Tuesday, December 8, 2020

 #பண்டைய_கிரேக்கம்#Ancient_Greek

________________________________________



ஏதென்சும், ஸ்பார்ட்டாவும் கிரேக்கத்தின் மாபெரும் நகர அரசுகளாக விளங்கின. கிரேக்க பெர்சிய போர்கள் கி.மு 499 மற்றும்449 ம் ஆண்டுகளில் நடைபெற்றன...30 ஆண்டுகள் நடைபெற்ற இந்த போரில் ஏதென்சு வலிமையானது. ஏதென்சு நகரில் பண்டைய நகர அரசின் எச்ச அடையாளங்கள் இதோ...

இதேபோல இத்தாலியிலும் இக்காலகட்டத்தில் அரசியல் , ஜனநாயகக் கூறுகள் வெளிப்பட்டன.தமிழகத்தில் தேர்தல்கள் குடவோலைமுறை மூலமாக பண்டைய காலகட்டங்களில் நடைபெற்றது என்று உத்திரமேரூர் கல்வெட்டுகள் சொல்கின்றன.

சட்டத்தின் ஆட்சி, நீதிபரிபாலனம் என்பது இங்கிலாந்தில் மெக்னகர்ட்டா என்ற மகாசாசனம் அரசரால் ரன்னிமேர்டில் கையெழுத்திட்டபோது உருவான கோட்பாடாகும்.

இதற்கும் முன்பே பாண்டியன் நெடுஞ்செழியன் அவையில் கண்ணகி நீதி கேட்டது நமது தமிழ் சமுதாயத்தின் முறையாக அக்காலத்திலே நடைமுறையில் இருந்தது. மனுநீதிச் சோழனுடைய செயல்பாடும் நீதியை நிலைநாட்டியதை யாரும் மறுக்கமுடியாது.

கிரேக்கம்,ரோம், இங்கிலாந்து, என்று மேலைநாடுகள் ஜனநாயகத்தின் காரணிகளின் பிறப்பிடமாக இருந்தாலும்... நமது தமிழகம் அதற்கு முன்னோடியாக இருந்தது என்பது வரலாறு ஆகும்.

திராவிட நாகரீகத்திற்கு ஒரு ஆதிச்சநல்லூர், சிந்துவெளி நாகரீகத்திற்கு மொகஞ்சதரோ ஹரப்பா, ரோம், சுமேரியம் போன்ற நாகரீகங்களெல்லாம் படிப்படியாக மானிடத்தை மனித நேயத்தோடும், பரிணாம வளர்ச்சியோடும்
சிந்தித்து பயணிக்கச் செய்தது என்பதை இந்த இடத்தில் நினைவில் கொள்ளவேண்டும்.

கிரேக்க நாகரீகத்தைப் பற்றி கண்ணில்பட்ட பதிவையும் இத்தோடு இணைத்துள்ளேன்

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-05-2015.

Athens and Sparta, both powerful Greek city-states, had fought as allies in the Greco-Persian Wars between 499 and 449 B.C. In the wake of the Persian retreat, however, Athens grew more powerful and tensions rose, escalating into nearly three decades of war.

******

பண்டைய நாகரிகங்கள் :கிரேக்க நாகரிகம் ( கி.மு 2500 – கி.மு. 323 )

எல்லாப் பண்டைய நாகரிகங்களுக்கும் பல பாரம்பரியப் பெருமைகள் உள்ளன. ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி தனித்துவம் மிக்கது கிரேக்க நாகரிகம். சீனாவுக்குப் பெரும் சுவர், எகிப்துக்குப் பிரமிட்கள், மம்மிகள். ரோமாபுரிக்கு வீரம். கிரேக்கத்துக்கு ஒலிம்பிக்ஸ் போட்டிகள், கல்வி, அறிவு, சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற தத்துவ மேதைகள் என்று அள்ள அள்ளக் குறையாமல் பெருமைகள் பொங்குகின்றன.

ஆரம்பம்

2823 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த கிரேக்க நாகரிகத்தில் சில முக்கிய காலகட்டங்கள் உள்ளன. ஆரம்பம் இதிகாசமும், வரலாறும், நிஜமும்,கற்பனையும் இணைந்த கலவை. ஆசியா மைனர் பகுதியின் வடமேற்குத் திசையில் இருக்கும் தீபகற்பம் பெலப்பொனீஸ் (Pelaponnese). இங்கு மைசீனியன்கள் (Mycenaeans), பெலாஸ்ஜியர்கள் (Pelasgians) ஆகியோர் குடியிருந்தார்கள். கி.மு 2000 வாக்கில் கிரேக்கம் என்ற மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட அக்கீனியர்கள் (Achaeans) வடக்குப் பகுதியிலிருந்து கூட்டம் கூட்டமாக வந்து பெலப்பொனீஸில் குடியேறினார்கள்.

