Sunday, December 4, 2022

முன்னாள் முதல்வர் ஜானகி எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை அவரின் பேரன் டாக்டர் குமார் ராஜேந்திரன் நடத்தினர்.தமிழக முதல்வர் அந்த விழாவில் கலந்து கொண்டு மலரை வெளியிட்டார்.

முன்னாள் முதல்வர் ஜானகி எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை அவரின் பேரன் டாக்டர் குமார் ராஜேந்திரன் நடத்தினர்.தமிழக முதல்வர் அந்த விழாவில் கலந்து கொண்டு மலரை வெளியிட்டார்.

அதில் இடம் பெற்ற எனது கட்டுரை:

‘கொடைத் தன்மையை தன்னகத்தே கொண்டவர் திருமதி. வி.என். ஜானகி அம்மையார்!
                                            -வழக்கறிஞர்  கே.எஸ். இராதா கிருஷ்ணன். 

1979 காலகட்டத்தில் நாங்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தோம். அதன்பின் ஒரு கட்டத்தில் நெடுமாறன் தலைமையில் எல்லோரும் காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்டோம். 
அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் (காமராஜ்) என்ற ஒரு கட்சியை துவக்கினோம்.
அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தேவராஜ் அர்ஸ் கர்நாடக முதலமைச்சராக இருந்தார். அன்றைக்கு எம்.ஜி.ஆர் தலைமையில் அ.தி.மு.க கூட்டணியில் நாங்கள் சேர்ந்தபோது - கூட்டணிப் பேச்சுவார்தை நடந்தபோது - ஜானகி அம்மையாரை முதன்முதலாக நேரில் சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு மதுரை விமான நிலையத்திற்கு நான் செல்லும்போது முதன்முதலாக ஜானகி அம்மையாரைச் சந்தித்தேன். ஆனால் அப்போது அவருடன் எனக்கு அறிமுகம் இல்லை. தூரத்திலிருந்து நான் அவரைச் சந்தித்தேன். 
அதன் பின்னர் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தும்போது ஒரு கட்டத்தில் ராமாவரம் செல்ல வேண்டியிருந்தது. என்னுடன் தி.சு.பிள்ளை, சஞ்சய் ராமமூர்த்தி ஆகிய இருவரும் வந்திருந்தார்கள். 
இவர்களுடன் எம்.கே.டி.சுப்பிரமணியம் வந்திருந்தார்.
இந்த எம்.கே.டி.சுப்பிரமணியத்தைப் பலர் அறிந்திருக்கவில்லை. எம்.கே.டி.சுப்பிரமணியம் பெரியார் மற்றும் குத்தூசி குருசாமியோடு இருந்தவர் திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா துவக்கியபோது எம்.கே.டி.சுப்பிரமணியத்தின் பெயர் பிரதானமாக இருந்தது. 
அவர் அண்ணாவை "அண்ணா என்று உரிமையுடன் அழைப்பார். பிற்காலத்தில் அவர் காமராஜர் தலைமையில் உள்ள ஈ.வி.கே.எஸ் சம்பத் வெளியேறியதும் திராவிட கழகத்திலிருந்து ஸ்தாபன காங்கிரசிற்கு வந்தார்.
அதேபோல எங்களுடன் தி.சு.கிள்ளிவளவனும் அண்ணாவிற்கு ஐம்பது, அறுபதுகளில் நேரடிச் செயலாளராக இருந்தார் அவரை 'திருவேங்கடம்" என்று அண்ணா உரிமையுடன் அழைப்பார். இவர்கள் இருவரும் அண்ணாவுடன் நெருக்கமாக இருந்தவர்கள்.
