#இப்படியும்_வேடிக்கை_மனிதர்கள்.........
————————————————
"அரசியலில் வெற்றி, தோல்வி என்பது தேர்தலில் வெற்றி தோல்வி” என்றே கருதுகின்றார்கள் என்ற தலைப்பில் இன்று காலை எழுதியிருந்த பதிவைப் பார்த்துவிட்டு ஒரு முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நன்பர் , “என்ன இப்படி எழுதிட்டீங்க?” எம்.எல்.ஏ ஆகணும், எம்.பி ஆகணும், மந்திரி ஆகணும் இதுதான் அரசியல். பேரும் வாங்கணும், வசதி ஆகிக்கிடணும். எனக்கு எம்பி ஆகறதெல்லாம் ஒரு ஃபேஷன்” என்றார். விவசாயி வெள்ளாமை வெச்சாரா? வித்தாரான்னு இருக்கணும். அப்படித்தான் நான் எல்லாம்” என்றார். அப்படி இயற்கையாக வாக்குக்கு காசுக்கு வாங்காமல் வெற்றி பெற்று பொது வாழ்வில் கடமை ஆற்ற வேண்டும் என நான் சொல்லிவிட்டு வேறொன்றும் மறுத்துப் பேசவில்லை.
இருப்பினும்,அவரிடம் சமீபத்தில் அமெரிக்க யேல் பல்கலைக்கழகமும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த அரசியல் சார்ந்த கருத்தரங்கில் தகுதியற்றவர்கள் எல்லாம் வாக்குகள் வாங்கி மக்கள் பிரதிநிதி ஆகிவிட்டதால் அவரை மக்கள் பிரதிநிதியாக கருதிவிட முடியாது என்றும் மக்கள் நல அரசு (welfare state) மக்கள் நாட்டினுடைய பிரச்சினையினை அறிந்து செயல்படுபவர்களே உண்மையான மக்கள் பிரதிநிதிகள் என்ற கருத்தை வெளிப்படுத்தினர் என்று சொன்னேன்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமே பதிவான வாக்குகள் 37.76% தான். அதில் 25.16% பெற்று பாஜக ஆட்சிக்கு வந்தது. இப்படித்தான் நம்முடைய 20 ஆண்டுகளின் தேர்தல் முடிவுகள் உள்ளன. மொத்தத்தில் 60-70% வாக்குகள் தான் பதிவாகின்றன. அதில் வெறும் 25% வாக்கு பெற்றவர்கள் ஆட்சிக்கு வந்துவிடுகிறார்கள் மீதுமுள்ள 35-45% வாக்களித்தவர்கள் நிலை என்ன? அதானே பெரும்பான்மை. 100% வாக்களிப்பது நம் மக்களிடம் வாடிக்கை இல்லை. நல்லவர்கள் தகுதியானவர்கள் வரவேண்டும் என்றால் விகிதாச்சார பிரதிநிதித்துவ வாக்கு முறையை தேர்தலில் கொண்டுவர வேண்டும். இன்றைக்கு 544 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 475 பேர் கோடீஸ்வரர்கள். அதுமட்டுமில்லாமல் இரண்டு அவையிலும் சேர்த்து 250 வரை எம்பிக்கள், 2000க்கும் மேல் சட்டமன்ற உறுப்பினர்கள் கிரிமினல் பிண்ணனியோடு உள்ளனர். இதனுடைய எண்ணிக்கை ஒவ்வொரு தேர்தலிலும் கூடிக் கொண்டே வருகிறது. இதைக் குறித்து மத்திய உள்துறை முன்னாள் அமைச்சர் என்.வோரா 27 ஆண்டுகளுக்கு முன்னால் அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கமும் இவர்கள் தேர்தலில் வெற்றிப் பெறுவது குறித்த ஆய்வறிக்கையை சமர்பித்தும் எந்த மேல்நடவடிக்கையும் இல்லை. இது தான் இன்றைக்கு நடந்துக் கொண்டிருக்கிறது இதை ஏற்றுக் கொள்கிறீர்களா என்று அந்த நண்பரிடம் சொன்னபோது “எனக்கு அதெல்லாம் தெரியாது. எனக்கு அரசியல்னா தேர்தல்ல சீட்டு வாங்கணும், ஜெயிக்கணும்” என்று ஒரே வரியில் முடித்துவிட்டார். ஆனால் நானும் அவரை விடவில்லை.
