Wednesday, December 2, 2020

 

#கலைஞர்_நள்ளிரவு_கைது -
#டெசோ -
#கலைஞர்_நினைவுகள்_17
————————————————-


மதுரையில் டெசோ மாநாடு அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று 03.05.1986ல் சிறப்பாக நடைபெற்றதை கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு அடுத்த நிகழ்வாக என்னுடைய திருமணம் 15.05.1986ல் சென்னையில் நடைபெற்றது.
நெடுமாறன் தலைமையில் தலைவர் கலைஞர் நடத்தி வைத்தார். வைகோ, கம்யூனிஸ்ட் தலைவர் பி. ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் சோ. அழகிரிசாமி, நல்லகண்ணு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் வி. ராமசாமி, எஸ். ரத்தினவேல் பாண்டியன், மத்திய முன்னாள் அமைச்சர் கே.பி. உன்னிகிருஷ்ணன், ஏ. கே. அந்தோணி, இலங்கைத் தமிழர்களின் தலைவர் திரு. அமிர்தலிங்கம் மற்றும் அவரது துணைவியார் மங்கையர்கரசி, வேலுப்பிள்ளை பிரபாகரன், சிவசிதம்பரம், ஆர். சம்பந்தன், யோகேஸ்வரன், மாவை. சேனாதிராஜா, கரிகாலன், ஈழவேந்தன், சந்திரஹாசன் என பலரும் கலந்துக் கொண்ட அந்த நிகழ்வில் கலைஞர் அவர்கள் "ஈழப் பிரச்சினையில் நான் இனிமேல் தலையிட மாட்டேன் என்று வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வாழ்த்துரையில் பேசினார். இதைக் குறித்து மறுநாள் முரசொலியில் முக்கிய செய்தியாக வெளிவந்தது.

கடந்த 03.06.1986 கலைஞர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கிடைத்த பணத்தை ஈழப் போராளிகளுக்கு கொடுக்க முடிவெடுக்கப்பட்டது. அந்தப் பணத்தை டெலோ, ஈ பி ஆர் எல் எஃப், பிளாட் தலா 50,000 ரூபாய் வழங்க திட்டமிட்டது. புலிகள் தரப்பில் அதைப் பெற சற்று தயக்கமான நிலையில் இருந்த பொழுது நான் காஷ்மீர் பெகல்காமில் இருந்தேன். விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பேபி சுப்பிரமணியம் போன்ற நிர்வாகிகளுடன் பேச என்னை உடனே புறப்பட்டு வர கலைஞர் தரப்பில் எப்படியோ கண்டுபிடித்து பேச வைத்தார்கள். அப்போது கைபேசியெல்லாம் கிடையாது. உடனடியாக நானும் புறப்பட்டு சென்னைக்கு வந்தேன். இதை பிரபாகரனிடமே பேசும் பொழுது அவர் சில நேர்மையான காரணங்களை சொல்லும்போது அவரிடம் வலியுறுத்த முடியவில்லை. இதைக் குறித்து விரிவாக என்னுடைய நினைவுகளில் பதிவு செய்யவிருக்கின்றேன்.

இந்நிலையில், திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி நெடுமாறனை அழைத்துக் கொண்டு அன்றைக்கு முதல்வராக இருந்த எம்ஜிஆரை இரண்டு மூன்று முறை சந்தித்தனர். அதற்குப் பிறகு டெசோ ஆலோசனைக் கூட்டமும் கூடவில்லை. கலைஞர் அவர்கள் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நெடுமாறனும் நானும் 03.01.1987 அன்று சிறைக்குச் சென்று கலைஞரை சந்தித்தோம். பெரியார் திடலில் 15.01.1987 அன்று ஈழப்பிரச்சினை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வீரமணியும் நெடுமாறனும் 02.02.1987 அன்று பெரியார் திடலில் சந்தித்து தூத்துக்குடி துறைமுகத்தின் மூலம் இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்புவதை தடுத்து மறியல் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். அப்போது நானும் உடனிருந்தேன். நெடுமாறன் வீரமணி தலைமையில் இந்த போராட்டத்தை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. கலைஞர் தொலைபேசியில் 03.02.1987 அன்று என்னை அழைத்து இதைக் குறித்து, “நான் ஜெயில்ல இருக்கும்போது நெடுமாறனும் நீயும் வந்து பாத்தீங்களே. இந்த போராட்டத்தை அப்ப இதெல்லாம் சொல்லலியே” என்று என்னிடம் கேட்டார். நான் அமைதியாக இருந்தேன். என்னைப் போன்றவர்கள் டெசோ அமைப்பை தொடர வேண்டும் என்று விரும்பினோம்.

