Tuesday, December 8, 2020

 #சொர்க்கம்

#மயங்காத_கண்கள்_மயங்கும்_முன்பு #விளங்காத_கேள்வி_விளங்கும்*
————————————————




ஏப்ரல் உச்சி வெயிலுக்கு
இளநீரே சொர்க்கம்
December மாத குளிருக்கு
Degree coffee சொர்க்கம் ;
கோடை வெயிலுக்கு
குளிர்ந்த மோர் சொர்க்கம்

திருமணமான புதிதில்
தினந்தோறும் சொர்க்கம்
விளக்கு வைத்த பின்னால்
வெள்ளி நிலா சொர்க்கம்
குலவும் காதல் ஜோடிக்கு
கும்மிருட்டே சொர்க்கம்
உலவும் தென்றல் காற்று
உடலை வருட சொர்க்கம்
படுத்தவுடன் தூக்கம்
பட்டென்று வந்தால் சொர்க்கம்;

மீந்து போன அடைமாவில்
மிருதுவான குனுக்கு சொர்க்கம்
ஒருவாரமான தோசைமாவில்
ஊத்தப்பமே சொர்க்கம்
மார்கழி மாத குளிரில்
மணக்கும் வெண்பொங்கல் சொர்க்கம்
கார மிளகு தாளித்த - பொங்கலுடன்
கத்திரிக்காய் கொத்ஸ்சே சொர்க்கம்

பரங்கிக்காய் சாம்பாருக்கு - பீன்ஸ்
பருப்புசிலி சொர்க்கம்
கதம்ப சாம்பாருக்கு - பொடியிடிச்ச
கத்திரிக்காய் கறி சொர்க்கம்
குடைமிளகாய் சாம்பாருக்கு
கோஸ் பட்டாணி கறி சொர்க்கம்
உலகிலுள்ள அத்தனை சாம்பாருக்கும்
உருளை காரகறியே சொர்க்கம்

வெந்திய குழம்பிற்கு
வெண்டைக்காய் கறி சொர்க்கம்
சுண்டைக்காய் வெத்த குழம்பிற்கு
சுட்ட அப்பளமே சொர்க்கம்
பத்திய மிளகு குழம்பிற்கு
பருப்பு தொகையலே சொர்க்கம்
மத்தியான தயிர் சாதத்திற்கு
மாவடு இருந்தால் சொர்க்கம்
அடைக்கு வெல்லத்தோடு
அவியல் இருந்தா சொர்க்கம்;
ஆப்பம் பிட்டு தின்பவனுக்கு
ஆட்டுக்கால் பாயா சொர்க்கம்

முதுமை வரும் போது
முன் வழுக்கை சொர்க்கம்
ஞானம் வரும் வேளை
நரகம் கூட சொர்க்கம்
பசியில் துடிப்பவனுக்கு
பழைய சோறே சொர்க்கம்
நோயில் வீழ்ந்தவனுக்கு
நொய்க் கஞ்சியே சொர்க்கம்

வாடை காற்றுக்கு
வஞ்சியின் வெப்பம் சொர்க்கம்
நேசிக்க நெஞ்சமிருந்தால்
நினைவெல்லாம் சொர்க்கம்
வாசிக்க புத்தகமிருந்தால்
வரிக்கு வரி சொர்க்கம்

தள்ளாத வயதில்
தாரத்தின் தாய்மடி சொர்க்கம்
மரணம் வரும் நேரத்தில்
மரிப்பதே சொர்க்கம்
இரவு படுக்க போகும் முன்
இரண்டு முத்தம் சொர்க்கம்
தூங்கி எழவில்லையென்றால்
தூக்கத்திலேயே சொர்க்கம்! சொர்க்கம்!!
இப்படி பல பல.......

மயங்காத கண்கள் மயங்கும் முன்பு விளங்காத கேள்வி விளங்கும்
இரவோடு நெஞ்சம் உருகாதோ இரண்டோடு மூன்றும் வளராதோ?

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...