Wednesday, December 21, 2022

#*முத்துசாமி தீட்சிதர் நினைவிடம்* #*எட்டயபுரம்*

#*முத்துசாமி தீட்சிதர்
நினைவிடம்*
#*எட்டயபுரம்*
—————————————
எட்டயபுரம் உத்தரபிரதேசம் வாரணாசியில் கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர்தருக்கு உத்தரபிரதேசம் வாரணாசி  அனுமன் காட்- இல் நினைவிடம் இருப்பதாக அறிந்தேன். அதுபோலவே எட்டயபுரம் சமஸ்தானம் முத்துசாமி தீட்சிதர்தரை ஆதரித்தது என்பது பலருக்குத் தெரியாது. எட்டயபுரத்தில் அவர் பலகாலம் தங்கியதும் உண்டு. அவருடைய நினைவு மண்டபம் பாரதி மண்டபத்துக்கு அருகே எட்டயபுரம் பேருந்து நிலையத்துக்குப் பக்கத்தில் இன்றைக்கும் இருக்கிறது.



முத்துசாமி தீட்சிதர் எட்டயபுரம் வரும்போது பாடிக் கொண்டே வந்தாராம். அப்போது சாத்தூருக்கும் கோவில்பட்டிக்கும் நடுவே கடுமையான பெருமழை பொழிந்ததாகவும் சொல்வார்கள்.




தீட்சிதருக்கு அப்போது வயது ஐம்பத்தொன்பது. தனது அவதார நோக்கம் பூர்த்தி அடையப் போவதை அறிந்தார் தீட்சிதர். எனவே, திருவாரூரை விட்டு புறப்படத் தீர்மானித்தார். எட்டயபுரத்தில் தன் தம்பி பாலு தீட்சிதரைப் பார்க்க ஆவல் கொண் டார். இதே நேரத்தில் எட்டயபுரத்து இளவரசரின் திருமண வைபவத்தில் கலந்து கொள்ளும்படி தீட்சிதருக்கு அழைப்பு அனுப்பி இருந்தார் மகா ராஜா. எனவே, எட்டயபுரம் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

தீட்சிதரின் எட்டயபுர பயணத்தைப் பற்றி அறிந்த சிஷ்யர்கள், கவலை நிறைந்த முகத்துடன் அவரைச் சூழ்ந்து கொண்டனர். கண்கள் கசிய நின்ற சிஷ்யர்களுக்கு, ஆசியும் ஆறுதலும் கூறி விட்டு, எட்டயபுரத்துக்கு கிளம்பினார். வழியில் பல தலங்களைத் தரிசித்து, அந்தந்த ஆலய மூர்த்தங்களைப் புகழ்ந்து கீர்த்தனைகள் பாடியபடியே பயணத்தைத் தொடர்ந்தார். தீட்சிதரின் மேல் அபிமானமும் மரியாதையும் கொண்ட சிலர், அவரது பயணத்தில் தங்களையும் இணைத்துக் கொண்ட னர். எட்டயபுரத்தை அவர் நெருங்குவதற்கு முன் ஒரு கிராமம் குறுக்கிட்டது.

அப்போது, நாவறட்சியால் பாதிக்கப்பட்டார் தீட்சிதர். அது கோடை காலம் வேறு! எனவே, அந்தப் பகுதிகள் வெகுவாகக் காய்ந்து காணப்பட்டன. கதிரவனின் கடும் தாக்குதலால், பூமி ஆங்காங்கே கடும் வெடிப்புடன் பாளம் பாளமாக இருந்தது. பயணத்தைத் தொடர்வதில் சற்றே சிரமப்பட்டார் தீட்சிதர். அவருடன் வந்தவர்களும் பாதிப்புக்கு உள்ளானார்கள். வழியில் தோட்டம் ஒன்று தென்பட்டது. தீட்சிதரது வரு கையை அறிந்த ஊர்க்காரர்கள், அவரை வரவேற்று, தோட் டத்தில் தங்கிச் செல்லும்படி வேண்டினர்.

களைப்பின் காரணமாகவும், உடன் வருபவர்கள் சற்று இளைப் பாறவும், அங்கே சற்று தங்கிச் செல்வது என தீர்மானித்தார் தீட்சிதர். எனவே, ஊர்மக்களின் வேண்டுகோளை ஏற்று, அங்கே ஓய்வெடுத்தார்.

