Wednesday, December 2, 2020

 

1921ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதி இரவு 1.30 மணிக்கு பாரதி காலமானார். அவருடைய இறப்புச் சான்றிதழும் அவர் 12ம் தேதி இறந்ததாகவே சொல்கிறது. 12தேதி காலை விடிந்ததும் நேற்று இரவே பாரதி இறந்து போனார் என்று நண்பர்களுக்குத் தகவல் சொல்லப்பட்டதால் அது 11ம் தேதி பாரதி மறைந்ததாக எடுத்துக்கொண்டு
விட்டார்கள்.
ஆனால் இன்றைக்குத்தான் (செப்டம்பர் 12) அவருடைய நினைவுநாள். அதற்கு ஆதாரம், கார்ப்ரேஷன் ஆஃப் மெட்ராஸ் வழங்கிய பாரதியின் இறப்புச் சான்றிதழ் பதிவின் இணைப்பில் உள்ளது.
2007ம் ஆண்டு பாரதியின் 125வது பிறந்த நாளை விழாவாக எடுத்து, தமிழக ஆளுமைகள் பலரும் பாரதி குறித்து எழுதிய கட்டுரைகள் அடங்கிய “கரிசல்காட்டு கவிச்சோலை” என்ற நான் தொகுத்த நூலினை திரு வைகோ அவர்கள் வெளியிட, நடிகர் சிவகுமார் பெற்றுக் கொண்டார்.
இரா.செழியன், நல்லகண்ணு, பாரதிபாஸ்கர்,மற்றும் பாரதியார் வாரிசுகளும் பங்கேற்றனர். பாரதியாருடைய மனைவி செல்லம்மாள் கையொப்பமிட்டு எழுதிக்கொடுத்த பத்திரத்தின் நகலை பாரதியின் பேத்தி டாக்டர்.விஜயபாரதியும், அவருடைய கணவர் மறைந்த நண்பர் பேராசிரியர் சுந்தர் ராஜனும் என்னிடம் வழங்கியிருந்தனர். அந்த ஆவணத்தின் நகலையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
________________________________________
“கரிசல்காட்டு கவிதைச்சோலை பாரதி” நூலில் இடம்பெற்றுள்ள செய்திகள்.
****************************************
பாரதியை யானை முட்டியது ஜூன் மாதத்தில். பிறகு மூன்று மாதம் கழித்தே அவர் மரணம் சம்பவித்தது. இடையே சுதேச மித்ரனில் வேலைக்கும், வெளியூர் பயணங்களுக்கும் சென்று வந்தபடி தான் இருந்தார்.
யானை தாக்கிய பிறகு, புதுச்சேரியிலிருந்த பாரதிதாசனுக்கு அனுப்பிய கடிதத்தில், " தான் உடல் நலம் தேறிவிட்டதாக " பாரதி எழுதவும், "நான் நம்ப மாட்டேன் ஒரு புகைப்படம் எடுத்து அனுப்புங்கள்" என்று பாரதிதாசன் பதில் எழுதியிருக்கிறார்.
அதற்காக, சென்னை பிராட்வே ரத்னா கம்பெனி ஸ்டூடியோவில் 1921ஜூலையில் எடுத்தபடம் தான் முண்டாசு பாரதி. அதைத் தான் பாரதி தாசனுக்கு ஒரு பிரதி அனுப்பி வைத்தார்.
1921 செப்டம்பரில் வ.வே.சு ஐயர் ஒரு கட்டுரை எழுதியது தொடர்பாக போலிசாரால் கைது செய்யப்பட, பாரதி உடல்நலமில்லாமல் இருந்த தகவல் அவருக்குக் கிடைத்தது.
காவலர்கள் சூழ பாரதி வீட்டுக்கே வந்து உடல் குணமடைய மருந்து எடுத்துக்கொள்ள அறிவுருத்திச் சென்றார் வ.வே.சு. அவர் வந்துபோன அதே தினத்தில் கவிஞன் உயிர் நீர்த்துப் போனது.
