Tuesday, December 13, 2022

Mr, பேச்சில்….வார்த்தையில் கவனம்*.

*Mr, பேச்சில்….வார்த்தையில் கவனம்*.
*****
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து மதிமுகவில் கடந்த 1993 - இல் என்னால் சேர்ந்து தீர்மானக்குழு உறுப்பினர் பொறுப்பை என் மூலம் பெற்றுக் கொண்ட ஒரு ஞானசூன்யம் தமிழ் இந்து இணைய யூ ட்யூப் சேனலில் என்னைப் பற்றி பிழையாகவும் பொய்யாகவும் அபத்தமாகப்  சமீபத்தில் பேசியுள்ளார். நான் கடந்த 10 ஆண்டு காலமாக திமுகவில் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்ததாகவும், அறிவாலயம் பக்கமே செல்லவில்லை என்றும் பேசியுள்ளார். 

ஏ… ஞானசூன்யமே... நான் பத்தாண்டு காலம் அறிவாலயம் பக்கம் தலைகாட்டவில்லை என்று நீங்கள் சொல்வது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். 
• நான் 10 ஆண்டுகாலம் அறிவாலயம் பக்கம் தலைகாட்டவில்லை என்றால், திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் என்ற பொறுப்பை கலைஞர் எப்படி  எனக்கு வழங்கினார்?
• ஐ.நா.சபைக்கு நான் கொண்டு சென்ற ஈழத்தமிழர் குறித்தான மனு புத்தக வடிவில் வந்தபோது, அதற்கு கலைஞர் அணிந்துரை கொடுத்தார். அந்தப் புத்தகம் இந்த ஞானசூன்யத்தின் கைகளில் கூட இருக்கலாம். இது நடந்தது 6 - 7 ஆண்டுகளுக்கு முன்பு.

•டெசோ, திமுகவின் ஈழத்தமிழர் குறித்தான நிலைபாடு மற்றும் ஈழப் பிரச்னை குறித்த திமுகவின் அக்கறை பற்றி திமுக – கலைஞர் சார்பில் நான் ஐநா மன்றத்திலேயே தாக்கல் செய்த பதிவு, ஐ.நா மன்ற ஆவண அறிக்கையிலேயே ஐ.நாவின் சின்னத்தோடு என்னுடைய பெயரோடு வந்தது தெரியாதா?

• இன்றைய முதல்வர் ஐநாமன்றத்துக்கு ஆவணங்கள் எடுத்த-செல்ல களப்பணிகள் செய்திருக்கிறேன். அதுமட்டுமல்ல பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழர் குறித்த மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலினை அழைத்துச் சென்றதெல்லாம் தெரியாதா?

• 2011 -12 இல் கோவில்பட்டியில் எல்லாருக்கும் தெரிந்த முக்கியமான எனக்குச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அந்தப் பகுதியில் கட்சியே இல்லாத பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.  எனக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை என்பதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கட்சிப் பணிகளைச் செய்திருக்கிறேன். அதற்குப் பிறகு சங்கரன்கோவில் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் பொறுப்பாக தேர்தல் பணி செய்திருக்கிறேன். இவையெல்லாம் அந்த ஞானசூன்யத்துக்குத் தெரியாதா?

• 2016 இல் தூத்துக்குடியில், விருதுநகரில் நடந்த  தேர்தல்களின்போது வேட்பாளராக நிற்க விருப்ப மனு தாக்கல் செய்யுமாறு கலைஞர் கூற நான் தாக்கல் செய்தேன். அப்போதும் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதைப் பொருட்படுத்தாமல் இப்போது வரை திமுகவுக்காகத்தானே நான் பணியாற்றி வந்திருக்கிறேன். எந்த வெறுப்பையும் கோபத்தையும் இதுவரை காட்டவில்லையே?

