#தமிழக_அரசின்_ஆறாவது_நிதி #ஆணையத்திற்கு_நான்_இன்று #அனுப்பிய_ஆலோசனை_மனு_வருமாறு
————————————————
தமிழக அரசுக்கு நிதி ஆதாரங்களை திரட்ட சில ஆலோசனைகளும் குறிப்புகளும்.
மாநில அரசிற்கு வளங்களை திரட்டல்:
¨ பல ஆண்டுகளாக மாநிலங்களின் நிதிசார் ஆதாரங்கள் மத்திய அரசின் தாக்குதலுக்கு
உள்ளாகி வருகின்றன. மத்திய, மாநில நிதி உறவுகளில் அதிகாரங்களை பரவலாக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டு வருவது அவசியம். இப்பிரச்சனையில்
உடன்படும் மாநிலங்களுடன்
இணைந்து தமிழக அரசு இதற்கான முன்னெடுப்பை
மேற்கொள்ள வேண்டும்.
¨ மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி, ஜி.எஸ்.டி மற்றும் நிதி நிலுவையினை விரைவில் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
¨ ஜி.எஸ்.டி அமைப்பு மறுபரிசீலனைக்கு
உட்படுத்தப்படவேண்டும். மாநிலங்களுக்குச்
சாதகமாக மாற்றப்படவேண்டும்.
¨ தமிழகத்தில் கிரானைட், கார்பைட், சுண்ணாம்புக்கல், மணல், தாது மணல், மைக்கா உள்ளிட்ட பல கனிம வளங்கள் உள்ளன. சமீப காலமாக மாநிலம் முழுவதும் சுரங்கத் தொழில் முடங்கிப் போயுள்ளது. தாது மணல் எடுப்பதும் நின்றுள்ளது. டாமின் நிறுவனம் சரியாக செயல்படாமல் ஊழல் முறைகேடுகள் நடக்காமல் அரசு கண்காணிக்க வேண்டும். இதனால் பல லட்சம் கோடி அரசுக்கு வருமானம் வரும். சகாயம் ஐ.ஏ.எஸ்.தலைமையிலான குழுவின் அறிக்கையின்படி மதுரை மாவட்டத்தில் மட்டும் கனிம வளங்களை வெட்டி விற்பனை செய்யும் உரிமத்தை தனியாருக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு பல கோடி லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக
குறிப்ப்பிடப்பட்ட்டுள்ளது. அவ்வாறெனில், தமிழகம் முழுவதும் கணக்கிட்டால் இது ஒரு பெரும் தொகையாக இருக்கும். எனவே கனிம வளங்கள் மீது விதிக்கப்படும்
அரசின் உரிம கட்டணத்தை உயர்த்தி தீர்மானிக்க வேண்டும்.
¨ Major Minerals-களுக்கு தீர்மானிக்கப்படும் ராயல்டி தொகையினை உயர்த்தி தீர்மானிக்க வேண்டும் தாது மணல் எடுப்பதை மணவாளக்குறிச்சியில் உள்ள இந்தியன் ரேரஸ்ட் நிறுவனமும், டாமின் நிறுவனமும் இணைந்து செயல்படுத்த வேண்டும். . தனியார் இந்த தாது மணலை கபளீகரம் செய்வதை தடுக்க வேண்டும்.
¨ தமிழகத்தில் மணல் வியாபாரத்தில் அளவு கடந்த முறைகேடுகள் நடைபெறுகின்றன. சட்டவிரோதமாக
செயல்படுத்தப்படும் மணல் குவாரிகள், அனுமதிக்கப்பட்ட
அளவுக்கு மேல் மணல் எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதே சமயம் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், செகன்ட் சேல்ஸ் மற்றும் லோடிங் காண்ட்ராக்ட்
மூலம் நடத்தும் முறைகேடுகள் நடக்கின்றன. எனவே, பொதுப்பணித்துறையே நுகர்வோருக்கு
நேரடியாக மணல் விற்பனை செய்தால் முறைகேடுகளை தடுக்க முடியும். வருவாயைப் பெருக்கவும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்கச் செய்யவும் முடியும். கேரளம், ஆந்திரம், கர்நாடகத்திற்கு மணல் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்.