மாபெரும் இசைமேதை ஒருவர், தனது தோட்டத்தில் தங்கி ஓய்வெடுப்பதை அறிந்த தோட்டத்துக்குச் சொந்தக் காரரான செல்வந்தர், ஓடி வந்து, தீட்சிதரின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். பிறகு, தாகத்தால் தவித்த அனைவருக்கும் தண்ணீர் கொடுத்து உபசரித்தார். செல்வந்தர் தன் மேல் கொண்டிருக் கும் மரியாதையையும் பக்தியையும் கண்டு மனம் உருகினார் தீட்சிதர். பிறகு அவரிடம், ''ஏன் இந்த ஊரில் இவ்வளவு வறட்சி?'' என்று கேட்டார் தீட்சிதர்.

அதற்கு செல்வந்தர், ''ஸ்வாமி... பல ஆண்டுக ளாகவே இங்கு மழையே இல்லை. விவசாயம் கெட்டு விட்டது. விளைச்சல் இல்லை. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகிறோம். மழை வேண்டி நாங்கள் போகாத கோயில் இல்லை; வேண்டாத தெய்வம் இல்லை'' என்று கண்ணீருடன் சொல்ல, உடன் இருந்த ஊர்க்காரர்களும் இவரது கருத்தை ஆமோதித்தனர்.

இந்த ஊரில் மழை பொழிய வைப்பதற்குத்தானே இங்கே தீட்சிதரை அனுப்பி இருக்கிறான் இறைவன்! தீட்சிதரின் கண்கள் கலங்கின. மழலையின் குரல்தானே தாய்க்கு ஆனந்தம்! மழையின் இதம்தானே பூமிக்கு ஆனந்தம்! அங்கிருந்த அனைவரையும் அழைத்துக் கொண்டு, கிராமத்தின் எல்லையில் இருந்த தேவியின் கோயிலுக்குச் சென்றார். கருவறையில் குடி இருக்கும் கருணை நாயகியைப் பார்த்து, அம்ருதவர்ஷிணி ராகத் தில் 'ஆனந்தாம்ருதாகர்ஷிணி அம்ருதவர்ஷிணி' எனும் கீர்த்தனையைப் பாடினார்.

அவ்வளவுதான்! தீட்சிதர் பாடி முடித்த அடுத்த கணம், கனலைக் கக்கிக் கொண்டிருந்த கதிரவனைக் கருமேகங் கள் சூழ்ந்தன. இதையடுத்து பலத்த இடியுடன் மழை, பிரமாண்டமான கச்சேரி ஒன்றையே நிகழ்த்தியது. இந்தக் கிராமத்து மக்கள், தங்களுடைய வாழ்நாளில் பார்த்திராத மழை அது!

செல்வந்தரும் கிராம மக்களும் தீட்சிதரின் கால்களில் விழுந்து வணங்கினர். 'எங்கள் கிராமத்தை வாழ்விக்க வந்த மகான்' என்று புகழாரம் சூட்டினர் (பின்னாளில், அம்ருதவர்ஷிணி எனும் ராகத்துக்கே பிதாமகர் என்று போற்றப்பட்டார் தீட்சிதர்).

பயணத்தைத் தொடர்ந்தார் தீட்சிதர். எட்டயபுரத்தை நெருங்கும் முன்பே அவரது வருகையை அறிந்திருந்தனர் ஊர்மக்கள். எனவே, தீட்சிதரின் தம்பியான பாலுஸ்வாமி தீட்சிதரையும் உடன் அழைத்துக் கொண்டு எட்டயபுரம் மகாராஜாவே, நகர எல்லைக்கு வந்து விட்டார். பூர்ணகும்ப மரியாதையுடன் தீட்சிதரை வரவேற்றனர். பிறகு, எட்டயபுரத்திலேயே தங்கியவர், சுற்றுப்புறங்களில் உள்ள திருச்செந்தூர், கழுகுமலை, திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி முதலான பல தலங்களுக்குச் சென்று, கீர்த்தனங்கள் பாடினார். 

நாட்கள் உருண்டோடின. அது 1835-ஆம் வருடத்தைய தீபாவளி நேரம்... அதிகாலையில் தான் செய்து முடிக்க வேண்டிய யோகப் பயிற்சிகளை முடித்து விட்டு, பின்னர் நீராடினார். அப்போது அவருக்கு எதிரே தோன்றினாள் காசி ஸ்ரீஅன்னபூரணி. தீட்சிதர் முகத்தில் மெல்லிய புன்னகை... 'ஓ... இறுதி நிலைக்கு வந்து விட்டேன் என்பதை நினைவூட்டுகிறாயோ?' என்பதாக அமைந்தது அந்தப் புன்னகை.

