Monday, July 31, 2017

மொழிவாரி மாநிலங்கள் அமைந்ததும், அதன் பின்னணி குறிப்புகளும்


இந்தியாவில் மொழிவாரி மாநிலம் என்கிற கோரிக்கையின் முக்கியமான அச்சாரம் வங்கப்பிரிவினையின் பொழுது ஏற்பட்டது. பல்வேறு மொழி பேசுபவர்கள் ஒன்றாக வழங்கிவருவதால் அவற்றைப் பிரிக்கலாம் என அப்பொழுதைய உள்துறை செயலாளர் ஹெர்பர்ட் ரிஸ்லே தெரிவித்தார். அப்படிப் பிரிக்கப்பட்டது உண்மையில் மொழி வளர்ச்சியைக் குறைத்தது, மீண்டும் வங்கம் சேர்க்கப்பட்ட பொழுது பல்வேறு மொழி பேசுபவர்கள் நிறைந்திருந்த பீகார், ஒரிசா பகுதிகள் ஒரே மாகாணமாக ஆக்கப்பட்டன. எனினும், அசாம் தனியாகப் பிரிக்கப்பட்டு அங்குள்ள வங்காளிகள் மொழிச்சிறுபான்மையினராக விடப்பட்டார்கள். காங்கிரஸ் முதல் மொழிவாரி மாநிலமாகப் பீகாரை 1908-ல் மாற்றியது.

ஒன்பது வருடங்கள் கழித்துச் சிந்த், ஆந்திரா மொழிவாரி மாநிலங்களாகக் காங்கிரஸ் செயல்பாட்டில் மாறின. காங்கிரஸ் காந்தி களத்துக்கு வந்த இருபதுகளில் துவங்கி மொழிவாரி மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்று ஆங்கிலேய அரசைக் கேட்டுக் கொண்டிருந்தது. அதனை ஏற்றுக்கொள்ளும் வகையில், 36-ல் சிந்த், ஒரிசா ஆகிய தனி மொழிவாரியான மாகாணங்கள் உருவாக்கப்பட்டன. இதில் சிந்து மாகாணம் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டது எனச் சொல்லப்பட்டாலும் அது இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்தபடியால் ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சி என்று தேசியவாதிகள் குற்றஞ்சாட்டினார்கள்.

மெட்ராஸ் மாகாணத்தில் விடுதலைக்கு முன்னர் மொழிச்சிறுபான்மையினர் முறையே 1.77 கோடி தெலுங்கர்கள், நாற்பது லட்சம் ஒரியா மொழி பேசுபவர்கள், 37 லட்சம் மலையாளிகள், 17 லட்சம் கன்னடர்கள் இருந்தார்கள். மராத்தி மொழி பேசாத குஜராத்திகள், சிந்திக்கள், கன்னடர்கள் முறையே 34, 31,26 லட்சங்களில் இருந்தார்கள். மத்திய மாகாணங்களில் ஐம்பத்தி நன்கு லட்சம் மராத்தியர்களும், பஞ்சாபில் அறுபத்தி ஐந்து லட்சம் லஹ்நடா மொழி பேசுபவர்கள் இருந்தார்கள். ஆந்திராவை தனி மாநிலமாக ஆக்க வேண்டும் என்று தெலுங்கு மொழி பேசுபவர்கள் கேட்டுக் கொண்ட போதிலும், (1.77 கோடி) அவர்கள் தனி மாநிலமாக ஆனாலும், 25 லட்சம் தெலுங்கர்கள் மெட்ராஸ் மாகாணத்தில் தொடர்வார்கள் என்பதால் அதனை எதிர்த்தார்கள். எனவே, இந்த வகையான பிரிவினையை ஆங்கிலேய அரசு செய்ய மறுத்தது.

