Wednesday, December 9, 2020

 #நதிநீர்_இணைப்பு

————————————————-





நாட்டில் பாயும் நதிகளை தேசியமயமாக்கப்பட்டு கங்கை, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வைகை, தாமிரபரணி, குமரி மாவட்டம் நெய்யாறோடு இணைக்க வேண்டும். அதாவது கங்கை குமரியைத் தொட வேண்டும்; கேரளாவில் உள்ள அச்சன்கோவில் - பம்பை படுகைகளை தமிழகத்தினுடைய சாத்தூர் அருகே வைப்பாறோடு இணைக்க வேண்டும். கேரளாவில் மேற்கு நோக்கி பாய்ந்து வீணாக கடலுக்குச் செல்லும் நீரின் ஒரு பகுதியை தமிழகத்திற்கு திருப்ப வேண்டுமென்று 1983லிருந்து வழக்குகளை தொடுத்தபோது என்னை பரிகாசம் செய்தவர்கள் பலர் உண்டு.
அன்றைக்கு மூத்த வழக்கறிஞராக இருந்த வி.பி.இராமன் கூட இதெல்லாம் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பது என்று கூறினார். அவர் இன்றைக்கு இல்லை. அவரைப் போலவே மூத்த வழக்கறிஞரும், அரசு வழக்குகளை எல்லாம் நடத்திய என்.ஆர். சந்திரன் இந்த வழக்குகள் எல்லாம் சாத்தியமில்லை என்று கிண்டலடித்து அப்போது லா வீக்லி (*Law Weekly*) என்று சட்டத் தீர்ப்புகளை வெளியிட்டுவரும் வார ஏட்டிலும் விரிவாக எழுதியிருந்தார்.
ஆனால் இதையெல்லாம் கேட்டு சற்றும் பின்வாங்காமல் தொடர்ந்து 30 ஆண்டுகள் வழக்கை நடத்தி உச்சநீதிமன்றத்தில் கடந்த *27-02-2012இல்* சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பொறுப்பாளராக இருந்தபோது தீர்ப்பு வந்தது. தேர்தல் பணியின் காரணமாக தீர்ப்பு வந்த அன்றைக்கு டெல்லிக்கு கூட செல்லமுடியாத நிலை.
இந்த வழக்கை நடத்தி உரிய உத்தரவைப் பெறுவதற்காக டெல்லிக்கும், தமிழகத்திற்கும் இடையே நூற்றுக்கும் அதிகமான விமான பயணங்கள். இந்த வழக்கின் தீர்ப்புக்கான உத்தரவை பெற்ற பின்னர் கலைஞர் அவர்களிடம் தீர்ப்பு நகலை வழங்கினேன். அவர் மகிழ்ந்தார்.அந்த தீர்ப்பு நகலை குறித்து கலைஞர் அவர்கள் குறிப்பிட்டு எழுதியபோது தேவையில்லாமல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா விமர்சனத்தை வைத்தார்.
அந்த வழக்கின் தீர்ப்பில் மத்திய அரசு நதிநீர் இணைப்புகளைப் பற்றி ஆராய ஒரு ஆக்கப்பூர்வமான குழுவை அமைத்து, ஆறுமாதங்களுக்கு ஒருமுறை கூடி, இந்த முக்கிய பிரச்சனைக்கு அவசியம் தீர்வு காணவேண்டும். ஒருபக்கத்தில் வெள்ளம், ஒருபக்கம் வறட்சி என்ற நாட்டின் நிலையை சரி செய்ய இது உதவுவதோடு இதுஒரு முக்கியப்பிரச்சனை. இதைப்பற்றி ஆக்கப்பூர்வமான நடவடிக்கை வேண்டுமென்று *தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா* மற்றும் நீதிபதிகள் *ஏ.கே. பட்நாயக், சுவந்திரகுமார்* அடங்கிய நீதிபதிகள் குழு நதிநீர் இணைப்பைக் குறித்து முதல் தடவையாக தெளிவான தீர்ப்பை வழங்கியது.
இந்த நதிநீர் இணைப்பில் முதற்கட்டமாக தீபகற்ப நதிகள் அதாவது தக்கான பீடபூமி, ஆந்திராவின் தென்பகுதி, கர்நாடகத்தின் தென்பகுதி, தமிழகம், கேரளம், விந்திய - சத்புரா மலைகள், சோட்டா நாகபூர் பீடபூமிக்கு தென்புரம் அதாவது மகாநதி தீரத்திலிருந்து குமரி வரை உள்ள தென்னக நதிகளை இணைக்கப்பட வேண்டுமென்று முதற்கட்டமாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பின் வடபுலத்தில் இமயமலையில் இருந்து உற்பத்தியாகும் நதிகளோடு மகாநதியை இணைத்தால் நதிநீர் இணைப்பு தேசியளவில் முழுமையாகிவிடும். அந்த வகையில் தான் கோதாவரி - காவிரி வரை இணைப்பு என்று சொல்லும்போது மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வைகை, தாமிரபரணி முதல் வைப்பாறு வரை இணைத்தால் மட்டுமே இது பலனளிக்கும். இது தொடர்பான பல்வேறு தரவுகளை மத்திய நீர்வளத்துறையிடம் சமர்ப்பித்துள்ளேன். அவ்வாறு அணைத்து தென்னக நதிகளை இணைப்பதற்கு ஏன் மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது.