'உனது வாழ்க்கைக்குத் தேவையான உணவை, பஞ்சம் இல்லாமல் வழங்குவாள் காசி அன்னபூரணி. அது மட்டுமல்ல... இவள் தான் உனக்கு மோட்சத்தையும் கொடுப்பாள்' என்று காசியில் சிதம்பரநாத யோகியார் அருளியது தீட்சிதரின் நினைவுக்கு வந்தது.அன்னபூரணியைத் தனக்கு அனுக்கிரஹம் செய்ய வருமாறு, தன் கீர்த்தனையால் மனம் உருகப் பாடினார். எங்கும் நிறைந்த பரம் பொருளையே சிந்தித்தபடி, வீட்டின் முன் அறையில் வந்து அமர்ந்தார். அப்போது எட்டயபுர மன்னனான வேங்கடேஸ்வர எட்டப்பன், பதற்றத்துடன் விரைந்தோடி வந்தார். அவரை அன்புடன் வரவேற்ற தீட்சிதர், 'தங்கள் முகத்தில் ஏன் இவ்வளவு பதற்றம்?' என்று கேட்டார்.

மன்னனின் முகத்தில் பீதி குறையவில்லை. ''ஸ்வாமி... நம் பட்டத்து யானைக்கு மதம் பிடித்து விட்டது. கொட்டடியில் இருந்து சங்கிலியை அறுத்துக் கொண்டு வீதி வழியாக ஓடி, தற்போது மயானத்தில் மையம் கொண் டுள்ளது. பல பேர் முயற்சித்தும், கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இது, ஏதேனும் அசுப நிகழ்வுக்கான அறிகுறியோ என்று பயமாக இருக்கிறது. தாங்கள்தான் விளக்க வேண்டும்!'' என்று பணிவுடன் சொன்னார்.

இதைக் கேட்டதும் சில விநாடிகளுக்கு ஏதும் பேசாமல் இருந்தார் தீட்சிதர். இது மன்னனை மேலும் கலவரப்படுத்தியது. ''ஸ்வாமி... எனக்கு ஏதாவது தீங்கு வந்து விடுமா... அல்லது எனது ராஜ்யத்துக்குக் களங்கம் ஏற்பட்டு விடுமா?'' என்று கேட்டார் கலக்கத்துடன்.

தீட்சிதர் திருவாய் மலர்ந்தார்: ''மகாராஜா! கலக்கம் வேண்டாம். தங்களுக்கும் தங்களது ராஜ்யத்துக்கும் எந்த விதக் கேடும் விளையாது. தைரியமாக உங்கள் பணிகளைப் பாருங்கள்!'' என்றார். இதைக் கேட்டு சந்தோஷமான மன்னன், தீட்சிதரை வணங்கி விட்டு அரண் மனைக்குச் சென்றார்.

அன்று நரக சதுர்த்தசி தினம். தீபாவளி கொண்டாட்டங்கள் திமிலோகப்பட்டன. தன் வீட்டு பூஜை அறையில் இருந்த தீட்சிதர், 'இன்று அம்பிகைக்கு உகந்த தினம். எனவே, தேவியின் கீர்த்தனங்களை எல்லோரும் பாடுங்கள்' என்று சிஷ்யர்களுக்கு அறிவுறுத்தினார். வீணையை தீட்சிதர் வாசிக்க... 'மீனாட்சி மே முதம் தேஹி' என்கிற அவரது கீர்த்தனையை சிஷ்யர்கள் பாடினர். இதைக் கேட்டுக் கொண்டிருந்த தீட்சிதர், ''இந்த உலக பந்தங்களில் இருந்து மீனாட்சி தேவியானவள் எனக்கு விடுதலை தர விரும்புகிறாள். அந்த தேவியை மீண்டும் வணங்க ஆசைப்படுகிறேன். இதே கீர்த்தனையை இன்னும் ஒரு முறை பாடுங்கள்'' என்றார் நெகிழ்ச்சியாக.

சிஷ்யர்களும் உருக்கமாகப் பாடினர். அந்தக் கீர்த்தனையின் அனுபல்லவியில் 'மீனலோசனி பாசமோசனி' என்று வரும்போது, அந்த வரிகளைத் தானும் முணுமுணுத்தார் தீட்சிதர். அதோடு, தன் இரு கரங்களையும் உயரே குவித்து 'சிவேபாஹி' என்று மூன்று முறை உச்சரித்தார்.