இதேபோல் எம்.ஜி.ஆரிடம் இவர்கள் இருவரும் மிக உரிமையுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். சஞ்சய் ராமமூர்த்தியும் நானும் கவனித்துக் கொண்டிருந்தோம்.
எங்களுக்கான சீட்டுகள் எவ்வளவு என்று முடிவு செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் முதல்கட்ட பேச்சுவார்த்தைக்காக நாங்கள் சென்றோம். நெடுமாறன் நேரடியாகப் பேசி சீட்டுகள் முடிவாகின.
அந்த நேரத்தில் ஜானகி அம்மையார் வந்தபோது எம்.ஜி.ஆர் அவர்கள் ஜானகி அம்மையாரை முதன்முறையாக அறிமுகம் செய்து வைத்தார். அதற்குப் பிறகு பாண்டிபஜார் சம்பவம், பிரபாகரன் முகுந்தன் துப்பாக்கிச்சூடு, பிரபாகரனும் முகுந்தனும் பிரபாகரனோடு உடனிருந்த ரவீந்திரன், ஜோதீஸ்வரர், கண்ணன் போன்ற 4, 5 பேர் இந்த துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளியாக மத்திய சிறையில் இருக்கும்போது ஒருமுறை எம்.ஜி.ஆரிடம் ஒரு தகவல் சொல்லச் சென்றேன்.
அப்போது அந்த அம்மையாரை நான் சந்தித்தேன். அதன் பிறகு பிரபாகரனை ராமாவரம் தோட்டத்திற்கு விருந்திற்கு அழைத்திருந்தனர். அப்போது அவருடன் விருந்துக்குச் சென்றபோது அன்றைக்கு முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினோம். 
அப்போது ஜானகி அம்மையார் வந்து பரிமாறியது எல்லாம் நினைவில் இருக்கிறது.
ஜானகி அம்மையார் எப்பொழுதும் தாராள மனப்பான்மை கொண்டவர். பிரபாகரனிடம் அன்பாக, ஆறுதலாக விசாரித்ததையெல்லாம் நான் பார்த்தேன்.
இப்படியான பழக்கங்கள் தான் எனக்கு அந்த அம்மையாருடன் இருந்தது.
அதன் பிறகு நானும் பேரவைத் தலைவரான பி.எச்.பாண்டியனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்துவோம். அவருடைய வழக்குகளை நானும் அவரது ஜூனியருமான ராஜிவும் கவனித்துக் கொள்வோம். அந்த காலகட்டத்தில் நான் தி.மு.க.வில் இல்லை. 
சட்டமன்றத்தில் ஜானகி அம்மையார் முதல்வர் பதவி ஏற்றுக் கொண்டார். ஆர்.எம்.வீரப்பன் போன்றோர் உடனிருந்தார்கள்.
அந்தச் சமயத்தில் பி.எச். பாண்டியன் பேரவைத் தலைவராக இருந்தார். பொன்னையன் சட்ட அமைச்சராக இருந்தார். குரானா ஆளுநராகப் பதவியிலிருந்தார். 
இந்த நேரத்தில் பி.எச்.பாண்டியன் "ஒரு நாள் முழுவதும் அங்கே நடப்பவற்றை கவனித்து அது குறித்தான அறிக்கை ஒன்றை தயாரித்துத் தர வேண்டும்" என்று என்னிடம் கூறியிருந்தார். அதன்படி அன்று நாள் முழுவதும் அங்கே இருந்தேன். அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது காங்கிரஸ்காரர்கள் ஆதரிக்கிறோம் என்று சொல்லியிருந்தார்கள். 
ஆனால் அதன் பிறகு ராஜீவ் காந்தியிடமிருந்து சரியான பதில் வரவில்லை என்று அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மூப்பனார் பதில் வரவில்லை என்று சொல்லிவிட்டார்.
இந்த நிலையில் கலைஞரையும் கோபாலபுரம் வீட்டில் சந்தித்து ஆதரவு கேட்டார் ஜானகியம்மாள். அன்றைக்கு ஜானகி அணி, ஜெ அணி என்ற இரண்டு அணிகள் இருந்தன. 
