Monday, July 17, 2017

நாட்டுப்புற கலைஞர் கழனியூரன் நினைவேந்தல் Kulashekar T

நாட்டுப்புற கலைஞர் கழனியூரன் நினைவேந்தல்
Kulashekar T
நேற்று டிஸ்கவரி புக்பேலஸ் அரங்கில் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த நிகழ்வு நிறைவானவொரு அனுபவம்.

முதலில் ஃபேஸ்புக்கிற்கு ஒரு நன்றி சொல்லிக் கொள்ள தோன்றுகிறது. கே.எஸ்.ஆர் இங்கே தான் எனக்கு நண்பராகி, நெருக்கமானார். 

அவர் ஒரு பன்முகத்தன்மை கொண்டவர். மூத்த வழக்கறிஞர், நேர்மையான அரசியல்வாதி, சமூக ஆர்வலர், சாதனையாளர், போராளி, அநீதி பொறுக்காத உணர்ச்சிப் பிழம்பு, ‘கதை சொல்லி’ இலக்கிய காலாண்டிதழின் ஆசிரியர். 

இந்த இதழில் தான் கழனியூரன் பொறுப்பாசிரியராக கி.ராஜநாராயணனின் வழிகாட்டுதலில் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

கே.எஸ்.ஆர் மீது அறிமுகமில்லாத காலத்திலேயே எனக்கு எப்போதுமே மிகுந்த மரியாதை உண்டு. நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் எனது ஆசான்களில் ஒருவரான இயக்குநர் வஸந்த் சார் ஜட்ஜாக இருந்த சமயத்தில், அவருக்கு உதவியாக உடன் இருந்தேன். அந்த சமயங்களில் அண்ணா அறிவாலயத்திற்கு வரும் கே.எஸ்.ஆர் அவர்களை ஓரமாய் நின்று ரசித்திருக்கிறேன். 

அவருடைய இனிஷியல் தான் என்னுடைய அப்பாவிற்கும். கே.எஸ்.திருவரங்கமூர்த்தி. 

அவர் ஒரு நாள் திடீரென எனக்கு ஃபோன் செய்து பேசினார். இன்ப அதிர்ச்சி. அதற்கு சற்று முன் தான் எனது ஒன்றுவிட்ட பெரியப்பாவாகிய சமூக நீதிக் காவலர் டபிள்யு.பி.ஏ. சௌந்திர பாண்டியன் வாழ்க்கை வரலாறு பற்றி நான் எழுதிய புத்தகத்தை பற்றிய ஒரு பதிவு போட்டிருந்தேன். 

(அவர் கிட்டத்தட்ட இருபது வருடம் நீதிக்கட்சி ஆட்சி செய்த காலத்தில் நீதிக்கட்சி முக்கிய தலைவர்களில் ஒருவராக, சட்டசபையில் கொறடாவாக இருந்து பல சமூகநீதி சாதனைகளை செய்திருக்கிறார். பெரியாரின் வலது கரம். சுயமரியாதை இயக்கத்தின் முதல் தலைவர். அப்போது பெரியார் துணைத் தலைவர். இவரின் பெயரில் தான் பாண்டி பஜார் அழைக்கப்படுகிறது. தற்போது டபிள்யு.பி.ஏ. சௌந்திரபாண்டியன் அங்காடி. பனகல் பார்க் முன்னால் அவரின் ஆளுயர சிலை கம்பீரமாய நிற்பதை இப்போதும் பார்க்கலாம்.) 

அவரின் மனிதம் பற்றிய பார்வையிலேயே அந்த வீரம் தோய்ந்த வரலாற்றை சமநிலையோடு உருவாக்கியிருந்தேன். அது குறித்த பதிவு பார்த்துவிட்டு தான் கே.எஸ்.ஆர் எனக்கு ஃபோன் செய்திருந்தார். உடனே அவருக்கு என்னுடைய முக்கியமான நூல்களோடு, சௌந்திரபாண்டியனின் வாழ்க்கை வரலாறு நூலையும் அனுப்பி வைத்தேன். அதை தொடர்ந்து, அவர் ஆசிரியராக இருக்கிற கதை சொல்லி இதழுக்கு கதை, கட்டுரை அனுப்பும்படி சொன்னார். அவரின் விருப்பப்படி அனுப்பியும் வைத்திருக்கிறேன்.

