Wednesday, December 2, 2020

 


#மூத்த_பத்திரிகையாளரும், #எனது_40 #ஆண்டு_கால_நண்பருமான_சுதாங்கன் இன்று(12-09-2020) நம்மிடமிருந்து விடைபெற்றார்..ஆழ்ந்த இரங்கல்.
———————————————-



திருநெல்வேலி மாவட்டத்தின் (இன்று தூத்துக்குடி) தென் திருப்பேரையின் மைந்தரான பிஶ்ரீ குடும்பத்தை சேர்ந்த சுதாங்கன் 63 (Pitchumani Sudhangan ), 1993 வரை நந்தனத்தில் நான் குடியிருந்தபோது, தினமும் அவரின் பணிகளை முடித்துவிட்டு இரவில் என்னை சந்தித்துவிட்டுதான் செல்வார். பல செய்திகள், சம்பவங்கள், நிகழ்வுகள் அவரோடு பின்னி பிணைந்து நட்போடு இருந்த நாட்களை நினைத்து பார்ப்பதுண்டு, இப்போதும் நினைத்து பார்க்கிறேன்.
எம்.ஜி.ஆர்-எம்.ஆர்.ராதா துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஆவணப்படுத்தினார். ஜூனியர் விகடன், விகடன் போஸ்ட் (tabloid) போன்றவை நல்ல கட்டமைப்போடு வெளிவர சுதாங்கனும் ஒரு காரணம்.
வேலுபிள்ளை பிரபாகரனை பல முறை நானும் சுதாங்கனும் சந்தித்தது உண்டு. இலங்கைக்கு வைகோ 1989ல் ரகசியமாக சென்ற செய்தியை ஜூனியர் விகடனில் முதன் முதலாக வெளியிட்டார். அந்த செய்தியை கொண்டு காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் சட்டமன்றத்தில் எழுப்பிய
போது உடனே தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் உயர் நீதிமன்றத்தில் இருந்த என்னை உடனே அழைத்து முதல்வர் அறையில் வைத்து கேட்ட தெல்லாம் உண்டு.
மாலனின் திசைகள் இதழில் தன் எழுத்துப் பணியைத் தொடங்கியவர் பிறகு குமுதம் பத்திரிகையில் பகுதி நேர நிருபராகப் போனார். அங்கே அப்போது இணையாசிரியராக இருந்தவர் திரு ரா.கி.ரங்கராஜன். அதனால் இவர் பெயர் மாற்ற வேண்டிய சூழல். ரங்கராஜனான இவர் சுதாங்கன் ஆனார்.
கடந்த 1982 இறுதியில் விகடன் நிறுவனத்தில் புதிதாக துவங்க இருந்த ஜூனியர் விகடனின் முதல் நிருபராக சேர்ந்தார். பத்து ஆண்டுகள் அங்கே பணி புரிந்தார் . 1986ம் ஆண்டு கிராமப்புற ரிப்போர்ட்ங்கிற்காக கொல்கத்தாவின் ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையின் விருதை பெற்றார். இவரின் கட்டுரை தொகுப்புதான் தேதியில்லாத டைரி.
நாடு முழுவதும் 1980 களில் கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்டது எனமத்தியஅரசுஅறிவித்தார் .கொத்தடிமை முறை நடைமுறையில் உள்ளது என ஆதாரபூர்வமாக நிரூபித்ததுடன் நிற்காமல் தமிழக காவல்துறை உதவியுடன் ஆந்திர மாநிலத்தில் கொத்தடிமைகளாக சிக்கி இருந்த தமிழகத்தை சேர்ந்தவர்களை காப்பாற்றினார் சுதாங்கன்.
எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது அவரது சொந்தத் தொகுதியான ஆண்டிப்பட்டியில் மக்கள் நல திட்டங்கள் குறைகளை ,கள நிலவரங்களை வெளிப்படுத்தவர் சுதாங்கன்.இது குறித்த வீடியோ ஆதாரங்களாக வெளியிட்டார்.இதை ஏற்று அன்றைய முதல்வர் எம் ஜி ஆர் தொகுதிக்கான பணிகளை செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
புலனாய்வு இதழியலில் ஈடுபாடு
மட்டுமல்ல, இவர் நடிகரும் கூட. தொலைக்காட்சித் தொடர்களிலும் பாலசந்தர், பாரதிராஜா இயக்கிய சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
அவர் பத்திரிகையாளர் என்ற பயணத்தில் விகடன், தினமணி, தமிழன் எக்ஸ்பிரஸ், தினமலரில்(நெல்லை) கட்டுரையாளர், பல தொலைக்காட்சிகளில் நெறியாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்தான் சுதாங்கன். அவரைப் பற்றி பேச எவ்வளோ சம்பவங்கள், நிகழ்வுகள் இருக்கிறது. எதை சொல்ல எதை விட……
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-09-2020.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்