Wednesday, December 9, 2020

 #இந்திய-#சீன_சிக்கல்-3

———————————





இந்திய-சீன ராணுவ வீரர்கள் தற்போது சண்டையிட்ட இடம் தான் கல்வான் பள்ளத்தாக்கு. காரகோரம் மலைத்தொடரில் தொடங்கி 80 கிலோமீட்டர் பயணித்து அக்சய் சின் வழியாக கிழக்கு லடாக் பகுதியில் சென்று ஷியோக் நதியில் சங்கமிக்கும் அழகான கல்வான் ஆற்றின் பெயரை கொண்டு தான் இந்த பகுதி அழைக்கப்படுகிறது.
கல்வான் பள்ளத்தாக்கு 1962-ஆம் ஆண்டு இந்திய சீன போரின் போதும் முக்கிய புள்ளியாக இருந்து உள்ளது. இந்த பகுதி இந்தியா-சீனா இடையே வரையறுக்கப்படாத எல்லை கோட்டில் உள்ளது. கடந்த 1950-ம் ஆண்டு வரை சீனா, கல்வான் ஆறு வரை தனது நாட்டின் எல்லை இருப்பதாக சொல்லி வந்தது.
ஆனால் 1956-ம் ஆண்டு முதல் கல்வான் ஆறும், அதனை ஒட்டியுள்ள மலைப்பகுதியும் தனக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை கல்வான் ஆறு மற்றும் சீனா வசப்படுத்தி உள்ள அக்சய் சின் பகுதி முழுவதும் தனக்கே சொந்தம் என்று கூறி வருகிறது. அக்சய்சின் பகுதி தற்போது சீனா வசம் இருந்தாலும், அது இந்தியாவின் ஒரு பகுதியாக தான் இருந்தது.
கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள கல்வான் ஆற்றை முதன் முதலில் 1892-ம் ஆண்டு கண்டறிந்தவர் குலாம் ரசூல் கல்வான். லடாக் பகுதியை சேர்ந்த அவர், ஒரு கடினமான சாகசக்காரர் மற்றும் ஆய்வாளர். 19-ம் நூற்றாண்டுகளில் ரஷ்யா மற்றும் இங்கிலாந்து மலையேற்ற குழுவினர் மற்றும் சுற்றுலா பயணிகளை அழைத்து கொண்டு அங்குள்ள மலைகளில் ஏறி இறங்குவார். அந்த சமயத்தில் தான் அவர் இந்த ஆற்றை முதலில் கண்டுபிடித்தார்.
பொதுவாக ஒரு இடம் கண்டுபிடிக்கப்பட்டால் ஆங்கிலேயர்கள் பெயர்கள் தான் கொடுக்கப்படும் ஆனால் ஒரு புவியியல் இடத்துக்கு உள்ளூர் ஆய்வாளர் பெயர் பெற்றது.
ஆம் டன்மோர், தலைமையான ஒரு இங்கிலாந்து மலையேற்ற குழுவினரு உயரமான மலைகள் மற்றும் செங்குத்தான பள்ளத்தாக்குகளின் சிக்கிருந்த போது அந்த சிறுவன் பள்ளத்தாக்குகள் வழியாக ஒப்பீட்டளவில் எளிதான வழியைக் கண்டுபிடித்தார், இது பயணத்திற்கு அதிக சிரமமோ அல்லது விபத்துகளோ இல்லாமல் முன்னேற உதவியது.
இதனால் ஆச்சரியம் அடைந்த குழுவின் தலைவர் டன்மோர் புதிதாக வந்த பாதைக்கு கர்ஜிக்கும் நீரின் விளிம்பில் ஆற்றுக்கு “கல்வான் நுல்லா” என்று பெயரிட முடிவு செய்தார்.