ஜானகி அம்மையார் முதல்வராக இருந்தார் அதன் பின் நம்பிக்கை வாக்கெடுப்புகள் நடந்தபோது அன்றைக்கு ஜெயலலிதாவுடன் திருநாவுக்கரசு, கே.கே.எஸ். ராமச்சந்திரன் போன்றோரெல்லாம் இருந்தார்கள். 
ஜானகியம்மையாரை ஆதரிக்கும் உறுப்பினர்கள் அதிக அளவில் இருந்தார்கள். இருப்பினும் மெஜாரிட்டி எண்ணிக்கை குறைவாக இருந்தது. அந்த சமயத்தில் கைகலப்புகள் எல்லாம் நடந்தேறின. 
அப்போது ஜானகி அமையார் மிகவும் அமைதியுடன் நடந்தவற்றை கவலையாகப் பார்த்துக் கொண்டிருந்த நிலையையும் நான் கவனித்தேன். பி.எச். பாண்டியன் அறையில் நான் அமர்ந்திருக்கும்பொழுது அவற்றை தட்டச்சு செய்து வைத்துக் கொண்டேன்.
அந்த அறிக்கை இன்றைக்கும் என்னிடத்தில் உள்ளது. அந்த அறிக்கையை எடுத்துக்கொண்டு நானும் பி.எச்.பாண்டியன் மற்றும் வழக்கறிஞர் 
பி. சந்திரசேகர் ஆகிய மூவரும் ஆளுநர் குரானாவைச் சந்தித்து நடந்தவற்றை கூறி அறிக்கையை ஒப்படைத்தோம். 
அதன் பின் அன்றைய சட்ட அமைச்சர் பொன்னையனைச் சந்தித்தோம். இதையடுத்து ஜானகி அம்மையாரை அவரது வீட்டில் சென்று சந்தித்தோம். அந்த நிலையிலும் எங்களை சாப்பிட்டுவிட்டுச் செல்லுமாறு கூறினார் ஜானகி அம்மையார். 
அப்போது, “தலைவர் எம்.ஜி.ஆர் எவ்வளவு வள்ளல் தன்மையோடு இருந்தாரோ, அதே வள்ளல் தன்மை ஜானகி அம்மையாருக்கும் உண்டு. 
எத்தனையோ பேர் இந்த அம்மா கையில் சாப்பிட்டுள்ளனர். எத்தனையோ ஏழைகளுக்கு பண உதவி செய்துள்ளார். எம்.ஜி.ஆரைப் போல் எத்தனையோ பேருக்கு உதவி செய்திருக்கிறார்கள்.
“ஜானகி அம்மையார் அ.தி.மு.க.வில் எத்தனையோ பேருக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்கள் எம்.ஜி.ஆர் எவ்வளவு உதவி செய்திருக்கிறாரோ,   அதேபோல் ஜானகி அம்மையாரும் ஏழை மக்களுக்கு உதவி செய்திருக்கிறார்” என்று பி.எச்.பாண்டியன் சொன்னார். அவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்த அம்மையார் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு.
அதேபோல் வேளாண்மைத்துறை அமைச்சராகவும், சபாநாயகராகவும் இருந்த காளிமுத்துவும் விடுதலைப் புலிகளை சந்திக்கச் சென்றபோது, என்னிடம் பேசினார். அப்போது, “அன்று ஜானகி அம்மையார் உங்களைப் பற்றி சொன்னார்கள்” எனக் கூறினார்.
அன்றைக்கு அண்ணா தி.மு.க கட்சிக்காரர்கள் அத்தனை பேரும் அவருடன் அமர்ந்து சாப்பிட்டதுண்டு. தலைவர் கலைஞர் அவர்கள் மீதும் அவருக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஏனென்றால் எம்.ஜி.ஆரும், கலைஞரும் அந்த காலத்தில் ஒரு சேர சகோதரர்கள் போலத் தான் இருந்தார்கள். 'எங்கள் தங்கம்' படத்தில் கலைஞருக்காக ஊதியம் பெறாமலேயே எம்.ஜி.ஆர் நடித்தார்.
1989-க்கு பிறகான தேர்தலில் ஜானகி அம்மையாருக்கு ஆதரவு கொடுக்க
முடியவில்லையே என கலைஞர் அவர்கள் வருத்தத்துடன் சொல்லியதும்உண்டு. 