ஆனால் கி. வீரமணி அப்போது அதில் மாற்றுக் கருத்தில் இருந்தார். எதற்க்கு என்னவென்று தெரியவில்லை. இதுகுறித்து திரும்பவும் கலைஞர் அவர்கள் இரண்டு முறை தொலைபேசியில் அழைத்துப் பேசியபோது என்னால் பதில் சொல்ல முடியவில்லை. வைகோவும் என்னிடம் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு, ”தலைவர் கலைஞர் வருத்தப்படுகின்றாரே, ஏன் இப்படி?” என்று கேட்ட பொழுது, ”நான் நெடுமாறனிடம் பேசிவிட்டேன், ஆனால் வீரமணியிடம் தான் பேச வேண்டும். அவர்தான் எம்ஜிஆரிடம் நெடுமாறனை 12.02.1987 அன்று அழைத்துச் சென்றார்” என்று சொன்னேன்.

வைகோ என்னிடம், “சரி ராதா, நாளை காலை வாருங்கள், இது குறித்து வீரமணியை நேராக சந்தித்து பேசிவிட்டு வரலாம்” என்று சொன்னார். நானும் ”சரி” என்றேன். ஆனால் குறிப்பிட்ட 13.02.1987 அன்று முன்னாள் முதல்வர் பக்தவசலம் காலமானார். அவருக்கு நான் நல்ல அறிமுகம். நெடுமாறன் சென்னையில் இல்லாததால் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த தி.சு. கிள்ளிவளவனும் நானும் அவருடைய மயிலாப்பூர் வாரன் ரோடு வீட்டிற்கு செல்ல வேண்டியிருந்ததால், வீரமணி அடையாறு வீட்டிற்கு சென்று மாலை சந்திக்கலாம் என்று வைகோவிடம் சொல்லியிருந்தேன். அன்று மாலை வைகோவும் நானும் வீரமணி வீட்டிற்குச் சென்று பேசினோம். வைகோ கலைஞருடைய மனநிலை பற்றி விரிவாக வீரமணியிடம் எடுத்துக் கூறினார். ஆனால் வீரமணி அதற்குப் பிடிகொடுத்து பேசவில்லை.

நான் மறுநாள் 14.02.1987 அன்று பிப்ரவரி 20ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் நெடுமாறன் வீரமணி தலைமையில் நடக்கவிருந்த போராட்டத்தின் ஏற்பாடுகளை கவனிக்க மதுரை சென்றுவிட்டேன். சென்னையில் என்னுடைய தொலைபேசியில் கலைஞர் அழைத்ததாக செய்தி கிடைத்தது. விருதுநகர், துலுக்கப்பட்டி (ஆர். ஆர். நகர்), சாத்தூர், கோவில்பட்டி, கயத்தாறு, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் என தூத்துக்குடி வரை மறியல் போராட்ட பிரச்சார பயண ஏற்பாடுகளின் முனைப்பில் இருந்ததால் தொலைபேசி வசதி இல்லாததால் கலைஞரிடம் பேச முடியவில்லை.

தூத்துக்குடி மறியல் போராட்டம் திட்டமிட்டபடி 20.02.1987 அன்று நடந்து நாங்கள் கைது செய்யப்பட்டு அன்று மாலை விடுவிக்கப்பட்டோம். அமிர்தலிங்கம் தலைமையில் சென்னையில் 25.02.1987 அன்று சிவசிதம்பரம், யோகேஸ்வரன், சம்பந்தன், மாவை. சேனாதிராஜா ஆகியோர் சிங்கள அரசைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்த நிகழ்வுக்கு நெடுமாறனும், வீரமணியும், நானும் சென்ற போது டெசோ என்ற அமைப்பு இனி செயல்படாது என்று என் மனதில் பட்டது. டெசோ தொடர வேண்டும் என்று வைகோவும் நானும் எடுத்த முயற்சிகளெல்லாம் வீணாகி விட்டன.