• தலைவர் கலைஞர் மறைவுக்கு முன் என்னுடைய ‘பாஞ்சால குறிச்சி வீர சரிதம்’ என்ற கட்டபொம்மன் குறித்த நூலுக்கு அணிந்துரை வழங்கினார். அது அவர் வாழ்நாளிலேயே இறுதியாக வழங்கிய ஓர் அணிந்துரை ஆகும்.  அந்த அணிந்துரையில், ‘ தம்பி கே.எஸ்.இராதாகிருஷ்ணன் எந்தப் பொருளைப் பற்றி எழுதினாலும் அதன் அடியாழத்தில் உள்ள  வேர்களில் இருந்து தொடங்கி விழுதுகள் வரை முழுமையாகவும் எளிமையாகவும் எழுதக் கூடிய சிறந்த ஆற்றல் பெற்றவர்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதே நூலுக்கு இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் 26.12.2018 – இல் அணிந்துரை வழங்கியதும் உண்டு. 

• 2019 - இல் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கனிமொழிக்கு வாக்கு சேகரிக்க கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் நான் பணியாற்றியது தெரியாதா? 

• அதற்குப் பிறகு நடந்த ஓட்டப்பிடாரம் இடைத் தேர்தலில் வேட்பாளர் சண்முகய்யாவுக்கு நான் பணியாற்றியதும் தெரியாதா?
• 2019 - இல் விளாத்திகுளம் இடைத்தேர்தல் நடந்தபோது நண்பர்கள் எனக்காக விருப்ப மனு தாக்கல் செய்தார்கள். அதற்குப் பிறகு நடந்த  நேர்காணலில் இதே முதல்வர் சொல்லி நான் புறக்கணிக்கப்படுகிறேன். என்னுடைய பணிக்கான ஓர் அங்கீகாரமும் இல்லை என்றாலும் நான் தொடர்ந்து கட்சிப் பணி செய்து கொண்டுதானே இருந்தேன்? 

• அப்படியிருக்கும்போது நான் அறிவாலயம் பக்கமே வருவதில்லை என்று அபத்தமாக பொய் சொல்வது எப்படிச் சரியாக இருக்கும் நான்  52 ஆண்டுகாலத்துக்கும் மேலாக தொடர்ந்து அரசியலில் இருப்பவன். பொய்யாக என்னைப் பற்றி இப்படிப் பேச என்ன தகுதி இருக்கிறது? எப்படியோ கையைக் காலைப் பிடித்து ஏதோ ஒரு பதவியில்  ஒட்டிக் கொண்டிருப்பதால் என்னைப் பற்றி இப்படி அபத்தமாகப் பேச உங்களுக்கு தகுதி வந்துவிடும். எதைப் பேசினாலும் அர்த்தத்தோடு பேச வேண்டும். தெரிந்தும் இப்படி அபத்தமாகப் பேசுவது ஏன்?  

• என்னுடைய பணிகளுக்கு இப்படி ஒரு நீண்ட பட்டியலே உண்டு. அவையெல்லாம் இந்த மனிதனுக்கு என்ன தெரியப் போகிறது? போகிற போக்கில் அனாமதேயமாக வாயில் வருவதையெல்லாம் பேசிக் கொண்டிருப்பது நல்லதல்ல. நான் பேசினால் கடுமையாக இருக்கும். இந்த வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம். ஏற்கெனவே 2002- இல் என்னைப் பற்றி இல்லாத, பொல்லாததை எல்லாம் பற்ற வைத்தது போல் எல்லாம் இப்போது வேண்டாம். கலைஞர் இப்போது உயிரோடு இருந்தால் இதை நிரூபிப்பேன். 

• என்னை மாதிரி உழைத்து அரசியலுக்கு வரவில்லை. போகிறபோக்கில் ஏதோ காற்றில் அடித்தது மாதிரி பதவி கிடைத்த வேகத்தில் எதையும் பேச வேண்டாம். நாங்கள் அரசியலிலேயே ரணங்களை மட்டும்தான் பார்த்திருக்கிறோம்.

#ksrpost
13-12-2022.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...