இவர்கள் தமது மொழி, மதம், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை, மைசீனியர்களிடமும், பெலாஸ்ஜியர்களிடமும் பரப்பத்துவங்க காலப்போக்கில், இந்த மண்ணின் மைந்தர்கள் முழுக்க முழுக்க அக்கினீயர்களின் கலாசாரத்துக்கு மாறிவிட்டார்கள். மூன்று தரப்பினரும் இணைந்த மைசீனிய நாகரிகம் உருவாயிற்று. இதன் ஆதாரச் சுருதி கிரேக்கக் கலாசாரம்.

பெலப்பொனீஸ் ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட பூமியாக கருதப்பட்டது. காரணம் பெலப்பொனீஸ் என்னும் பெயரே, கிரேக்கப் பாரம்பரியத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட பெலப்ஸ் என்னும் கடவுளின் பெயர்.

கிரேக்கர்களின் முழு முதற் கடவுள் ஜீயஸ் (Zeus). இவர் மகன் டான்ட்டலஸ் (Tantalus) கிரேக்கத்தின் ஒரு பகுதியை ஆண்டவர். டாண்டலஸ் கடவுள்களின் உணவான அமிர்தத்தைத் திருடிக்கொண்டு வந்து, தன் நண்பர்களுக்குக் கொடுப்பார். ஜீயஸின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக, டான்ட்டலஸ் செய்த அக்கிரமங்களைப் பிற கடவுள்கள் மன்னித்தார்கள். ஓர்நாள் ஜீயஸ், மற்ற பிற தெய்வங்களைத் தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார். விருந்தில் டாண்டலஸ் பெல்ப்ஸ் என்ற தன்மகனைக் கொலைசெய்து, சிறு சிறு துண்டுகளாக வெட்டி சூப் சமைத்தார். நர மாமிசம் சாப்பிட்டதாக தெய்வங்கள்மேல் பழி சுமத்தி தான் அவர்களைக் கை கொட்டிச் சிரிக்கவேண்டும் என்பது அவர் ஆசை.

சூப் மேசையில் வைக்கப்பட்டது. பூமாதேவிக்கு பயங்கரப் பசி. சூப்பைக் குடித்துவிட்டார். பிற தெய்வங்களுக்கு டான்ட்டலஸின் சூழ்ச்சி புரிந்தது. ஜீயஸ் தன் மகனின் ஈவு இரக்கமற்ற செயல் கண்டு கொதிதுப்போய் டான்ட்டலஸைக் கொன்றுவிட்டு, பெலப்ஸை மரணத்திலிருந்து மறுபடியும் எழுந்துவரச் செய்தார்.

தன் தவறுக்குப் பிராயச்சித்தமாக பூமாதேவி பெலப்ஸுக்கு யானை தந்தத்தால் கைகள் கொடுத்தார்: அஃப்ரோடைட் (Aphrodite) அழகு தந்தார்: ஏரீஸ் (Ares) வீரம் கொடுத்தார். எத்தீனா (Athena) அறிவு அளித்தார். கடல் தெய்வமான பொஸைடான் (Poseidon) மனத்தில் பெல்ப்ஸ் மீது காதலே வந்தது. அவரைத் தன்னுடனேயே தேவலோகத்தில் வைத்துக்கொள்ள ஆசைப்பட்டார். பெல்ப்ஸுக்கு மந்திர சக்தி கொண்ட ஒரு ரதத்தைப் பரிசளித்தார். ஆனால், அவருக்கு பூவுலகில் பல கடமைகளை ஜீயஸ் நிர்ணயித்திருந்தார். ஆகவே பெல்ப்ஸ் அஃப்ரோடைட்டின் காதலை உதறித் தள்ளிவிட்டு கிரேக்கம் வந்தார்.

இத்தனை மகத்துவம் கொண்ட பெல்ப்ஸின் தேசம் அற்புத நாகரிகத்தின் விளைநிலமாயிற்று. கி.மு. 1100. பெலப்போனீஸ் மீது, வடக்கிலிருந்து டோரியர்கள் (Dorians) என்னும் இனத்தார் படையெடுத்து வந்தார்கள். அவர்களுக்கும், உள்ளூர் மக்களுக்குமிடையே கடும்போர் நடந்தது. போரில் அக்கினீயர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள். போரில் டோரியர்களுக்கு மாபெரும் வெற்றி. நாட்டைக் கைப்பற்றிய டோரியர்க ள் அக்கினீயர்களைக் கொடுமைகளுக்கு உள்ளாக்கினார்கள். அக்கினீயர்கள் பெலப்போனீஸ் விட்டு வெளியேறினார்கள். மத்தியதரைக் கடல் அருகே கிரீஸ் என்ற இடத்தில் தங்கள் நாட்டை உருவாக்கினார்கள். இங்கே பிறந்து வளர்ந்து செழித்தது கிரேக்க நாகரிகம்.

