இன்றைய தினமணியில் (19.05.2020) கரானா கொடுமையை குறித்தான எனது கட்டுரை வெளிவந்துள்ளது.
#இதுவும்_நம்மைக்_கடந்து_போகும்!
————————————————
- வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,
கொரோனா,லத்தீன் மொழியில் ‘மகுடம்’ என்று சொல்லப்படும் கொரோனாத் தொற்றுக்கு முன்னால் உலக அளவில் எத்தனையோ கொள்ளை நோய்கள் பரவி ஏராளமான உயிர்களைப் பறித்துச் சென்றிருக்கின்றன.
கரோனா வைரஸ் குடும்பத்தில் பிறந்த வைரஸ் பல பிரிவுகள் . தற்போது புதிதாக தோன்றியிருப்பது தான், கோவிட் - 19. இதற்கு முன் இக்குடும்பத்தில் பிறந்த வைரஸ்களில், 'சார்ஸ் - கோவ் (SARS-COV), மெர்ஸ் - கோவ் (MERS-COV)' வைரஸ்களும் மனிதனுக்கு சற்று மிதமான பாதிப்பை ஏற்படுத்தியவை.
இது 2019 டிசம்பர்,, சீனாவின் வூகான் மாகாணத்தில் தோன்றிய கரோனா உலக அளவில் அதிகம் உயிரை பலி கொண்ட பட்டியலில், 2ம் இடத்தில் உள்ளது. விரைவில், முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. கரோனா குடும்பத்தில், புதிதாக தோன்றி இருப்பதால் நோவல், அதாவது,, கரோனா வைரஸ் என, அழைக்கின்றனர்.
'சார்ஸ்' வைரஸ் போன்று, கோவிட்-19, சுவாச கோளாறை ஏற்படுத்துவதால், 'சார்ஸ் - 2' என்றும் விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். ஆனால், சார்ஸை விட மின்னல் வேகத்தில் பரவும் தன்மை உடையதாகவும், கொடியதாகவும் விளங்குகிறது. இந்த கொலைவெறி வைரஸ், சீனாவில் தோன்றியதால், கோவிட்-19ஐ, 'சீன வைரஸ்' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் கிண்டலாக குறிப்பிடுவதை வழக்கத்தில் வைத்துள்ளார்.
SARS CoV: இதன் பிறப்பிடமும் சீனா தான். அந்நாட்டின் தெற்கு பகுதியில், 2002ல் தோன்றியது. 2003ல், 26 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. 8,௦௦௦ பேர் வரை இறந்தனர். இது, தீவிர சுவாசக்கோளாறு பிரச்னையை ஏற்படுத்தி, மரண பயத்தை காட்டும். 2003க்கு பிறகு பெரிய அளவில் தென்படவில்லை. கோவிட் - 19 பற்றிய பெரும்பாலான ஆராய்ச்சிகள், சார்ஸ் வைரஸை மையப்படுத்தி தான் நடக்கின்றன. இது, பூனையிடம் இருந்து மனிதனுக்கு தொற்றியது.
MERS CoV: மத்திய, கிழக்கு நாடுகளில் பாதிப்பை விளைவித்த வைரஸ் இது. கோவிட் - 19, சார்ஸ் போன்று கொடுமையானதாக இல்லாவிட்டாலும், இருமல், சளி உள்ளிட்ட பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. 2012ல், சவுதி அரேபியாவில் தோன்றியது. அங்கிருந்து, கத்தார், எகிப்து, துருக்கி, பிரிட்டன், வங்கதேசம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. துவக்க காலத்தில், சவுதி வைரஸ் என்றும் இதை அழைத்தனர். இது, ஒட்டகத்திடம் இருந்து மனிதனுக்கு தொற்றியது.
ஆறாம் நூற்றாண்டு காலத்தில் ஐரோப்பா கண்டத்தில் பரவிய பிளேக் நோயினால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. அப்போது மனிதகுலமே கலங்கிப் போய்விட்டது. காண்ஸ்டாண்ட் நோபிளிலிருந்து ஆட்சி செய்த ரோம அரசன் பைசாண்டியன் பேரரசைச் சேர்ந்த ஜஸ்டினியன் ஆட்சிக் காலத்தில் இந்த கொடிய நோய் பரவியது. கிட்டத்தட்ட 50 மில்லியன் மக்கள் இதற்கு பலியானார்கள். அதை ‘ஜஸ்டினியன் பிளேக்’என்று அப்போது அழைத்தார்கள்.
