Tuesday, December 8, 2020

 #விவசாயிகளின்_துயரமும்_இலவச_மின்சாரமும் - 5


#நாராயணசாமி_நாயுடுவின்_கோவில்பட்டி_இறுதிப்_பேச்சின்_சில_பகுதிகள்
-------------------------------------






கூடுதல் எச்பி, குதிரைத் திறன் கொண்ட விவசாய மோட்டார் பம்புசெட்டுகளுக்கு ரூ.20000 கட்ட வேண்டும் என்று தட்கல் திட்டம் என்று தமிழக அரசு அரசாணை எண். 19/1152020 வெளியிட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மழையில்லாமல் வானம் பார்த்த விவசாயிகள் கிணற்றுப் பாசனத்தை நம்பியே விவசாயம் செய்கின்றனர். 1000 அடிக்கு மேல் ஆழ்குழாய் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க வேண்டுமென்றால் 12ல் இருந்து 15 வரை குதிரைத்திறன் (எச்பி) இருந்தால் தான் தண்ணீர் விவசாயப் பயிர்களுக்கு பாய்ச்ச முடியும். விவசாயிகள் போராடிப் பெற்ற இலவச மின்சாரத்தை மத்திய அரசு பறிக்கப் பார்க்கின்றது. கோமணம் கட்டிய வெள்ளந்தி விவசாயிகளுக்கு இருந்த ஒரே பலன் இந்த இலவச மின்சாரம் தான், அதுவும் பறிபோக போகின்றது. உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு தலைமையில் போராடிப் பெற்ற இந்த இலவச மின்சாரம் ஜெயலலிதா ஆட்சியில் பறிபோக இருந்தது. இதற்காக விவசாயிகள் கடுமையான போராட்டம் நடத்தினர். கோவில்பட்டி துப்பாக்கிச்சூட்டில் எத்திராஜ் நாயக்கர் (வெங்கடாசலபுரம்), இருதய ஜோசப் ரெட்டியார் (அகிலாண்டபுரம்) பலியானார்கள். ஏறத்தாழ 45-46 விவசாயிகள் விவசாய போராட்டங்களில் துப்பாக்கிச் சூட்டிற்கு தங்களுடைய உயிர்களை பலியிட்டு பெற்றது தான் இந்த இலவச மின்சாரம். எம்.ஜி.ஆர் காலத்தில் இந்தப் போராட்டத்தைக் கண்டு சிறு குறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கினார். ஆனால் முழுமையான இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. கடந்த 1989ல் கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் அனைவருக்கும் இலவச மின்சாரம் என இந்தியாவிலேயே முதன்முதலாக அறிவிப்பு செய்தார்.

உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு 20.12.1984 அன்று இரவு கோவில்பட்டியில் சோ. அழகிரிசாமி அவர்களுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்தது தான் அவருடைய கடைசி சொற்பொழிவாக இருந்தது. இந்த கூட்டத்தை முடித்துவிட்டு கோவில்பட்டி பயணியர் விடுதிக்கு சென்று அன்று இரவு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது நெஞ்சு வலியோடு அவருடைய உயிர் பிரிந்தது. அவருடைய இறுதிப் பேச்சை முழுமையாக ஓரிரு நாட்களில் பதிவு செய்யவுள்ளேன். கோவில்பட்டியில் நாராயணி சாமி நாயுடுவின் மேடைப் பேச்சின் ஒரு சில பகுதிகளை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.

“ சுத்தமாக என்னால் பேசவே முடியாத நிலையில் நின்றுக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து இரண்டரை ஆண்டு காலமாக. எம்.ஜி.ஆர் கடன் ரத்து என்று கூறி உறுதிமொழி தந்து, ஆட்சிக்கு வந்த பிறகு, அடித்து நொறுக்கிய பிறகு, ஏமாற்றிய பிறகு தமிழ்நாடு முழுவதும் 4300 கிராமங்களுக்கு நான் சென்று மக்களைச் சந்தித்து இருக்கிறேன். விவசாயிகள் மழை வருவதஏகு முன்பாக எவ்வாறு நிலத்தை பண்படுத்துகிறார்களோ, அதுபோல தேர்தலுக்கு முன்பாக மக்களைப் பண்படுத்த வேண்டும். தேர்தலுக்கு தயார் செய்ய வேண்டும். தொடர்ந்து இரண்டரை ஆண்டு காலமாக சுற்றிக்கொண்டிருப்பதனால் உடல் மிக பலகீனமாக இருக்கின்றேன். ஒரு நாளைக்கு 20 மணி நேரம் என்று 25 நாட்களாக சுற்றி வருவதால் உடல் பலகீனமாக இருக்கின்றேன். நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

எந்த நோக்கத்திற்காக நான் சங்கத்தை ஆரம்பித்தேனோ, எந்த நோக்கத்திற்காக அதைக் கட்டிக்காத்து வந்தேனோ, அந்த நோக்கங்கள் ஈடேறும் காலம் நெருங்கி வருகிறது என்பது என்னுடைய தாழ்மையான எண்ணமாகும்.

மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து 40 ஆண்டு காலமாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்ற கழக தோழர்களே, தொழிலாளர்களுக்காகப் பாடுபட்ட மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் நண்பர்களே, இந்த நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற கங்கணம் கட்டிக் கொண்டுள்ள ஜனதா கட்சி தோழர்களே, இப்படி மக்களுடைய பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் கட்சி அடுத்த அணியிலே அ.தி.மு.க.வும், இந்திரா காங்கிரசும் ஓர் அணி 80 மில் முதலாளிகள் எனக்கு உறவினர்கள். ஆனால் நாராயணசாமி ஒரு மில் முதலாளி வீட்டுப் படியைக் கூட மிதித்ததே கிடையாது. அப்படி மிதித்தோம் என்றால் அவர்கள் விலைக்கு வாங்கி விடுவார்கள். விலைக்கு வாங்கி அரசாங்கத்திடம் காட்டி அவர்கள் மேலும் பல சலுகைகளைப் பெறுவதற்கு அமையுமே தவிர மக்களுக்குச் சேவை செய்ய முடியாது.