கல்வான் என்பது காஷ்மீரிய மொழியில் கொள்ளைக்காரன் என்று பொருள். கல்வான் என்பது அவர்களது குடும்ப பெயர் ஆகும். எனிலும் ‘கல்வான்’ என்ற சொல்லுக்கு காஷ்மீர் மொழியில் குதிரை பராமரிப்பாளர் என்றும். “காஷ்மீரின் கல்வான்கள் அல்லது குதிரை பராமரிப்பாளர்கள் சிலர் டம்ஸின் சந்ததியினர் என்றும் இருவேறு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
குலாம் ரசூலின் தாத்தா பெயர் காரா கல்வான் ஆகும். காரா கல்வான் என்பது காஷ்மீர் மொழியில் கருப்பு குதிரை கொள்ளையன் என்பதாகும். இவர் காஷ்மீர் மகாராஜாவின் படுக்கை அறையில் திருடும் போது கையும் களவுமாக சிக்கி தலை துண்டிக்கப்பட்டார். ஆனால் குலாம் ரசூல் கல்வான், ஒரு சிறந்த மனிதர் என்று ஆங்கிலேயர்கள் கூறுகிறார்கள். அவர்கள் குலாம் ரசூல் கல்வான் பற்றி சர்வண்ட் ஆப் சாகிப் என்ற பெயரில் ஒரு புத்தகமே எழுதி உள்ளனர். அந்த புத்தகத்தில் பிரபல பிரிட்டிஷ் ஆய்வாளர் டாக்டர் டாம் லாங்ஸ்டாப், எங்கள் கேரவன் தலைவரான ரசூல் கல்வான் ஒரு சிறந்த மனிதர். அவர் அனைவராலும் மிக உயர்ந்தவராக மதிப்பிடப்பட்டார். அவரின் தந்தை ஒரு கொள்ளையர் இனத்தைச் சேர்ந்தாலும், அவரது தாய் மாறுப்பட்ட இனத்தை சேர்ந்தவர். எனவே குலாம் ரசூல் கல்வான் இரு குணாதிசயங்களை கொண்டு இருந்தார். அவர் முற்றிலும் நேர்மையானவர் என்று அதில் குறிப்பிட்டு உள்ளார்.
இன்றைக்கும் கல்வானின் குடும்பம் லடாக் பகுதியில் உள்ளது. அவர்கள் தற்போது சொந்தமாக விடுதி ஒன்றை நடத்தி வருகின்றனர். ஒரு இந்தியரின் பெயரால் அழைக்கப்படும் இந்த கல்வான் பகுதியை தான் சீனா தனக்கு சொந்தம் என்று உரிமை கொண்டாடி பிரச்சினை செய்து வருகிறது. இந்தப்பகுதி மக்கள் வசிக்க முடியாத கடும் குளிர் நிலவும் பகுதியாகும். தற்போது அங்கு இந்திய- சீன ராணுவ வீரர்கள் மட்டுமே இருந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த, 1962ல் இந்தியா - சீனா இடையேயான போர், இதே கல்வான் பகுதியில் இருந்து தான் துவங்கியது. தற்போது, அந்தப் பகுதியில் பிரச்னை தீவிரமடைந்துள்ளதால், மீண்டும், 1962ல் நடந்தது போன்று போர் ஏற்படுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.'கொரோனா' தொற்று பரவல், பொருளாதார பாதிப்பு போன்ற பிரச்னைகள் இருக்கும் போது, தற்போது எல்லைப் பிரச்னையை சீனா கையில் எடுத்துள்ளது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன், எல்லையை நாம் வரையறுத்துள்ளோம். அதனால் தான், பாகிஸ்தானுடன் ஐ.பி., எனப்படும் சர்வதேச எல்லை மற்றும் எல்.ஓ.சி., எனப்படும், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 3,488 கிமீ எல்லையை பகிர்ந்துக் கொண்டுள்ள இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பல பகுதிகளில் எல்லைக் கட்டுப்பாடு கோடு வரையறுக்கப்படாததால் அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. பல்வேறு ஒப்பந்தங்களின் அடிப்படையில், பரஸ்பரம் சில பகுதிகளை இந்தியா விட்டுக் கொடுத்துள்ளது. சிலவற்றை கையில் வைத்துள்ளது.