பின்னாளில் 14ஆம் நூற்றாண்டில் ‘பிளேக் டெத்’என்ற கொள்ளை நோய் பரவியது. அதன் பாதிப்பால் ஐம்பது மில்லியனுக்கு அதிகமான மக்கள் இறந்து போனார்கள். அடுத்து ‘தி கிரேட் லண்டன் பிளேக்’ என்று பெயரிடப்பட்ட கொள்ளை நோய் 1664ல் பரவி லண்டன் முழுவதுமே மிகவும் பாதிக்கப்பட்டது.
மலேரியா, காலரா, பிளேக் போன்ற கொள்ளை நோய்களால் இந்தியாவிலும் எவ்வளவு உயிரிழப்புகள்? பம்பாயில் மட்டும் ஒன்றரை லட்சம் மக்களுக்கு மேல் உயிரிழந்து போனார்கள். இதெல்லாம் நடந்தது 1896 காலகட்டங்களில். 1994ல் சூரத்தில் ‘எலி நோய்’என்று சிலர் இறந்தனர். இன்னும் பன்றிக்காய்ச்சல், ஃப்ளூ காய்ச்சல், பறவைக் காய்ச்சல் என்று பல்வேறு தொற்றுகள் ஏற்பட்ட போதெல்லாம் பலர் பாதிக்கப்பட்டாலும், ஊடகங்கள் அப்போது பலம் பெறாததால் அவை புள்ளிவிபங்களாக மட்டுமே மிஞ்சியிருக்கின்றன.
அன்றைக்கிருந்த அச்சு ஊடகங்களும், வானொலியும் கூடப் பெரிய அளவில் அவற்றைப் பதிவு செய்யவில்லை. மகாத்மா காந்தி கூட அப்போது இப்படிப் பட்ட நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விபரமே பின்னாளில் தான் நமக்குத் தெரிய வந்திருக்கிறது.
ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் பதிவான குறிப்புகளில் அம்மை உள்ளிட்ட கொள்ளை நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை இப்போதும் காண முடிகிறது. அப்போது இந்தியாவில் பரவிய நோய்களைப் பற்றியும், அவற்றில் பலியானவர்களைப் பற்றியும் மறைக்க ஆங்கிலேயர்கள் முயலவில்லை, சுகாதாரத்தைப் பொறுத்தவரை அன்றைய ஆட்சியாளர்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருந்திருக்கிறார்கள்.
இது தவிர, கடுமையான உணவுப் பஞ்சம் நிலவிய கால கட்டத்தில் வந்த பஞ்சங்களைப் பற்றி ‘தாதுப் பஞ்சம்’ என்பது உள்ளிட்டபல்வேறு சொற்றொடர்கள் உருவாயின. இந்தப் பஞ்சங்களுக்குக் கொத்தாக ஏகப்பட்ட உயிர்கள் பறி போயிருக்கின்றன.
இரண்டாம் உலகப் போரின் போது நோய் தாக்குதல் இல்லையென்றாலும் போருக்குப் பயந்து மக்கள் வீட்டில் முடங்கியிருந்தனர். அன்றாட உணவுக்குக் கூட தத்தளித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட துயரமான வரலாற்றுச் செய்திகள் நமக்கு முன்னால் நிரம்பிக்கிடக்கின்றன.
எவ்வளவு மக்கள் பீதியினாலும், வாழ்வாதாங்களை இழந்தும் அப்போது புலம் பெயர்ந்திருப்பார்கள்? இப்படிப்பட்ட வெறுமை தான் பல்வேறு நாடுகளுக்கும், மாநிலங்களுக்கும் தமிழர்களை இடம் பெயர வைத்திருக்கிறது.
அண்மைக்காலத்தில் பீதி கலந்த செய்தி எப்படி எல்லாம் மக்களை அச்சமூட்டமுடியும் என்பதை உணர வைதத்து.கோவை நகர் ஊர் உறுவான போது எலி நோய் வரும் என அங்கு குடியேற பயந்தனர்.
