Sunday, July 9, 2017

சென்னை உயர்நீதிமன்றத்தின் கம்பீரமான கட்டிடங்கள் அமைந்து 125 ஆண்டுகள் நிறைவு.

சென்னை உயர்நீதிமன்றம், கம்பீரமான இந்த கட்டிடங்கள் அமைந்த 125வது வருடத்தை கொண்டாடுகின்ற வகையில் வரும் 12.07.2017 அன்று The Madras Bar Association, High Court விழா எடுக்கின்றது. அந்த அழைப்பிதழில் அமைந்த சென்னை உயர்நீதிமன்ற கட்டிடத்தின் படங்கள் தான் இது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்று குறிப்புகளோடு 2012ல் பிப்ரவரி மாதத்தில் வெளியான எனது தினமணி கட்டுரை வருமாறு.

சென்னை என்றால் அதன் அடையாளமாக, வானுயர்ந்து கம்பீரமாக, சிவப்பாகக் காட்சி அளிக்கின்ற உயர்நீதிமன்றக் கட்டடம் தமிழர்களின் பெருமையை எடுத்துச் சொல்லும். சென்னையிலுள்ள உயர்நீதிமன்றம் அமைந்து 150 ஆண்டுகள் முடிவு பெறுகிறது. ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனியை சென்னையில் துவக்கிய பொழுது, 1940இல் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டியவுடன், வழக்குகளை விசாரிப்பதற்கென சவுல்ட்ரி என்று சொல்லப்படுகின்ற சத்திர நீதிமன்றம் துவக்கப்பட்டு, அங்கு சிவில், கிரிமினில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. 1688இல் மேயர் கோர்ட், 1739இல் கச்சேரி கோர்ட், 1798இல் ரிக்கார்ட் கோர்ட் என்று பலவகையான சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களை ஆங்கிலேயர்கள் அமைத்தனர். 1601இல் மெட்ராஸ் ஐகோர்ட் என்றாலும், சுப்ரிம் கோர்ட் ஆப் மெட்ராஸ் என்று அமைக்கப்பட்டு 60 ஆண்டுகாலம் பதிவில் இருந்தது.

1861ல் விக்டோரியா மகாராணி சென்னை, கல்கத்தா, பம்பாயில் உயர்நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிட்டார். முறையாக 150 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1862 ஆகஸ்ட், 15இல் மெட்ராஸ் ஐகோர்ட் துவக்கப்பட்டது. இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த கோர்ட் துவக்கப்பட்டு 85 ஆண்டுகளுக்குப் பின் அதே ஆகஸ்ட் 15இல் இந்தியா விடுதலைப் பெற்றது. தற்போதுள்ள கட்டடம் கட்டும் பணி 1888இல் துவங்கப்பட்டது. முதல் தலைமை நீதிபதியாக கோலி கார்மன் ஸ்காட்லாண்ட் நைட் தலைமையில் ஐந்து நீதிபதிகள் உட்பட இந்த நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டனர். வழக்குகளில் ஆஜராவதற்காக வக்கீல்கள் மற்றும் அட்டர்னி அட் லா என்ற தகுதிப் பெற்றவர்களை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்தனர்.
அப்போதைய மெட்ராஸ் ஐகோர்ட் ராஜாஜி சாலையிலுள்ள சிங்காரவேலர் மாளிகை, கஸ்டம்ஸ் ஹவுஸ் ஒட்டிய பகுதியில் செயல்பட்டது.

தற்போதைய பாரிமுனையில் உள்ள உயர்நீதிமன்றத்தின் இந்த அற்புதக் கட்டடம் கட்ட நான்கு ஆண்டுகள் ஆனது. இங்கு கட்டடப் பணிகள் ஆரம்பிப்பதற்கு முன் அங்கிருந்த சென்னகேசவப் பெருமாள், மல்லீஸ்வரர் ஆலயங்களை பூக்கடை காவல் நிலையம் அருகில் மாற்றி அமைக்கப்பட்டது. இங்குதான் முதன்முதலாக சென்னைக்கு கலங்கரை விளக்கம் அமைந்தது. ஜே.டபிள்யு. பிசிங்டனின் வடிவமைப்பில், ஹென்றி இர்வின், ஜெ.எச். ஸ்டீபன் போன்றோர்களின் முயற்சியில், இந்தோ – சாராசனிக் முறையில் இன்றைய இந்த கம்பீரக் கட்டடம் எழுந்தது. அதற்கான அன்றைய மொத்த செலவு 12 இலட்சத்து 98 ஆயிரத்து 163 ரூபாய்.