அதனால் தான், இரண்டடி முன் வைத்தால், ஒரு அடி பின்வாங்குவது என்ற கொள்கையின்படி, எப்போதும் ஒவ்வொரு அடியாக, அண்டை நாடுகளை சீனா கைப்பற்றி வந்துள்ளது. திபெத் உட்பட இதற்கு பல உதாரணங்களை கூறலாம். நம் நாடு சுதந்திரம் அடைந்து, குடியரசு அந்தஸ்து பெற்றதில் இருந்து, சீனாவையே முழுமையாக நம்பியிருந்தோம். ஒரு கட்டத்தில் சீனாவை சந்தேகக் கண்ணோடு பார்த்தாலும், சீனா நம்மோடு மோதுமே தவிர, போரில் ஈடுபடாது என்பதே, 1962ம் ஆண்டு நடந்த போர் வரை நம்முடைய முந்தைய ஆட்சியாளர்களின் எண்ணங்களாக இருந்தது.
தன் ஆக்கிரமிப்பு கொள்கையை, திறம்பட சீனா செயல்படுத்தி வந்துள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த, அக்சாய் சின் பகுதியை சீனா ஆக்கிரமித்தது. இந்தியா - சீனா இடையேயான, எல்.ஏ.சி., எனப்படும் உண்மையான கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகே இது அமைந்துள்ளது. அதேபோல் எல்லைக்கு மிக அருகில் உள்ள, லடாக்கின் கல்வான் பகுதி, இத்தனை ஆண்டுகளாக நம்முடைய கட்டுப்பாட்டில் உள்ளது.லே பகுதியைச் சேர்ந்த சுற்றுலா நிபுணரான, குலாம் ரசூல் கல்வான், இந்த நதி இருப்பதை கண்டுபிடித்தார். அதனால், அதற்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டது. இந்த நதி, அக்சாய் சின்னுக்கு மேற்கே அமைந்துள்ளது. அக்சாய் சின்னில் இருந்து உருவாகிறது. கடந்த, 1960ல் இந்த நதியை ஒட்டியுள்ள பகுதியை தன் எல்லையாக சீனா கூறி வந்தது. கடந்த, 1962ல் நடந்த போரில் அதை கைப்பற்றியது.
அதன் பிறகு, இரு நாடுகளுக்கு இடையேயும் அமைதி ஏற்பட்டது. கடந்த, 1960ல் இந்த நதியை ஒட்டியுள்ள பள்ளத்தாக்கு பகுதியை, உண்மையான கட்டுப்பாட்டு பகுதியாகக் கருத, இரு நாடுகளும் முடிவு செய்தன. ஆனால், இது தொடர்பாக எந்த ஒரு வரைபட பகிர்வும் நடக்கவில்லை. அதன்படி, கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகள், நம்முடைய எல்லைக்குள் வந்தன.
கோடைக் காலத்தில் இந்த பகுதிக்கு யாரும் செல்ல மாட்டார்கள். குளிர்காலத்தில் மட்டும், சுற்றுலா உள்ளிட்டவற்றுக்காக செல்வர். மற்றபடி, பெரிய அளவில் பயன்பாட்டில் இல்லை என்றே கூறலாம்.தற்போது, கல்வான் பள்ளத்தாக்கு பகுதி திடீரென முக்கியத்துவம் பெற்றதற்கு காரணம் உள்ளது.
கடந்த, 1962ல் நடந்த போருக்குப் பின், சீனாவுடன் உறவு இருந்தாலும், எப்போதும் சந்தேகத்துடனே அதை பார்த்து வருகிறோம். எந்த நேரத்தில் என்ன செய்யும் என்ற அச்சம் உள்ளது. தன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சாலை வேய்வது உள்ளிட்ட வசதிகளை சீனா செய்து வந்தது. ஆனால், நம்முடைய அரசுகள் அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்தன.