தென்னாப்பிரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்த நெல்சன் மண்டேலா ஒரு முறை சில பாதுகாவலர்களுடன் ஓர்உணவகத்துக்கு உணவருந்தச் சென்றார். அங்கே ஒரு
மேஜையில் தனியாக ஒருவர் அமர்ந்திருக்க, "அவரை நம்மோடு வந்து அமர்ந்து உணவருந்தச் சொல்லுங்கள்' என்கிறார் மண்டேலா. அவரும் வந்து இவர்களோடு அமர்ந்து உணவருந்தி விட்டுச் சென்று விட்டார்.
பாதுகாவலர் ஒருவர் மண்டேலாவிடம், "அந்த மனிதர் பாவம்; அவர் கைகள் நடுங்கிக் கொண்டேயிருந்தன; உடல் நிலை சரியில்லாதவர் போலும்' என்று சொல்ல, மண்டேலா சிரித்துக்கொண்டே, "அவர் உடல் நலத்தோடுதான் இருக்கிறார். நான் சிறைச்சாலையில் இருந்தபோது என்னை அதிகமாகச் சித்திரவதை செய்தவர் இவர்தான்.
எனவே, நான் இப்போது குடியரசுத் தலைவர் ஆகிவிட்டதால், தனக்கு ஏதும் ஆபத்து வருமோ என்ற பயத்தில் அவரது கைகள் நடுங்குகின்றன; ஆனால், பழி வாங்கும் உணர்வு என்னிடம் கிடையாது. சகிப்புத்தன்மைதான் சாம்ராஜ்யங்களை உருவாக்கும் என்று நம்புகிறவன் நான்' என்று சொல்லி முடிக்க, உடன் வந்தவர்கள் உறைந்து போனார்களாம்.
எந்தப் பதவியும் யாருக்கும் நிரந்தரமானதல்ல. வாழ்க்கையே நிரந்தரம் இல்லை என்கிறபோது, பதவிகள் மட்டும் எப்படி நிரந்தரமாக இருக்க முடியும்? எனவே, பதவிகளில்
இருக்கும்போது கிடைக்கிற மரியாதைகளையும், சலுகைகளையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் பழகிக் கொண்டால், பதவி விலகிய பிறகுமனதில்சஞ்சலமோ,மனஅழுத்தமோ ஏற்படாது.
ஒருவர் எந்த நிலையில் இருந்தாலும், "நான் யார் தெரியுமா?' என்ற மன நிலையிலிருந்து மாறி, "நானும் மற்றவர்களைப் போலத்தான்' என்ற எதார்த்த நிலைக்கு வந்துவிட்டால்... உலகத்தில் பல துன்பங்களிலிருந்து விடுபடலாம்.
வாழ்க்கை என்பது நிரந்தரமல்ல. பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம் என நாம் இறுதிக்கு செல்லும் முன் நம்மால் இயன்றதை நேர்மையாக செய்தோம் என்று இருக்க வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் பல பாடத்தை கற்பிக்கின்றது. விசாலமான இந்த பூமிப் பந்தில் நம் இருத்தலை காட்டுவது, அதனால் நமக்கு புகழ் என்ற வெளிச்சம் வரும் என நினைப்பது சகஜம் தான். அது தவறல்ல. ஆனால் அதற்கு ஏற்றவாறு நேர்மையான பணிகள் இருந்தால் நாம் வெற்றிபெறும் பதவிகளுக்கு மதிப்பு மட்டுமல்ல நம் மனசாட்சிக்கே திருப்தியளிக்கும் என்பதை உணருங்கள். ஏதோ சட்டமன்றத்திற்கு சென்றோம், நாடாளுமன்றத்திற்கு சென்றோம், அசோக சின்ன லெட்டர் ஹெட், கோபுர சின்ன லெட்டர் ஹெட்டை பயன்படுத்தி அதிகாரத்தை செலுத்துகிறோம் என்பது அர்த்தமற்றது.
இப்படியும் வேடிக்கை மனிதர்கள்.........
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
19.08.2020
#ksrposts

No comments:
Post a Comment