ஜூலை 12, 1892 அன்று காலை 10 மணி அளவில் சென்னை மாகாண கவர்னர் பாரிமுனை வர, அங்கிருந்து அவரை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு பிரதான வாயில் வழியாக ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். தலைமை நீதிபதியாக இருந்த சர் ஆர்தர் காலின்ஸ் மற்றும் சக நீதிபதிகள் அவரை வரவேற்று திறப்பு விழா நடக்கும் நீதிமன்ற அரங்குக்கு அழைத்துச் சென்றனர். அங்கு உச்சநீதிமன்ற சாவியை பொதுப்பணித் துறைச் செயலாளர் கவர்னரிடம் முறைப்படி வழங்க, அதை கவர்னர் தலைமை நீதிபதியிடம் வழங்கினார்.

பிரமிக்க செய்யும் இந்த கட்டடத்தை கண்டு செஞ்சி ஏகாம்பர முதலியால் ஐகோர்ட் அலங்கார சிந்து என்று பாடி, அதை 1904இல் பூவிருந்தவல்லி க. துளசிங்க முதலியாரால் வெளியிடப்பட்டது. அந்த அலங்கார சிந்துவில் குறிப்பிட்ட வரிகள்:
“அண்டா போல் ஒரு கூண்டு சண்டமாக கட்டி
அடுத்தகத்திலும் பெருங்க கொடத்தை போல வெகுகூட்டி
கண்டவர் பிரமிக்க கலசமதிலே மாட்டி
கண்கள் சிதரும்படி தங்கத்திலூட்டி…”

1916இல் செப்டம்பர் 22இல் எம்டன் என்ற ஜெர்மானியக் கப்பல் இதன் மீது குண்டு வீசியதில் சுற்றுச் சுவர்கள் சேதமடைந்தன. அதுகுறித்து பதிவுகள் இன்றைக்கும் இந்த கட்டடத்தின் வடகிழக்கு மூலையிலுள்ள ராஜாஜி சிலை அருகில் மதில்சுவரில் கல்வெட்டாக உள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது இந்த நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு அதன் கோப்புகள் கோவைக்கும் அனந்தப்பூருக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. சிலகாலம் கோவையில் சென்னை உயர்நீதிமன்ற பணிகள் நடைபெற்று, போர் அச்சம் தணிந்தபின் தி.நகரில் உள்ள ஆங்கிலோ – இந்தியப் பள்ளியில் உயர்நீதிமன்றம் சிலகாலம் தனது பணிகளை செய்தது.

இப்படி நீண்ட வரலாறு கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் பற்றி சொல்ல வேண்டுமென்றால் பல செய்திகள், நிகழ்வுகள், கம்பீரமான கட்டடங்கள் போன்றவை மட்டுமல்லாமல் – நீதியை நிலைநாட்டிய மெத்தப்படித்த, நுண்மான் நுழைபுலம் கொண்ட நீதிபதிகள், ஆற்றலும் பேரறிவும் பெற்ற வழக்கறிஞர்கள் கம்பீரமாக உலாவியதும் இந்த வளாகத்தில்தான். ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தெரு விளக்கில் படித்த திருவாரூர் முத்துசாமி ஐயர்தான், ஆங்கிலேயர் காலத்தில் 1878இல் முதல் இந்திய நீதிபதியாக அமர்ந்தார். நாடு விடுதலை பெற்றவுடன் டாக்டர் ராஜமன்னார் 1948இலிருந்து 1966 வரை நீதிபதியாக இங்கு அமர்ந்தது நீதித் துறையில் ஒரு மறுமலர்ச்சி காலம். உலகில் இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகத்தைக் கொண்டுள்ள இங்கு நடந்த வழக்குகளில் பல பரபரப்பான தீர்ப்புகளும், நியாயங்களும் வழங்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படடது.

இந்த நீதிமன்றத்தின் மூலம் அரசியலமைப்பு சட்டக் கூறில் 15 திருத்தங்கள் பெற வழிவகுத்தது. வ.உ.சி. ஆயுள் தண்டனை வழக்கு, வாஞ்சிநாதன் வழக்கு, லட்சுமிகாந்தன் வழக்கு, தியாகராஜ பாகவதர் – என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் வழக்குகள் என வரலாற்றுப் புகழ் பெற்ற நூற்றுக்கணக்கானவற்றை சொல்லிக் கொண்டே போகலாம்.

சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து, உச்சநீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதிகளாக பதாஞ்சலி சாஸ்திரி, கே.சுப்பாராவ், ஏ.எஸ். ஆனந்த், கே.ஜி. பாலகிருஷ்ணன் போன்றோர் இந்தியாவின் தலைமை நீதிபதிகளாக ஆனார்கள். இங்கிருந்து உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக சென்ற டி.எல். வெங்கட்ராமய்யர், அழகிரிசாமி, பி.எஸ். கைலாசம், இரத்தினவேல் பாண்டியன், வி.இராமசாமி, வரதராசன், எஸ்.நடராசன், எஸ்.மோகன், கே. வெங்கடசாமி, ஏ.ஆர். இலட்சுமணன் என்ற ஒரு நீண்ட பட்டியலே உண்டு.

கடந்த 1962இல் இதன் நூற்றாண்டு விழா கொண்டாடும் போது டி.எல். வெங்கட்ராமய்யர் கர்நாடக இசைப் பாடல் பாட, அன்றைய பப்ளிக் பிராசிக்யூட்டர் வி.பி. ராமன் தனது 38 வயதில் வயலின் வாசிக்க ஒரு அரிய இசை நிகழ்ச்சி அப்போது நடந்தது. நீதிபதி டி.எல். வெங்கட்ராம ஐயர், இசைப் பேரரசி டி.கே. பட்டம்மாளுக்கு முத்துசாமி தீட்சிதரின் கீர்த்தனைகளை கற்றுத் தந்த ஆசான் ஆவார். அன்றைய நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் தமிழ் இலக்கியம், இசை, கலை, சமூக மேம்பாடு என்று சகலத் துறையிலும் சிறந்து விளங்கினர். ரசிகமணி டி.கே.சி.யின் சகா, நீதிபதி மகராசன், நீதிபதி மு.மு.இஸ்மாயில் போன்றோர் தமிழுக்கு ஆற்றிய பணிகள் ஏராளம். இன்றைக்கும் மகராசனால் தமிழாக்கம் செய்யப்பட்ட ஷெக்ஸ்பியரின் கிங்லியர் படிக்க படிக்க திகட்டும்.

நெல்லை மாவட்டத்திற்கு போனால் ஐகோர்ட் மகாராஜாவை தெய்வத்திற்கு இணையாக பேசுவதுண்டு. ஒரு சமயம் திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலையில் பயணிக்கும்பொழுது செய்துங்கநல்லூரில் டீ கடை விளம்பரப் பலகையில் ‘ஐகோர்ட் மகாராஜா துணை’ என்று போடப்பட்டிருந்தது. அதுகுறித்து, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த மகராஜனை குறிப்பதுதானா இது என்று கேட்டபோது, ஒரு சிலர் ஆம்; அது அவரை குறிப்பதுதான் என்றனர். ஆனால் அதுகுறித்த தெளிவான கருத்தை அறிய முடியவில்லை. இப்படியாக கிராமப்புறத் தரவுகளிலிருந்து ஐகோர்ட்டை எவ்வளவு பூஜிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடிகிறது.

கம்பன் மீது ஈடுபாடு கொண்ட மு.மு.இஸ்மாயிலினுடைய பேச்சும் எழுத்துக்களும் என்றைக்கும் சிரஞ்சீவியாக இருக்கும். திருக்காட்டுப் பள்ளியில் பிறந்த நீதியரசர் சிவசாமி ஐயர் கல்விக்கு ஆற்றிய பணிகள் ஏராளம். தலைமை நீதிபதிகள் எம். அனந்த நாராயணன், பி. சந்திரா ரெட்டி மற்றும் பி.ஆர். கோகுகல கிருஷ்ணன், நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டி குறிப்பிடத்தக்கவர்கள்.