விடுதலைக்கு முன்னர்வரை மொழிவாரி மாநிலங்கள் என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த காங்கிரஸ் மதரீதியாக நாடு துண்டாடப்பட்ட சூழலில் மொழிவாரியாக நாட்டைப் பிரிக்க யோசித்தது. அது நாட்டைப் பால்கன் பிரதேசங்கள் போலத் துண்டாடிவிடும் என்று அது பயந்தது, புதிய தேசத்தைக் கட்டமைப்பது, அகதிகளைக் குடியேற்றுவது, காஷ்மீர் சிக்கல், ஆங்கிலேயர் ஆளுகைக்குள் வராத 5௦௦க்கும் மேற்பட்ட மன்னராட்சி பகுதிகளை இணைப்பது, அரசமைப்புச் சட்டம் உருவாக்கல் ஆகியவற்றால் அதனைத் தள்ளிப்போட்டார்கள். விடுதலைக்குப் பிந்தைய வருடம் அமைக்கப்பட்ட மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதை பற்றி ஆராய வேண்டிய குழு அது தேவையற்றது என்று அறிக்கை அளித்தது.

விடுதலைக்குப் பின்னர் மெட்ராஸ், பம்பாய், ஹைதராபாத் மாகாணங்களில் மொழிச் சிறுபான்மையினர் மொத்தமாக ஐம்பது சதவிகிதத்துக்கும் மேலே இருந்தார்கள். அடுத்துச் சென்னையில் அமர்ந்தபடி பொட்டி ஸ்ரீராமுலு ஆந்திரா தனி மாநிலமாக வேண்டும் என்று போராட முதல் தனி மொழிவாரி மாநிலமாக அது உருவானது. 1955-ல் மொழிவாரி மாநிலங்களை இந்தியா முழுக்க அமைக்க அமைக்கப்பட்ட பாஸ்லி அலி தலைமையிலான குழுவின் முன்னர் 1,52,250 ஆவணங்கள் பல்வேறு தரப்புகளால் தரப்பட்டன. அவற்றில் இருந்து சலித்தெடுத்து மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அவை புவியியல் தொடர்ச்சி, பொருளாதாரச் சாத்தியம், சமூககலாசாரத் தனித்துவம், ஜாதி, பகுதி, வர்க்க கூட்டணிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மொழிவாரி மாநிலங்களைப் பரிந்துரைத்தது.
🎌🎌
ஆந்திராவோடு தெலங்கானா இணைக்கப்பட்டது, மைசூர் மாநிலத்தோடு ஹைதராபாத், பம்பாய், மெட்ராஸ் பகுதிகளின் கன்னட மொழி பேசும் பகுதிகள் இணைக்கப்பட்டன. பம்பாய் மாகாணம் ஹைதராபாத்தின் மராத்வாடா பகுதி, குஜராத்தின் சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகள், மத்திய மாகாணத்தின் பீரார் ஆகியவற்றைச் சேர்த்து மராத்தி, குஜராத்தி இணைந்த இருமொழி மாநிலமாக ஆனது. பின்னர் மராத்திகள் பொங்கி எழுந்து தனி மாநிலமாக மாறினார்கள். மத்திய பாரத், விந்திய பிரதேசம், போபால் ஆகியவற்றை இணைத்து தனி இந்தி பெரும்பான்மை மாநிலமாக மத்திய பிரதேசம் மாறியது. மெட்ராஸ் மாகாணத்தின் மலபார் பகுதி திருவிதாங்கூர் பகுதியோடு இணைக்கப்பட்டுத் தனிக் கேரளா மாநிலமானது. PEPSU மாகாணத்தோடு பிரிவினைக்குப் பிந்தைய பஞ்சாப் சேர்க்கப்பட்டது.

வடகிழக்கில் பல்வேறு பழங்குடியின குழுக்கள் ஆயுதம் ஏந்தியது, சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு அருகில் அம்மாநிலங்களின் எல்லை இருந்தது, பன்முகக் கலாசாரம் ஆகியன மிகக்குறைந்த மக்கள்தொகை இருந்தும் தனித்தனி மாநிலங்களை உருவாக்க அனுமதித்தன. மகாராஷ்டிரா, குஜராத் பிளவுபட்ட சூழலில் பஞ்சாப் பகுதி சீக்கியர்கள் குருமுகி வரிவடிவத்தில் தங்களின் மொழியை எழுதி தாங்கள் தனித்துவமானவர்கள் என்று காட்டினார்கள். மதரீதியாக இந்துக்களில் இருந்து தங்களைப் பிரிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டது ஏற்கப்படாவிட்டலும் அதையே மொழிரீதியான கோரிக்கையாக மாற்றிய பொழுது பஞ்சாப், ஹரியானா, ஹிமாசல பிரதேசம் என்று மாநிலங்கள் சுருக்கியும், விரித்தும் மாற்றப்பட்டன. சண்டிகார் பஞ்சாப், ஹரியானாவுக்குப் பொதுவான தலைநகர் ஆனது.