இன்றைய இந்த கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கு மூலமே நதிநீர் இணைப்பில் நான் தாக்கல் செய்த வழக்கு தான். தீர்ப்பு வந்தவுடன் நானும், அன்றைய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ச. தங்கவேலுவும் அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஹரீஷ் ராவூத்தை மூன்று முறை சந்தித்தோம். அதன்பிறகு ஒரு அதுகுறித்து ஆராய குழு அமைக்கப்பட்டது. அதுவும் ஆமை வேகத்தில் செயல்பட்டது. மன்மோகன் சிங் அரசாங்கமும் முடிவுக்கு வந்துவிட்டது.
அதன்பின், 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிப்பொறுப்புக்கு வந்தவுடன் துவக்கத்தில் அன்றைய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியை சந்தித்து உச்சநீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்துங்கள். இந்த தீர்ப்பு வந்து நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்டன. இனியும் அதுகுறித்தான மேல்நடவடிக்கை இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தான் தொடுக்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தபின்னர் பல நாட்கள் கழித்து இன்றைக்கு கோதாவரி - காவிரி இணைப்பு நடக்கவுள்ளது என்பது ஒரு சின்ன ஆறுதல்.
இதைத் தொடர்ந்து நதிநீர் இணைப்பு தொடர்பாக பி.என். நவலவாலா தலைமையில் மத்திய அரசின் குழு அமைக்கப்பட்டு இந்த ஐந்தாவது கூட்டம் நிகழ்ந்திருக்கிறது. இந்த நவலவாலா குழுவின் துணைக்குழுக்கலான இரண்டு குழுக்களின் காலத்தையும் மத்திய அரசு நீட்டிக்கவேண்டும்.
தென்னக நதிகள் இணைப்பதை பற்றி எந்த திட்டமும் இல்லையே என்பது கவலையளிக்கிறது. நதிநீர் இணைப்பு வழக்கு தொடுத்ததோடு மட்டுமல்லாமல் இது தொடர்பாக நான் தனிப்பட்ட வகையில் எடுத்த முயற்சிகள் ஏராளம். நதிநீர் இணைப்பு வழக்கை குறித்து பிரதமர்களாக இருந்த *வி.பி.சிங்(1990), பி.வி.நரசிம்ம ராவ் (1992), தேவகவுடா (1996 இறுதி), ஐ.கே. குஜ்ரால் (1997)* ஆகியோரை நான் நேரடியாகச் சந்தித்து இதுகுறித்துப் பேசி பத்தொன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன.
அன்றைக்கு வி.பி.சிங்கிடம் கேட்டபோது மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமென்றும் அது தொடர்பான செயல்பாடுகள் முடிவடைந்த பின்னர் விவாதிக்கலாம் என்றார். அவருடைய ஓராண்டு ஆட்சி கலைக்கப்பட்டது. பி.வி.நரசிம்மராவ் ஆட்சி புதிய பொருளாதாரக் கொள்கைகள் குறித்தான முக்கியமான தருணத்தில் நாடு இருந்ததால் இது குறித்து ஒரு முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது. தேவேகவுடாவை 1996 டிசம்பரில், உச்ச நீதிமன்றத்தில் என்னுடைய நதிநீர் இணைப்பு வழக்கு குறித்து விவாதிக்க சந்தித்தேன். அப்போது என்னிடம் அவர் பேசிய வார்த்தைகள், இவர் ஒரு பிரதமரா என்று நினைக்கத் தோன்றியது. “ஆர் யூ ராதாகிருஷ்ணன்?. என்னை நீக்க
சொல்லி q warnto வழக்கு போட்டவர் நீங்கதானே” என்று கன்னடமும், ஆங்கிலமும் கலந்து முகத்தை சுளித்து பேசினார்.
இப்படி நதிநீர் இணைப்பில் பல்வேறு காலக்கட்டங்களில் இவ்வளவு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. பலமுறை அவமானங்களும், கேலிப் பேச்சுகளும் மனதை ரணப்படுத்தின. இதன் பின்புலத்தில் நடந்த சேதிகளையும், சங்கதிகளையும் சொல்லக்கூடிய தகுதி இருக்கிறது. மக்கள் மன்றத்தில் பதிவு செய்வது என்னுடைய கடமையாகும்.
KSRadhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-05-2020.

No comments:

Post a Comment