Thursday, December 10, 2020

 #சில_உணர்வுகளும்_சிந்தனைகளும்_1

———————————————————


கல்கி கிருஷ்ணமூர்த்தியின் புதல்வரும், கல்கி ஆசிரியராக இருந்த பெருமதிப்பிற்குரிய ராஜேந்திரன் அவர்களை சந்தித்து பேசியபோது, மனதில் எழுந்த சில கருத்துக்கள் வருமாறு:
உலகின் தொலைதூரங்கள் நாளுக்கு நாள் சுருங்கி வருகின்றன. அறிவியல், தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம் என்ற வளர்ச்சியில் முடியாதவைகள் என்ற வரலாறுகள் முடிவடைந்துவிட்டன. எதையும் சாதிக்க முடியும் எனும் நம்பிக்கையின் கதவுகள் திறக்கப்பட்டு விட்டன. எதிலும் நம்பிக்கையுள்ளது. ஆக்க சக்திகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமெனும் விழைவு 75 சதவீத மக்கள் மத்தியில் மேலோங்கி நிற்கிறது. அழிவில் இருந்து அகிலத்தைக் காக்கும் அரும்பணிகளின் தொடர்ச்சி ஒரு பக்கம்; அதன் தொடர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பும் கையடக்கமான தீய சக்திகளின் முயற்சி மறுபக்கம்!.
உலகின் எந்த மூலையில் வாழ்பவர்களை எடுத்துக் கொண்டாலும் அவர்களின் தேவைகள் பொதுவாகவே இருக்கின்றன. உடுக்க உடை, உண்பதற்கு உணவு, உறங்க உறையுள். மானிட சாதிக்குத் தேவைப்படும் அடிப்படைகள் இவை. இந்த அடிப்படையின் மேல் கட்டி எழுப்பப்படும் மாளிகையின் மேல்கூரை, மனிதனது உணர்வுகளால் வேயப்பட்டது. பாசம், பற்று, பிடிப்பு, உறவு, தொடர்பு, பந்தம், பரிவு இவைபோன்ற உணர்வுகளில் இருந்து சிந்தித்துக் கொண்டு, தன்னை வேறுபடுத்திக் கொண்டிருக்கும் நாடுகளை நாம் காண முடியாது.
சித்தாந்தங்களின் பேரால் அவைகளை நிறைவேற்றுவது எனும் நடவடிக்கையால் எழும் சக்திகளில், மனிதனுடைய பாச உணர்வுகள் பலியாக வேண்டிய தேவையில்லை. எனினும் மூர்க்கத்தனமாக அவை கூர்மை பெறும்போது இரக்கத்தின் நீர் ஊற்றுகள் வற்றி விடுகின்றன. மீண்டும் அவை சுரக்க ஆரம்பிக்கும்போது கண்ணீர் துளிகளாக மாறிவிடுகின்றன.
கொலைவெறியின் உச்சகட்டத்தில் நிலைதடுமாறி நிற்கும் மனிதர்கள் இழைத்துவிடும் கொடுமைகள், கணநேரத்தை ஒட்டியவை. வினாடிக்குள் விளைந்து விடும் விபரீதம், அதேபோல் நிமிடத்திற்குள் நிகழ்ந்துவிடும் நல்லவைகளாக அமைந்து விடுவதையும் பார்க்கிறோம்!.
எல்லோரும் நல்லவர்களே! சந்தர்ப்பங்கள் சில பேர்களை வல்லவர்களாக்கும்; சில பேர்களை பொல்லாதவர்களாக்கிப் பொசுக்கி விடும். இணைந்து,இயைந்து இயங்குகின்ற சூழ்நிலைகள் பின்னிப் பிணைந்து கிடக்கும் மனநிலைகளோடு முயங்கிடும்போது, பொங்குகின்ற உணர்வலைகள் சில நேரங்களில் அழிவை ஏற்படுத்தி விடுவதுண்டு; அல்லது ஆக்கத்திற்கான வழிகளை வகுத்திடுவதுண்டு. காலச் சிற்பியின் கற்பனை உளியால் செதுக்கப்படும் சாதனைச்சிலைகள் அல்லது சோதனைச்சிலைகள் அழகுப் பொருட்களாகவும், அழிவுப் பொருட்களாகவும் எழுந்து விடுவதுண்டு.
பண்படுத்தப்பட்ட நிலத்தில் பயிரிட்டால் ஏற்படும் பயன்களை பாழ்நிலத்தில் எதிர்பார்க்கக் கூடாது. வாடி வதங்கி வீழ்ந்துவிட்ட மலர்க் கூட்டங்களை மிதித்துக் கொண்டு சென்று கொண்டிருக்கும் மனிதச் சுவடுகளுக்கு, நேற்றைய சுவைகளின் ‘கம்பீரங்களை’ நினைப்பதற்கு நேரமில்லாமல் போகலாம். கசங்கி விட்ட நிலையிலேயும் கால்களுக்கு இதம் தரும் அந்த இதழ்களுக்குத் தன் இதழ் விரித்து நன்றி தெரிவிக்கும் நேரம், ஏனோ மானிட சாதிக்கு இருப்பதில்லை.
