கோவை விஜயா வாசகர் வட்டம் வழங்குகிறது
————————————————
தமிழ் படைப்புலகத்தின் பிதாமகர். ‘‘கதை சொல்லி’’, ‘‘கி.ரா.’’ என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் அவர்களின் பெயரால், கோவை விஜயா பதிப்பகத்தின், ‘‘விஜயா வாசகர் வட்டம்’’ சார்பில், எழுத்தாளர் கண்மணி குணசேகரன் அவர்களுக்கு ‘‘கி.ரா.’’ விருதும், ரூ. ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட உள்ளது, அதை எழுத்தாளர் ‘‘கி.ரா.’’வே வழங்குகிறார். தொழில் மூலம், சமூக மாற்றத்திற்கும் வித்திடும், ஈரோடு ‘‘சக்தி மசாலா’’ குழுமம், இந்த விருதுத்தொகையை வழங்கவதோடு ஆண்டுதோறும் வழங்கவிருப்பது இலக்கியத்திற்கும் எழுத்துலகிற்கும் கிடைத்த கௌரவம்.
கிரா வழங்குகிறார்
வருகின்ற செப்டம்பர் 16 ஆம் தேதி, புதன்கிழமை மாலை 5 மணிக்கு, புதுச்சேரியில் உள்ள ‘‘கி.ரா’’ அவர்களின் இல்லத்தில்( Q-13, லாசுப்பேட்டை அரசுக்குடியிருப்பு,புதுச்சேரி-8 ), அவரது கரங்களால், எழுத்தாளர் கண்மணி குணசேகரன் அவர்கள் விருதினை பெறுகிறார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் ஆர் மகாதேவன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். நடிகர் சிவக்குமார், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், முனைவர் பஞ்சாங்கம், எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம், எழுத்தாளர் ஸ்டாலின் குணசேகரன், சக்தி மசாலா குழும நிறுவனர் சாந்தி துரைசாமி மற்றும் துரைசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
கி.ராவும் உரை நிகழ்த்துகிறார். கண்மணி குணசேகரன் ஏற்புரை வழங்குகிறார். வரவேற்புரை மு.வேலாயுதம். பேராசிரியர் கந்த சுப்ரமணியன் நிகழ்ச்சிகளை ஜூம் செயலி வாயிலாக, தொகுத்து வழங்குகிறார்.
விதைகளின் விருட்சம் ‘‘கி.ரா.’’
வட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர். கரிசல் வட்டார அகராதியை உருவாக்கி, வட்டார மொழிக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி. புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிறப்புப் பேராசிரியர். கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், மாயமான், அந்தமான் நாயக்கர், பிஞ்சுகள், கிடை ஆகிய நாவல்களை எழுதியவர். கதவு, கண்ணிமை, அப்பா பிள்ளை, அம்மா பிள்ளை, கரிசல் கதைகள், கொத்தை பருத்தி உள்ளிட்ட சிறுகதைகளை வெளியிட்டவர். 'கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்காக 1991 இல் சாகித்ய அகடமி விருது பெற்றவர்.
நாட்டுப்புற கதைக் களஞ்சியம், தமிழ் நாடோடி கதைகள், வயது வந்தவர்களுக்கு மட்டும் நாட்டார் கதைகள் தொகுத்துத் தந்தவர்.
தமிழ் இலக்கிய உலகில் கி.ரா என்று அன்புடன் கொண்டாடப்படுகிறவர். அந்த கி.ரா.என்னும் கி.ராஜநாராயணன் என்ற இளைஞருக்கு தற்போது வயது 98. கோவை விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகர் வட்டம், ‘‘கி.ரா.’’ பெயரால் விருது வழங்குவதை பெருமையாக, கடமையாக கருதுகிறது.
எழுத்து விவசாயி
‘‘கி.ரா.’’ விருது பெறப்போகும், எழுத்தாளர் கண்மணி குணசேகரன், விருத்தாச்சலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணிபுரிந்து வருகிறார். பத்தாம் வகுப்பு கல்விக்குப்பின், ஐ.டி.ஐ படித்துள்ளார். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், மணக்கொல்லை கிராமத்தில் விவசாயமும் செய்து வருகிறார்.
கவிதைத் தொகுப்புகள், சிறுகதைகள் மற்றும் புதினங்களை எழுதியுள்ளார். அஞ்சலை, நெடுஞ்சாலை, கோரை, வந்தாரங்குடி, பூரணி, பொற்கலை போன்ற நாவல்களையும் படைத்துள்ளார்.
2007 ஆம் ஆண்டிற்கான சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் நெய்தல் விருதினைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய “நடுநாட்டுச் சொல்லகராதி” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. கலைஞர் பொற்கிழி விருதும் பெற்றுள்ளார்.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
03.09.2020


No comments:
Post a Comment