Tuesday, December 8, 2020

 "#கம்பர்_கவிக்கு_வந்த_வினை"

-#ரசிகமணி_டி_கே_சி.
————————————————



" ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களிலும், பிறர் இடையில் செருகிய பாகங்கள் உண்டு. "பிடாரி வசங்கியது" (The Taming of the Shrew )என்னும் நாடகத்தில் பாதிக்குமேல் ஷேக்ஸ்பியர் எழுதாது என்று கண்டு முடிவு கட்டியிருக்கிறார்கள்.
ஷேக்ஸ்பியர் எழுதியது என்றால், அதில் ஜீவன் இருக்கும்; செருகிச் சேர்த்துள்ள பாகத்தில் ஜீவன் இராது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆங்கிலக் கவியின் தத்துவத்தை அறிந்து அனுபவித்த ஆங்கிலேய ஆசிரியர்கள், "ஷேக்ஸ்பியர், ஷேக்ஸ்பியர் தான்; வேறொரு புலவருக்கு அந்தத் தனிக்ககவிப் பண்பு வராது" என்று உறுதியாகச் சொல்லிவிடுவார்கள்.
இவ்வளவும் கம்பர் சம்பந்தமாகவும் சொல்லலாம். கம்பராமாயணத்துக்குள் எத்தனையோ செருகு கவிகள். அவைகளில் ஜீவனே கிடையாது. சில செருகல்களில், இலக்கணமோ பொருளோ, ஒன்றுமே கிடையாதுதான்
கம்பராமாயணத்தில் இந்தச் சிதைவுகள் எல்லாம் ஏற்படுவதற்குக் காரணம் பல.
காரணம் ஒன்றிரண்டை இங்கே குறிப்பிடலாம்.
கம்பர், வாலமீகி ராமாயணத்தின் முக்கியமான அம்சங்களை எடுத்துக் கொண்டார். அவ்வளவுதான். கம்பராமாயணம் வால்மீகி ராமாயணத்தின் மொழிபெயர்ப்பு என்று எவ்விதத்திலும் சொல்லமுடியாது. கம்பர், தன் காலத்திலிருந்த தமிழ்நாட்டு மக்களுடைய மனப்பாங்குக்கு ஓத்திருக்கவேண்டும் என்று கட்டங்களை மாற்றியிருக்கிறார். அதைவிட, பாத்திரங்களின் சொரூபத்தையே மாற்றியிருக்கிறார். இவைகளெல்லாம் தன் கதையின் கட்டுக்கோப்புக்கு அவசியமென்றே கருதிச் செய்தார்.
பிற்காலத்தில் உள்ளவர்கள், கம்பருடைய இதய போக்கையும் சிருஷ்டி தத்துவத்தையும் தெரிந்து கொள்ளாமல் கதை பூர்வமான வால்மீகத்தை ஒட்டி இருக்க வேண்டுமென்று ஏதோ எண்ணம் கொண்டு, கம்பர் பாடல்களை அகற்றி விட்டு, தாங்களாகப் பாடல்களை இயற்றிச் சேர்த்து விட்டார்கள்.
இது காரணமாகப் பல கட்டங்களிலே பொருத்த மின்மையும் வேண்டாத நீட்டமும் ஏற்பட்டிருக்கின்றன. இதெல்லாம் மிதந்தவாறாகப் பார்த்தாலே யாருக்கும் தெரிந்து விடும். செருகிய கவிகளோ, உயிர்த் தத்துவம் கொஞ்சமேனும் இல்லாமல், விஷயத்துக்கும் இலக்கணத்துக்குமே மாறுபட்டவைகளாக இருக்கும்."
-#ரசிகமணி_டி_கே_சி.
.
("#கம்பர்_கவிக்கு_வந்த_வினை" கட்டுரையின் ஒரு பகுதி. - "ரசிகமணி கட்டுரைக் களஞ்சியம்" நூலில் இருந்து எடுத்தது)

#ksrpost
27-5-2020

No comments:

Post a Comment

Reached me today…