டெசோவில் அங்கமான திமுகவை தவிர்த்து 08.05.1987 அன்று திராவிடர் கழகமும், தமிழ்நாடு (காமராஜர்) காங்கிரசும் நெடுமாறன் வீரமணி தலைமையில் சென்னையில் உள்ள இலங்கை தூதராலயம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. அன்றும் கலைஞர், “என்னப்பா?” என்று என்னிடம் கேட்டபோது என்னால் பதில் சொல்ல இயலவில்லை. இப்படியான நிலையில் மேலும் இதனை சிக்கலாக்கும் விதத்தில் கலைஞரின் பேத்தியும் மு.க.முத்துவின் மகளின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு 01.06.1987 அன்று சென்னை எழும்பூர் இம்பீரியல் ஓட்டலில் நடந்தது. அதே நாளில் ஈழத் தமிழருக்காக ரயில் மறியல் போராட்டம் என வீரமணியும் நெடுமாறனும் அறிவித்தார்கள். சங்கரன்கோவிலில் 17.06.1987 அன்று நெடுமாறனும் வீரமணியும் பேசிய பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்பகுதியைச் சார்ந்த வைகோவிற்கு கூட அழைப்பில்லை.

வீரமணியும் நானும் 02.08.1987 அன்று இந்திய இலங்கை ஜெயவர்த்தனா - ராஜீவ் காந்தி ஒப்பந்தத்தை சிம்சன் அருகே உள்ள பெரியார் திடலில் எரித்தோம். அந்த சமயத்தில் நெடுமாறன் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றிருந்தார். ”ஏன் இப்படி டெசோ உடைந்து விட்டதே?” என்று என்னுடைய மனநிலை சற்று அமைதியில்லாமல் இருந்தபோது, வைகோ அதை அறிந்து கலைஞரிடம் கூறியுள்ளார். கலைஞரும் அந்த சமயத்தில் என்னிடம், “ஏன்யா உன்னையெல்லாம் புறக்கணிச்சிட்டு எப்படி?” என்று கேட்டார்.

டெசோ என்பது முடங்கிய நிலையில் இருந்தது. தொடர்ந்து வீரமணியும் நெடுமாறன் அவர்களும் தனியாக ஈழத்தமிழர் பிரச்சினைக்கு போராட்டங்கள் நிகழ்வுகளை நடத்துவதென்ற போக்கிற்கு வந்துவிட்டார்கள். இதற்கிடையில் நெடுமாறன் இரண்டாவது முறையாக ரகசியமாக 01.10.1987 அன்று 10 நாள் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு இலங்கை சென்றுவிட்டார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை வீரமணி திமுகவை தவிர்த்து பெரியார் திடலில் 14.10.1987 அன்று கூட்டினார். இதில் அதிமுக கலந்துக் கொண்டது. கலைஞர், திமுகவுடைய தொடர்புகள், டெசோ என்பது முழுமையாக இல்லாமல் போய்விட்டது. மறுபடியும் 26.10.1987 அன்று மறியல். மனித சங்கிலி 06.11.1987 அன்று என்று தீர்மானித்து நெடுமாறன் வீரமணி போராட்டக் களத்தில் இருந்தார்கள். இந்த நிலையில் எனக்கும் நெடுமாறனுக்குமான தொடர்புகளும் சந்திப்புகளும் குறைந்தது. ஆனால் இன்று வரை. நெடுமாறனை விட்டு விலகி வந்த பிறகும் அவர் மீதான என்னுடைய மதிப்பும் மரியாதையும் துளியும் குறைந்ததில்லை. அவரைப் பற்றியான நடப்புகளை தொடர்ந்து எழுதிக் கொண்டுதான் வருகின்றேன். இதுவே அவர் மீது நான் வைத்திருந்த உயர்ந்த எண்ணப்பாடுக்கு எடுத்துக்காட்டாகும்.