¨ கடன் மாற்று (Debt Swap) திட்டம்: நீண்ட கால பொது செலவு மேலாண்மையின்
பகுதியாக, நிபுணர்களின்
உதவியுடன் உயர் வட்டி விகிதத்தில் கடந்த காலத்தில் வாங்கப்பட்ட கடன்களை சமகாலத்தில் குறைந்துள்ள வட்டிவிகிதத்தலான
கடன்களுக்கு மாற்றிக்கொள்ள திட்டம் வகுக்கலாம்.இத்தகைய திட்டங்கள் மத்திய அரசால் 2002-2005 காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டன.
¨ சாராய விற்பனை வரியை அல்லது கலால் வரியை உயர்த்தலாம். இது குடிப்பழக்கத்தை குறைக்க உதவும். அரசுக்கும் அதக வரி வருவாய் தரும்.
¨ பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் மாநில அரசிடம் பல சலுகைகளப் பெற்று லாபம் ஈட்டியுள்ளன. தமிழக அரசிற்கு இதனால் வருவாய் இழப்பும் இருக்கிறது. சமன்பாடற்ற லாப விகிதாச்சாரங்கள் இந்த தளத்தில் இல்லை. மாநில அரசு பன்னாட்டு நிறுவனங்களிடம்
சலுகைகளை கொடுப்பது போல அரசுக்கு உரிய வருவாய்களையும் குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தின் தொகையினையும் உயர்த்த வேண்டும்.
¨ மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறையில்லாமல் இருக்கும் நிலையில் 15வது நிதி ஆணையத்திற்கு மாநில அரசுகள் வழங்கிய கோரிக்கைகளை திரும்பவும் இந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு திருத்தி உரிய அறிக்கைகளை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் 200 நாட்கள் வழங்கப்படுகின்றன. இந்தப் பணியை விவசாய பணிகளோடு சேர்த்து ஒழுங்குப்படுத்த வேண்டும். இந்த வேலைத் திட்டத்தால் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை
என்ற குறை விவசாயிகள் மத்தியிலே இருக்கின்றது.
மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம் விவசாயம் மற்றும் விவசாயிகளை மையப்படுத்தியே கிராமப்புறத்தில் இருக்க வேண்டும். விவசாயிகளுக்கு வேளாண் பணிகளுக்கு 4% வட்டியில் கூட்டுறவு மற்றும் அரசுடைமை வங்கிகள் மூலம் வழங்கப்பட வேண்டும்.
¨ தமிழகத்தில் நீர்ப்பாசன வசதிகளை பெருக்க வேண்டும், நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும், தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு, காவேரி - குண்டாறு இணைப்பு, பாலாறு - தென்பென்னையாறு இணைப்பு என்ற மூன்று தமிழக நதிநீர் இணைப்புத் திட்டங்களை விரைவுப்படுத்த
வேண்டும். காவேரி போன்ற நதிகளில் ஆங்காங்கே தடுப்பணைகள் திட்டமிட்டவாறு கட்டப்பட வேண்டும். நிலத்தடி நீரை உயர்த்தவும் நீரை மாசுபடாமல் பாதுகாக்கவும் நடவடிக்கைகள் வேண்டும்.
¨ வைராஸ் தாக்கத்தால் அழிந்து போன நெல், பழங்கள், காய் கறிகள், மலர் சாகுபடிகள், வெற்றிலை, மரவள்ளி கிழங்கு உள்ளிட்டவற்றுக்கான இழப்பீட்டை விவசாயிகளுக்கு
வழங்கிட வேண்டும். போர்க்கால அடிப்படையில் விதை மற்றும் தேவையான உரங்கள் வழங்கப்பட வேண்டும். ஒருமுறை கடன் ரத்து என்ற விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்க வேண்டும்.
¨ விவசாயத்தையும், உணவுப் பாதுகாப்பையும் அழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள் மக்கள் போராட்டங்களினால்
ரத்து செய்யப்பட்டாலும்,
8 வழிச்சாலைகள், ஐ.டி.பி.எல். பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டம். உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி போன்றவை தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றன.
¨ ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும்
உணவு பாதுகாப்புக்கும்
இடையிலுள்ள சமன்பாடு பாதுகாக்கப்படுவதோடு, கார்ப்பரேட்டுகளின் லாபத்தை நோக்கமாக வைத்து விவசாயத்தை அழிக்கும் அனைத்து திட்டங்களையும் கைவிட வேண்டும்.