மீண்டும் தொலைபேசியில் அவரின் அழைப்பு. கழனியூரன் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேச வேண்டும் என்கிற அழைப்பு.
விழாவில் தோழர் நல்லகண்ணு, மனா, புதியதலைமுறை வேங்கடபிரசாத், ஏக்நாத், குலசேகர், மதுமிதா, காவ்யா சண்முகசுந்தரம், கே.எஸ்.ஆர் என பலரும் பேசினார்கள்.
வரவேற்புரையை டிஸ்கவரி புக்பேலஸ் வேடியப்பன் வழங்கியதோடு, யூ-ட்யூபில் போடுவதற்காக நிகழ்ச்சியை நேர்த்தியாய் காட்சியும் படுத்தினார்.

நெய்வேலி பாலு நிகழ்ச்சியை யதார்த்தமாய் தொகுத்து வழங்கினார்.

பத்திரிகையாளர் மணா பேசுகிறபோது கழனியூரன் முன்பு அவரிடம் பகிர்ந்து கொண்ட முல்க்ராஜ் முகுந்த்தின் ஒரு சிறுகதை பற்றி சொல்லி, அந்த கதையை அவர் எத்தனை பரவசத்துடன் ஒரு கதை சொல்லியின்  சுவாரஸ்யத்துடன் விவரித்ததை பரவசத்துடன் வெளிப்படுத்தினார்.
அந்த கதை இதோ.

பொருட்காட்சி. உள்ளே செல்லும் ஏழை தம்பதியரிடம் அவர்களின் மூன்று வயது பெண் குழந்தை கண்ணில் பார்ப்பதையெல்லாம் வாங்கித் தரும்படி அடம்பிடிக்கிறாள். ஆனால் பெற்றோர்கள் அவளை அதட்டியபடி எதையும் வாங்கித் தராமல் அழைத்து கொண்டு உள்ளே செல்கிறார்கள். திடீரென அந்த குழந்தை தொலைந்து விடுகிறது. அப்போது அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு மற்றொரு வசதியான தம்பதியர், அவளின் பெற்றோர்களை தேடி ஒவ்வொரு கடையாய் பார்த்தபடி வருகிறார்கள். குழந்தை அழத் துவங்குகிறது. அப்போது அந்தந்த கடைகளில் இருக்கிற பொருட்களை வாங்கி தருகிறார்கள். ஆனால் குழந்தை வாங்கிக் கொள்ள மறுக்கிறது. முடிவில் என்ன தான் வேண்டும் என்றதும், ‘எனக்கு என் அம்மாவும்,அப்பாவும் தான் வேணும்’ என்கிறாள்.

டபிள்யு.பி.ஏ. சௌந்திரபாண்டியன் பற்றி சற்றே விரிவாக கூறியதற்கு ஒரு காரணம் உண்டு. அவர் தலைமையில் தான் நீதிக்கட்சி 1917-ம் வருடம் தமிழ்நாட்டில் யாரும் பெயருக்கு பின்னால் சாதிப்பெயரை போட்டுக் கொள்ளக்கூடாது என தீர்மானித்து, அதற்கு முன்பு வரை தங்கள் பெயருக்கு பின்னால் இருந்த சாதிய அடையாளங்களை கெஸட்டில் நீக்கிக் கொண்டார்கள். 

நான் கிட்டத்தட்ட இந்தியா முழுக்க சுற்றியிருக்கிறேன். எல்லா இடத்திலும் பெயருக்கு பின்னால் எந்தவித லஜ்ஜையும் இல்லாமல் சாதி பெயரை ஆண்களும், பெண்களும் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அகர்வால், சர்மா, டெண்டுல்கர், சேவாக், கெய்க்வாட், வர்மா எல்லாமே சாதிய அடையாளங்களே. தமிழகத்தில் மட்டுமே அந்த பழக்கம் பழக்கவழக்கத்தால் நீக்கப்பட்டிருக்கிறது.

அப்படியாக சாதிய அடையாளத்தையோ, மத அடையாளத்தையோ பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், வாழ்க்கையில் அடையாளப்படுத்தாமல் எல்லோருடனும் சகஜமாக வாழ்ந்து முடிக்கிறதென்பதே இங்கே ஒரு சாதனையாக கொள்ளலாம். அப்படியாக வாழ்நாள் முழுக்க வாழ்ந்து நிறைவு செய்திருப்பவரே ஷேக் அப்துல்காதர் என்கிற இயற்பெயர் கொண்ட கழனியூரன்.