முதல்வர் எம்ஜிஆர் மறைவு, திரும்பவும் வீரமணியின் முயற்சியில் வி.என்.ஜானகியோடு நெடுமாறனின் சந்திப்புகள் என்று, ஓராண்டுக் காலத்திற்குப் பின் நிலைமைகள் மாறிய பின் திமுகவில் கலைஞர் முன்னிலையில் 28.02.1988 என்று அவர் விரும்பி அழைத்ததன் பேரிலேயே இணைந்தேன். வீரமணி மீது அப்போது தலைவர் கலைஞருக்கு வருத்தங்கள் உண்டு. இதில் எவ்வளவோ விஷயங்கள் தெளிவாக சொல்ல வேண்டும். அதனை என்னுடைய நினைவுகளில் பதிவு செய்து வருகிறேன். இங்கு நாகரீகம் கருதி சில பிரச்சினைகளை தவிர்த்துள்ளேன். அதைப் பேசுவதும் நல்லதல்ல.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கிட்டு 12.09.1988 அன்று தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றார். கலைஞர் அவர்கள் 22.09.1988 அன்று வைகோ, என்.வி.என் சோமு மற்றும் என்னிடம் “கிட்டுவை மத்திய சிறையில் சந்தித்து விட்டு வாருங்கள்” என்றார். நாங்கள் சந்தித்தபின் அறிவாலயத்தில் கிட்டுவை சந்தித்த விபரத்தை சொல்லியபோது வைகோவிடம் கலைஞர் அவர்கள் ”பிரதமர் ராஜீவிற்கு நமது கட்சி சார்பில் நீங்களே கடிதம் எழுதுங்கள்” என்று வலியுறுத்தினார். கிட்டுவோடு 154 விடுதலைப்புலிகள் இயக்க போராளிகள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கிட்டு சென்னை சிறைச்சாலையிலேயே உண்ணாவிரதம் இருந்தார். கிட்டு 09.10.1988 அன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். அவரும் அவருடைய சகாக்களும் தனி விமானத்தில் கைகளில் கயிற்றால் கட்டப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டது அனைவரையும் வேதனைப்படுத்தியது.

நான் தினமும் அறிவாலயம் போக, கலைஞரை சந்திக்க, அவர் பணித்த பணிகளை செய்ய என்று இருந்தேன். அப்போது கலைஞரும் முரசொலி மாறனும் காந்தி பிறந்த நாளான 02.10.1988 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்தான ரகசிய கழக ஆய்வுப் பணி நடத்த வேண்டும், அதற்கு நீங்கள் செல்லுங்கள் என்று பணித்தனர்.

இந்த ஆய்வுப் பணிக்கு கரூர் உள்ளடங்கிய திருச்சி மாவட்டம், தஞ்சை மாவட்டம், அன்றைய நாகை மாவட்டம், அன்றைய தென் ஆற்காடு மாவட்டம், அன்றைய ஒன்றுபட்ட செங்கல்பட்டு மாவட்டம், அன்றைய வட ஆற்காடு மாவட்டம், நாமக்கல் உள்ளடங்கிய அன்றைய ஒன்றுபட்ட சேலம் மாவட்டம், கிருஷ்ணகிரி உள்ளடங்கிய தர்மபுரி மாவட்டம், ஈரோடு மாவட்டம், திருப்பூர் உள்ளடங்கிய அன்றைய கோவை மாவட்டம், நீலகிரி மாவட்டம் என்று ஒதுக்கி தொகுதி வாரியாக தனித்தனியாக ஆய்வறிக்கையை ஜனவரி 1989 இறுதிக்குள் அளிக்குமாறு அறிவுறுத்தினார்கள். 5 மாத சுற்றுப்பயணம் இந்தப் பணியில் முழுமையாக இருந்தேன். இன்றைக்கும் அதற்கு சாட்சியாக வைகோ இருக்கின்றார். அவருக்கு இது முழுமையாக நன்றாக தெரியும். அவரும் இதற்கு ஒரு காரணம்.

முதன் முதலாக தேர்தல் களத்தில் போட்டியிட நேரு, பொன்முடி, விபி துரைசாமி, முல்லைவேந்தன் போன்ற பல முக்கிய புள்ளிகள் முதன்முதலாக சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கினார்கள்

எஸ். எஸ். தென்னரசு, விருத்தாசலம் செல்வராஜ் போன்றவர்களுக்கு பின்னர் இந்த விஷயம் தெரிய வந்தது. அன்பில், மன்னை, வீரபாண்டி ஆறுமுகம் ஆகிய மூவரையும் 1989 பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நான் அவர்களை பார்த்தபோது ”எங்கள் பகுதிக்கு எங்களுக்கு தெரியாமலே தலைவர் அனுப்பினாருன்னு வந்துட்டு போயிருக்கீங்களே” என்று கேட்டதும் உண்டு. நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர், பீ. ஏ. சித்திக், கல்கி ப்ரியன், திருச்சி துறையூர் வைரிச்செட்டிப்பாளையம் ராஜசேகரன், தொட்டியம் ஜெயராஜ் போன்றவர்கள் எல்லாம் இந்த பணியில் எனக்கு உதவியாக இருந்தார்கள். அப்போது என்னுடைய ஓட்டுநராக இருந்த நாராயணன் என்னுடைய அம்பாசிடர் காரை ஓட்டிக் கொண்டு இந்த மாவட்டங்களுக்கெல்லாம் சென்றதுண்டு.