அறுபத்தி ஒன்றில் மைதிலி, மகதி, போஜ்புரி மொழிகள் பேசுபவர்கள் தங்களை இந்தியில் இருந்து வேறுபட்டவர்களாகக் காட்டிக்கொண்ட சூழலில், அடுத்தக் கணக்கெடுப்பில் அவற்றை இந்தியோடு சேர்க்கும் பணி செவ்வனே மேற்கொள்ளப்பட்டது. மாநில மறுசீரமைப்புக்கான பாஸில் அலி குழு ஹிமாசல பிரதேசத்தைப் பஞ்சாபோடு இணைத்தால் அதிகத் தொழில் முனைவோர் மிக்கப் பஞ்சாப் அதனைச் சுரண்டும் என்று அதனைச் சேர்க்க வேண்டாம் என்று பரிந்துரைத்தார். தெலங்கானா, விதர்பா பகுதிகள் தனி மாநிலங்களாக ஆகவேண்டும் என்கிற அவரின் பரிந்துரை ஏற்கப்படாமல் போய் அவை இன்னமும் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளாக உள்ளதைக் காணலாம்.

கோலார் மாவட்டத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தெலுங்கு மொழி பேசுபவர்கள் என்றாலும், அந்த மாவட்டம் வளர்ந்ததற்கும், அதற்கான மின்சாரம், பொருளாதார வளர்ச்சிக்கு மைசூர் மாநிலத்தைச் சார்ந்திருந்ததாலும் அதனோடு அது இணைக்கப்பட்டது. கிழக்குப் பாகிஸ்தான் வங்கத்தைப் பிரித்து உருவாக்கப்பட்ட சூழலில் டார்ஜீலிங், கூச் பீஹார், ஜல்பாய்குரி பகுதிகள் மேற்கு வங்கத்தோடு துண்டிக்கப்பட்ட சூழலில், இவை இரண்டையும் இணைக்க இந்தி பெரும்பான்மை மிக்கப் பூர்ணியா மாவட்டத்தின் ஒரு பகுதி மேற்கு வங்கத்துக்குத் தரப்பட்டது.

பழங்குடியினரில் மொழி சார்ந்து மாநிலங்களைப் பிரிப்பது மிகவும் சிக்கலான ஒன்று என்கிற அளவுக்குப் பல்வேறு மொழி சிறுபான்மையினர் அவற்றில் வழங்கி வருகிறார்கள். லடாக் பகுதியை அதனைப் போலவே புத்த மதத்தினர் அதிகம் மிகுந்த ஹிமாசல பிரதேசத்தின் லாகுல், ஸ்பிதி பள்ளத்தாக்கு பகுதிகளோடு இணைக்கலாம் என்கிறார் ஆசிரியர். கச்சார் எனும் வங்காளிகள் பெரும்பான்மையாகயுள்ள அசாம் மாவட்டத்தை, திரிபுராவுடன் இணைக்கலாம்.

இதன்மூலம் பத்து லட்சம் வங்காளிகள் பயத்தில் இருந்து அசாம் விடுபடும். நேபாளி மொழியைப் பெரும்பான்மையாகப் பேசும் டார்ஜீலிங் மாவட்டத்தை, சிக்கிம் உடன் இணைக்கலாம். கோவாவை கொங்கணி மொழியைப் பேசும் கர்நாடகாவின் துளு பகுதி, மகாராஷ்டிராவின் சில பகுதிகளை இணைத்து விரிவாக்கலாம். ரஷீதின் கான் எனும் பேராசிரியர் மிகப்பெரிய பரப்பளவை கொண்ட உத்திர பிரதேசத்தை ஐம்பத்தி ஒன்பது சுயாட்சி மிக்கச் சமூக, கலாசாரப் பிரிவுகளாகப் பிரிக்கலாம் என்று பரிந்துரைக்கிறார்.
மொழிவாரி மாநிலங்கள் அமைய இப்படியான ஒரு நீண்ட வரலாறு உண்டு.

#மொழிவாரி_மாநிலம்
#State_reorganization
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-07-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...