அதோடு, அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகள் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்துக்கு சொந்தமானவை என சீனா கடந்த பல ஆண்டுகளாக உரிமை கொண்டாடி வரும் நிலையில், கடந்த 3 ஆண்டாக அமைதி நிலவிய நிலையில், எல்லையில் 2023ம் ஆண்டுக்குள் 66 சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்தியா முழு வீச்சில் திட்டமிட்டு மேற்கொள்ளும் சாலை கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள்தான் சீனாவுக்கு திடீர் கோபம் ஏற்பட காரணமாகியுள்ளது.
சீனா, நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளை ஒட்டிய எல்லைக்கு விரைவில் ஆயுத தளவாடங்களை கொண்டு செல்ல வசதியாக இந்தியா சாலை மற்றும் பாலப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம், சீனாவின் எல்லையையொட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில், கடல்மட்டத்தில் இருந்து 17,000 அடி உயரத்தில் இருக்கும் லிபுலேக்கை இணைக்கும் வகையில் சுமார் 80 கி.மீ. தொலைவிற்கு புதிய சாலை திறக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த சீனா, நேபாளத்தை இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. ஏதாவது போர் சூழல் ஏற்பட்டால், மிக விரைவில், நம் படைகள் எல்லைக்கு செல்ல முடியும். அதேபோல, கிழக்கு லடாக் பகுதியில் 255 கி.மீ நீளமுள்ள தவுலத் பேக் ஓல்டி நெடுஞ்சாலையை இந்தியா சீரமைத்ததன் விளைவு தான், சீனாவின் ஊடுருவலுக்கு முக்கிய காரணமே. 13,000 அடி உயரத்தில் தொடங்கும் இந்த சாலை 16,000 அடி உயரம் வரை பயணிக்கிறது. இந்தியா- சீனா எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்கு நேர் இணையாக செல்லும் இந்த சாலை, கரகோரம் மலைத்தொடரின் அடிவாரத்தில் இருக்கும் தவுலத் பேக் ஓல்டி விமானத் தளத்தை, லடாக் ஒன்றியப் பகுதியோடு இணைப்பதால் ராணுவ மட்டத்தில் இந்த சாலை முக்கியத்துவம் பெறுகிறது. இந்த கரகோரம் மலை தொடர் லடாக் மற்றும் சீனாவின் சின்ஜியாங் உய்கர் தன்னாட்சி பிரதேசத்தை பிரிக்கிறது. இந்த சாலைகள் இந்தியாவுக்கு சாதகமாக அமையும் என்பதால் சீனா பயப்படுகிறது. அதனால்தான் ஒருபக்கம் நேபாளத்தை தூண்டிவிட்டும், மறுபுறம் பாகிஸ்தானை சீண்டி விட்டும், லடாக்கில் ஊடுருவி இந்திய வீரர்களை தாக்கி நெருக்கடி கொடுத்து வருகிறது.
கடந்த 15ம் தேதி இரவு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சீன ராணுவத்தினர் கண்காணிப்பு முகாம் அமைத்ததை சந்தோஷ் பாபு தலைமையிலான இந்தியப் படையினர் எச்சரித்து உடனடியாக முகாமை காலி செய்துவிட்டு பின்செல்லுமாறு கூறியுள்ளது. இதற்கு சீன படையினர் கடும் ஆட்சேபம் தெரிவித்து அங்கிருந்து சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே கூடுதல் படையினர் பாதுகாப்பு கவசங்களை அணிந்தபடி அங்கு மீண்டும் வந்து கைகலப்பில் ஈடுபட்டனர். அவர்கள் கற்கள், இரும்பு ராடு, முள்கம்பி சுற்றிய கட்டைகள் போன்றவற்றை கொண்டு இந்திய வீரர்களை தாக்கினர்.