கி. மு 490 – 480 இடைப்பட்ட காலகட்டத்தில் பாரசீகத்தின் (இப்போதைய இரான்) ஒரு பகுதியினர் கிரீஸ் மீது படையெடுத்தனர். இந்தப் போரில் கிரேக்கர்கள் ஜெயித்தனர். ஆனால், இதற்குப் பிறகு ஏதென்ஸ், ஸ்பார்ட்டா, தேப்ஸ் ஆகிய கிரேக்க நகரங்களுக்குள் உள்நாட்டுப் போர்கள் ஏற்பட்டன. கிரேக்கம் தளர்ச்சியடையத் தொடங்கியது.

கி. மு 338. மாஸிடோனிய பிலிப் மன்னர் கிரீஸ்மேல் படையெடுத்து வந்தார். உள்நாட்டுத் தகராறுகளால் பலவீனமடைந்திருந்த கிரேக்கம் பல முனைகளில் பிலிப்பிடம் தோல்வி கண்டது,. ஆனால், பிலிப் முழு வெற்றி காணவில்லை. அவர் தொடங்கிய பணியை, அவர் மகன் முடித்துவைத்தார், கிரேக்க நாட்டைத் தன் சாம்ராஜ்யத்தின் கீழ்க் கொண்டுவந்தார். அவர், மாவீரன் அலெக்ஸாண்டர். இந்த வெற்றி, கிரேக்க நாகரிகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

நிலப்பரப்பு

கிரேக்கத்தில் நாடு முழுக்க மலைகள் நிறைந்த பகுதி. ஏராளமான மலைகளும் ஒரு சில எரிமலைகளும் இருந்தன. மத்தியதரைக் கடல் அருகாமையில் இருந்ததால், எல்லா ஊர்களும் கடற்கரையிலிருந்து 90 கிலோ மீட்டர் தூரத்துக்குள் அமைந்திருந்தன.
கிரேக்கத்தில் நூற்றுக்கணக்கான நதிகள் இருந்தன. அலியக்மோனாஸ் (Aliakmonos), அக்கிலூஸ், (Acheloos), பைனியோஸ் (Pineios), எவ்ரோஸ் (Evros), மெஸ்ட்டா (Mesta) ஆகியவை முக்கிய நதிகள்.

கிரேக்கம் என்பது தனிநாடு அல்ல. பல நாடுகள் ஒன்றாகச் சேர்ந்த கூட்டமைப்பு. பகுதிக்குப் பகுதி, வாழ்க்கை முறையிலும், பழக்க வழக்கங்களிலும் ஏராளமான வித்தியாசங்கள் இருந்தன, ஆனால், நாட்டை இணைக்கும் பொதுவான அம்சமாகக கிரேக்க மொழி இருந்தது.

நகர ராஜ்ஜியங்கள்
சாதாரணமாக நாடுகள் அனைத்தும்,ஒரு சில பெரிய நகரங்கள், ஏராளமான கிராமங்கள் என்று அமைத்திருந்தன. ஆனால், கிரேக்கத்தில் ஒரு முக்கிய வித்தியாசம் – கிரேக்க நாடு முழுவதும் ஏராளமான நகரங்களைக் கொண்டதாக இருந்தது. வாழ்க்கை இந்த நகரங்களைச் சுற்றிச் சுழன்றது. நகர ராஜ்ஜியங்கள் (City States) என்று இந்த அமைப்பை வரலாற்று அறிஞர்கள் அழைக்கிறார்கள். சிறிய குன்றுகள், அவற்றின்மீது கோட்டைகள். கோட்டையைச் சுற்றி மதில் சுவர், அதற்குள் கோவில். குன்றின் அடிவாரத்தில் நகரங்கள், கிராமங்கள் – இதுதான் நகர ராஜ்ஜியம். ஏதென்ஸ், ஸ்பார்ட்டா, கோரிந்த், மாஸிடோன், தீப்ஸ் என நூற்றுக்கும் மேற்பட்ட ராஜ்ஜியங்கள் இருந்தன. இவற்றுள் ஏதென்ஸ், ஸ்பார்ட்டா முக்கியமானவை.

