வங்கியின் வாராக் கடனும் அதிகம். 2 லட்சம் கோடி.
பெரிய பெரிய தொழில்நிறுவனங்களுக்கு அளித்த கடன்கள் திரும்ப வரவில்லை என்று வங்கியின் சார்பில் கூறப்படுகிறது. சாதாரணமாக ஒரு வங்கியில் கடன் கேட்டால், ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்பார்கள். நகை, சொத்து தொடர்பான ஏராளமான சான்றுகளைக் கேட்பார்கள். ஆனால் 2012 ஆம் ஆண்டு 3,250 கோடி ரூபாயைக் கடனாக இந்த வங்கியில் மிக எளிதாக வாங்கியிருக்கிறார் வீடியோகான் அதிபர் வேணுகோபால் தூத்.
ஏற்கெனவே ஸ்டேட் வங்கி போன்றவற்றில் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலே கடன் பெற்று திருப்பித் தராமல் வேணுகோபால் தூத் மோசடி செய்திருக்கிறார். இது எல்லாருக்கும் தெரிந்திருந்தும், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் கடன் கொடுத்திருக்கிறார்கள். அந்தக் கடனை வாராக் கடன் என்று ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி சாந்தா கோச்சார் அறிவித்தார். இது எப்படி நிகழ்ந்தது என்று எல்லாரும் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் சில உண்மைகள் வெளிவரத் தொடங்கின.
சாந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் ‘நு பவர் ரினுவபிள் பிரைவேட் லிமிடெட் ’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனம் வேணுகோபால் தூத்திடம் இருந்து ரூ.64 கோடியை லஞ்சமாகப் பெற்றிருக்கிறது என்பது தெரிய வந்தது. வேணுகோபால் தூத்திடம் மட்டுமல்ல, பல பெரிய பெரிய நிறுவனங்களிடம் 10 சதவிகிதம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அந்த நிறுவனங்கள் வங்கியில் வாங்கிய கடன்களை வாராக் கடன் பட்டியிலில் சேர்த்திருக்கிறார் சாந்தா கோச்சார்.
இதனால் 2018 - இல் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் சிஇஓ பொறுப்பிலிருந்து சாந்தா கோச்சார் விடுவிக்கப்பட்டிருக்கிறார். சாந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் அதிபர் வேணுகோபால் தூத் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்து கடந்த 24.12.2022 ஆம் தேதி மும்பை ஜி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர் செய்திருக்கிறது.
சாந்தா கோச்சாரும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், வேணுகோபால் தூத்திற்கு கடன் வழங்கும்படி ப.சிதம்பரம் சொல்லியிருக்கக் கூடும் என்ற சந்தேகமும் இப்போது எழுந்திருக்கிறது என தகவல். என்னவோ நடக்குது உலகத்திலே...!
#ksrpost
30-12-2022.
No comments:
Post a Comment