பாரதி இறந்ததன் காரணம் கடுமையான வயிற்றுப் போக்கு (வயிற்றுக் கடுப்பு ). செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்தே விடுப்பில் தான் இருந்தார். வேலைக்கு 12ம் தேதி திரும்புவதாகச் சொல்லி அனுப்பின அதே தினத்தில் அவர் உடல் திருவல்லிக்கேணி கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில்
தகனம் செய்யப்பட்டது.
பத்து நாளும் மனிதர் சிகிச்சையும் எடுத்துக்கொள்ளவில்லை மருந்தும் எடுத்துக் கொள்ளவில்லை. பாரதி மறைந்தது சரியாக இரவு 1:30மணிக்கு... பொழுது விடிந்த பிறகே அவர் மரணச் செய்தி நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.
மரணத்தின் போது உடல் மெலிந்து ஐம்பது கிலோவுக்கும் குறைவான எடையில் இருந்தார்.
பாரதிக்கு மகன்கள் கிடையாது இரண்டு மகள்கள் மட்டுமே. மூத்தவர் தங்கம்மாள், இளையவர் சகுந்தலா. ஆக தூரத்து உறவினரான ஹரிஹர சர்மா என்பவர் தான் பாரதி உடலுக்கு எரியூட்டினார்.
பாரதி மறைந்ததும் செல்லம்மாள் தன் கணவரின் படைப்புகளை தன் சகோதரர் அப்பாத்துரையின் துணையுடன் சிறுசிறு நூல்களாக வெளியிடத் துவங்கினார். "சுதேச கீதங்கள்" என்ற இரு பாகங்களுக்குமேல் அவரால் வேறொன்றும் இயலவில்லை.
பாரதியின் படைப்புகள் அத்தனையும் வெறும் 4000ரூபாய் காப்புரிமைக்குக் கை மாறியது
அதிலும் செல்லம்மாள் வாங்கின கடன் 2,400போக மீதம் 1,600 மாதம் 200என எட்டு தவணையாகக் கொடுப்பதென்று ஒப்பந்தம் செய்யப்பட்டது .
பாரதியின் படைப்புகளுக்கான காப்புரிமையை வாங்கியவர் சி.விசுவநாத ஐயர்.
(செல்லம்மா பாரதி எனக் கையொப்பமிட்ட அந்த ஐம்பது பைசா பத்திரத்தின் பிரதிகளைச் சில நாட்கள் முன்பு கையில் பெற்ற போது இனம்புரியாத உணர்வு எனக்குள்)
ஆனால், உலக சரித்திரத்திலே நடைபெறாத இலக்கிய பரிமாற்றமாக விசுவநாத ஐயரிடமிருந்து காப்புரிமையை வாங்கி 1949ல் பாரதி மறைந்து 27வது ஆண்டில் அவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கியது அரசாங்கம்.
கடையத்தில் தன் கடைசி வரை வாழ்ந்தார் செல்லம்மாள். தன் பேரப்பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டுமென்று செல்லம்மாள் அளவில்லாத தாகத்தோடு இறைஞ்சினதை அவருடைய
மூத்தமகள் தங்கம்மாளின் மகளும், பாரதியின் பேத்தியுமான டாக்டர். எஸ்.விஜயபாரதி தன் நினைவுகளில் இருந்து குறிப்பிடுகின்றார்.
தங்கம்மாளும், சகுந்தலாவும் முறையே மலேசியாவில் உள்ள மலாக்கா, செரம்பான் ஆகிய நகரங்களுக்குத் தத்தம் கணவரோடு புலம்பெயர்ந்தார்கள்.
இன்றைக்கு அவரது பேத்தி டாக்டர்.எஸ்.விஜயபாரதி காப்புரிமை குறித்த பன்னாட்டு வழக்கறிஞராக கனடாவில் தன் கணவர் மற்றும் மகள்களோடு வசிக்கின்றார். பாரதியோ நம் எல்லோரிடையேயுமாக தெருக்களிலும், நகர்களிலும், ஊர்களிலும், பெயர்களிலும், கவிதையிலும், காட்சியிலும், வார்த்தையிலும், வரிகளிலும் நெஞ்சரத்திலும் நீங்காமல் வாழ்கின்றார்....
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-09-2020.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்