Monday, July 24, 2017

மாநிலக் கொடிகளின் பிரச்சனை குறித்தான வரலாறு.


இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டிலிருந்து நண்பர் முருகானந்தம் மாநிலங்களுக்கு தனிக் கொடி என்பதை குறித்து ஒரு குறும்பேட்டி தொலைபேசி மூலம் என்னிடம் எடுத்தார். கர்நாடக மாநில அரசு தங்கள் மாநிலத்திற்கு தனிக் கொடி வேண்டுமென்று வலியுறுத்துகின்றன. இதை குறித்தான பழைய தரவுகளை கவனிக்கும் பொழுது அரசியலமைப்பு அவையில் (Constitutional Assembly) அன்றைக்கு உறுப்பினராக இருந்த ஜார்கண்ட் மாநில பூர்வக்குடி இனத்தை சேர்ந்த ஜெயபால் சிங் தேசிய கொடியோடு பழங்குடிகளுக்கு தனியாக கொடி வழங்க வேண்டுமென்று வலியுறுத்தினார். இவர் ஹாக்கி விளையாட்டு வீரர். இவர் ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக்கில் 1920ல் தங்க பதக்கத்தை பெற்றவர். ஆனால் இது விவாதத்தோடு முடிந்துவிட்டது.


பிரதமர் நேரு 22/06/1947 இல் தற்போதைய தேசியக் கொடியை அரசியலமைப்பு அவையில் முதன்முதலாக அற்பணித்தார். தேசிய கொடியில் அமைப்பு ரீதியாக Indian Standard Institions இல் 11/08/1951 இல் அதனுடைய வண்ணங்களுடைய பார்வையும் நிறத்தன்மையும் குறித்து சோதனை நடத்தினார்.

இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவோடு இணைவதை குறித்து பண்டித நேரு, ஷேக் அப்துல்லா, காஷ்மீர் மன்னரோடு முக்கூட்டு ஆலோசனைகள் நடைபெற்றன. காஷ்மீருக்கு அரசியல் சாசன பிரிவு 370 ன் படி சிறப்பு அதிகாரங்களும், சலுகைகளும் வழங்கப்பட்டன. 


அத்தோடு கலப்பை படத்தோடு கூடிய விவசாயிகளின் பெருமையை பறைசாற்றக்கூடிய அளவில் தனிக்கொடியும் வழங்கப்பட்டது. இது கடந்தகாலத்திய வரலாற்று சுருக்கம்.

அண்ணா காலத்தில் திமுக, திராவிட நாடு, மாநில சுயாட்சிக் கொள்கைகளை வலியுறுத்தியது. அண்ணா மறைவுக்குப்பின் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தபின் மாநில சுயாட்சி குறித்து அறிய முதன்முதலாக இந்தியாவில் நீதிபதி. பி.வி.இராஜமன்னார் தலைமையில் சந்திரா ரெட்டி, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் இலட்சுமணசாமி முதலியார் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவை அமைத்து அதன் அறிக்கையை பெற்றார். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற நிலையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அமெரிக்காவில், சுவிட்சர்லாந்தில், மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருப்பதை போன்று தனிக்கொடி வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.

இதை குறித்து நாடாளுமன்றத்தில் 20/08/1970 இல் பிரதமர் இந்திரா காந்தி பதில் அளிக்கும் போது அமெரிக்கா போன்ற நாடுகளில் மாநிலங்களுக்கு தனிக்கொடி இருக்கின்றன. இது குறித்து மாநில முதல்வர்களிடம் தான் கலந்தாலோசிக்கப் இருப்பதாக கூறினார். மாநிலங்களுக்கு தனிக்கொடி அவசியமில்லை என்று ஸ்தாபன காங்கிரஸும், அன்றைய ஜன சங்கமான இன்றைய பிஜேபியான எதிர்த்தது. அவர்கள் இதுகுறித்து சொன்னபோது ஒரு வேளை கம்யூணிஸ்ட்கள் மாநிலங்களில் ஆட்சியை அமைக்கும் பட்சத்தில் அருவாள், சுத்தியல் சின்னங்களை அடங்கிய சீன, ரஷ்ய கொடிகளை இங்கு கொண்டு வந்துவிடுவார்கள் என்று குறிப்பிட்டனர்.

இந்நிலையில் கலைஞர் அவர்கள் டெல்லியில் 27/08/1970இல் பத்திரிக்கையாளர்கள் முன் தமிழக அரசின் கொடி எப்படி இருக்கும் என்று தான் வடிவமைத்த படத்தை வெளியிட்டார். அந்த படத்தில் தேசியக்கொடி மேல் பக்கத்திலும், தமிழகத்தின் இலச்சினையான வட்டவடிவமான கோபுர முத்திரையை வலது பக்கத்தின் கீழ் முனையில் அமைவது போல் வடிவமைத்து வெளியிட்டார். இப்பிரச்சனையில் தீர்வு எதுவும் எட்டப்படாத நிலையில், தலைவர் கலைஞர் அவர்கள் அந்தந்த மாநில முதல்வர்கள் சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியை ஏற்றும் உரிமையை வழங்க வேண்டுமென்று வலியுறுத்தினார். இந்த கோரிக்கையை பிரதமர் இந்திரா ஏற்றுக்கொண்டார்.

இன்றைக்கு கர்நாடகாவின் கோரிக்கை இன்னும் வலுப்பெற்றால் தேசிய அளவில் இதற்கான தாக்கம் எப்படி இருக்கும் என்பது போகப் போகத் தான் தெரியும். ஏற்கனவே மைசூர் மாநில பிரச்சனை குறித்து 1960ல் எம். இராமமூர்த்தி சொல்லிய கருத்துகளால் அப்போது கர்நாடகத்தின் வடபகுதியான பெல்காமிற்கும், தென்பகுதியான மைசூர், பெங்களூரு பகுதிகளுக்கும் பிரச்சனைகள் நிகழ்ந்தன. பழைய மைசூரு சமஸ்தானத்திற்கும், மைசூரு மாநிலம் அமைப்பது குறித்த பனிப்போர்கள் 1947ல் கடுமையாக இருந்தன.

#தேசியக்_கொடி
#மாநிலக்_கொடிகள்
#Indian_flag
#State_flags
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

24-07-2017

No comments:

Post a Comment

நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அதுதான் உண்மையான #தன்மானம், #சுயமரியாதை

நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அ...