(திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை தீத்தாரப்ப முதலியார் - மீனாம்பாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்த இவர் தென்காசியில் ஆரம்ப கல்வியும் திருச்சிராப்பள்ளி உயர்நிலைப் பள்ளியில் உயர் கல்வியும் பயின்றார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். இவரது தாய் மற்றும் இவரது மனைவி பிச்சம்மாளின் பிறந்த ஊரான திருவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள இல்லத்தில் சிறிது காலமும், குற்றாலத்திலும் வாழ்ந்து இருந்தார்.1930 முதல் 1935 வரை சென்னை மாகாண இந்து அறநிலையத்துறை பாதுகாப்பு ஆணையராக பணியாற்றினார்.1927 ல் சென்னை மாகாணத்தின் சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை மாநில முதல்வராக இருந்தபோது தமிழக அரசுக்கு ஏற்ற முத்திரைச் சின்னமாக திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் பரிந்துரை செய்தார்.)
டி.கே.சி.க்குத் தெரியாத விஷயங்களே இல்லை என்பது போல இருக்கும் அவருடைய பார்வையும் பேச்சும். விவசாயத்திலிருந்து விண்வெளி வரை உள்ள விஷயங்கள் அவருக்கு அத்துப்படி.
ஊதுவத்தியை கொளுத்தி எப்படி, எங்கே வைக்க வேண்டும் என்று சொல்லுவார். நல்ல இட்லி எப்படிச் செய்வது என்பது பற்றி சொல்லுவார். அரிசியும் உளுந்தும் எந்த விகிதத்தில் இருக்க வேண்டுமென்று சொல்லுவார். ஏரோப்பிளேன் எப்படிப் என்று சொல்லுவார். இலையில் போட்ட பாயசத்தை எப்படிச் சாப்பிட வேண்டுமென்று சொல்லுவார்.
வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் நன்றாக ரசித்துப் பேசுவார். கடுகத்தனை விஷயத்தைக் கூட நன்றாகப் புரிந்து கொண்டு அதைப் பூரணமாக அனுபவித்து ஆனந்தம் அடைவார்.
உலகத்தில் உற்பத்தி ஆகும் அத்தனை ஜீவராசிகளுமே ஆனந்தத்தைத் தேடியும் நோக்கியும் போய்க்கொண்டிருக்கின்றன. ஆனால் டி.கே.சி.யோ ஒவ்வொன்றிலும் ஆனந்தத்தைத் தேடிக் கண்டுபிடித்து அனுபவித்தார்.. அதுதான் அவருடைய மேன்மை.
அவர் பக்கத்தில் இருப்பவர்கள் அறிவையும் ஆனந்தத்தையும் பெற்றுக்கொண்டே இருப்பார்கள். அதனால் அவரைச் சுற்றி எப்போதும் யாராவது இருந்து கொண்டே இருப்பார்கள்.
அவர் கவிதா உலகத்தில் மட்டும் சஞ்சரிக்கவில்லை. நாட்டியம், இசை இவைகள் பாலும் அவர் கவனம் செண்றது. தமிழ் நாட்டில், பரத நாட்டியத்தைப் பிரபலப்படுத்திய பெருமை முழுவதும் அவரைச் சார்ந்ததுதான்.
இசையின் நுணுக்கங்களையும், நாட்டியக் கலையின் நுணுக்கங்களையும் அவர் நன்றாகவே அறிந்திருந்தார், இவைகளையெல்லாம் எங்கு எப்போது கற்றார்? தெரியாது.அதனால் தான், சரஸ்வதி தேவியே அவதாரம் செய்திருக்கிறார்கள் என்று முன்னே சொன்னது.
டி.கே.சி.அவர்கள் தம்மை ஒரு சிறந்த பக்தனாகவோ, ஞானியாகவோ, வெளி உலகத்திற்குக் காட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. உடல் முழுக்க நீறு பூசிக்கொண்டோ, திருமண் இட்டுக்கொண்டோ, வளைய வரவில்லை. இந்தக் கோயிலுக்கும் அந்தக் கோயிலுக்கும் க்ஷேத்ராடனம் பண்ணியதாகவும் தெரியவில்லை. தினசரி சுவாமி தரிசனமோ, கோவிலுக்குப் போய் வரும் பழக்கமோ இருந்ததாகவும் தெரியவில்லை.
ஆனாலும் அவர் பக்தி நிலை கடந்து, யோகா நிலை நின்ற ஒரு பெரு ஞானி என்று துணிந்து சொல்லலாம். அவருடைய ஞான எண்ணங்களெல்லாம், கம்பர் தரும் ராமாயணப் பாடல்களுக்குப் பொருள் கூறும் போதும், உரை எழுதும் போதும் விளங்கும். ஆழ்வார்களின் பல பாடல்களும் அவரால் விளக்கம் பெற்றன.மாணிக்கவாசகரின் திருவாசகமும், திருமூலரின் திருமந்திரமும் அவரால் விளக்கம் பெற்றன.
கம்பரின் பாடல்களை படிக்கும்போது, அதற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் பொருள் நமக்குத் புலப்படாது. ஆனால், அதே பாடல் டி.கே.சி.யின் வாக்காக வரும்போது, வேதாந்தக் கருத்துக்கள் அத்தனையும் உள்ளடக்கி, சுருட்டி வைத்தாற்போல இருக்கும். கம்பர் தரும் ராமாயணம் புத்தகத்தை எடுத்துப் படித்தால் தான் மேற்கண்ட உண்மை விளங்கும்"
-மணியன்.
( திரு மணியன் அவர்களின்
கட்டுரையின் ஒரு பகுதி மட்டும் பதிவிடப்பட்டுள்ளது.)
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-05-2020
#KSRadhakrishnan
#KSR_Posts
No comments:
Post a Comment