நான் இதை ஏன் கூறுகின்றேன் என்றால் மக்கள் ஒரு முடிவு செய்து விட்டார்கள். நான் கலைஞர் அவர்களிடம் சொன்னேன் கலைஞர் அவர்களே விவசாயிகள் கடன் ரத்து எனப்போட்டாக வேண்டும். விவசாயிகள் இலவச மின்சாரம் வழங்கவேண்டும். விவசாயத் தொழிலாளர்கள் மரணமடைந்தால் 10 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு 25 கிலோ அரசி வழங்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் தரப்பட வேண்டும்.60 வயது தாண்டியவர்களுக்கு மாதம் 200 ரூபாய் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் கோரிக்கைகளாக இருக்க முடியாது. அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இவையாவும் உழவர் உழைப்பாளர் கட்சி தேர்தல் அறிக்கையாக போட்டுள்ளது. நீங்களும் போட வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.”

என்ற ஒரு விரிவான பேச்சினைப் பேசும்போது உடனிருக்கின்றேன். அவர் மறைவின்போதும் உடனிருந்தவன். இப்படி 40 ஆண்டு காலமாக அழுதுக்கொண்டிருந்தாலும் உழுதுக் கொண்டிருக்கும் விவசாயிகள் போராடினார்கள். சிம்மக் கர்ஜனையோடு அவருடைய பேச்சுகளும் பத்திரிக்கை பேட்டிகளும் ஆவணங்களாக கையில் உள்ளன. அதைப் படிக்கும்போது பழைய நினைவுகள் எல்லாம் திரும்பிப் பார்க்க வைக்கின்றது. இப்படிப் பெற்ற இலவச மின்சாரம் 30 ஆண்டுகளுக்கு பின் பறிபோகின்றது என்பது தாங்க முடியாத வேதனை, கொடுமையிலும் கொடுமை. அப்பாவி விவசாயி நிலை கொடூரமானது. கூடுதல் குதிரைத்திறன் மோட்டார் பயன்பாட்டிற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அரசின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இலவச மின்சாரத்திற்கு எதிரான பரிந்துரைகளை மத்திய அரசு புறக்கணிக்க வேண்டும். இனிமேல் குடிசைகளுக்கு வழங்கும் மின்சாரமும் கேள்விக்குறி தான். சாதாரண 5 எச்பியில் இருந்து 7.5 எச்பி மோட்டார் பம்புகளை பயன்படுத்தும் விவசாயிகளின் பாடும் இனி பிரச்சனை தான். விவசாயம் இதனால் பாழ்பட்டுவிடும் என்பதை மத்திய மாநில அரசுகள் உணர வேண்டும்.

இதை குறித்து ஒரு பதிவு போட்டால் இன்றைக்கு உள்ளவர்கள் உடனே அதெப்படி இதெப்படி என்று கடந்த கால வரலாறு தெரியாமல் இன்றைக்கு உள்ள நிலைமையை வைத்தே பேசிக் கொண்டே செல்வார்கள். வெட்டியான விவாதங்கள் தான். அப்படிப்பட்டவர்கள் வரலாற்றைப் புரிந்துக் கொண்டு பேசுங்கள். விவசாயி என்ற வெள்ளந்தி ஜீவனை வேதனைப் படுத்தாதீர்கள். இதை எதிர்த்து போராடினாலும் விஷயம் தெரியாமல் கேலி செய்யாமல் விவசாயினுடைய பிரச்சனைகளை புரிந்துக் கொள்ளுங்கள். அப்பாவி விவசாயிகள் தங்கள் உரிமைக்காக போராடி 45க்கு மேற்பட்டவர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு தங்கள் உயிரினை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களுடைய பெயர் கிராமத்தின் பெயர் என்ற பட்டியலை பல முறை இந்த வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளேன். என்னுடைய விவசாயப் போராட்ட வரலாறு நூலிலும் இதுகுறித்த விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

போராடிப் பெற்ற இலவச மின்சாரம் தனியார்மயம் என்று சொல்லி அரசு முடக்கப் பார்த்தால் அது நாட்டுக்கு செய்கின்ற மாபெரும் பாதகம். சுதந்திரம் பெற்றதிலிருந்தே தொழிற்சாலைகள் வேண்டுமென்ற நோக்கில் சிறிது சிறிதாக விவசாயம் அழிக்கப்பட்டது. இப்போது அதை முழுவதுமாக அழிக்க கயமை உணர்வோடு நினைத்தால் தேசபிதா என்று காந்திக்கு செய்கின்ற மாபெரும் துரோகம். ஏனெனில் நாட்டின் ஆன்மா கிராமத்தில் இருக்கின்றது என்றார் அவர். கிராம ராஜ்ஜியத்தை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
19.05.2020
#ksrposts
#free_electricity
#விவசாயிகள்

No comments:

Post a Comment

இழந்து போன கூட்டுக் குடும்ப வாழ்வும் தனிமையில் தத்தளிக்கும் மனிதர்களும்.

அன்றைய கூட்டு குடும்பங்கள்…. - வழக்கறிஞர் கே.எஸ். இராதா கிருஷ்ணன் —————————————————— இழந்து போன கூட்டுக் குடும்ப வாழ்வும் தனிமையில் தத்தளிக்...