விவசாயம்

மழை காலத்தில் நதிகளில் பெரு வெள்ளம் பாய்ந்து வரும். ஏப்ரல் தொடங்கி செப்டெம்பர் வரையிலான ஆறு மாதங்களில் வெயில் கொளுத்தும், நதிகள் வறண்டுவிடும், இரண்டு உச்சங்களும் தொட்ட பருவநிலை விவசாயத்துக்கு ஏற்றதல்ல. ஆலிவ் மட்டுமே வளர்க்கமுடியும், வளர்த்தார்கள். ஆலிவ் எண்ணெய் முக்கிய தயாரிப்புப் பொருளாக இருந்தது. உணவு தானியங்களில் பார்லியும், ஒரு சில இடங்களில் கோதுமையும் பயிரிடப்பட்டன, திராட்சைத் தோட்டங்கள் இருந்ததாகச் சில ஆதாரங்கள் கூறுகின்றன.

பெரும்பாலான வீடுகளில் ஆடுகள் வளர்த்தார்கள். இவற்றிலிருந்து பால், மாமிசம், கம்பளி உடைகளுக்கான ரோமம் ஆகியவற்றைப் பெற்றார்கள். கோழிகள், பன்றிகள் ஆகியவையும் உணவுக்காக வளர்க்கப்பட்டன. பணக்காரர்கள் வீடுகளில் மட்டுமே குதிரைகள் இருந்தன. இவை வாழ்க்கையின் வசதிக்கு அடையாளம்.

தொழில்கள்

குடும்ப நிர்வாகம், குழந்தை வளர்ப்பு எனப் பெண்களின் பணி நான்கு சுவர்களுக்குள் சுழன்றது. ஆண்களில் பெரும்பாலானோர் ராணுவத்தில் பணி புரிந்தார்கள். விவசாயம், ஆடு மேய்த்தல், மீன் பிடித்தல், இரும்புப் பொருட்கள் தயாரித்தல் ஆகியவை பிற முக்கிய தொழில்கள், நாகரிகப் பின்காலத்தில் ஆசிரியர்கள், இசைக் கலைஞர்கள், நடிகர்கள் ஆகியோரும் உருவானார்கள்.

பலர் வியாபாரம் செய்தார்கள். நகரங்களின் மையப்பகுதியில் சந்தைகள் இருந்தன. இவற்றுக்கு அகோரா (Agora) என்று பெயர். சாதாரணமாக அகோராக்களில் உள்ளூர் சாமான்கள்தாம் கிடைக்கும். ஆனால், ஏதென்ஸ் அகோராக்களில் எகிப்திய லினன், ஆப்பிரிக்க யானைத் தந்தம், சிரிய வாசனைத் திரவியங்கள், ஆப்கனிஸ்தான் பேரீச்சை ஆகியவை விற்பனையாயின. சந்தைகளில் அடிமைகள் வியாபாரமும் உண்டு.

கி.மு. 600 வரை பண்டமாற்று முறையில்தான் வாணிபம் நடந்தது. இதற்குப் பிறகுதான் ஏதென்ஸ், ஸ்பார்ட்டா, கொரிந்தியா போன்ற ஒவ்வொரு பகுதியும் தங்கள் நாணயங்களை அறிமுகம் செய்தார்கள். ஏதென்ஸ் நாணயம்தான் பிரபலமானது. ஒவ்வொரு பகுதியும் தங்கள் நாணயங்களை மட்டுமே பயன்படுத்தினார்கள். ஒவ்வொன்றுக்குமிடையே நாணயப் பரிமாற்று விகிதம் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அகோராக்களில் அரசாங்கத்தின் பல கட்டுப்பாடுகள் இருந்தன. மூன்றுவித அரசாங்கச் அதிகாரிகள் இருந்தார்கள். ஒரு குழு பொருட்களின் தரத்தைச் சோதிக்க, இன்னோரு குழு எடைகள் சரியாக இருக்கின்றனவா என்று சோதனை செய்தது. மூன்றாவது குழு வியாபாரம் நேர்மையாக நடத்தப்படுகிறதா என்று கண்காணித்தது. நேர்மையான தொழில் பரிவர்த்தனைகள் நடைபெற இவை உதவின.

#AncientGreek
#Sparta
#Athens

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-05-2020
#KSRadhakrishnan
#KSR_Posts.

No comments:

Post a Comment

பிரபாகரன்- பாண்டி பாஜார் சம்பவம்- உண்மை என்ன⁉️உண்மைக்கு மதிப்பில்லை என்று புரிந்து கொண்ட தினம் இன்று..!

இன்றைக்கு திமுகவில் திமுக வரலாறு, பிரபாகரன் வரலாறு தெரியாதவர்கள் தான் ஆதிக்கம் செலுத்திகிட்டு திரிகிறார்கள்.  1982-ல் பிரபாகரன் கைதானவுடன்...