கடந்த 1979ம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி இந்திய ஊடங்களில் ஒரு செய்தி. அமெரிக்காவின் ஸ்கை லேப் (SKylab) காலம் முடிந்து பூமியில் தெறித்து விழப் போகிறது என்பது தான் அந்தச் செய்தி.
அதுவும் குறிப்பாக தென் இந்தியாவில் விழுந்து விடும் என்றும் செய்திகள் வெளிவந்தாலும் வந்தன. மக்களிடையே பீதி பரவியது. தமிழகமெங்கும் அதைப் பற்றியே பேச்சு.
அன்று இரவு 2 மணிக்கு கோளில் மோதி கீழே விழும் என்று அறிவிக்கப்பட்டது. தெருவில் அன்றைக்கு இரவெல்லாம் நடமாட்டமே இல்லை. அப்போது தொலைக்காட்சி சென்னை நகரில் மட்டும் தான் இருந்தது.
மற்ற ஊர்களில் செய்தித்தாள்களும் வானொலி மட்டும்தான் இருந்தன. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்தச் செய்திகள் பரவிக் கொண்டிருந்த நேரத்தில், அன்றைக்கு இரவு மதுரையில் இருந்தேன் சட்டமன்ற காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர் வழக்கறிஞர் நன்பர் ஶ்ரீவில்லிபுத்தூர் எ.ராஜகோபாலும் நானும் மதுரை ரீகல் தியேட்டரில் படம் பார்க்கச் சென்னோம்.
டவுன் ஹால் ரோட்டின் எதிரில் இருந்த இரவு உணவுக் கடைகளில் காசில்லாமல் உணவை கொடுத்தது கண்ணில் பட்டது. “ஸ்கைலேப் விழுந்தா நம்ம என்ன காச எடுத்துட்டா போகப் போறோம். சாப்புடுப்பா” என்றார் அந்த சிறிய உணவு விடுதிக்காரர். அதுபோல ரீகல் தியேட்டரிலும் “படம் பாருப்பா நான் டிக்கெட் வாங்கித்தரேன். இன்னைக்கு இருப்போம் நாளைக்கு இருப்போமா தெரியாது” என்பது போன்ற நிச்சயமற்ற குரல்களும் கேட்டன.
அந்த ஸ்கை லேப் 280 மைல் வேகத்தில் தாக்கலாம் அதுவும் எங்கே தரையில் விழப் போகிறது என்பதை உடனே சொல்ல முடியாது என்றெல்லாம் விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தார்கள். ஒரு மாத காலம் அதே பீதியும் பேச்சுமாக இருந்தது. தமிழகத்தில் அப்போது எம் ஜி ஆர் தமிழக முதல்வராக இருந்த நேரம். மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருந்தன. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆர்.கிருஷ்ணசாமி ஸ்கைலேப் பிரச்சினையை கண்காணிக்க தமிழக அரசால் நியமிக்கப்பட்டார்.
இதெல்லாம் நடந்து நாற்பது ஆண்டுகளாகிவிட்டன.
அதற்குப் பிறகு இயற்கைப் பேரிடரான சுனாமியின் பாதிப்பு. சென்னை, நாகப்பட்டிணம், கன்னியாகுமரி கடற்கரை மாவட்டங்கள் என்று அநேக உயிர்ப்பலிகளை தமிழகம் சந்திக்க வேண்டியிருந்தது.
அதாவது கொள்ளை நோய்கள் மூலமும், இயற்கைப் பேரிடரையும் எதிர்கொண்ட அனுபவங்களை வரலாற்றின் வெவ்வேறு கட்டங்களில் நாம் கடந்து வந்திருக்கிறோம்.
தற்போது அந்தக் கொள்ளை நோய்களின் தொடர்ச்சியாக டிசம்பரில் சீனாவில் வுகான் நகரில் உருவாகி மூன்று மாதங்களுக்குள் உலக நாடுகளை அச்சுறுத்திப் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறது கொரோனா.
இந்திய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துவங்கிவிட்டன. தமிழக அரசு முதலில் ஊரடங்கை அறிவித்தது. மத்திய அரசும் 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருக்கிறது. ஊரடங்கை அனுசரிக்காதவர்கள் மீது காவல்துறை சாலைகளில் தாக்குதல் நடத்துவதைக் குறை சொல்லிப் பலனில்லை. உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் கொரோனா பரவிக் கொண்டிருக்கும்போது, சாலைகளில் பலர் நடமாடிக் கொண்டிருப்பது கொரோனா தொற்றை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வழிவகுத்துவிடும்.