வி.கே.திருவேங்கட ஆச்சாரியார் அட்வகேட் ஜெனரலாக இருந்தபொழுது, காமராசர் முதல்வராக இருந்தார். ஒரு முக்கிய வழக்கு குறித்து எனக்குத் தெளிவுபடுத்துங்கள் என்று ஒரு முதலமைச்சரை தன் வீட்டிற்கே வரவழைத்தவர்தான் வி.கே.டி. அந்த அளவு தங்கள் தரத்தை பாதுகாத்து, வழக்கறிஞர் தொழிலுக்கு நற்பெயரை பெற்றுத் தந்தவர்கள் இவர்கள். ஆனால் இன்றைக்கு அந்தச் சூழலை எதிர்பார்க்க முடியுமா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனலராக பணியாற்றிய ஜான் புரூஸ் நார்டனின் புதல்வர் ஏர்லி நார்டனைப் பற்றிச் சொல்ல வேண்டும். இவர் இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்று பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியாற்றினார். இவர் பின்னாளில் தன்னை இந்திய தேசிய காங்கிரசில் இணைத்து கொண்டதோடு, அதன் சட்டத்திட்டங்களை வகுப்பதிலும் பங்கேற்றவர். ஆங்கிலேயர்கள் இவரை தேச துரோகி என்று குறிப்பிட்டனர். உடனே நார்டன், அநீதியை எதிர்ப்பதும், எந்த ஒரு நாட்டுக்கும் தங்களின் சொந்த விஷயங்களை நிறைவேற்றுவதில் அவர்களுக்கு உரிமை வேண்டும் என்று கோருவதால் தேச துரோகி என்று கூறினால், நான் அப்படிப்பட்ட தேச துரோகியாக இருக்க விரும்புகிறேன் என்றார்.

வங்காளம் பிளவுபட்டபோது அதனை எதிர்த்து நடைபெற்ற அன்னிய பொருள் எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. அதனை ஒடுக்க அரசு பலவகையிலும் முயன்றது. அப்போது முசாபூர் மாவட்ட நீதிபதி கிங்ஸ்போர்ட் பத்திரிகையாளர்களை சிறையிலடைத்தார். மேலும் போலீசாரிடம் வாதம் செய்தான் என ஒரு சிறுவனுக்கு சவுக்கடி கொடுத்தார். அந்த சிறுவன் நடத்திய வெடி குண்டு தாக்குதலில் ஆங்கிலேயர் இருவர் மாண்டனர். இச்செயலுக்கு மேலும் பலர் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு, மகான் அரவிந்தரும் அதில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அனைவரும் அலிப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர். அப்போது சென்னையிலிருந்த ஏர்லி நார்டனை அந்த வழக்கில் ஆஜராவதற்காக ஆங்கிலேய அரசு அழைத்துச் சென்றது. அதற்காக நார்டனுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,000/- வக்கீல் பீஸ் வழங்கப்பட்டது.
அப்போது அது பெரிய தொகை. இவரும் அந்த வழக்கில் ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக வாதாடினார் என்பதுதான் இங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தகவல்களை மகான் அரவிந்தர் தனது ‘சிறைச்சாலையில் எனது நாட்கள்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு தனக்கிருந்த இரு முகங்களை காட்டிய இவருக்கு சென்னை, மந்தைவெளியில் உள்ள ஒரு தெருவிற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஏர்லி நார்டன் தனது வருமானத்தில் கிடைத்த பணத்தை பச்சையப்பன் கல்லூரிக்கு வழங்கினார். பொறுமையோடும் மரியாதையோடும் வாதங்கள் நடைபெறுகின்றனவா? கற்றுக் கொள்ள வேண்டியவற்றை கற்பதில் ஆர்வம் உள்ளதா? அனைத்தையும் ஆராய்ந்து வாதம் செய்யும் முனைப்பு உள்ளதா? எந்த ஒருவருக்கும் அநீதி இழைத்துவிடக் கூடாது என்ற நியாயம் இருக்கிறதா? இவையெல்லாம் நார்டனின் கவனத்தில் எப்போதும் இருக்கும் சங்கதிகள் ஆகும்.

ஓரு பக்கம் இந்த வலிமை மிகுந்த உயர்நீதிமன்றத்தை நோக்கி தாக்குதலும் நடந்தேறின. சட்டமன்றத்திற்கும், நீதிமன்றத்திற்கும் பிரச்சினைகள் ஏற்படும்பொழுது பலதரப்பான விவாதங்களும் விமர்சனங்களும் நடந்தேறின. குறிப்பாக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அழகிரிசாமியை அட்வகேட் ஜெனரலாக நியமித்த போதும், அதன்பின் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நில ஆர்ஜித வழக்கில் நீதிபதி சத்தியதேவ் தீர்ப்பு குறித்து சட்டமன்றத்தில் விவாதித்தபொழுதும், சட்டப்பேரவைத் தலைவராக பி.எச்.பாண்டியன் இருந்தபொழுது நீதிபதி சிங்காரவேல் ஒரு கிரிமினல் வழக்கில் வழங்கிய தீர்ப்பை சட்டமன்றத்தில் ரத்து செய்தபோதும் – இப்படியான நீதித்துறையின் மீது தாக்குதல் வந்தபொழுதும் அயராது தனது பணிகளை மேற்கொண்டது.