தகவலறிந்து கூடுதல் படையினர் அங்கு விரைந்து, சீன ராணுவத்தினருக்கு பதிலடி தரப்பட்டது. இரவு தொடங்கிய சண்டை அடுத்த நாள் அதிகாலை வரை நீண்டுள்ளது. மைனஸ் டிகிரி வெப்பநிலையில் கடும் குளிர் நிலவிய நிலையில், படுகாயமடைந்த வீரர்கள், சண்டை நடந்த இடத்தின் அருகில் இருந்த கல்வான் ஏரிக்கரையில் ஆங்காங்கே மயங்கி விழுந்துள்ளனர். சில இந்திய வீரர்களை சீன ராணுவத்தினர் பிடித்துச் சென்ற நிலையில், பின்னர் விடுவித்துள்ளனர். இந்த கைகலப்பில்தான் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இந்தியாவுடன் மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில், எல்லையில் சீன ராணுவம் சமீபத்தில் செய்த போர் ஒத்திகையை தற்போது வெளியிட்டு மிரட்டியிருக்கிறது. சீன அரசின் பத்திரிகையான குளோபஸ் டைம்ஸ் தனது டிவிட்டரில் வெளியிட்ட அந்த வீடியோவில், சீனா ஆளுகைக்குட்பட்ட திபெத்தின் தெற்கு பகுதியில் உள்ள டாங்குலா என்ற இடத்தில் இந்த போர் பயிற்சி நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் உட்பட அதிநவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தரையிலிருந்து வானில் பாயும் ஏவுகணைகள், நீண்ட தூரத்திற்கு எறியும் பீரங்கி குண்டுகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
லடாக் பிரச்னையை தொடர்ந்து முப்படைகளுக்கும் உச்சகட்ட அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலில் சீன கடற்படை அத்துமீறும் நிலையில், கடற்படை வீரர்கள் முழு எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தி உள்ளது. இந்திய ராணுவமும், விமானப்படையும் தயார் நிலையில் உள்ளன.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங்க் யீ உடன் தொலைபேசியில் பேசியபோது, கல்வான் மோதல் இருதரப்பு உறவி்ல் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், சீனா தனது நடவடிக்கைகளை சரிப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், சீன தரப்பு திட்டமிட்டு இந்த தாக்குதல் நடத்தியதாக சில விளக்கங்களும் தரப்பட்டுள்ளது.
மே 5-6 : லடாக்கின் பாங்காங்க் திசோ ஏரிப் பகுதியில் ரோந்து பணியின் போது இந்திய, சீன ராணுவ வீரர்கள் மத்தியில் கைகலப்பு ஏற்பட்டது. சுமார் 250 வீரர்கள் மோதிக் கொண்ட இந்த கைகலப்பில் சீன படையினர் கற்கள், இரும்பு ராடுகள், இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்ட கட்டைகளை கொண்டு பயங்கரமாக தாக்கினர்.
மே 9 : கைகலப்பால், லடாக் கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக சிக்கிமின் நகுலா பகுதியில் மீண்டும் இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. 150 வீரர்கள் சண்டை போட்டுக் கொண்டதில் இந்திய தரப்பில் 4 வீரர்களும், சீன தரப்பில் 7 பேரும் காயமடைந்தனர்.
மே 10 : இவ்விரு கைகலப்பு சம்பவங்களையும், இரு தரப்பினர் காயமடைந்தது குறித்தும் இந்திய ராணுவம் உறுதி செய்தது.
மே 12 : கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு தரப்பு வீரர்கள் நேருக்கு நேர் சந்தித்தனர். எல்லைக் கட்டுப்பாடு கோடு வரையறுக்கப்படாத இப்பகுதியில் சீன படையினர் அத்துமீற முயன்றனர்.
மே 19 : பாங்காங்க் திசோ, கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸில் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லைக் கட்டுப்பாடு கோட்டில் இந்திய படை அத்துமீறியதாக சீன வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியது. வழக்கமான ரோந்து பணியின்போது சீன படையினர் குறுக்கிடுவதாக இந்தியா குற்றம்சாட்டியது. இந்திய படைகள் எல்லைக்கு உட்பட பகுதியில் மட்டுமே செயல்படுவதாக ராணுவம் விளக்கம் அளித்தது.