இம்மாதிரியான ஊரடங்கின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற முன் அனுபவம் வட மாநில மக்களுக்குத் தெரிந்த அளவுக்கு, தமிழக மக்கள் அனுபவபூர்வமாக உணராததும் இன்னொரு காரணம். பெரும் ஆபத்து நம்மைக் கடந்து கொண்டிருக்கும்போது, அதை உணராமல் நாம் சாலைகளைக் கடந்து கொண்டிருப்பது விவேகம் அல்ல.
அதே சமயம் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மூலமும் கொரோனாத் தொற்று பரவியிருக்கிறது. இது தவிர, டெல்லியில் குறிப்பிட்ட மதம் சார்ந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியிருக்கிறது. இந்தச் சமயத்தில் நம் கவனத்திற்கு வருகிற எந்தச் செய்தியையும் மதம் அல்லது இனம் சார்ந்ததாகவோ உருமாற்றுவதும், காவல்துறையுடன் தகராறு பண்ணி சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மாற்றுவதும் இந்தச் சந்தர்ப்பத்தில் ஆரோக்கியமானதல்ல.
கொரோனா மாநிலப் பாகுபாடுகளை எல்லாம் மீறி கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்திய படி வீசும் புயலைப் போலப் பாதிதப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்போது, நம் உள்ளூர்ப் பாகுபாடுகளையும், புகைச்சல்களையும் வெளிப்படுத்த உகந்த நேரம் இது அல்ல,
இந்திய அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், கண்காணிக்கப்படுகிறர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழகத்திலும் கொரோனாவில் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை சற்றே கூடிக் கொண்டிருக்கிறது. பலருக்குப் பரிசோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. கூடுதலான படுக்கை வசதிகளுடன் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டிருக்கிறது தமிழகம்.
தற்போதைய நிலையில் தமிழக மக்கள் அரசின் முயற்சிக்குத் தங்களைத் தனிமைப்படுத்தி அதே சமயம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியம். கொரோனா உலக அளவில் பெரும் வீச்சுடன் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போது, நம்முடைய பாதுகாப்பில் நாம் கவனமாக இருப்போம். நோய் எதிர்ப்புச் சக்திக்கான மருந்தையும், உணவுகளையும் எடுத்துக் கொள்வோம்.பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவதை நம்மிடமிருந்தே துவங்குவோம்.
21 நாள்ஊரடங்கில் கற்றுக்கொண்டது!
•உலகில் அமெரிக்கா முன்னணி நாடு இல்லைஉலக நலனைப் பற்றி சீனா சிந்திக்காது.
•நோய் எதிர்ப்பு சக்தி இந்தியர்களின் அதிகம்.
•தங்கள் வேலையை வீட்டிலிருந்தும் செய்யலாம்.
• தூய்மையான நல் வாழ்க்கை முக்கியம்
•கூட்டுக் குடும்பம் முக்கியம் புரிந்தது.
•திருமணங்கள் வெட்டி செலவு இல்லாமல் வீட்டில் கடந்த காலங்களை
போன்ற உணர்வுபூர்மாக நடத்த முடியும்.
•இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழமுடியும் என்ற நம்பிக்கை.
•நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பள்ளி பால பாடத்தை உணர்ந்து
ஒவ்வொரு நூற்றாண்டும் 20வது வருடம் அதாவது 1820, 1920, 2020 கட்டங்கள் தான் இது போன்ற தொற்று நோய்கள் பரவி உள்ளன என்பது அரிய மர்மமாக உள்ளது.
எத்தனையோ கொள்ளை நோய்கள் நம்மைக் கடந்து போனதைப் போல, கொரோனாவும் நம்மைக் கடந்துபோகும். நம்மைக் கடக்கையில் அதன் பாதிப்பிலிருந்து விடுபட்டுக் கொள்வதே நம்முடைய உடனடித் தேவை.அதற்கு நம்மிடம் தேவை தன்னம்பிக்கை.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
19.05.2020.
#ksrpost.
No comments:
Post a Comment