வழக்கறிஞர்கள் தங்களுடைய கடமைகளையும், பெருமைகளையும் விட்டுக் கொடுக்காமல் அந்தப் பண்புகளை கட்டிக்காத்த பாரம்பரியம் இந்த நீதிமன்றத்திற்கு உண்டு. ஏர்லி நார்டனை குறிப்பிட்டது போல, வழக்கறிஞர்களாக இருந்த சி.பி.ராமசாமி ஐயர், டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரி, அல்லாடி கிருஷ்ணசாமி ஆசாரியார், ராஜா ஐயர், எஸ். மோகன குமாரமங்கலம், வி.கே. திருவேங்கடஆச்சாரியார், கேசவ அய்யங்கார் (பராசரனுடைய தந்தையார்), வி.எல். எத்திராஜ், பராசரன், வி.பி. ராமன், கே. குட்டி கிருஷ்ண மேனன், எம்.கே. நம்பியார், சி.ஆர். பட்டாபிராமன், கோவிந்தசாமிநாதன், ஜி.ராமசாமி, என்.டி.வானமாமலை, கே.கே. வேணுகோபால், எஸ்.செல்லசாமி, டி.செங்கல்வராயன், பி.ஆர். டோலியே இப்படி கீர்த்திப் பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வரலாறு படைத்தனர் என்று சொல்வதைவிட, நீதித்துறையை தமிழகத்தில் மேம்பட செய்தார்கள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இந்த நீதிமன்றத்தில் உலாவியவர்களில் மத்திய – மாநில அமைச்சர்கள், ஆளுநர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு முக்கியப் பொறுப்புகளை பெற்றவர்களும் உண்டு.

இன்றைய சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக உள்ளது. அதில் 40 நிரந்தர நீதிபதிகள், 17 பேர் கூடுதல் நீதிபதிகளாவர். நீண்டகால போராட்டத்திற்கு பின், நீதிபதி ஜஸ்வந்த் சிங்கின் பரிந்துரைக்குப் பின், 1985லிருந்து வலியுறுத்தப்பட்டு தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 12 நீதிபதிகளோடு செயல்படுகிறது.

125ஆவது நிறைவு விழாவின் போது மனுநீதி சோழன் சிலை சென்னை உயர்நீதிமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டு, தமிழர்கள் எவ்வாறு நீதியை நிலைநாட்டினர் என்ற கடந்த கால வரலாற்றை வலியுறுத்தி இருந்தாலும், இன்னும் மெட்ராஸ் ஐகோர்ட் என்றுதான் அழைக்கப்படுகிறது. முதலில் துவங்கிய மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய மூன்று உயர்நீதிமன்றங்களும், இதே பேரில்தான் இன்றைக்கும் அழைக்கப்படுகின்றது. அந்த நகரங்களின் பெயர்கள் சென்னை, மும்பை, கொல்கத்தா என்று மாற்றப்பட்டாலும் இன்னும் நீதிமன்றங்களின் பெயர்கள் மாற்றப்படவில்லை.

இவையாவும் சார்ட்டட் ஐகோர்ட் என்று வழங்கப்படுகின்றன. இந்த மூன்று உயர்நீதிமன்றங்களுக்கும் மற்ற நீதிமன்றங்களைவிட சில அதிகாரங்கள் கூடுதலாக உள்ளன. அதாவது எல்.பி.ஏ. என்று சொல்லக் கூடிய ஃஞுttஞுணூண் கச்tஞுணt அணீணீஞுச்டூ என்ற இரண்டாவது மேல் முறையீடு என்ற சிறப்பதிகாரம் உண்டு. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்குகளை நடத்த வேண்டும் என்று தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் அதுவும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நிலுவையிலேயே உள்ளது.

இப்படியான வரலாற்றுப் பதிவுகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பல உள்ளன. சாமானியர்களுக்கு நீதியை வழங்குகின்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆளுமைக்கு நாம் தலை வணங்குவோம். அதனுடைய நீதிபரிபாலனம் எந்நாளும் ஜனநாயகத்திற்கு வலு கூட்டட்டும்.

#சென்னை_உயர்நீதிமன்றம்
#சென்னை_உயர்நீதிமன்ற_வரலாறு
#madras_high_court
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
08-07-2017

No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...