நெல்லை மாவட்டம். குற்றாலம் செல்கிற வழியில் சுரண்டைக்கு அடுத்தபடியாய் கழுநீர் குளம் என்பதன் குறியீட்டின் ஊராய் கழனியூர் இருக்கிறது. அதையே தன்னுடைய காரணப்பெயராய் மிகப் பொருத்தமாய் வைத்துக் கொண்டவர் தான் இவர்.

செம்மண் பூமி அது. புஞ்சை. அந்த மண்ணின் தொன்மமாயிருக்கிற நாட்டுப்புறக்கதைகளை தேடித்தேடி முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களில் தொகுத்து வழங்கியுள்ளார். கரிசல் காட்டுக் கதைகளின் அடையாளமாக கி.ராஜநாராயணன் இருப்பது போல செங்காட்டுக் கதைகளுக்கு அடையாளமாகவே வாழ்ந்திருப்பவர் கழனியூரன்.

அவரின் குறுஞ்சாமிகளின் கதை, செங்காட்டு கதைகள் போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

குறுஞ்சாமிகளின் கதைகளில் சிறுதெய்வங்களின் வழிபாடு பற்றி ஆழமாக தேடியுள்ளார். சிறுதெய்வங்கள் எனப்படுபவர்கள் யாரென்றால் அந்நாளில் கௌரவக்கொலைகளுக்கு ஆட்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் போன்றவர்களே. அவர்களை கொன்று தீர்த்த அதிகார வர்க்கம் அதன் மூலம் தங்களுக்கு பாவம் வந்து தொற்றிக் கொள்ளக்கூடாது என்பதற்காக பாவபரிகாரமாய் அவர்களுக்கு சாலையோரம் கோயில் கட்டி தருவதும், சுமைதாங்கி கல், நடுகல் போன்றவற்றை உண்டாக்கி இருந்திருக்கிறார்கள்.

பின்னாளில் அவர்களின் மகத்துவம் உணர்ந்த மக்கள் தங்களுக்காக பல்வேறு விதங்களில் உயிர் நீத்த இந்த மாமனிதர்களை சாமியாகவே தாங்கள் உண்கிற உணவுகளையே படையலாக படைத்துண்டு மரியாதை செய்கிறார்கள். இந்த பழக்கவழக்கங்களில் அந்நாளைய பண்பாட்டுக்கூறுகளும் எப்படியெல்லாம் படிந்திருக்கிறது என்பதை ஆய்ந்து தேடித்தேடி வண்ணத்துப்பூச்சி மலர்மலராய் சென்று தேன் எடுத்து சேகரிப்பது போல சேகரித்து பல நூல்களில் தொகுத்து வழங்கியிருக்கிறார். 

ந.வனமாமலை, தொ.பரமசிவன், ந.முத்துமோகன் போன்ற பண்பாட்டு ஆய்வாளர்களுக்கு இணையாக கரிசல் காட்டு நாட்டுப்புற கதை தொகுப்பாளர் கி.ராஜநாராயணன், செங்காட்டு நாட்டுப்புற கதை தொகுப்பாளர் கழனியூரன் போன்றவர்கள் காலத்தின் கண்ணாடியை தேடித்தேடி அலைந்து அலைந்து மீள்உருவாக்கம் பண்ணித் தருபவர்கள். அப்படியான கீழடி போன்ற கலாச்சார புதையல்களை, பண்பாட்டு கூறுகளை, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை, சமூகவியலை காலத்தின் பின்னோக்கி பயணித்து பண்பாட்டு வரலாறை புதிதாய் மறுபடி பரிமளிக்க வைக்கிற கழனியூரன் போன்ற நபர்கள் சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள்.

அவர்களுக்கு இதுவரை எந்த விருதுகளையும் எழுத்தாள அமைப்புகளோ, அரசுகளோ வழங்கவில்லை என்றாலும், அவரின் இலக்கிய பங்களிப்பு அளப்பறியது. சமயங்களில் விருது பெறாததே அவரின் தரத்திற்கான விருது என்று தோன்றுவதாய், யாரோவொருவர் தங்கள் உரையில் வெளிப்படுத்தியதை முற்றாய் மறுத்துவிட இயலவில்லை.

எழுத்தாளர்களை மறக்கலாம். எழுத்தை மறக்கக் கூடாது. அதனால் அவர் இல்லாதிருக்கிற இந்த தருணத்தில், அவரின் தேடித்தேடி சேகரித்த செங்காட்டு நாட்டுப்புற கதை நூல்களை பெருவாரியாய் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதே அவருக்கு செய்கிற உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

*

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...