நான் வழங்கிய அந்த அறிக்கையில் இருந்த பெயர்களை தான் கழக வேட்பாளர்களாக 70% பேர் அறிவிக்கப்பட்டனர். அந்த ஆய்வறிக்கையில் திருச்சி மாவட்டத்தில் கே.என். நேரு பெயர் இருந்தது. அவர் முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவராகவும் இருந்திருந்தார். விழுப்புரம் தொகுதியைப் பொறுத்தவரை பழனியப்பன் திரும்பவும் போட்டியிட் மும்முரமாக இருந்தார். ஆனால் பொன்முடியின் பெயர் (அப்போது அவரை பேராசியர் தெய்வாசிகாமணி என்றே அழைப்பார்கள்) அறிக்கையில் சேர்க்கப்பட்டது. அன்றைய ஒன்றுபட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட இராமகிருஷ்ணன் என இந்த மூவரும் அமைச்சர்களானார்கள். தருமபுரி மாவட்டத்தில் முல்லைவேந்தன் பெயரும் சேர்க்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் வி.பி.துரைசாமி பரிந்துரைக்கப்பட்டு அன்றைக்கு சட்டப்பேரவை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்களைப் பற்றி நான் எழுதிய அறிக்கையில் உள்ள குறிப்புகளை படித்துவிட்டு இவர்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறதென்று தலைவர் கலைஞரும் முரசொலி மாறனும் திரும்ப திரும்ப இது குறித்தான வினாக்களை எழுப்பினார்கள் என்பதெல்லாம் நினைவில் உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வைகோ அவர்கள் 1989 பிப்ரவரி மாதம் கலைஞருக்கு கடிதம் கொடுத்துவிட்டு ரகசியமாக இலங்கைக்கு சென்றார். குமரி அனந்தன் சட்டமன்றத்தில் இதை பிரச்சனையாக எழுப்பியபோது, கலைஞர் என்னை கோட்டைக்கு அழைத்து தனது அறையில் நேரடியாக விசாரித்ததார்.

முதல்வர் கலைஞரிடம், பிரதமர் ராஜீவ் விடுதலைப்புலிகளுடன் பேசி ஒரு தீர்வுக்கு வர முயலுங்கள் என்று சொன்னதும் சென்னை துறைமுக விருந்தினர் விடுதியில் விடுதலைப்புலிகள் சார்பில் பாலசிங்கம் மற்றும் அவருடைய சகாக்களோடு முதல்வர் கலைஞரும் முரசொலி மாறனும் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இலங்கைக்கு சென்று தமிழர்களின் அமைதியைக் கெடுத்த அமைதிப்படையை பிரதமர் வி.பி. சிங் 1990ல் திரும்பப் பெற்ற போது; அப்போது முதல்வராக இருந்த கலைஞர் சென்னை துறைமுகத்திற்கு அமைதிப்படையை வரவேற்க செல்லவில்லை. கலைஞர் அமைதிப்படையா? அமளிப்படையா? என்றுதான் அப்போது கருத்தை வெளியிட்டார். வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்தது.