¨ விவசாய விளை பொருட்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையின்
அடிப்படையில் நியாய விலை தீர்மானிக்க வேண்டும். நெல் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை அரசே முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும்.
¨ காய்கறிகள். பழங்கள் உள்ளிட்ட வேளாண் விளைப்பொருட்களைப்
பதப்படுத்தி பாதுகாக்க பஞ்சாயத்து யூனியன் மட்டங்களில் குளிர்பதன நிலையங்கள் அமைத்திட வேண்டும்.
¨ தமிழகத்தில் உள்ள 526 பேரூராட்சிகளில் பெரும்பகுதி கிராமப்புற பேரூராட்சிகளாகும். இவற்றை ஊராட்சிகளாக மாற்றிடுவது அல்லது இந்த பேரூராட்சிகளுக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்தட்டத்தை விரிவுபடுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.
¨ விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாகவும், நுகர்வு பொருட்களாகவும் மாற்றிட வேளாண் சார் சிறு தொழிற் சாலைகளை கிராமங்களில்
அமைத்திட வேண்டும்.
¨ விவசாயத்திற்கு தினசரி 14 மணி நேர மும்முனை மின்சாரம், விண்ணப்பித்த அனைவருக்கும்
மின் இணைப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதோடு ஏற்கனவே நடைமுறையில் உள்ள இலவச மின்சார திட்டத்தையும் பாதுகாக்க வேண்டும்.
¨ கிராமப்புற மக்கள் கல்வி, சுகாதாரம், மருத்துவம் வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் நகர்ப்புறங்களை நோக்கச் செல்லும் நிலைமை உள்ளது. இதனை தவிர்த்திட நகர்ப்புறங்களில்
கிடைக்கும் அனைத்து வசதிகளும் கிராமப்புறங்களில் கிடைப்பதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும். கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு. தொலைபேசி. வலைதள கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையம் கொண்ட கிராமப்புற கட்டமைப்புகளை அமைத்திட வேண்டும்.
¨ நீண்ட கடலோரப் பகுதிகளை கொண்டிருக்கும் தமிழகத்தில் கடந்த நான்கு மாத காலமாக மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. பிடித்து வரும் மீன்களை வெளி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லவும், வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கும் இயலாத நிலை உள்ளது. மேலும் உள்நாட்டு மீனவர்கள், மீன் விற்பனை செய்யும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான
நிவாரணங்களை தொடர்ந்து வழங்கிட வேண்டும்.
¨ அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்கிற தொழிற்சாலைகளுக்கு
கூடுதல் முக்கியத்துவம்
அளித்திட வேண்டும். தொழிற்சாலைகளை துவக்கும் போது பின்தங்கிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அந்நிய மூலதனம் சார்ந்த தொழிற்சாலைகள்,
தொழிலாளர் நலச் சட்டங்கள் மற்றும் சற்றுச் சூழல் விதிகளுக்குட்பட்டு செயல்படும் விதத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
மேற்கொள்ளப்பட வேண்டும். நலிவுற்ற கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், நூற்பாலைகள் உள்ளிட்ட பொதுத்துறை தொழிற்சாலைகளை சீரமைக்க வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மையான அரசின் அனைத்து திட்டங்கள் , மக்கள் நலப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை நேர்மையாக பெற்று வெளிப்படைத்தன்மையோடு லஞ்ச லாவண்யங்களை ஒதுக்கி சீர்ப்படுத்த
வேண்டும். சிகப்பு நாடாக்களினால் மக்கள் திட்டங்கள் தாமதிக்காமல் இருக்க வழிவகை கண்டு உடனடியாக திட்டங்கள் மக்களுக்கு செல்லக் கூடிய வகையில் அரசு செயல்பட வேண்டும். அரசு நிர்வாகத்தின்
தேவையற்ற பிரயாண செலவுகள், விழா செலவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
சென்னை - 6000041
02.09.2020
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
வழக்கறிஞர்
அரசியல் கள செயல்பாட்டாளர்
இணை ஆசிரியர் - கதைசொல்லி
rkkurunji@gmail.com
--
K. S. Radhakrishnan,
No comments:
Post a Comment