உடைந்து சிதறுண்டு கிடக்கும் கண்ணாடித் துண்டுகள் நேற்றைக்கு, அது முழுமையாக இருந்து மனிதனது நிஜத் தோற்றங்களைக் காட்டிக் கொண்டிருந்தன. இன்று அவைகளின் பக்கத்திலே செல்வதற்கு அதே மனிதன் நடுங்குகிறான். தன்னை நேற்றைக்குப் பிரதிபலித்த கண்ணாடி, துண்டாகி விட்டதற்குப் பிறகு தன்னை பதம் பார்த்து விடும் என்ற அச்சம்! குப்பை கூளங்களுக்கு அவைகள் இப்போது காணிக்கைப் பொருளாகின்றன.
குளுமையை வாரி இறைத்துக் கொண்டு வரும் நிலவொளியில் முழ்கி எழும் மானிட சாதிக்கு ஏற்படும் மகிழ்ச்சி, கருமையை பூசிக் கொண்டு காட்சியளிக்கும் வான்பரப்பைப் பார்க்கும்போது மறைந்துவிடுகிறது. இது மனித உணர்வுகளின் பிரித்து சுவைக்கும் திறமைக்கு சான்றோ? அல்லது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விளையாடும் சாகசத்தின் அட்டகாசமா?.
சகதியிலே குட்டைகளில் வீழ்ந்து புரளும் எருமைகள் காணும் தனி இன்பங்களை, பன்னீர் தொட்டியில் நீந்தி விளையாடும் மனிதன் ஒருவேளைப் பெறமுடியாமல் போய்விடக் கூடும்.
பக்குவம் எனும் பண்ணையில் முளைவிடும் நாகரீகம் எனும் பயிர்களை மனசாட்சி எனும் வேலி மூலம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
சிதைந்துவிட்ட சிந்தனைகள், என்றைக்கும் சகதிகளை சிந்தனைகள் சிறகடித்துப் பறக்கும் வானம்பாடிகள் எல்லைக்கோடுகளையும், தொல்லைக் காடுகளையும் பொருட்படுத்துவதில்லை.
தெள்ளிய நீரோடை, விழிகளுக்கு விருந்து, கட்டுப்படுத்தப்பட்ட காட்டாற்று வெள்ளமோ, நாட்டிற்கு மாமருந்து! பொறாமை-மனிதனது உடன்பிறப்பு. அந்த ஆமை, ஊமையாகி விடும்போது உலகம் வாழும். அப்படியே நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது தீமை தீயாகிப் பரவும். குறுகிய கண்ணோட்டம் வளர்ச்சியடையாத மனதின் பிரதிபலிப்பு, மனத்தின் வளர்ச்சி பெற்றிருக்கும் தொடர்புகளை ஒட்டியது. விரக்தி, தோல்வி பெருக்கங்கள் பெற்றுத் தரும் குழந்தை-முழுமை பெற்றதாக அது இருக்காது.
குறிக்கோள் மனதனது இலட்சிய எல்லையை சுட்டிக் காட்டிடும் கைகாட்டி! குறியை விட்டுவிட்டுக் ’கோளிலே’ குறியாகிவிட்டால் எல்லையை எட்டிக் குதிப்பது இயலாததாகிவிடும்.
வயது! அது காலத்தினாலே கணிக்கப்படுவதில்லை! மாறாக காலத்தினாலே கவனிக்கப்படுவது. கடமைகள் ஆற்றப்படுவதற்காக! அதன் விளைவுகள், கவலைகளுக்கு அப்பாற்பட்டவைகளுக்காக! நியாயங்கள் நிலைநாட்டப்படுவதற்காக! அவைகள் மாயங்களின் மடியை பஞ்சணையாக்கி விடக் கூடாது. நீதி-அவை கோருபவர்களுக்காக அல்ல! பதவி-உதவிகளைச் செய்வதற்காக! உதவிகளைச் செய்கிறோம் என்ற பெயரால் பாழடித்துக் கொள்வதற்கல்ல!
என்னைப் பற்றி விசாரிக்கிறவர்களுக்கு நன்றி. கால வர்த்தமானம் பதில் சொல்லும். நேர்மையான பணிக்கு என்றும் அர்த்தம் உண்டு.
இருப்பினும், இன்குலாப்பின் கவிதை இப்படி சொல்கிறது.
பாரதி....
வாழ்ந்து பிணமானால்
உன்னைப் போன்றோரை
பிணமாக வாழ்ந்தால்
என்னைப் போன்றோரை
இந்த அரசு
அங்கீகரிக்கும்!
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
9-12-2020.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...