அதேபோல எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு தலைவர் கலைஞர் அவர்கள்
ஈரோடு மாவட்டச் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஏற்காடு எக்ஸ்பிரஸ் வந்தவுடனேயே விடியற்காலையிலேயே நேரடியாக சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து ராமாவரம் தோட்டத்திற்கு சென்று எம்.ஜி.ஆர் மறைவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார். 

கலைஞரைப் பார்த்ததும் அந்த அம்மாவிற்கு கண்ணீர் வந்தது. அப்போது எம்.ஜி.ஆரின் மறைவால் கலைஞருக்கு தாங்க முடியாத அளவு கண்ணீர் வந்ததாக அறிந்தேன்.
நம்பிக்கை வாக்கெடுப்பிற்குப் பிறகு, கலைஞர் சிலை உடைக்கப்பட்டதற்கு மிகவும் வருத்தம் தெரிவித்தார் ஜானகி அம்மையார். இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் தொண்டர்களைக் கேட்டுக் கொண்டார். 
எம்.ஜி.ஆர் அவர்களும் கலைஞர் அவர்களும் சகோதரர்களைப் போல் பழகிக் கொண்டிருந்தார்கள். இப்படியான நிலையில் கலைஞர் சிலை உடைக்கப்படுவது நல்லதல்ல என காளிமுத்துவும். பி.எச்.பாண்டியனும் வருத்தம் தெரிவித்தனர்.  
நெடுமாறன்,  நான் உள்ளிட்டோர் அப்போது எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி மண்டபத்துக்குச் சென்றிருந்தோம். நாங்கள் எல்லாரும் இரண்டு மணி நேரம் ராஜாஜி ஹாலில் இருந்தபோது, எம்.ஜி.ஆரின் மறைவால் ஜானகி அம்மையார் மிகவும் அமைதியாக இருந்தார்.
கௌரவத்தோடு பெருதன்மையோடு மன இறுக்கத்தோடு அவர் இருந்ததை நான் பார்த்தேன். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அன்றைக்கு 89 தேர்தல் வரை அவர் முதலமைச்சராக இருந்திருக்கலாம்.  
அதற்கான வாய்ப்புகள் இல்லாமலேயே போனது என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். அன்றைய அண்ணா தி.மு.க.வில் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தார்கள். அம்மையால் அவர்கள் பலரை வளர்த்துவிட்டார்கள்.
அந்த அம்மையாருடன் இருந்த சகாக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களைக் கூட வளர்த்துவிட்டார்கள். அந்த நன்றியைக் காட்டவில்லையோ என்று ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்கள் எல்லாம் குறிப்பிட்டுப் பேசியதெல்லாம் தெரியும்.
அந்த அம்மா செய்த கொடை, அறம் அளவில்லாதது. ஜானகி அம்மையாருடைய படம் தலைமைச் செயலகக் கோட்டையில் முதலமைச்சர் வரிசையில் இருப்பது ஓர் ஆறுதலைத் தருகின்றது.
‘நான் ஏன் பிறந்தேன்?’ என்று எம்.ஜி.ஆர் எழுதிய தன் வாழ்க்கை வரலாறு மற்றும் ஜானகி அம்மையாருடைய வரலாற்றைச் சொல்லுகின்ற எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் திருமதி.லதா ராஜேந்திரன் மற்றும் முனைவர் குமார் ராஜேந்திரன் அவர்களின் முன் முயற்சி்யாக ஜானகி அம்மையாரின் நூற்றாண்டை முன்னெடுக்கப்படுகிறது. 
மிகவும் மகிழ்ச்சியான விடயம் இது. எம்ஜிஆரின் புகழ் இருக்கும் வரை ஜானகி அம்மையாரின் புகழ் என்றும் நீடிக்கும்.  சிலர் வரலாம். சிலர் போகலாம். ஆனால் மேன்மக்கள் என்றும் மேன்மக்களே.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...