மே 22 : ராணுவ தளபதி நாரவனே லே பகுதியில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து இரு தரப்புகளும் எல்லையில் படைகளை குவிக்கத் தொடங்கின.
மே 25 : சீனா தனது எல்லையில் 5,000 வீரர்களை கூடுதலாக நிறுத்தியது. பதிலுக்கு இந்தியாவும் படைகளை அனுப்பியது.
மே 27 : பதற்றமான சூழலில் இந்திய, சீன ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடந்தது.
மே 30 : எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியா, சீனா ராணுவ மற்றும் தூதரக ரீதியாக பேச்சுவார்த்தை நடத்துவதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
ஜூன் 6 : அரிதாக நடக்கக் கூடிய, லெப்டினன்ட் ஜெனரல் கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது. இதன் மூலம் லடாக் எல்லையில் பதற்றம் தணியத் தொடங்கியது.
ஜூன் 9 : கல்வான் பள்ளத்தாக்கு, பேட்ரோலிங் பாயின்ட் 15, ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் 3 இடங்களில் சீனா தனது படையை வாபஸ் பெறத் தொடங்கியது.
ஜூன் 10 : 4ம் கட்டமாக இரு தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. மேஜர் ஜெனரல் மட்டத்திலான அதிகாரிகள் பேட்ரோலிங் பாயின்ட் 14 பகுதியில் ஆலோசனை நடத்தினர்.
ஜூன் 12 : சீனா தனது எல்லையின் பின்தங்கிய பகுதியில் 8,000 வீரர்களை நிலைநிறுத்தியது. மேலும் பீரங்கிகள், பீரங்கி குண்டுகள், ராக்கெட் குண்டுகள், வான்வழி தாக்குதல் தடுப்பு ரேடார்கள் போன்ற ஆயுதங்களை தயார் செய்திருந்தது.
ஜூன் 13 : லடாக் எல்லையில் நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டதாகவும், படிப்படியாக படைகள் வாபஸ் பெறப்படும் என்றும் ராணுவ தளபதி நாரவனே நம்பிக்கை தெரிவித்தார்.
ஜூன் 15 : ராணுவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை மீண்டும் தொடர்ந்தது. அன்றைய மாலையிலேயே இந்திய, சீன ராணுவத்தினர் இடையே பயங்கர கைகலப்பு வெடித்தது.
கல்வான் பள்ளத்தாக்கு மீது சீனாவுக்கு எப்போதும் இறையாண்மை உண்டு. தற்போது எல்லையில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. இனியும் எந்த மோதலையும் நாங்கள் விரும்பவில்லை, எனக்கூறி சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் லிஜியன் புதுப்பிரச்னையை கிளப்பி உள்ளார். இதே போல சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யி, ‘‘தற்போதைய சூழலை வைத்து இந்திய தரப்பு தவறாக மதிப்பிட்டு விடக் கூடாது. எங்கள் பிராந்தியத்தின் இறையாண்மையை பாதுகாக்காமல் நாங்கள் விட்டுவிடுவோம் என தப்பு கணக்கு போட வேண்டாம்,’’ என எச்சரித்துள்ளார்.
இந்திய தரப்பில் 20 வீரர்கள் பலியானதாக ராணுவம் உறுதி செய்த நிலையில், பலி தொடர்பாக சீனா எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடாத நிலையில் அமெரிக்காவுக்குக் கிடைத்துள்ள உளவுத் தகவலின்படி, சீனாவில் ஒரு உயர் அதிகாரி உள்பட 35 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவும், சீனாவும் மேற்கொண்டுள்ள அமைதி ஒப்பந்தத்தின்படி இருதரப்பு ராணுவமும் சர்ச்சைக்குரிய எல்லை பகுதியில் இருந்து 2 கிமீ தொலைவுக்கு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதத்தை பயன்படுத்தக் கூடாது என்பது விதிமுறையாகும். அதனால்தான், எல்லை தாண்டுதல் சம்பவங்களை தடுக்கும்போது இரு நாட்டு வீரர்களும் கைகலப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
21.06.2020

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...