இந்திய அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. திமுக ஆட்சி 5 ஆண்டுகள் நிறைவு செய்யாமல் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நிறைவுற்ற நிலையில்ஜெயலலிதாவின் தூண்டுதலினால் அன்றைய பிரதமர் சந்திரசேகர் 356 பிரிவினை பயன்படுத்தி திமுக ஆட்சியை கலைத்தார். அதன் பின் ராஜீவ் படுகொலை, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். அப்போது பல்வேறு பாதிப்புகள் திமுகவுக்கும் நிர்வாகிகளுக்கும் ஏற்பட்டன. ஒருநாள் கலைஞர் என்னை அழைக்கின்றார் என்று வைகோ சொன்னதும் அவரோடு உடனே கலைஞரை ராஜிவ் படுகொலைக்கு பின் சந்திக்கச் சென்றேன். ”வழக்கறிஞர் என். கணபதியிடமும், என்.வி.என்.சோமுவிடமும் என் குடும்ப சம்பந்தப்பட்ட வழக்கை கவனியுங்கள் என்று சொல்லியும் அவர்கள் கவனிக்கவில்லை. நீ இதை கவனித்து முடித்தால் தான் இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் எனக்கு சற்று அமைதி கிடைக்கும்” என்று கலைஞர் வேதனையோடு சொன்னது எனக்கு மிகவும் கவலை அளித்தது. அவர் கூறிய அந்த வழக்கை (OP No. 604/1992 on the file of PFC) நல்லவிதமாக சட்டபூர்வமாக அந்த வழக்கினை நடத்தி 28.12.1992 அன்று தீர்ப்புகளும் கிடைத்தது. கலைஞரும் சரிப்பா நிம்மதியான தீர்ப்பு. என்று அவர் சொன்னது இன்றைக்கும் காதில் ஒலிக்கின்றது. இதையெல்லாம் கலைஞர் என்னிடம் சொல்லியிருப்பாரா என்று சிலர் நினைக்கலாம், ஆனால் இன்றைக்கு அதற்கு சாட்சியாக வைகோ இருக்கின்றார், விஜயா தாயன்பனுக்கும் முழுமையாக தெரியும். அன்றைக்கு என் சக வழக்கறிஞர்களாக இருந்தவர்கள் இன்றைக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருக்கும் அவர்களுக்கும் தெரியும். இதைக் குறித்த விரிவான பதிவை என் நினைவுத் தொகுப்பில் செய்யவுள்ளேன்.

வி.பி.சிங் காங்கிரசில் இருந்து வெளியேறி 1989ல் தேசிய முண்ணனியை கட்டியபோது திமுகவின் சட்டதிட்டங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கேட்கிறார், உடனே செய்துக் கொடுக்க வேண்டும் என்று தலைவர் கலைஞரும் முரசொலி மாறனும் பணித்ததை நான்கைந்து நாட்களில் முடித்துக் கொடுத்ததை கலைஞர் பாராட்டியதெல்லாம் மறக்க முடியாது.

முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த காலக்கட்டத்தில் அவர் குறித்தான ஊழல் புகார் மனுவை ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அளிக்க ஆங்கிலத்தில் தயாரிக்கவும் தலைவர் கலைஞர் அவர்களும் முரசொலி மாறனும் கேட்டுக் கொண்டபடி 30-40 பக்கங்களில் தயாரித்து 29.08.1991ல் தட்டச்சு செய்து கொடுத்தேன். அப்போதெல்லாம் இது போன்று கணிப்பொறியில் தட்டச்சு செய்யும் வசதி கிடையாது. காந்திக்கும் எனக்கும் தட்டச்சராக இருந்த மணி (22 லா சேம்பர்ஸ், உயர்நீதிமன்றம்) தட்டச்சு செய்து வழங்கியபோது முரசொலி மாறன் அதை பார்த்துவிட்டு தெளிவாக விளக்கமாக தயாரித்துள்ளார் என கலைஞரிடமும் சொன்னபோது கலைஞர், “ராதாவைப் பத்தி தான் எனக்கு தெரியுமே” என்று சொன்னதெல்லாம் நினைவில் உள்ளது. திமுகவில் வைகோ பிரச்சினைகள் எழுந்தன. அவ்வர் வெளியேற்றப்படுகிறார். அவரோடு நாங்களும் வெளியேறி மறுமலர்ச்சி திமுகவை கட்டமைத்தோம்.
ஆனால் காலங்களும் நேரங்களும் இயல்புகளும் மாறிவிடுகிறது. இதையும் கடந்து செல்ல வேண்டும். யார் யாரோ எந்த சிக்கலையும் சந்திக்காமல் கடப்பாடுகள் இல்லாமலும் போலியான உலகில் பாசாங்குத் தன்மையோடு உலா வருகின்றனர். இவையெல்லாம் வேடிக்கை தானே? சில வேடிக்கை மனிதர்கள்.
(தொடரும்)

#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
06-09-2020 

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்