இதுதான் தீட்சிதர் வாழ்வின் கடைசி தருணம். அடுத்த விநாடி, அவரது ஜீவன், ஜோதிசொரூபமாக அம்பாளது பாதார விந்தங்களில் இரண்டறக் கலந்தது. தீபாவளி அமாவாசை நிறை நாளில் அன்னையின் ஆசியோடு நாத ஜோதியில் கலந்தார் தீட்சிதர்.

இது நிகழ்ந்த மறு கணம்... மதம் பிடித்து சுடுகாட்டில் அமர்ந்த யானை, இயல்பு நிலைக்கு வந்தது மட்டுமின்றி, அரண்மனை நோக்கி திரும்பியது. தீட்சிதர், இறைவனடி கலந்த நிகழ்ச்சியைக் கண்ட சிஷ்யர்களும் உள்ளூர் அன்பர்களும் கண்ணீர் சொரிந்தனர்.

இதை அறிந்த மகாராஜா, ஓடி வந்தார். ''ஸ்வாமி... யானைக்கு மதம் பிடித்து விட்டது என்றவுடன் எனக்கோ, என் நாட்டுக்கோ ஏதேனும் தீங்கு விளையுமா என்று சுயநலத்துடன் கேட்டேன். 'எதுவும் விளையாது' என்று எனக்கு நம்பிக்கை கொடுத்து, திருநீறு அளித்து அனுப்பினீர்கள். ஆனால், இப்போது தங்களை இழந்து தவிக்கிறேனே... தெரிந்திருந்தால் இந்த இழப்பைத் தவிர்க்க என் ராஜ்யத்தையே அந்த எமனிடம் கொடுத்திருப்பேனே'' என்று கதறினார்.

அந்த தீபாவளி திருநாள், எட்டய புரத்தில் தீட்சிதர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டது. எட்டயபுர மன்னர் தேர்ந்தெடுத்த பூமியில், தீட்சிதரின் தேகம் அடக்கம் செய்யப்பட்டு, சமாதி எழுப்பப்பட்டது. முருகப் பெருமானுக்கு உகந்த கார்த்திகை நாளில் அவதரித்தார்; முருகப் பெருமானுக்கு உகந்த ஸ்கந்த சஷ்டியின் துவக்க நாளில் முக்தி அடைந்தார்.

ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதரின் மேனி அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் மேல் சிவலிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டது

தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு அனைத்து சந்நிதிகளுக்கும் அபிஷேக- ஆராதனைகள் நடை பெறுகிறது.

வெளியூர்களில் இருந்து சங்கீத அன்பர்கள் பலர், இங்கு வந்து... தீட்சிதரின் கீர்த்தனைகளைப் பாடி, அஞ்சலி செலுத்துகின்றனர். அப்படி பாடுகிற 
வேளையில், பாட்டுக்குத் தேவையான வாத்தியங்கள் தேவைப்பட்டால், இசைக் கருவிகளை நினைவால யத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். (இதற்கென்றே சுருதிப்பெட்டி, ஆர்மோனியம், வயலின் உள்ளிட்ட இசைக் கருவிகள் வைத்துள்ளனர் நிர்வாகிகள்). உண்மையான லயிப்புடன் இங்கே கீர்த்தனைகளை எவர் பாடினாலும் பெரு மழையோ... சிறு தூறலோ நிச்சயம். தீட்சிதரின் மகிமை அது!

எட்டயபுரம் சமஸ்தானத்தின் உதவியுடன் திருப்பணிகள் துவங்கி, பல அன்பர்களது முயற்சியுடன் இன்று முத்துஸ்வாமி தீட்சிதரின் நினைவு இடம் எழுந்துள்ளது. பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுந்தரம் பிள்ளை இந்தத் திருக்கோயில் எழும்ப பெரும் உதவி செய்துள்ளார். செம்மங்குடி சீநிவாச ஐயரில் துவங்கி பல இசை வானர்கள்  இல்குவந்து சென்றுள்ளனர்.

#முத்துசாமிதீட்சிதர்
#நினைவிடம்_வாரணாசி_அனுமன்காட்
#நினைவு_மண்டபம், #எட்டயபுரம்

#ksrpost
21-12-2022,


No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...